மிதிலாவிலாஸ்-20

This entry is part 2 of 21 in the series 31 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

Yaddana_profile_0மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள்.
“இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க அம்மா? அய்யா உங்களுக்காக ரொம்ப நேரம் காத்திருந்தார்” என்று செய்தியைச் சொன்னாள்.
மைதிலி ஒரு நிமிடம் நின்று அதைக் கேட்டுக் கொண்டாள். அந்த நிமிடம் அவளுக்கு இந்த உலகத்தில் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எதைப் பற்றியும் ஆர்வம் இல்லை.
ராஜம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், கணவனைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் மாடிக்கு வந்து விட்டாள். மாடி வராண்டாவில் ஊஞ்சலில் அபிஜித் உட்கார்ந்து இருந்தான். அவன் கையில் சில பைல்கள் இருந்தன. மைதிலியின் காலடிச் சத்தம் அவன் காதில் விழுந்தது. மைதிலியும் அவனைப் பார்த்தாள். அவன் தன்னை விசாரிப்பான் என்று அவளும், அவள் தன்னிடம் ஓடி வருவாள் என்று அவனும் ஒரு நிமிடம் எதிர்பார்த்தார்கள். யாருமே முன் வரவில்லை.
மைதிலி நிசப்தமாய் படுக்கை அறைக்குள் போய் விட்டாள். போன பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. தானே போய் அபிஜித்திடம் பேசி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அபிஜித்தும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் மைதிலி குளியல் அறைக்குச் சென்று குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள். டிரெஸ்ஸிங் மேஜை அருகில் நின்று பொட்டை சரிசெய்துக் கொண்டிருந்த போது பின்னால் வாசலில் அபிஜித்தின் உருவம் கண்ணாடியில் தென்பட்டது.
சட்டென்று திரும்பினாள். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளையே பார்த்தான்.
“ஐ யாம் சாரி” என்றாள்.
அவன் அருகில் வந்தான். மைதிலி தலையைக் குனிந்து கொண்டாள். லஞ்சுக்கு மதியம் விருந்தாளிகள் வருவதாக இருந்த விஷயம் அபிஜித்தை பார்த்த பிறகு நினைவு வந்தது.
அவன் அருகில் வந்தான். அவள் முகவாயைத் தொட்டு நிமிர்ந்தினான். “இன்று லஞ்சுக்கு போர்ட் ஆப் டைரக்டர்ஸ் நம் வீட்டுக்கு வரப் போவதாக சொல்லியிருந்தேன்.”
“சாரி என்று சொல்லிவிட்டேனே?” தரையை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“உனக்கு வேறு வேலை இருப்பதாக முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?”
“சீக்கிரம் வந்து விடலாமென்று போயிருந்தேன். சித்தூ ஸ்கெட்ச் வரைந்துகொண்டு இருக்கும் போது…”
“அப்படித்தான் ஏதாவது இருந்திருக்கும் என்று நினைத்தேன்.”
மைதிலி நிமிர்ந்து பார்த்தாள். “நான் அங்கேதான் போயிருந்தேன் என்று உனக்கு தெரியுமா?”
‘அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.”
“எனக்காக செய்தி சொல்லி விட்டிருக்கலாம் இல்லையா?” சிறு கோபத்துடன் சொன்னாள்.
ராஜம்மா காபியைக் கொண்டு வந்து அங்கே வைத்து விட்டுப் போனாள்.
மைதிலி காபியை கோப்பையில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். “சித்தார்த்தா ஸ்கெட்ச் டிசைன் ரொம்ப நன்றாக வரைந்து இருக்கிறான். விளம்பரத்தைப் பார்த்தானாம். தவம் செய்வது போல் வேலையில் மூழ்கிவிட்டான்.”
“முதல் விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. நம் ஆட்கள் நிறைய பேர் போன் செய்தார்கள்.”
“உண்மையாகவா?’ ஆர்வத்துடன் கேட்டாள்.
அவன் தலையை அசைத்தான். “எல்லோரும் ஒரே கேள்விதான்.”
“அந்த ட்ரெஸ் டிசைன் செய்தது யார் என்றா?” சந்தோஷமாகக் கேட்டாள்.
“இல்லை. அந்த விளம்பரத்தில் இருந்த மாடல் யார் என்று. சோனாலி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டாள்.”
மைதிலியின் முகத்தில் சந்தோஷம் காணமல் போய் விட்டது. அபிஜித் அதைக் கவனித்து விட்டான்.
அறையில் மாலை நேரத்து இருள் பரவிக் கொண்டிருந்தது.
அபிஜித் மனைவியின் கையை தன் கையில் எடுத்துக் கொண்டான். “மைதிலி! இன்றைய லஞ்சில் நான் உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.”
“லஞ்ச்தான் நடக்கவில்லையே?”
“யார் சொன்னார்கள்?”
“நான்தான் வீட்டில் இருக்கவில்லையே?”
“ஆமாம். நீ வீட்டில் இல்லை. பதினோருமணிக்கு போன் செய்த போது, ராஜம்மா நீ வீட்டில் இல்லை என்றும் வெளியில் போயிருப்பதாகவும், இதுவரையில் வரவில்லை என்றும் சொன்னாள். சாதாரணமாக நீ மறந்து போக மாட்டாய். எங்கேயோ ஏதோ வேலையில் மாட்டிக் கொண்டு இருப்பாய் என்று நினைத்தேன். பன்னிரண்டு மணி ஆன பிறகும் உன்னிடமிருந்து போன் வரவில்லை. வீட்டுக்கு வந்தேன். ராஜம்மா பயந்து கொண்டிருந்தாள். நாங்கள் லஞ்சுக்கு வெளியில் போகப் போகிறோம் என்றும், வீட்டில் இல்லை என்றும் சொல்லிவிட்டேன். எல்லோருக்கும் போன் செய்து ‘சின்ன திருத்தம். லஞ்ச் வீட்டில் இல்லை, ஹோட்டலில்’ என்று சொல்லிவிட்டேன். எல்லோரும் லஞ்சுக்கு வந்தார்கள். நீ ஏன் வரவில்லை என்று கேட்டார்கள்.”
இருள் பரவியிருந்தது நல்லதாகிவிட்டது. மைதிலியின் முகம் மேலும் கவிழ்ந்து இருந்தது. தான் அபிஜித்துடன் இருக்கவில்லை. அந்தப் பக்கம் சித்தூவுடனும் இருக்கவில்லை.
அபிஜித் மேலும் சொல்லிக் கொண்டிருந்தான். “இன்று மீட்டிங்கில் மற்ற முடிவுகளுடன் இன்னும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.”’
மைதிலி பதில் பேசவில்லை.
“கேட்கணும் என்று இல்லையா?” என்று கேட்டான்.
“சொல்லு” என்றாள். அவள் குரலில் ஏமாற்றத்தின் நிழல்கள் இன்னும் போகவில்லை.
“சித்தார்த்தாவை நம் கம்பெனி சார்பில் விளம்பர ஆர்டிஸ்ட் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். அவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், மேற்கொண்டு படிக்க ஏற்பாடு செய்து, டிகிரி முடித்த பிறகு பேஷன் டெக்னாலஜியில் சிறப்பு படிப்பு படிக்க வேண்டும், அந்த செலவுகளை எல்லாம் கம்பெனி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…”.
மைதிலி சட்டென்று தலையை உயர்த்தினாள் அஸ்தமிக்கப் போகும் சூரியனின் கடைசி வெளிச்சக் கீற்று அவள் முகத்தில் விழுந்தது. அதுக்கு சமமாக அவள் முகம் சந்தோஷத்தினால் ஜொலித்துக் கொண்டிருந்தது.
“உண்மையாகவா? இவ்வளவு நல்ல யோசனை யாருக்கு வந்தது?” அவள் முகத்தில் வியப்பும் சந்தோஷமும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன.
“யாருக்கு வந்திருக்கும்? நீயே சொல்லு.”
மைதிலி அவன் கண்களுக்குள் பார்த்தாள். அந்த கண்களில் மனோகரமான முறுவல்.
“அபீ! நீ தான்..” என்றவள் திடீரென்று இரு கைகளையும் அவன் கழுத்தைச் சுற்றிலும் போட்டாள். “எவ்வளவு நல்லவன் நீ. எவ்வளவு நல்ல வார்த்தையைச் சொன்னாய்” என்று அவன் இதயத்தில் புதைந்து விட்டது போல் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“நான் பிரபோஸ் செய்தேன். எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். அது மட்டுமில்லை. எப்போது எல்லாவற்றுக்கும் கேள்விகள் கேட்கும் ராஜாராமனும் இன்று பேப்பரில் நம் விளம்பரத்தை பார்த்தார்களாம். நாம் செய்ய வேண்டிய காரியம் அதுதான் என்று என்னை பலப் படுத்தினார். அதனால்தான் லஞ்சில் உன்னை மிஸ் செய்தேன் என்று சொன்னேன்.”
மைதிலி நிமிர்ந்து பார்த்தாள். மாலை நேர வெயிலின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்த அவள் முகத்தில் தென்பட்டுக் கொண்டிருந்த சந்தோஷத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதழ்களில் மிருதுவான சிரிப்பு. அவள் தலை மீது கையை வைத்தான்.
அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் அவன் மார்பில் அடைக்கலம் புகுந்தாள். அவன் கை அவள் தோளைச் சுற்றிலும் போட்டு மேலும் அருகில் இழுத்துக் கொண்டது. அவனுக்கு அந்த நிமிடம் தாமிருவரும் ஒரே உயிர் என்பது போல் இருந்தது. நிசப்தமாக இருந்த அவ்விருவருக்கும் சற்று தொலைவிலிருந்த பார்க்கிலிருந்து குழந்தைகளின் விளையாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அதைக் கேட்டதும். மைதிலியின் மனம் துள்ளிக் கொண்டிருந்தது. எப்போதும் போல் அவன் மனம் மௌனமாகி விட்டது.
*****
கல்சுரல் செண்டரில் பேஷன் ஷோ ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மைதிலி கார்னமென்ட்ஸ் சார்பில் சோனாலி பங்கெடுத்துக் கொண்டாள். அபிஜித், மைதிலி, மிசெஸ் மாதுர், மற்ற கம்பெனி டைரக்டர்கள் பேஷன் ஷோவை பார்க்க வந்திருந்தார்கள். அபிஜித் காரை அனுப்பி வைத்து சித்தார்த்தாவை வரச் சொல்லி ஆணையிட்டிருந்தான். சித்தார்த்தாவும் வந்தான். பேஷன் ஷோவில் போட்டி கடுமையாக இருந்தது. மாடல்கள் எல்லோரும் அழகாக இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் சிறப்பாக இருந்தன. சோனாலி தேவதையைப் போல் ஸ்டேஜ் மீது நடந்து வந்தாள். அவள் நடையில் லயம், புன்முறுவலில் மயக்கம் வெளிப்பட்டன. அவள் அணிந்திருந்த உடை ஒருப்பக்கம் சம்பிரதாயத்தை எடுத்துக் காட்டுவது போலவும், நாகரீகத்தின் வெளிப்பாடாகவும், பழைமை புதுமை கலவையாக இருந்தது. உடல் முழுக்க மூடியிருதாலும், சிலை போல் இருந்த அவளது அழகை, வாளிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது.
முக்கியமாக நடப்பதற்கு எந்த தடங்கலும் இல்லாமல் வசதியாக இருந்தது. சோனாலி மேடை மீது நடந்து வரும் போது மெதுவாக அன்னம் போல் நடந்து வந்து திரும்பி போகும் போது வேகமாக போனாள். அவளுடைய மேனியின் அழகை கண்ணாரக்கண்டு சந்தோஷம் அடைய நினைத்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தில் கரகோஷங்களை எழுப்பவில்லை. சோனாலி ஸ்டேஜ் மீது நடந்து வரும் போது முன் வரிசையில் அமர்ந்து இருந்த அபிஜித்தை நோக்கி மின்னல் போல் பார்வையை வீசியதை மிசெஸ் மாதுர் கவனிக்காமல் இல்லை. சோனாலி உடுத்தி இருந்த ஆடையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மைதிலி இதை கவனிக்கவில்லை. அந்த நிமிடம் சோனாலி அபிஜித் ஒருவனுக்காகவே ஸ்டேஜில் காட்சி தருவது பார்த்துக் கொண்டிருந்தாள்.
நீதிபதிகள் இறுதியில் முதல் பரிசை மைதிலி கார்னமென்ட்ஸுக்கு கொடுத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்த காலத்தில் உடைகள், சினிமாக்கள் புத்தகங்கள் மனிதனை திசைமாறி போகும் விதமாக செய்கின்றன என்றும், நிறைவான ஆடைகள்தான் மனிதனை மேம்படுத்தும் என்றும் விளக்கம் தந்தார்கள்.
அந்த உடையை அணிந்து காட்சியளித்த சோனாலிக்கு சிறப்பு பரிசு அறிவித்தார்கள். மைதிலி கார்னமென்ட்ஸ் சார்பில் அபிஜித்தை வந்து பரிசை பெற்றுக்கொள்ளும்படி அறிவித்தார்கள். அபிஜித் மைதிலியை போய் பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்ன போது அவனையே போகச் சொன்னாள். அபிஜித் மேடைக்கு போய் பரிசை பெற்றுக் கொண்டான். இரண்டு வார்த்தைகள் பேசும்படி தலைவர் கேட்டுக் கொண்டார்.
அபிஜித் மைக் அருகில் வந்து “இந்த ஆடையை டிசைன் செய்த நபர் சித்தார்த்தா. வயதில் சிறியவன் என்றாலும், திறமையுடன் மிக சிறப்பாக இந்த ஆடையின் வடிவத்தை தயாரித்தான். சித்தார்த்தாவை மேடைக்கு அழைப்பதற்கு தலைவரின் அனுமதியை வேண்டுகிறேன்” என்றான்.
“அப்படியே ஆகட்டும்” என்றார் தலைவர்.
சித்தார்த்தா மேடைக்கு போவதற்கு கூச்சப்பட்டுக் கொண்டு இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. மிசெஸ் மாதுர் அவனை வலுக்கட்டயமாக எழுப்பி கையைப் பற்றி மேடை வரையில் அழைத்துச் சென்றாள்.
சித்தார்த்தா மேடையில் தோன்றியதும் முதலில் கைகளைத் தட்டியது மாதுர் தம்பதியினர். அவர்களுடன் மைதிலி, மற்ற டைரக்டர்ஸ் சேர்ந்து கொண்டார்கள். ஹாலில் இருந்த ஜனங்களும் சித்தார்த்தாவின் திறமையை பாராட்டுவது போல் கைக்களைத் தட்டினார்கள்.
“ஏதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசு” என்றார் தலைவர்.
“இந்த தகுதியை, மதிப்பை எனக்கு கிடைக்கும்படியாக செய்த திரு அபிஜித் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றான். உடனுக்குடனே அவனுக்கு ஒரு பரிசு அறிவித்தார்கள். சித்தார்த்தா அதை எடுத்துக்கொண்டு அபிஜித் அருகில் வந்தான். சோனாலி “கங்க்ராட்ஸ்!” என்று சொல்லிக் கொண்டே சட்டென்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். திகைத்துப் போனவனாய், கன்றிவிட்ட முகத்துடன் நின்ற சித்தார்த்தாவை பார்த்து மக்கள் கொல்லென்று நகைத்தார்கள்.
சித்தார்த்தா அபிஜித் அருகில் சென்று நின்றுகொண்டான். அபிஜித் சிரித்துக் கொண்டே சித்தார்த்தாவின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டான்.
மைதிலியின் விழிகளில் நீர் சுழன்றுக் கொண்டிருந்தது. அவள் மனதில் சந்தோஷம் வெள்ளமாய் பெருகி வந்தது. கண்ணார இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மின்னலாய் பிளாஷ்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. சோனாலி வந்து அபிஜித்தின் மறுபக்கம் வந்து நின்று கொண்டாள்.
பேஷன் ஷோ முடிந்து விட்டது.
“நம் மீது பெரிய பொறுப்பு இருக்கிறது. நாம் கொடுத்த விளம்பரங்கள் நன்றாக வேலை செய்து வருகின்றன. இதோடு இப்போது நாம் தயாரித்த ஆடைக்கு பரிசு வேறு கிடைத்து விட்டது” என்றார் கருணாகரன்.
அபிஜித் சித்தார்த்தாவின் பக்கம் பார்த்துக் கொண்டே, “சித்தார்த்தா! இனி நீ ராப்பகலாய் உழைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது “ என்றான்.
“தாங்க்யூ சர்! என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்” என்றான்.
மைதிலி அருகில் வந்துவிட்டாள். அவளுக்கு சித்தார்த்தாவின் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் பதிக்க வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாக இருந்தது.
“சோனாலி! நீ ரொம்பவும்தான் உரிமை எடுத்துக் கொண்டு விட்டாய். சித்தார்த்தா பாவம்! மிரண்டு போய்விட்டான்” என்றாள் மிசெஸ் மாதுர் சிரித்துக் கொண்டே.
“சின்ன பையன் இல்லையா? இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையை வெளிப்படுத்தியதும் எனக்கு ரொம்ப ஆசை வந்து விட்டது. இப்போதும் செல்லம் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது.” சோனாலி வேண்டுமென்றே சித்தார்த்தாவின் பக்கம் நகர்ந்தாள். சித்தார்த்தா பயந்துபோய் அபிஜித்தின் பின்னால் மறைந்து கொண்டான்.
எல்லோரும் சிரித்தார்கள்.
“சித்தார்த்தா! நீ எங்கே மறைந்து கொண்டாலும் சரி நான் கண்டு பிடித்து விடுவேன்.” அபிஜித் பின்னால் எட்டிப் பார்த்தபடி ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டினாள்.
அவள் தன்மீது பட்டுக் கொண்டு இருப்பதை உணர்ந்து அபிஜித் பின்னால் நகர்ந்து சித்தார்த்தாவை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
“சோனாலி! நீ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போல் தெரிகிறது” என்றாள் மிசெஸ் மாதுர்.
“ஆமாம் ஆண்டீ! ஐ யாம் ஹேப்பி. வெரி வெரி ஹேப்பி.” சோனாலி அபிஜித்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். அவள் அந்த வார்த்தைகளை அபிஜித் ஒருத்தனிடம் மட்டுமே சொல்வது போல் இருந்தன.
மிசெஸ் மாதுர் இதை உணர்ந்தாள். பயந்து போனவளாக மைதிலியின் பக்கம் பார்த்தாள். மைதிலி கருணாகரனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவர் சித்தார்த்தாவின் திறமையை பாராட்டிக் கொண்டிருந்தார். மைதிலி சகலத்தையும் மறந்து போனவளாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
பிறகு எல்லோருக்கும் விருந்துச் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சாப்பிடப் போகும் முன், “சித்தூ எங்கே?” என்று கேட்டாள் மைதிலி.
“கிளம்பிவிட்டான். பாட்டிக்கு உடல்நிலை சரியாக இல்லையாம். என்னிடம் சொல்லிவிட்டு போய்விட்டான்” என்றான் அபிஜித்.
“போய்விட்டானா?” என்றாள் மைதிலி.
“ஆமாம். டிரைவரை இறக்கிவிட்டு வரச் சொன்னேன்” என்றான்.
மைதிலிக்கு திடீரென்று சுற்றிலும் இருந்த அந்த சந்தடி, கோலாகலம் தலைவலி அளிக்கக் கூடியதாக, தான் ஒரு கூட்டத்திற்கு நடுவில் சிக்கிக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. அதற்குள் அபிஜித்திடம் யாரோ வந்து பெனிபிட் ஷோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மைதிலி அவனுடன் சேர்ந்து கட்டாயம் சாப்பிட வேண்டியதாயிற்று. இறுதியில் சோனாலி ஐஸ்க்ரீம் கோப்பையை எடுத்து வந்து அபிஜித்திடம் கொடுத்தாள். மைதிலி பக்கத்திலேயே இருந்தாள்.
“நோ தாங்க்ஸ்! நான் சாப்பிட மாட்டேன்.”
‘எடுத்துக் கொள்ளுங்கள் சர்! இன்று நீங்க எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கீங்க தெரியுமா? என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் விதத்தில், இந்த ஐஸ்க்ரீமுடன் நம் வெற்றியை கொண்டாடுவோம்.”
வேறு வழியில்லாமல் அபிஜித் ஐஸ்க்ரீமை எடுத்துக் கொண்டான்.
“ஐஸ்க்ரீம் கொடுத்தால் மட்டும் போதுமா? உங்கள் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடு. நாங்கள் எல்லோரும் கூட வருகிறோம். அபிஜித்! சோனாலி பெங்காலி சமையல் நன்றாக சமைப்பாள்” என்றார் மாதுர்.
“அப்படியா! சமையற்கலை கூட தெரியுமா?’ என்றான் அபிஜித்.
“உனக்கு எதுக்கு இந்த பாடு சொல்லு” என்றாள் மிசெஸ் மாதுர்.
“எங்கேயோ படித்தேன் ஆன்டீ! கணவனுக்கு மனைவியின் மீது இருக்கும் அன்புக்கு அவள் கையால் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்ட திருப்தி அடிவாரமாக இருக்குமாம்.” சோனாலி அபிஜித்தை பார்த்துக்கொண்டே சொன்னாள். “என் கை பக்குவம் எனக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும்தான்.”
அபிஜித் அவள் வார்த்தைகளை, பார்வையை பொருட்படுத்தாதவன் போல் மாதுருடன் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு சொனாலியின் பேச்சும், தோரணையும் இடைஞ்சலாகத்தான் இருந்தன. ஆனால் லட்சியம் இல்லாதவன் போல் மிஸ்டர் மாதுரை அழைத்துக் கொண்டு தொலைவுக்கு போய் விட்டான்.
“அபிஜித்! நிஷா விஷயம் அந்த கடன்காரனுடன் பேசுவதாகச் சொன்னாய். பேசி முடித்தாகி விட்டதா?”
“சீக்கிரத்தில் அந்த காரியம் நடக்கும். அந்த நபரைப் பற்றி விசாரித்தேன். நான் நினைத்தாற்போல் தான் நடந்தது. அவன் தன்னைவிட வயதில் ரொம்ப சிரியவர்களைக் கல்யாணம் செய்துகொண்டு, அவர்களுடைய நகைகளை, பணத்தை தன் பிசினெஸ்ஸுக்கு பயன்படுத்திக் கொள்வான். கிரிஜா என்ற பெண் அவன் பிடியில் சிக்கி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.” தாழ்ந்த குரலில் சொன்னான்.
“மைகாட்!” என்றார் மாதுர்.
“என்ன? நிஷா என்று பேச்சு அடிபடுகிறது?” என்று மிசெஸ் மாதுர் அருகில் வந்தாள்.
“ஒன்றுமில்லை” மாதுர் சொன்னார். அபிஜித் பக்கம் திரும்பி ரகசிய குரலில் “இவளிடம் எதுவும் சொல்லாதே அபிஜித்! தன்னுடைய சினேகிதிகளிடம் சொல்லாமல் இருக்க மாட்டாள். அது அவளுடைய பலவீனம்” என்று எச்சரித்தார்.
அபிஜித், மைதிலி வீட்டுக்கு திரும்பி வந்தார்கள். டிரைவர் வண்டியை கேரேஜில் வைத்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தான்.
“சித்தார்த்தாவை இறக்கி விட்டு வந்தாயா?” அபிஜித் கேட்டான்.
“இறக்கிவிட்டு வந்தேன் சார்.”
“இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே ஏன்?”
“சித்தார்த்தா நேராக வீட்டுக்கு போகவில்லை சார்.”
“பின்னே எங்கே போனான்?”
உள்ளே போகப் போன மைதிலி அபிஜித் சித்தார்த்தா விஷயம் விசாரிப்பதைக் கேட்டுவிட்டு நின்றாள். திரும்பிப் பார்த்தாள்.
“டாங்க் பண்ட் அருகில் இறக்கிவிடச் சொன்னான். வீடு வரையிலும் போய் கொண்டுவிட்டு வரச் சொன்னீங்க இல்லையா? அதான் நானும் ஜீப்பை விட்டு இறங்கிக் கொண்டேன். அவன் நிலா வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் தண்ணீரை பார்த்த படி உட்கார்ந்து இருந்தான். பிறகு இரண்டு கைகளாலேயும் தன்னுடைய பரிசு கோப்பையை உயர்த்திப் பிடித்து, ‘ஐ யாம் ஹேப்பி!’ என்றான். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் இன்னும் உரத்தக் குரலில் ‘டூ யு ஹியர் மி? தாய் மண்ணே வணக்கம்!’ என்று கத்தினான். அந்த வார்த்தைகள் எதிரொலித்தன. எனக்கு பயமாக இருந்தது. என்னடா இந்தப் பையன் இப்படி கத்துகிறானே என்று. அருகில் சென்று தோளில் தட்டினேன்.
அவன் என் பக்கம் திரும்பினான். “நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்றான்.
என்ன செய்வது என்று தெரியாமல், “கங்கிராட்சுலேஷனஸ் சார்” என்றேன். அவன் என் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான். “உனக்கு இதயநோய் எதுவும் இல்லையே?” என்று கேட்டான்.
“இல்லை” என்றேன்.
“என்னுடன் சேர்ந்து ஓடுகிறாயா?” என்று சொல்லிக் கொண்டே என் கையைப் பற்றிக் கொண்டு டாங்க் பண்ட் பிளாட்பாரத்தின் மீது ஓடத் தொடங்கினான். நானும் கூட ஓடினேன். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் தண்ணீருக்கு பக்கத்தில் ஓட்டம் நன்றாக இருந்தது. இருவரும் மூச்சிரைக்க ஓடிவிட்டு களைத்துப் போன பிறகு திரும்பவும் ஜீப் அருகில் வந்தோம்.
எனக்கு ஒன்று புரிந்தது. அவன் ரொம்ப சந்தோஷமாக இருந்தான். அதைப் பகிர்ந்துகொள்வதற்கு யாருமே இல்லை போலும். ஜீப்பில் உட்கார்ந்து கொண்டதும் அவன் சட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
இந்த சந்தோஷ சமயத்தில் அழுவானேன் என்று வியப்பாக இருந்தது.
“உனக்கு யாருமே இல்லையா?” என்று கேட்டேன்.
“பாட்டி இருக்கிறாள். ஆனால் அவளுக்கு இதெல்லாம் புரியாது” என்றான்.
“அப்படியா” என்றேன். அங்கேயே ஜீப்பில் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தோம்.
“கிளம்புவோமா?” என்று கேட்டேன்.
“ஊம்” என்றான். நானே வழியில் ஒரு டீ கடையில் ஜீப்பை நிறுத்தி ஸ்பெஷல் டீ வாங்கிக் கொடுத்தேன்.
“வேண்டாம்” என்றான்.
“உனக்கு பரிசு கிடைத்து இருக்கிறது இல்லையா? நாம் அதை கொண்டாடுவோம்” என்றேன். இருவரும் குடித்தோம். நான் வேண்டாம் என்று சொன்னாலும் அவனே பணம் கொடுத்துவிட்டான். வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். அதான் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.”
டிரைவர் ரொம்ப நாளாக இருந்து வருகிறான். அபிஜித்துக்கு நம்பிக்கையானவன்.
அபிஜித் வியப்படைந்தவனாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்கு பின்னால் இரண்டடி தொலைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மைதிலிக்கு நினைவுத் தப்பிவிடும் போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு விருட்டென்று வீட்டுக்குள் ஓட்டமெடுத்தாள்.

Series Navigationவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *