இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்

author
4
0 minutes, 9 seconds Read
This entry is part 11 of 23 in the series 21 ஜூன் 2015

முனைவர் சு.மாதவன்

 

‘இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் சிந்திக்கிறபோது இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால இலக்கியம், நவீன இலக்கியம் என்ற வகைப்பாடுகளை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் ஒன்றுபோலத் தோன்றுபவை.

தமிழ் இலக்கியப் புரிதலில் இந்த வகைப்பாட்டுச் சொற்றொடர்கள் எல்லாம் ஒன்றுக்குப் பதிலியாய் இன்னொன்று எனப் புழக்கத்தில் இருந்து வருபவை. ஆனால், இவை அனைத்தும் ஒரே வகைப்பாட்டைக் குறிப்பன அல்ல. அவ்வாறாயின், இவ் வகைப்பாட்டுச் சொற்றொடர்களுக்கான விளக்கம்தான் யாதென அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என்னுடைய புரிதலிலிருந்து இவற்றை இவ்வாறு வரையறுத்துக் கொள்கிறேன்:
• இக்கால இலக்கியம் – (1800 – 2011)
‘இது’ என அண்மைச்சுட்டால் சுட்டப்படும் காலம் இக்காலம்-ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை
• தற்கால இலக்கியம் – (1947 – 2011)
தான் வாழ்கிற காலம் தற்காலம். எனவே, இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து அதாவது, இன்றைய காலம் வரை. அதாவது தான், தன் தந்தை, தன் தாத்தா ஆகியோர் வாழ்கிற வாழ்ந்த காலம் ‘தற்காலம்’ எனப்படலாம்.
• சமகால இலக்கியம் (1960 – 2011)
படைப்பாளியின் சமகாலம். இன்று வாழ்ந்துவரும் படைப்பாளிகளின் காலம்.

• நவீன இலக்கியம்
அதுவரையிலும் இல்லாத புதிய போக்குகளைக் கொண்டுவரும் இலக்கியம்.
இவ்வாறு புரிந்துகொள்வதற்கு வரலாற்றுப்புரிதல் மிகவும் அவசியமாகிறது. வரலாற்றுப் புரிதலின்றி எந்தவொரு அறிவார்ந்த புரிதலையும் நாம் பெற முடியாது. இதற்கு இலக்கியக் காலகட்டங்களை முடிவுசெய்து கொள்வது (Pநசழைன குiஒயவiபெ) மிகவும் தேவையானதாகும். இ;நத வகையில், முதன்முதலில் இந்தியா என்ற பரந்த நாட்டு வரைவெல்லைகளை முதன்முதலாக உருவாக்கிக் கொண்டதும், புதிதாகத் தோன்றி வளர்ந்துவந்த ஜனநாயக, சமத்துவ, விடுதலைச் சிந்தனை உருவாகிவந்ததுமான ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து இக்கால இலக்கியம் தோற்றம் கொள்கிறது.
ஆங்கிலேய அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இந்தியா அதாவது தான் வாழ்கிற இந்தியாவின் சமூகநிலை, மக்கள் வாழ்நிலை, எதிர்பார்ப்பு நிறைவேறாத் தன்மை, இதன்வழி வெளிப்படும் மறுமலர்ச்சி, கிளர்ச்சி, கலகம், சமத்துவ – பொதுவுடைமைச் சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்ற தொலைநோக்குப்; பார்வை ஆகியவற்றை வெளிப்படுத்துவனவாகத் தற்கால இலக்கியம் உருவாகிறது.
ஒரு படைப்பாளியின் சமகாலத்தில் எழும் படைப்புக்களைச் சமகால இலக்கியம் எனலாம். இன்று வாழும் ஒரு மூத்த படைப்பாளியை எடுத்துக்கொண்டால் அவர் தோராயமாக 1960-க்குப் பிறகு எழுதவந்தவராக இருப்பார். எனவே சமகால இலக்கியம் என்று 1960க்குப் பிறகு வந்த இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான வகைப்பாடுகளின் அடிப்படையில் நோக்கும்போது இன்றைய இலக்கியம் என்று எந்தக் காலகட்ட இலக்கியங்களைக் குறிக்கலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது.
தமிழ்மொழியில் அதுவரையிலும் இல்லாத புதிய போக்குகளைக் கொண்டுவரும் இலக்கியங்களை நவீன இலக்கியம் எனலாம். இத்தகைய போக்கு மேலே சுட்டப்படும் எல்லா இலக்கியக் காலப்பகுதிகளுக்குள்ளும் தொழிற்படுகிறது.
எனினும், நவீனப் போக்குகள் அதிகமாக எழுந்த காலமென பொதுவாக 1960-க்குப் பிந்தைய காலப் பகுதியையும் சிறப்பாக 1990க்குப் பிந்தைய காலப்பகுதியையும் குறிப்பிடலாம்.
இதை விளங்கிக்கொள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பார்வை அவசியமாகிறது.
இக்கால இலக்கியம் இந்திய அரசியல் விடுதலையைக் கோரித் தொடங்குகிறது (18ஆம் நூற்.) என்றால்….
தற்கால இலக்கியம் சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்குள் (1947-க்குப் பிறகு) சமூக மாற்றம் கோரித் தொடங்குகிறது என்றால்….
சமகால இலக்கியமும் நவீன இலக்கியமும் இன்றுவாழும் மூத்த படைப்பாளி எழுதவந்த 1960-க்குப் பிந்தைய புதிய போக்குகளைத் தொடர்ந்து தொடங்குகிறது என்றால்….
‘இன்றைய இலக்கியம்’ எந்தக் காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது என்பது நம்முன் எழுகிற கேள்வி. இதற்கு இக்கால இலக்கியப் பகுதிகளைப் பகுத்துப் பார்க்கும்போது விடைகிடைக்கிறது. தற்கால இலக்கியம், சமகால இலக்கியம், இன்றைய இலக்கியம், நவீன இலக்கியம் என்பனபோல் இன்னும் எத்தனை வகைப்பாடுகளை நாம் வரையறுத்துக் கொண்டாலும் இவைஃ அவை எல்லாமே ‘இக்கால இலக்கியம்’ என்பதற்குள் அடங்கிவிடுகின்றன. எனவே, சமூக வரலாற்றுப் போக்குகளின் அடிப்படையில் இக்கால இலக்கியம் என்றே அணுக வேண்டியுள்ளது. இந்தியச் சூழலில் மூன்று விதமான சமூக வரலாற்றுப் போக்குகள் தென்படுகின்றன. அவை,
1. இந்திய விடுதலைக்கு முந்தைய சமூகச் சூழல். இந்தக் கால கட்டத்தில் அரசியல், பொருளாதாரப் பிடிமானம் ஆங்கிலேயர்களின் கையில் இருந்தது. எனவே, இது அந்நிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் போக்கைக் கொண்ட சமூகச் சுழல் (1947க்கு முன்பு வரை).
2. இந்திய விடுதலைக்குப் பிந்தைய சமூகச் சூழல். இந்தக் காலகட்டத்தில் அரசியல், பொருளாதாரப் பிடிமானம் இந்தியர்களின் கைக்க வந்துவிட்டது. எனவே, இது இந்திய நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ கலப்பு அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் போக்கைக் கொண்ட சமூகச் சூழல் (1947லிருந்து…)
3. இந்தியாவில் பன்னாட்டு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை இந்தியர்களே ஆண்டு கொண்டிருந்த அரசியல், பொருளாதாரப் போக்கில் பன்னாட்டுப் புதிய பொருளாதார, அரசியல், பண்பாட்டு ஊடுருவல் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் என்னும் பெயர்களில் கட்டிலடங்கா வகையில் ஆதிக்கப் போக்கு நிகழும் சூழல் (1990லிருந்து….)
மேலே கண்ட மூன்று போக்குகளாலும் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் தோன்றிய கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், நகைச்சுவை துணுக்குகள், கருத்துப்படங்கள் போன்ற பல வகைப்பாடுகளுடைய அத்தனை இலக்கியங்களையும் அத்தனை இலக்கியங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் பெயராக ‘இக்கால இலக்கியம்’ என்னும் தொடர் வழங்கப்பட்டுவருகிறது.
முதல் சூழலில் முழு ஆட்சியதிகாரமும் வெள்ளையனிடமிருந்தது. வெள்ளையனிடமிருந்து விடுதலை பெறுவது முதன்மையான நோக்கமாக இருந்தது. இரண்டாவது சூழலில் ஆட்சியதிகாரம் இந்தியரிடம் வந்தது. ஆனாலும், மக்களுக்கானதாக மாறவேண்டும் என்பது முதன்மை நோக்கமாகிறது. மூன்றாவது சூழலில், இந்தியர் ஆட்சியில் இருக்கிறார்: அந்நியர் ஆட்சிசெய்கிறார் என்பதால், இத்தகைய கட்புலனாகாத ஆதிக்க அரசியல் சுரண்டலுக்கு எதிரான குரல்கள் எல்லாத் தளங்களிலும் கிளர்ந்தெழுந்து கொண்டிருப்பது இன்றைய போக்காக உள்ளது.
மூன்றாவது சூழலானது பன்னாட்டு அரசியல், பொருளாதார பண்பாட்டு மேலாதிக்கப் போக்கு வரலாற்றுக்காலப் பின்னணியில் 1990 தொடங்கி யிருப்பதிருப்பதிலிருந்து தொடங்குகிறது இன்றைய இலக்கியப் போக்கு எனலாம். ஆக, இன்றைய இலக்கியம் என்பது உலக அளவில் உலகமயமாக்கலின், விளைவுகளிலிருந்து விளையத் தொடங்குகிறது எனலாம்.
இன்றைய இலக்கியத்தின் முதன்மையான நோக்காகவும் போக்காகவும் இருப்பது நடப்பியல் (சுநயடளைஅ) என்னும் கோட்பாடாகும். இக் கால இலக்கியத்தின் தோற்றத்திலிருந்தே நடப்பியல் கோட்பாட்டு நோக்கிலான இலக்கியங்கள் பல்கிப்பெருகி வளர்ந்து வந்துள்ளன. அதாவது, ஆங்கிலேய அடிமைத்தளையிலிருந்து இந்தியா விடுபடவேண்டும்; அவ்வாறு விடுபட வேண்டுமென்றால் இந்தியச் சமூகத்திற்கே உரித்தான சாதீயப் பிளவு மனப்பான்மையும் இம் மனப்பான்மைக்கு அடிப்படை நல்கும் இந்துத்துவ – பிராமணியக் கருத்தியலும் நொறுக்கப்பட வேண்டும்; எல்லோரும் ஓர்நிறை என்ற மானுடப் பொதுமைச் சிந்தனை வளர்க்கப்பட வேண்டும் என்ற நடப்பியல் நோக்கின் விளைச்சல்களாகப் படைப்புகள் படைக்கப்பட்டு வந்துள்ளன.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடந்த உலகளாவிய மாற்றங்களால் – குறிப்பாக உலக வரலாற்றில் முதன்முதலில் தொழிலாளிவர்க்கப் புரட்சி ஆட்சி 1917-ல் ரஷ்யாவில் தோன்றி சமத்துவ, பொதுவுடைமைச் சிந்தனை மேலெழுந்த – காலகட்டத்தில் நடப்பியல் கோட்பாடு புதிய சிந்தனைப் போக்கைச் சந்தித்தது. அப் புதிய சிந்தனைப் போக்கு ‘சோசலிச யதார்த்தவாதம்’ என்பதாகும். இந்த வாதத்தைக் கலை – இலக்கிய உலகில் உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் ஈர்ப்பதற்குமான ஆற்றல்மிகு சமூக அமைப்பைப் சோவியத் சமூகம் பெற்றிருந்தது. சோவியத் சமூக அமைப்பு அதுவரையிலிருந்த நடப்பியல் கோட்பாட்டை அறிவியல்பூர்வமான சோசலிச எதார்த்தவாதமாக உருவாக்கிக் கொடுத்தது.
நடப்பியல் கோட்பாட்டிலிருந்து உருவாகிய சோசலிச எதார்த்தவாதம் என்னும் கலைஇலக்கியப் பார்வை உலகளாவிய ஏற்பையும் விளைவையும் ஏற்படுத்தியதற்குரிய காரணங்கள் இரண்டு. அவை,
1. ‘நடப்பியல் கோட்பாடு’, சமூக நடப்பை அப்படியே பதிவு செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
2. சமூக நடப்பை அப்படியே பதிவு செய்யும்போதே சமூக இலங்கியலடிப்படையிலான சமூகமாற்றத்திற்கான புரிதலையும், அவ்வாறு மாறியாக வேண்டிய சமூகத்தேவையையும் உணர்த்துவதும் கிளர்த்துவதுமாக ‘சோசலிச எதார்த்தவாதம’; தொழிற்பட்டது.
இந்த இரண்டாவது காரணத்தால் நாட்டு விடுதலை, சமூக விடுதலை, பழமைச் சிந்தனை விடுதலை ஆகிய கருத்தியல்களைக் கட்டமைத்து வந்தன – இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய இலக்கியப் படைப்புகள்.
இந்த இடத்தில் 1990களில் நிகழ்ந்த சோவியத் வீழ்ச்சியால் நிலைகுலைந்துபோன சோசலிச எதார்த்தவாத சிந்தனையாளர்களை மேலும் மேலும் நிலைகுலையவைத்து சிந்தனைச் சிதறல்களை உருவாக்கு-பவையாக உலகெங்கும் எழுந்த புதுப்புது இசங்கள் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
மார்க்சீயமும், சோசலிச எதார்த்தவாதமும் காலாவதியாகிவிட்டன என்றும் இவை இரண்டையும் சீர்திருந்தி வளப்படுத்த புதிய நோக்கையும் போக்கையும் உருவாக்க வல்லவையாக இவை இருக்கின்றன என்றும் இந்த இசங்கள் மாயப்பொய்கூட்டி மயக்கின. இவ்வாறு உருவான நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், மீமெய்ம்மையியல் போன்ற பற்பல இசங்கள் முதலாளித்துவ அறிவுஜீவிகளால் மார்க்சீயமுலாம் பூசிய மாயமான்களாய்க் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இத்தகைய இசங்களின் சொல்லாடல் கருத்தியல் காட்டாற்று வெள்ளத்துக்குள் நீர்வழிப்படூம் புணைபோல் முற்போக்காளர்களும் இழுத்துச் செல்லப்பட்டுத் திக்குமுக்காடினர். இந்த இசங்களையும் உட்கொண்டு சோசலிச எதார்த்த வாதத்தைச் செழுமைப்படுத்த முடியுமா என்று சிந்தனைக்குதிரையைத் தட்டிவிட்டனர் சிலர். இவ்வளவு புதிய இசங்கள் வந்தபிறகு சோசலிச எதார்த்தவாதத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா என்று எண்ணிச் சோசலிச எதார்த்தவாதத்திற்கே புதியபெயர் புனைந்து கொள்ளலாமா என்று முயன்றனர் சிலர்.
இப்படிப் புதிய இசங்களால் மயங்கி அதுவரை இருந்துவந்த நடப்பியல் என்ற எதார்த்தவாதத்துக்கும் சோசலிச எதார்த்தவாதத்துக்கும் இடையில், அதிலும் இதிலும் ஒட்டாத ஒரு இலக்கியக் கோட்பாட்டுப் பெயரை ‘சமூக எதார்த்தவாதம்’ என்று முன்வைத்தனர். பெயர்தான் புதியதாக இருந்ததே தவிர அது ஏற்புநிலைக்குரிய காரணகாரிய இயைபைக் கொண்டிருக்கவில்லை.
முன்னரே விளக்கியிருப்பதைப்போல், இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பைச் சமத்துவ சமூகஅமைப்பை நோக்கி உந்திஇயக்கும் ஆற்றலுரியதாகச் ‘சோசலிச எதார்த்தவாதம்’ என்னும் இலக்கியக் கோட்பாட்டை அணுகாமல், ‘எதார்த்தவாதம்’ என்பதன் வேறொரு பெயராகத் தான் ‘சமூக எதார்த்தவாதம்’ என்பது இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு இசங்களின் மீதான ஈர்ப்பு அறிவுஜீவிகளை நிறையச் சிந்திக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால், உண்மையான உண்மையாக இருந்தது என்னவென்றால் தற்காலப் பொருளாதார வாழ்வியல் போக்குகள் குறித்த கவனச்சிதறலை உருவாக்கியது என்பதுதான். ஆம், இந்தக் காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், தாராளமய மாக்கல் ஆகியவை இன்னொருபுறம் உலகம் முழுதும் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
உலகியல் பண்பாட்டு வாழ்வியலுக்கான அடிப்படைக் கருத்தியல்களை உருவாக்குபவர்கள் படைப்பாளிகள் அல்லவா?
சமூகம் இலக்கியப் படைப்புகளை உற்பத்தி செய்கிறது; இலக்கியப் படைப்புகள் முன்னிலும் மேம்பட்ட சமூகஅமைப்பை உற்பத்தி செய்கின்றன. அல்லவா? ஆக, சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான உந்துசக்தியைக் கொடுக்கும் படைப்பாளர்களை, அறிவுஜீவிகளை ஒருபுறம் இசங்களின்பால் ஈர்த்து, காரசாரமாக விவாதிக்க வைத்துக்கொண்டே, இன்னொருபுறம் உலகமயமாக்கலை ஊதிவிட்டன ஏகாதிபத்திய சக்திகள். இத்தகைய பின்னணியில் உருவாகிவரும் புதுப்புது இசங்களின் தாக்கம் இன்றைய இலக்கியப் பரப்பில் விரவிக் கிடக்கின்றன.
இன்னொரு வகையில். இலக்கியப் போக்குகளுக்குள் உருவான நோக்குநிலைகளை உருவாக்குவதில் கிறித்துவ சமய மிஷனரிமார்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருந்துகொண்டே இருக்கிறது என்ற பின்னணியிலும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சோவியத் புரட்சிக்குமுன் உலகில் இருந்துவந்த சமயங்களுள் உலகளாவிய நிலையில் தாக்கங்களை ஏற்படுத்துபவையாக விளங்கியவை பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவையாகும். இவற்றுள், முதலாளித்துவ ஏகபோக முதலாளித்துவக் கருத்தியல்களின் உருவாக்கத்தளமாக இருப்பது கிறித்தவமாகும். புத்தன், ஏசு, நபிகள் ஆகிய மூவருக்கும் மேம்பட்ட புரட்சிகரமான சிந்தனைகளால் சமூக மாற்றத்துக்கான இயங்கியல் – மெய்யியலை அறிமுகப்படுத்திய மார்க்சீயத்தின் வெற்றி இம் மூவரின் இக்காலத் தேவையின் மீதான வினாக்களை எழுப்புகிறதல்லவா?
அறிவியல் பூர்வமான சமூக – பொருளாதார பகுப்பாய்வுவழி சமூகத்தை விளக்குவதோடு மாற்றத்தை நோக்கி உந்துவதாய் அமைந்த அமைந்திருக்கும் மார்க்சீயம், உலகமயமாகும் நிலைவந்துவிட்டால் எந்தச் சமய நிறுவனங்களுக்கும் உரிய நிலைப்புத்தன்மை ஆட்டங்காணத் தொடங்கிவிடுமல்லவா? சமூகத்தில் தமக்குண்டான பிடிப்பை இழக்க எந்தக் கொள்கைதான் சம்மதிக்கும்?! அது சமத்துவக் கொள்கையானால் என்ன? அது அசமத்துவக் கொள்கையானால் என்ன?
அது முற்போக்கானால் என்ன?
அது பிற்போக்கானால் என்ன?
முற்போக்கு என்பது சமத்துவத்துக்கான முதற்போக்கு அல்லவா? அந்த முதற்போக்கை விதைக்கும் நோக்குத்தானே சோசலிச எதார்த்தவாதம்! சமூகத்தில் சோசலிசப் பார்வையை உருவாக்கும் விதைகளை – கலை இலக்கிய விதைகளைத் தயாரிப்பதல்லவா சோசலிச எதார்த்தவாதம்! இத்தகைய சோசலிச எதார்த்தவாதத்தை அதன் கொள்கை, கோட்பாடுகளை – அதன் விளைவுகளான கலை, இலக்கிய விதைகளை முளைப்புத் திறனற்றவையாகக் காட்டினால்தானே சமயங்கள் உயிர்வாழ முடியும்; அச் சமயங்களையும் சமூக அமைப்பையும் தாங்கிப் பிடிக்கும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கருத்தியல் உயிர்வாழ முடியும். எனவேதான், சோவியத் புரட்சியை அடுத்துப் புதுப்புது இசங்கள் முளைவிடத் தொடங்கின – கிறித்தவ மிஷினரிகளின் கருத்தியல் பங்களிப்பால்!
சரி! கிறித்துவ மிஷினரிமார்கள் இதுபோன்ற கருத்தியல் உருவாக்கப் பணிகளைச் செய்தார்கள!; பிற சமயத்தார் செய்யவில்லையா?! என்ற ஒரு கேள்வி இந்த இடத்தில் எழும். பிற சமயத்தாரும் செய்தார்கள்தான். ஆனால், உலகளாவிய சமய நிறுவனத் தொடர்பும் வரலாற்றுநிலையில் அரசியல் மேலாதிக்க நிலையும் மிகுதியாகக் கொண்டிருந்தது கிறித்தவம் என்பதுதான் இக் கேள்விக்கான பதிலாகும். இந்த அடிப்படையில், உலகளாவிய கருத்தியல் உருவாக்கப்பணியில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் சோசலிச எதார்த்தவாதப் பார்வை வளர்ந்துவந்த காலத்தில் கிறித்துவ மிஷினரிமார்களாலும் முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும் பிரசன்ன மார்க்சியவாதிகளாலும் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டவைதான் இசங்கள் என்னும் நோக்கில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்ச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் போன்ற இசங்கள் முதன்முதலில் யாரால் பரப்பப்பட்டன என்பதை உன்னித்து நோக்குவோமேயானால் கிறித்துவ மிஷினரிமார்களின் கைங்கர்யம் அதில் கட்டாயம் வெளிப்படும்.
இந்த நேரத்தில், உலகளாவியநிலையிலான இசங்களின் உற்பத்தி, உருவாக்கம், பரவலாக்கம், செயலாக்கம் ஆகியவற்றில் கிறித்துவ மிஷினரிமார்களின் பின்னணி இருப்பதை எண்ணிப்பார்ப்பதோடு இன்று இன்னொரு பேராபத்து இந்தியாவில் முளைவிட்டுள்ளதே அதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.
நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ ஏற்கிறோமோ ஏற்கவில்லையோ பின்பற்றுகிறோமோ பின்பற்றவில்லையோ “இந்தியர் எல்லோருமே இந்துக்கள்; பூர்வ இந்துக்கள்” என்ற பார்வை பொதுப்புத்தியில் மண்டிக்கிடக்கிறது. இந்தியாவில் யாரையாவது பார்த்து ‘நீ யார்?’ என்று கேட்டால் ‘நான் ஐயர்’, ‘நான் வெள்ளாளர்’, ‘நான் செட்டியர்’, ‘நான் கள்ளர்’, ‘நான் நாடார்’, ‘நான் முத்தரையர்’, ‘நான் பறையன்;, ‘நான் பள்ளன்’ என்று எதையோ ஒன்றைத்தான் சொல்வான் என்றார் தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (புதுக்கோட்டை தமுஎகச மாவட்ட மாநாடு, பிப்.2015). பிறகுதான், ‘இந்து’ என்பதற்கே வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் சோசலிச எதார்த்தவாத, எதார்த்தவாதப் படைப்புகள் மாபெரும் பேராபத்தை இன்று எதிர்கொண்டு வருகின்றன.
இன்று மதவாதமும் சாதீய வாதமும் மூடவெறியோடு எதார்த்தவாதப் படைப்புக்கு எதிராக – கருத்துரிமை, எழுத்துரிமைக்கு எதிராகக் கிளப்பி விடப்படுகின்றன. இது தற்செயலாக நிகழும் நடவடிக்கையல்ல. தமிழ்நாடு எனும் பெரியார் மண்ணில் மதவாதம் நேரிடையாக வெற்றிபெறாது என்பதைப் புரிந்துகொண்ட மதவாதிகள் இந்திய மனிதர்களுக்குள் குருதியைப் போலவே உயிர்ப்போடு கலந்துநிற்கும் சாதிய உணர்வை, பற்றை வெறித்தீயாக ஊதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான், அண்மையில் படைப்புகளின்மீதும் படைப்பாளியின்மீதும் மூர்க்கத்தனமாக – மிருகத்தனமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுவரும் நிகழ்வுகளின்வழியாகக் கண்டுவருகிறோம்.
பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தை ஏற்றுக்கொள்பவர்களாலேயே அர்த்தமில்லாமல் எதிர்க்கப் படுகிறது.
புலியூர் முருகேசனின் ‘திருநங்கை பற்றிய கதை’இ
புதுகை துரை குணாவின், ‘ஊரார் வரைந்த ஓவியம்’,
கொத்தமங்கலம் கண்ணனின் படைப்பு,
என்று படைப்புகளை எதிர்ப்பது படைப்பாளர்களைத் தாக்குவது தொடர்ந்து வருகிறது. எந்த சாதிப் பெண்ணின் வழியாகவும் இன்பம்தேடும் அல்லது விரும்பும் அல்லது எண்ணும் மனிதர்கள் போலிமுகம் காட்டி எதிர்க்கிறார்கள். கற்பு – கற்பு, என்று கதைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் – இந்த எதிர்ப்பின் – பின்னணியாக இருப்பது ஒன்றே ஒன்றுதான்:
“இன்றைய படைப்புகள் – குறிப்பாக – புதினங்கள்
இன்றைய சமூக நிலவரங்களை உள்ளது உள்ளபடியே
நிகழ்பதிவாகவே பதிவுசெய்கின்றன”
இன்று படைக்கப்படும் படைப்புகள் சமூகமுரண், பொருளாதார முரண், பண்பாட்டு முரண், சாதி முரண், மதமுரண் என எல்லா முரண்களையும் பதிவுசெய்கின்றன. இவ்வாறு, முரண்கள் பட்டவர்த்தனமாக வெளிவருவதால் – வெளியிடப்படுவதால் முரண்களின் மோதல்கள் கூர்மையடையத்தானே செய்யும்! படிப்பவர்கள் முரண்களை ஒழிக்கத் திரளத்தானே செய்வார்கள்! இப்படி, சமூக வளர்ச்சியின் பன்முக முரண்களையும் வெளியிடும் எதார்த்தவாதப் படைப்புகள் வெளிவருவதை மதவாதிகளும், சாதீய வாதிகளும் எப்படிச் சகிப்பார்கள்?! இதனால்தான் மதவாதி, சாதீய வாதிகளைத் தூண்டிவிட்டு படைப்பிலக்கியவாதிகளை மிரட்டுவது, தண்டிப்பது, எழுதத் தடைசெய்வது என்பதன்மூலம் வர்க்க முரண் வளர்ந்து விடாமலும் பார்த்துக் கொள்கின்றன முதலாளி வார்க்கமும் நிலவுடைமை வர்க்கமும்.
அவர்கள் எதார்த்த இலக்கியப் படைப்பை எதிர்த்துவிட்டு, மறுதலித்துவிட்டு, எழுதவிடாமல் தடுத்துவிட்டு எதை எழுதத் துடிக்கிறார்கள்? எதைக் கட்டமைக்கத் துடிக்கிறார்கள்? படைப்பின் பாடுபொருள் என்னவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்? இத்தனைக் கேள்விக்கும் ஓரே பதில்தான் :
“கற்பிதத்தை”
கற்பிதத்தைக் கட்டமைத்தது தானே – கற்பிதத்தால் கட்டமைக்கப்பட்டது தானே இந்துமதம். எதார்த்தத்தை மறுத்தால்தான் கற்பிதக் கட்டமைப்பு செல்லுபடியாகும்?! இறைவன், ஆன்மா, தலைவிதி, சொர்க்கம், நரகம் என்ற மத அடிப்படைகளுக்கு எதிரான இயல்பு எதார்த்தத்தின் இயல்பிலேயே இருக்கிறதே! இந்த எதார்த்தப் படைப்புகள் சமூக இருப்பு நிலையை அப்படியே சொல்கின்றனவே?! இத்தகைய எதார்த்தவாதப் படைப்புகள் வளர்ந்தால் எல்லாவிதமான அநீதி – எல்லாவிதமான ஒடுக்குமுறை – எல்லாவிதமான வேற்றுமைகளுக்கும் எதிரான எதிர்க்கருத்தியல் வளர்ந்து விடுமே! விடலாமா? விடக்கூடாது. இதுதான் இன்றைய இலக்கியப் போக்கின் இன்றைய நோக்காக உள்ளது.
இந்தப் பின்னணியில், முற்போக்காளர்கள் எதிர்கொள்ள வேண்டிய எல்லாப் பிற்போக்கு அம்சங்களும் எழுந்துகொண்டே இருக்கும் என்பதே இன்றைய சமூக நிலவரம் தரும் படிப்பினையாகும்.
__

முனைவர் சு.மாதவன்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த)
புதுக்கோட்டை 622001
பேச : 9751 330 855
மின் அஞ்சல்

semmozhi200269@gmail.com

semmozhi_200369@yahoo.com

 

Series Navigationசீப்புசங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    Pa.Sampathkumar says:

    அருமையான ஆழ்ந்த ஆய்வு. உங்களின் உழைப்பு தெளிவான கருத்துக்களில் கட்டுரையாக மிளிர்கிறது. பணி தொடர வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *