மஞ்சள்

This entry is part 22 of 23 in the series 21 ஜூன் 2015

-எஸ்ஸார்சி

தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு த்தானே தன் கையால் பின்னிய தென்னங்குடலையில் சுமந்து வருவார் அந்த கொட்டை கட்டி வாத்தியார். கழுத்தில் ஒரே ஒரு உருத்திராட்ச மணியை சிவப்புக்கயற்றில் கோர்த்துத்தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தார் அவரை க்கோவில் வாத்தியார் கொட்டை கட்டி வாத்தியார் மாலைகட்டி வாத்தியார் இன்னும் ஏதோ பெயர் வைத்து தருமங்குடிக்காரர்கள் பாசமாக அழைத்தார்கள். வாத்தியார் என்பது மட்டும் வருமொழியில் இருத்தல் அவசியம்.நந்தவனத்தைச்சுற்றி தென்னை மரங்களை வளர்த்து ஆளாக்கி விட்டிருந்தனர் தருமங்குடிப்பெரியவர்கள். யாழப்பாண வகை தென்னை மரங்கள் சிலவும் நடு நடுவே இருந்தன.
.தருமங்குடி வெள்ளாழத்தெரு நீண்ட தெரு. இரட்டை சாரியும் வீடுகள்.சைவப்பிள்ளைகள் சிவ பூஜையும் திருமுறையோடு வெங்கல தாளமும் கை கொண்டு அவர்கள் ஊரை வலம் வந்த காலம் ஒன்று இருந்தது.அக்கிரகாரத்து பார்ப்னர்களின் வேத சாத்திர ஆகம சந்தேகங்களுக்குப்பதில் சொல்லி வழி காட்டுபவர்களாய் இருந்த பெரியவர்களுமே அந்த வெள்ளாழத்தெருவில் வசித்து வந்தார்கள். பார்ப்பனக்குடும்பங்களுக்குள் எழும் உள் நாட்டுப் பிரச்சனைகள் பலவற்றிற்கும் தீர்ப்பு சொல்பவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.அப்படிச்சொல்லப்படும் அந்த தீர்ப்புக்கள் வேத வாக்காக தருமங்குடி வாழ் பார்ப்பனர்களால் ஏற்கப்பட்டன.
ராமுவோடு சந்துருவும் சிவராமனும் பாலுவும் தருமங்குடி ச்சிறுவர்கள். ஐந்தாம் வகுப்பு. கிராம பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் பயின்றனர். தருமை நாதனின் கோவில் நந்தவனம் சுற்றி இந்த ப்பையன்களின் வீடுகள் இவர்களில் ராமுவோடு சந்துரு அக்கிரகாரத்து அம்பிகள்.மற்றவர்களுக்கு இருப்பிடம் அந்த வெள்ளாழத்தெரு.சிவராமனும் பாலுவும் கொஞ்சம் தைர்யசாலிகளாக இருந்தார்கள்.
அக்கிரகாரத்து சந்துருவுக்கு அசாத்திய துணிச்சலுண்டு.பாம்பை க்கையில் பிடித்துக்கொன்டு பாம்பு பார் பார் என்று கூவியபடி தட்டாமாலை சுற்றுவான்.கல் வீசினான் என்றால் எவ்வளவு உயர தென்னை மரம் இல்லை அது மாமரமானால்தான் என்ன காய்கள் அவன் எறிந்த கல் அவைமேல் பட்டதும் கீழே வந்து அவன் சொன்னது கேட்கும். அக்கிரகாரத்தில் இப்ப்டி எல்லாம்கூட பையன்கள் இருப்பார்களா என்ன இந்த சந்துரு மட்டும் அப்படி வித்தியாசமாக இருந்தான்.அவன்தான் பெரிய சைக்கிளை இரண்டாம் வகுப்பிலேயே பழகிக்கொண்டவன்.இரண்டு கைகளையும் ஹாண்டில்பாரைவிட்டு எடுத்துவிட்டு சைக்கிளை அவன் நெடுந்தூரம் ஓட்டிக்கொண்டுவருவதை ஊர் சனங்கள்அச்சத்தோடு பார்ப்பார்கள். தருமங்குடியில் எந்த கிணற்றிலும் இறங்குவான். வாளியைக்குடத்தை கிணற்றில் போட்டுவிட்டவர்கள் அவன் பின்னே சுற்றி சுற்றி வருவார்கள். காதில் ஒரு முறை அவனுக்கு சீழ் வந்ததது. ஆக பிளாஸ்டிக் பேப்பர் பையினால் தலையை மூடி இறுக்கிகட்டிக்கொண்டான். தருமைநாதன் கோவில் கிணற்றில் குதித்து குருக்களுக்கு அபிஷேக்குடத்தை எடுத்துக்கொடுத்தான்.தண்ணீரில் மூழ்கி குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் மட்டத்திலிருந்து வெளி வந்துவிட்டபின்னரும் அவன் தலையில் கட்டியிருந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுக்க முடியாமல் மூச்சுத்திணறினான். உயிரே போயிருக்க வேண்டிய கட்டம். எப்படியோ சமாளித்துக்கொண்டு பிழைத்து எழுந்தான். கிணற்றின் கரையில் நின்றிருந்த கோவில் குருக்கள் சாமா துடி துடித்துப்போனார் அந்த .தருமாம்பாள்தான் அவனைக்காப்பாற்றிவிட்டதாக அவனிடம் சொன்னார்.சாமா குருக்களுக்கு அவனிடத்தில் எத்தனையோ பிரியம். எல்லா கோவில் விசேஷங்களுக்கும் அவனைக்கட்டாயம் அழைத்துச்செல்வார்.
ராமுதான் அவன் நண்பர்கள் குழாத்திலேயே பயந்தாகொள்ளி.எதற்கெடுத்தாலும் ராமுவுக்கு அச்சம்.அவனும் தென்னைமரம் ஏற கற்றுக்கொண்டான்.. வாடகை சைக்கிள் கொண்டு வந்து பௌர்ணமி இரவு முச்சூடும் பழகினான். பட்டினத்தான் வாய்க்காலில் நீச்சல் அடிக்க மட்டும் அவனுக்கு ஏனோ நண்பர்க்ள் கொஞ்சம் தாமதமாக சொல்லிகொடுத்தனர்.
தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில். இறங்கினால் முதலில் ஒரு மணிப்பிள்ளை மோட்டார் கொட்டகை வரும். பேருந்து நிறுத்தம் எதிரே நெட்டை நாராயணன் மகன் வேலாயுதம் டீக்கடை போட்டிருந்தான்.தருமங்குடி செல்லும் கப்பி சாலையில் நடந்தால் தருமங்குடி சுடுகாடு தான் முதலில் கண்ணில் படும். ஏன் இப்படி என்று எல்லோரும் கேட்டுக்கொள்வார்கள். விடைதான் யாருக்கும் தெரியவில்லை. சுடலை தாண்டி பட்டினத்தான் வாய்க்காலுக்குப்.பிறகு பிள்ளையார்கோவில். மேற்கு நோக்கிய பிள்ளையார் கோவில்.இந்த சுற்றுப்பட்டில் என்ன தமிழகம் முழுவதும் தேடினாலும் மேற்கு பார்த்த பிள்ளையார் கோவிலை பார்க்கமுடியுமா என்றால் முடியாதுதான். அதுவும் நாகத்தை இடுப்பில் சுற்றிக்கொண்ட விநாயகர் சிலை.
. ராமுவுக்கு தருமங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி த்தனியாக இரவில் ஊர் உள் வர அச்சம்.வழியில் தருமங்குடி சுடுகாடு வரும்.அங்கு பேய்கள் நடமாடும் என்று விஷயம் தெரிந்தவர்கள் அவனிடம் சொல்லி இருக்கிறார்களே.அவன் அம்மாதான் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என தோத்திரம் சொல்லிக்கொண்டு சுடுகாட்டை க்கடக்க அவனுக்குச்சொல்லிக்கொடுத்திருந்தாள்.எது சொன்னால் என்ன பயம் மட்டும் போக மாட்டேன் என்றுதான் அடம் பிடித்தது. தீப்பெட்டி ஒன்றை பாக்கெட்டில் வாங்கிப்போட்டுக்கொண்டு இரவில் நடப்பான்.எடை குறைவு விலை குறைவு வெட்டும் புலி தீப்பெட்டி மட்டும்தான். கையில் தீப்பெட்டி இருந்தால் பிசாசுகள் விலகிப்போகும் அவன் அம்மா சொன்னதுதான். சட்டைப் பையில் தீப்பெட்டி இருந்ததற்காக அவன் சிகரெட் பிடிக்கக்கூடும் என்று ஊகித்த வகுப்பு ஆசிரியரிடம் செமத்தையாய் அடி வாங்கியிருக்கிறான்.
சந்துருவும் பாலுவும் சிவராமனும் சேர்ந்து நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் க்காய்கள் பறித்து சாப்பிட்டால் என்ன என முடிவு செய்தனர். கோவிலார்தான் நந்தவனப்பொறுப்பாளி.கோவிலார் என்றால் அவரும் வெள்ளாழத்தெருவில்தான் பெரிய வீட்டில் இருக்கிறார். இருந்தாலும் அவரைப்பார்க்க எல்லோருக்கும் பயமாக இருக்கிறதே பின் என்ன செய்வது.ஆகத்தான் நந்தவனத்திலுள்ள யாழ்ப்பாண தென்னை மரத்தில்.ஏறித்தேங்காய் இள நீர்க்காயாக பறித்து விடுவது என முடிவு செய்தார்கள். சந்துரு மரத்தில் ஏறுவது பாலுவும் சிவராமனும் இள நீர்க்காய்களை ப்பொறுக்கி எடுத்துக்கொண்டுபோய் நந்தவனத்தில் கீழ்ப்பகுதியிலுள்ள சிங்கபூர்கனக்கம்பரச் செடிகளுக்கு இடையில் பத்திரமாக பதுங்கவைப்பது என முடிவாகியது. வேறு ஒரு விஷயம் பிறகுதான் நினைவுக்கு வந்தது.வெள்ளாழத்தெருவில் பகல் ஒரு மணி முதல் நான்கு வரை யாரும் வெளியில் வரமாட்டார்கள்தான். ஆனால் தென்னை மரத்திலிருந்து தொப் தொப் என்று காய்களைப் பறித்துப்போட்டால் .சத்தம் வரும் அது அவர்களை எழுப்பிவிட்டுவிட்டால் என்ன செய்வது.ஆக தேங்காய் பறித்து அதனை முதுகில்கட்டிக்கொண்டுபோகும் பை ஒன்றில் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர்தான் சந்துரு மரத்திலிருந்து கீழே இறங்க வேண்டும். சிவராமன் இந்த யோசனைசொன்னான்.
தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை வேறு யார்கண்ணிலும் படாமல் இந்தத் திருட்டுக் காரியம் கச்சிதமாக நடை பெறுகிறதா என்பதைக்கண்காணிக்க ஒருவன் அவசியம் வேண்டுமே இப்படி பாலு ஒரு குறுக்குசால் ஓட்டினான்.சந்துரு தான் பஞ்சாங்க அய்யர் பிள்ளை ராமு பையனை அந்த ரகசிய வேலைக்கு அழைத்து வருவதாக உறுதி சொன்னான்.சிவராமனுக்கும் பாலுவுக்கும் ராமுவின் மேல் நம்பிக்கை இல்லை.’அவன் சுத்தமா த்கிர்யம் இல்லாத பயல். இந்த காரியம் எல்லாம்போய் அந்தப் பய செய்வானாம்’ சிவராமன் கிண்டல் செய்தான்.’திருட்டு செய்றோம்னாலும் அதுக்கு ஒரு காவலு இல்லாம கதை ஆவாது’ என்றான் மீண்டும் பாலு.சந்துருதான் எப்படியோ பேசி ராமுவை அழைத்து வந்து விடுவதாக உறுதி சொன்னான்.
மறு நாள் தருமங்குடி நந்தவனத்தில் யாழ்ப்பாண இள நீர் பறிக்கும் திருட்டு வேலை திட்டமிட்டபடி நடந்தது.ராமு காவல் காக்கும் வேலைக்கு வந்தான். ‘வெள்ளாழத்தெருவுல யாராவது வருவது தெரிந்தால் நீ உன் வீட்டு நாயை அழைப்பத்போலே’ ட்ரோதா ட்ரோதா’ என்று மட்டும் குரல் கொடு அது போதும் என்றான் சந்துரு அவனிடம்.
நால்வருக்கும் நான்கு இள நீர் க்காய்கள் பறிக்க முடிவாகியது. சந்துரு சொன்னபடி தன் முதுகில் கட்டிக்கொண்ட யூரியா பையினுள் காய்களை போட்டுக்கொண்டு மரத்திலிருந்து இறங்கினான்..ஆளுக்கு ஒரு இள நீர்க்காய் என சந்துருவும் பாலுவும் தூக்கிக்கொண்டு நந்தவனத்துக்கள் போயினர். ‘ராமு உன் காய் கீழ இருக்கு எடுத்துகிட்டு பின்னாலேயே வா’ சிவராமன் கட்டளை தந்தான்.ராமு பைய நடந்து தென்னை மரத்துக்குக்கீழாகப்போனான்.அவர்கள் மூவரும் சிங்கப்பூர் கனகாம்பரப்புதருக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். ராமு இள நீர்க்காயை கையில் எடுக்கும் சமயம் கொட்டை கட்டி வாத்தியார் நந்தவனம் எதிர்பக்கமுள்ள திருக்குளத்திலிருந்து திரும்பி அங்கே வந்து நின்றார்.
‘ஏண்டா உனக்கு இந்த வேலை ராமு இந்த வேகாத வெயில்ல தேங்கா அடிக்க கெளம்பிட்ட’ கொட்டை கட்டி கத்த ஆரம்பித்தார். அவன் ஒன்றும் சொல்ல முடியாமல் திரு திரு என்று விழித்தான். கனகாம்பரப்புதருக்குள் இருந்து ஒன்றும் குரல் வரவேயில்லை. ராமு அவ்விடம் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான்.கோவிலார் வீட்டிற்கு கொட்டை கட்டி ராமுவை தர தர என்று இழுத்துக்கொண்டு போனார். திண்ணைக்கு வந்த கோவிலாரிடம் கொட்டைகட்டி வாத்தியார் சேதி சொன்னார். ராமு தரையைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.’ பாப்பார புள்ள நீ என்னா காரியம் செய்யுற போடா இனிமே இந்த மாதிரி ஈன காரியம் எல்லாம் செய்யாத தெரிதா காதைப்புடி அஞ்சி தோப்புக்கரணம் போடு அப்புறம் கெளம்பு’ என்றார் கோவிலார். தோப்புக்கரணம் காதைப்பிடித்துக்கொண்டு போட்டு முடித்தான் ராமு.
கொட்டைகட்டி கொண்டுபோன இள நீர்க்காயை வெட்டி கோவிலாருக்கு ஒரு கிளாசில் நிறைத்துக்கொடுத்து தன் ராஜ விசுவாசத்தைக்காட்டி முடித்தார்.இள நீர் மட்டையில் இருந்த வழுக்கையை கொட்டைகட்டியே எடுத்துக்கொள்ள கோவிலார் உத்த்ரவு போட்டார்.ராமு கண்கள் சிவக்க தன் வீடு திரும்பினான்.சிவராமன் பாலு சந்துரு மூவரும் அரசமரத்தடியில் ஜில்லி விலையாடிக்கொண்டிருந்தார்கள்.
‘திருட்டு இள் நியை வூட்டுக்கொண்டு போயிட்ட என்னா பைய நீ’ சிவராமன் ராமுவைப்பார்த்துக்கத்தினான்.
‘மஞ்சக்கொல்லையார் கடையில தேங்காய கொண்டு போட்டு காசு வாங்கி முடிஞ்சிருப்பான்’ பாலு தன் பங்குகுக்கு சொன்னான்.
‘உன்ன இந்த வேலைக்கு கூட்டிகினு வந்தன் பாரு நான்’ சந்துரு சொல்லி முடித்தான்..
ராமு அவர்களை ப்பார்க்கவே இல்லை. தன் வீட்டிற்குள் நுழைந்தான்.அப்பாவும் அம்மாவும் தயாராக நின்றுகொன்டிருந்தனர்.
‘ஏண்டா உனக்கு இண்ணைக்கு தருமங்குடி ஸ்கூல்ல இருந்து ரெகார்ட் ஷீட் வாங்கிண்டு போயி.வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும். கையில சுத்தமா காசு இல்லே.அம்மா பத்து தேங்காய பொறுக்கி வச்சிருக்கா.அப்படியே வாழைக்கா பத்து இருக்கு.இந்த கூடய தூக்கிகோ.ஸ்கூலுக்கு போகலாம் வா வா’ சொல்லிய அவன் அப்பாவிடம்
‘கூடைய நீங்க எடுத்துகோங்கோ’ அவன் அம்மா குரல் தாழ்த்திச் சொன்னாள்.
.ராமுவின் அம்மா அவன் தலைவாரி நெற்றிக்கு விபூதி இட்டுவிட்டு’கெளம்பு கெளம்பு ஸ்கூல்ல உன் ரெகார்ட் ஷீட் மட்டும் வாங்காம கெடக்காம் சந்துரு சிவராமன் பாலு இவா எல்லாரும் வாங்கிண்டு போயி அந்த வளயமாதேவி கோதண்டராமன் ஸ்கூல்ல சேத்துட்டா கையில காசு இல்லே அதனாலே பஞ்சாகங்கத்துல ஜனங்க அப்பாக்கு தானமா வச்சி குடுத்ததுல நல்லத பொறுக்கி இந்த கூடையில வச்சிருக்கேன்.
எடுத்துண்டு போயி சாத்தபாடிலேந்து பெரிய குட புடிச்சிண்டுண்டு நடந்து வர்ர அந்த பழனி வாத்தியாருண்ட கொடுத்துட்டு நமஸ்காரம் பண்னு உன் ரிக்கார்ட் ஷீட்ட கேளு’ அம்மா சொல்லி முடித்தாள்.
அப்பா கூடையை எடுத்துக்கொண்டு நடக்க ராமு பின்னால் நடந்தான்.வெள்ளாழத்தெரு வழியாக ப்போய்த்தான் இடது பக்கம் திரும்பினால் நாகமணிந்த விநாயகர் கொவிலுக்கு எதிரே அந்த பள்ளிக்கூடம்.
வெள்ளாழத்தெரு நடு நாயகமாக இருந்த கோவிலார் வீட்டு வாசலில் கொட்டை கட்டி நின்று கொண்டிருக்க கோவிலார் திண்ணைமீது அமர்ந்திருந்தார்.
‘என்ன அய்யரே கூடையில என்ன. உம் வீட்டுக்கு எப்பவும் கூடயில வரும் இப்ப போவுது’
”பையனுக்கு ரிகார்ட் ஷீட் வாங்கணும். வளயமாதேவி ஸ்கூல்ல சேர்க்கணும் கையில அஞ்சி பத்து இல்லே .கூடையில தேங்காயும் வாழைக்காயுமா பொறுக்கி எடுத்துண்டு இருக்கேன். இத எல்லாம் எடுத்துண்டு அந்த சாத்தப்பாடி பழனி வாத்தியார் சாட்சாத் அந்தப் பழநி முருகனா இருந்து மனசு வக்கணும். எனக்கு ரிகார்ட் ஷீட் கொடுக்கணும்’
‘கூடய காட்டும்’ கோவிலார் கட்டளையிட்டார்.
அப்பா கூடையைப்பிள்ளையிடம் காண்பித்தார்.சின்னதும் பெரிசுமாக அங்கங்கே மஞ்சளைப் பூசிக்கொண்டு தானத்தில் வந்த தேங்காய்கள் உள்ளே பத்திரமாக இருந்தன. ராமுவின் அப்பாதான் தருமங்குடி ஜனங்கள் வீட்டில் காரியம் செய்யும் போது தேங்காய்களில் அந்த மஞ்சளைப்பூசி இருக்கவும் வேண்டும்.வாழைக்காய்கள் மட்டும் கூடை ஓரமாக சயனித்துக்கிடந்தன.
‘யாழ்ப்பாணக்காயுவ எதாவது உண்டான்னு பாத்தேன்’
‘ பிள்ளைவாளுக்கு தெரியாதா யாழ்ப்பாண காயுங்களை பிராம்ணனுக்கு யாராவது தானமா கொடுப்பாளா என்ன’
‘ இல்லே ‘ என்று சொல்லிய பிள்ளை ராமுவை முறைத்துப்பார்த்தார்.அவன் வெள்ளாழத்தெருவின் புழுதிகூடிய தரையை மட்டும் பார்த்துக்கொண்டான்.
‘ நான் ஸ்கூலுக்குப்போறன் அவன் தலை எழுத்தாவது இந்த தர்ப புல்லையும் மாங்கொத்துமா தூக்கிண்டு வீட்டுக்கு வீடு பல்ல காட்டிண்டு நிக்காம இருக்கணும். தருமாம்பா கண்ண திறந்து பாக்கணும்’ சொல்லிய ராமுவின் அப்பா தேங்காய்க் கூடையோடு நடந்தார்.அவன் அப்பாவோடு கை யைபிடித்துகொண்டு பின்னே போனான்.
————

Series Navigationபிரம்மலிபி- நூல் மதிப்புரைவால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    சிறுகதை மிக்க இயல்பாய் உள்ளது. அனைவருக்கும் தங்கள் பிள்ளைப்பிராயம் நினைவுக்கு வரும் அப்போது திருட்டு மாங்காய் அடித்தது ஞாபகம் வரும். கதையில் எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *