சஹானாவின் மூக்குத்தி

This entry is part 7 of 19 in the series 5 ஜூலை 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இனி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த அறிவியல் புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு அவரைத் திரும்பி பார்த்தாள்.

சாதாரணமாக அவர் இவ்வளவு நேரம் தூங்க மாட்டார்.

“என்ன தாத்தா உடம்புக்கு சுகமில்லையா?” என்று கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள் சஹானா. உடல் சில்லிட்டிருந்தது.

தாத்தா என்று அசைத்துப் புரட்டினாள். கண்கள் முழுவதுமாய் மூடி உறங்கும் பாவனை காண்பித்தது. நாசியில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சுக்காற்று எங்கோ ஒளிந்து விளையாடியது. வயிறு மேலெழும்புகிறதாவெனப் பார்த்தாள். அது தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

தாத்தா உயிரோடில்லை.

ஒரு நிமிடத்திற்கு முன் நம்பிக்கையின் விழுதுகள் இங்கும் அங்கும் நின்ற நிலை போய் எல்லாம் வெட்டுண்டு விழுந்த ஒரு சூன்யம் தன்னைக் கவிந்ததை உணர்ந்தாள்.

இனி என்ன செய்வது?

நம்பிக்கை இழக்காதே. எப்போதும் அல்லா உன்னோடு இருக்கிறார். நம்பு. எந்தச் சூழ்நிலையிலும் இடிந்துவிடாதே அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று யோசித்துச் செயல்படு.

தாத்தா எப்போதும் சொல்லும் வேதவாக்கியம் அது. இப்போதும் அவர் குரல் காதில் கேட்டது. தன் மெல்லிய கைகளால் ஒருக்களித்துப் படுத்திருந்த அவர் உடலை நிமிர்த்திப் படுக்க வைத்தாள். சற்றே மேலேறியிருந்த வேட்டியை சரி செய்து விட்டாள்.

தாத்தா இறந்துவிட்டார்.

நம்பவே முடியவில்லை. எப்படி அவருக்கு என்னைத் தனியே இப்படித் தவிக்கவிட்டுப் போக மனசு வந்தது?

சூழலின் தனிமையைவிட, எதிர்கால எண்ணம் ஏற்படுத்திய பய உணர்வு, உலகத்தில் நிர்கதியாய் நிறுத்தப்பட்ட அந்த நிலை அவளை பெரிதும் ஹிம்சித்தது.

மீண்டும் இலியாஸ் தாத்தா அவள் காதில் பேசினார். அந்த சுக்குக் காப்பிப் பாத்திரம். அவரது பழைய சைக்கிள் எல்லாம் பேசின. “கொஞ்சம் கிரீஸ் போட்டுவை சஹானா. பெடல் சரியா சுத்தறதில்லே”. நேற்று இரவு அவர் சொன்னது நினைவு வந்தது. அவள் விடிகாலையில் கிரீஸ் போட்டு வைத்தாள்.

இனி மீண்டும் அது சுற்றுமா?

துக்கம் தொண்டையை அடைத்தது. உடல் சோர்ந்து கீழே விழுந்துவிடுமோ? சஹானா பயந்தாள்.

“இல்லை. நான் விழமாட்டேன்.”

ஓர் அரசமர மேடையில் பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் அனாதைக் குழந்தையாகக் கண்டெடுத்த என்னைக் கண்ணுக்குக் கண்ணாக இத்தனைக் காலம் அன்பாய் சீராட்டி வளர்த்த இலியாஸ் தாத்தாவிற்கு அவள் ஒரு வாக்குறுதி தந்திருந்தாள். “எப்போதும் கலங்கிவிட மாட்டேன். அடுத்துச் செய்ய வேண்டியது என்னவென்று யோசிப்பேன்.”

சஹானா கண்ணீர் மல்கும் விழிகளுடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். பதினாறுக்கும் பதினேழுக்கும் இடைப்பட்ட வயது. கருமையுடன் நீண்டு வளர்ந்திருந்த கூந்தல், நேர்த்தியாய் வளைந்த வில் புருவங்கள், கூர்மையான நாசி.

அதன் இடது புறம் ஒற்றைக் கல் மூக்குத்தி.

அந்த ஒற்றைக் கல் மூக்குத்தி வெளியில் கிரணத்தில் பட்டுச் சுடர் விட்டது. “உனக்கு நகைன்னு ஒண்ணு வாங்கிக் கொடுக்க இந்த இலியாஸ் கிட்டே ஒண்ணும் இல்லேண்ணு மனசுலே நெனச்சுட்டே போனேன். மசூதித்தெரு பள்ளிவாசல் கிட்டே இந்த மூக்குத்தி கெடைச்சுதுடா கண்ணு.”

சஹானாவுக்கு நறுக்கென்று ஆசாரி மூக்கைக் குத்திய போது கொப்பளித்த ரத்தம், பொங்கிய கண்ணீர் மூக்குத் துளையின் மேல் வந்து விழுந்துவிடக் கூடாதே என்று ஆசாரிக்கு கைகாட்டிவிட்டுத் துடைத்துக்கொள்ள கைக்குட்டை கொடுத்தார் தாத்தா.

யாரோ பெற்று எங்கோ எறிந்த எனக்கு நகை வாங்கிக் கொடுக்க இவ்வளவு உருக்கத்தோடு அவர் எடுத்து வந்திருக்கும் போது மூக்குத்திக்காக மூக்கு குத்திக்கொள்கிற வலியை பொறுத்துக்கொள்ளக் கூடாதா?

“மூக்கை குத்தியாச்சு, மூக்குத்தி எங்கே?” ஆசாரி கேட்டார்.

இலியாஸ் சிவப்பு டிரேஸ் பேப்பரில் மூடி வைத்திருந்த மூக்குத்தியைக் காட்டினார். அதைக் கையில் வாங்கி முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்த ஆசாரி “இது சாதாரண மூக்குத்தி இல்லே. வைர மூக்குத்தி. வெலை பத்தாயிரத்துக்கு மேலே போவும். ஜாக்கிரதையாக் காப்பாத்தணும்.” மூக்குத்தியை மூக்குத்துளையில் பதமாக உள்ளே செலுத்தினார்.

சற்று குவிந்து துடித்த சிவந்த அதரங்கள், ஒட்டுமொத்த எதிர்கால சூன்யத்தையும் தனக்குள் உள்வாங்க முயற்சி செய்தது. சஹானாவுக்கு வயது வந்த போது “தாத்தா புர்க்கா போட்டுக்கவா?” என்று கேட்டவளுக்கு, “வேண்டாண்டா குழந்தை. நீ இந்து தமிழ் பொண்ணு, எப்படி பிறந்தியோ அப்படியே வளர்ந்துக்க” என்றார்.

தன் மதக்கொள்கைகளை விட்டு அவர் விலகியதும் இல்லை. அவற்றை அவள் மீது திணிக்கவுமில்லை. சுதந்திரமாக அவளை வளர்த்திருந்தார். காலையில் மட்டுமே அவர் விற்பனைக்குச் செல்வார் மற்ற நேரம் முழுவதும் அவருக்கு குரான் படிப்பதும், தொழுகையுமே முக்கிய பணியாக இருந்தது.

சஹானாவிற்கு இலியாஸின் குறுந்தாடி மிகவும் பிடிக்கும். குழந்தையில் அந்த குறுந்தாடிதான் அவளின் பிரியமான விளையாட்டு பொம்மை. அத்தனை பாசமான அவர் கடைசி வரையில் அவளின் பெற்றோரைப் பற்றியும் அவளின் பிறப்பின் இரகசியத்தையும் அவளிடம் கூறவே இல்லை.

பக்கத்து வீட்டின் ஒருபக்கச் சுவரைத் தனக்கு துணையாகக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஒற்றை சாரக் கூரை வீடு அது. இலியாஸ் சுக்கு காப்பி விற்றே அவளுக்காக அந்த இரண்டு சென்ட் இடத்தை வாங்கியிருந்தார். ஆனால், கூரை என்னவோ இருவர் தங்கும் அறை அளவிற்குத்தான். சுற்றிலும் தென்னங்கீற்றுதான் சுற்றுச்சுவர். மர ரீப்பர்களால் உருவாக்கப்பட்டிருந்த கதவு.

வானத்தின் வட்டப் பொட்டாக ஜொலித்தது பௌர்ணமி நிலவு. எத்தனையோ நிலவுப் பொழுதுகளில் தாத்தாவோடு இதே மணற்குவியலின் மீது அமர்ந்து குச்சி விளையாட்டு விளையாடியிருக்கிறாள். நட்சத்திரங்களின் மினுக்குகளை கண் சிமிட்டாமல் பார்த்துத் துள்ளியிருக்கிறாள். இருளில் சுற்றும் மின்மினிப் பூச்சுகளின் பின்னே ஓடி அதில் ஒன்றையேனும் பிடித்து வந்து தாத்தாவின் தாடிக்குள் விளக்கேற்றியிருக்கிறாள். அந்த ரம்மியமான பொழுதுகள் மீண்டும் இனி வரப் போதில்லை.

தாத்தா இப்போது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தாத்தாவின் மடி தலையணையாகப் போவதில்லை. கண்களில் தாரை, தாரையாக வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் சஹானா.

இப்போது என் கண்ணீர் முக்கியமில்லை. இப்போது அவரது நல்லடக்கம் தான் முக்கியம். அதற்குப் பணம் தேவை. யாரை கேட்பது? யாராருக்குச் சேதி சொல்ல வேண்டும்?

தாத்தாவின் டிரங்குப் பெட்டி எப்போதுமே திறந்தே இருக்கும். ஆனால் அதை ஒரு நாளும் ஆராயும் புத்தி சஹானாவிற்கு வந்ததில்லை. பெட்டியைத் திறந்து அவசர அவசரமாய்க் கலைந்தாள். சில துண்டுச் சீட்டுகள். அவள் பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் புக், தாத்தாவிற்கு என்று தனி அக்கவுண்ட் புக். அதன் கீழ் தேதிவாரியாக சுக்கு காஃபி விற்பனை விவரம் அடங்கிய சிறிய நோட்டுப் புத்தகம். அதைத் தவிர பழைய துணிமணிகள்

ஒவ்வொரு துணியாய் எடுத்து கீழே உதறினாள். தாத்தாவின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து செல்போன் அலறியது. அவசர அவரசமாய் ஓடிவந்து தாத்தாவின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தாள். செல்போன் தன் அழுகையை நிறுத்திக்கொண்டது.

போன் வந்த நம்பருக்கே திரும்பவும் போன் செய்தாள்.

மறுமுனை “ஹலோ” என்றது.

கம்பீரமான ஆண்குரல். தாத்தா இறந்துட்டார்” என்றாள் சஹானா

“எந்த தாத்தா?” அந்த குரல்.

“என்னோட தாத்தா”

“என்னது உங்க தாத்தாவா?”

“ஆமாம், என் தாத்தாதான். யாருக்கு தகவல் சொல்லனும்ன்னு தெரியல. சொந்தக்காரங்க யாரையும் தெரியல என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல” என்று விம்மினாள்.

“ஏங்க, உங்க தாத்தா இறந்ததுக்கு ஏங்க எனக்கு போன் பண்றீங்க?” என்றது மறுமுனை.

“நீங்கதான சார் இப்ப “போன் பண்ணிங்க?” என்றாள் சஹானா

“நானா?” என்ற கேள்வியோடு டக்கென்று துண்டித்துக்கொண்டது. வேறு எந்த எண்ணும் இருக்கவில்லை. டயல் நம்பர்களில் ஓரிரு லோக்கல் எண்கள் இருந்தன. போன் செய்த போது காயின் பாக்ஸ் என்றார்கள். ஒரு லேண்ட் லைன் எண்ணிற்கு போன் செய்ய பேங்க் என்று துண்டித்தது ஒரு பெண் குரல்.

முழங்காலில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கேவினாள் சஹானா. தாத்தா இருந்த வரை இந்த அத்துவானத் தனிமைக் காட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே அவளுக்கு இதுவரையில் ஏற்பட்டிருக்க வில்லை.

இன்று யாரிடம் பண உதவி கேட்பது என்று தெரியாமல் நின்றாள்.

மீண்டும் உள்ளே வந்து கூரையைத் தாங்கியிருந்த மூங்கில் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.

இப்பொழுது துணிவுதான் தேவை! சஹானா துணிந்து நில் அழாதே அழும் நேரம் அல்ல இது. யாருடைய துணையுடனேனும் தாத்தாவை அவர் மதமுறைப்படி அடக்கம் செய்ய வெண்டும் என்று சொல்லிக்கொண்டாள்.

மீண்டும் அலைபேசி அலறியது.

“ஹலோ” என்றாள்.

முன்பு பேசிய அதே ஆண்குரல்,“நீங்க எங்க இருந்து பேசறீங்க?” என்று கேட்டாள் சஹானா.

“சஹானா மன்னிச்சுடுங்க, நான் தவறா உங்க நம்பரை போட்டுட்டு இருக்கேன். இருந்தாலும் பரவாயில்ல, எனக்கு உங்க ஊர் எங்க இருக்குன்னு தெரியல, உங்க வீட்ல வேற யாரும் இல்லையா?”

“இல்லை”

“என்ன படிக்கிறீங்க சஹானா?”

“ப்ளஸ்டூ.”

“உங்க ப்ரண்ட்ஸ்கிட்ட பண உதவி கேளுங்க. இப்போதைக்கு உங்க பக்கத்துல இருக்கறவங்க துணை உங்களுக்கு வேணும். உங்க கிளாஸ் டீச்சர்ஸ் இல்லேன்னா ஸ்கூல் நம்பர் இருந்தா கால் பண்ணி உங்க அட்ரஸ் சொல்லி நிலமைய சொல்லுங்க, நிச்சயமா உதவுவாங்க. உங்க அட்ரஸ் மெசெஜ் பண்ணுங்க நான் வர முயற்சி பண்றேன்” என்றான்.

“தேங்க்ஸ் சார்” என்றாள். மனம் கொஞ்சம் இலகுவாகியது.

சஹானா கிளாஸ் டீச்சரின் ஃபோன் நம்பரை கணக்கு நோட்டில் எழுதி வைத்திருந்தாள். அதை டயல் செய்த போது, தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்றது மறுமுனை.

வேறு வழியில்லை. தானே ஸ்கூலிற்கு போக வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள், இலியாஸை ஒரு வெள்ளை வேட்டியினால் போர்த்தினாள்.

வெளியே வந்து தட்டியை இறுக்கிக் கட்டினாள். தாத்தாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளியை நோக்கி வேகமாய் மிதித்தாள்.

எதிரில் வந்த கார் நேராய் வந்து இடிப்பது போல் நிறுத்தி “சரியான சாவுகிராக்கி” என்று திட்டிய டிரைவருக்கு பதில் தரமுடியாமல் சிறிது தடுமாறி, டர்ரென்று தேய்த்து நிறுத்திய போது சைக்கிள் ட்யுபிள் இருந்து காற்று புஸ்ஸ் என்று வெளியேறி தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. அருகில் இருந்த பொரி கடலைக் கடையில் சைக்கிளை நிறுத்த அனுமதி கேட்டு, நிறுத்தக் கூட அவகாசம் இன்றி, அப்படியே தரையில் சரித்துவிட்டு ஸ்கூலை நோக்கி ஓடினாள் சஹானா.

கலைந்த தலையும், வீட்டிற்கு உடுத்தும் உடையுமாய் நின்றவனை கண்ட வாட்ச் மேன் அரண்டு போனான்.

“என்னம்மா ஆச்சு?”

“சிஸ்டர் இல்லையா வாட்ச் மேன் அண்ணா”

“பிரேயர்ல இருக்காங்க. என்னம்மா ஆச்சு.”

“வேற யார் இருக்காங்க”

“குமார் சார் மட்டும் இருக்கார்.” வாட்ச் மேனிடம் எதுவும் சொல்லாமல் ஸ்டாஃப் ரூமை நோக்கி ஒடினாள் சஹானா.

அவள் ஓடி வருவதை பார்த்த குமாரும், காமத்தும் எழுந்து வெளியே வந்தார்கள்.

“சார் … தாத்தா செத்துப்போயிட்டார் சார்” என்றாள் சஹானா கதறி அழுதபடி. யாருமில்லை !

“எதுக்கு வந்தே?” லீவ் போட்டிருக்கலாமே என்றார் குமார். “சார் வீட்ல பெரியவங்க யாருமில்ல சார். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலேங்க சார்” என்றாள் இடையிடையே கேவலோடு. ஒரு கணம் திகைத்து நின்றார்கள் இருவரும். இது நாள் வரை சஹானா பெற்றோர் அற்றவள் என்பது பள்ளியில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

காமத் ஹெச்.எம். சிஸ்டரிடம் பேசினார். “சரிங்க காமத் நீங்களும் குமாரும் சஹானா வீட்டுக்குப் போய் பாருங்க” என்றாள் ஹெச்.எம்.

காமத்தும் குமாரும் வீட்டிற்கு வந்து இலியாஸைப் பார்த்து, இவரா உங்க தாத்தா? என்று அதிர்ந்தார்கள்.

நெற்றியில் பொட்டோடு இந்து பெண்ணாய் இருந்த சஹானாவையும், இலியாசையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்த்தார்கள். “ஆமாம் சார் எங்க தாத்தா, அவர் முஸ்லீம்.”

“அடக்கம் பண்ண பணம் வேணுமேம்மா” காமத் சொன்னார்.

“எவ்வளவு?”

“பத்தாயிரம் ஆயிடுமேம்மா.”

சஹானா ஒன்றுமே பேசவில்லை. சிறிது நேரம் யோசித்தாள். தன் மூக்கைத் தடவினாள்.

மெதுவாக மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். சார் இது வைர மூக்குத்தி வித்தா பத்தாயிரம் கிடைக்கும் என்றாள்.

மூக்குத்தி கை மாறியது.

ஒரு மணி நேரத்தில் இலியாசின் இறுதிச் சடங்குகள் இஸ்லாமிய முறைப்படி முடிந்தன.

அவளது வெறுமையான மூக்கைச் சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். மூக்குத்தி அணிந்த மூக்கைப் பார்த்து ரசிக்கிற தாத்தாவே போய்விட்டார்.

இனி இப்போது அந்த மூக்குத்தி எதற்கு?

இலியாஸின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட போது சஹானா அழவில்லை. மனதில் ஓர் அபூர்வ நிம்மதி. ஊரே பின் தொடர அவர் இடுகாட்டை நோக்கிப் பயணிப்பதை மௌனத் திருப்தியோடு பார்த்தாள்.

கை விரல் தானாக வெறுமையான மூக்குத் துளையைத் தொட்டுப் பார்த்தது. எப்படியோ இறுதியில் அவருக்கு உதவ முடிந்திருக்கிறது அவளால்.. அவரது ஈமச் சடங்குக்கு அவர் கொடுத்த கொடை.

எதிர்காலம்? எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ உதவ முடிந்திருக்கிற மூக்குத்தியை நினைத்தாள். அதைப் போல் எதிர்காலம் வரும் போகும்.

+++

Series Navigationவெசயம்வலையில் மீன்கள்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சிறுகதை இலக்கிய மேதை “ஓ ஹென்றி” எழுதிய “மாகியின் பரிசு” போல் இருக்கிறது. [ “The Gift of the Magi” by O Henri ]

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *