மிதிலாவிலாஸ்-25

This entry is part 1 of 17 in the series 12 ஜூலை 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

sulochanaraniபலவானாக இருந்த தான் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொண்டு விட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய சித்தூ விரலை அசைக்காமல், வாய் வார்த்தை எதுவும் பேசாமல் தன்னை முழுவதுமாக தோற்கடித்து விட்டான்.
அந்தச் சிறுவன் மீதா தனக்கு பொறாமை! சீ…சீ.. அவனுள் இருந்த மன வலிமை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பவும் எழும்பியது. இவற்றையெல்லாம் ஜெயிக்கும் சக்தி இந்த உலகத்தில் ஒன்றுக்குத்தான் இருக்கிறது. சுயநலமில்லாத அன்பு!
மைதிலியிடம் முதலில் தனக்கு அதுதான் இருந்து வந்தது. நாட்கள் செல்லச்செல்ல சுயநலக்காரனாகி விட்டான். அவள் தனக்கு முழுவதுமாக சொந்தம் என்ற அகம்பாவம் வந்து விட்டது.
அதற்குக் கிடைத்த பதிலடிதான் இந்த கசப்பான அனுபவம்.
மைதலி மனரீதியான வேதனையில் இருக்கிறாள் பதினெட்டு வருடங்கள் கழித்து எதிர்பாராமல் மகனை பார்க்க நேரிட்டால் யாருக்காக இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். அந்த அனுபவம் தனக்கு ஏற்பட்டிருந்தால் தானும் இதே போல்தான் நடந்து கொண்டிருப்பான். மைதிலி வேறு தான் வேறு இல்லை. பொறாமை என்ற பேய் தலைக்கு ஏறிய நிமிடம் இந்த உலகமே தலைகீழாகிவிட்டது போல் இருந்தது. மைதிலிக்கு தான் துணையாக இருக்க வேண்டுமே தவிர தனியள் ஆக விட்டுவிடக் கூடாது.
*********
மைதிலி சூட்கேஸை எடுத்துக் கொண்டு கீழே வந்தாளே தவிர அவளால் போக முடியவில்லை. அறையில் அபிஜித் நின்ற தோரணை நினைவுக்கு வந்தது. அவனை இத்தனை இயலாமையான கோலத்தில் என்றுமே பார்த்தது இல்லை. தனக்கு ஆதரவு கொடுத்து சகலத்தையும் அளித்த நபர்! அவனை வேதனைக்கு உள்ளாக்கி தன்னால் போக முடியாது. வராண்டா படிகள் பக்கத்தில் சூட்கேஸை வைத்துவிட்டு முழங்காலில் தலையைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
அபிஜித்தை வேதனைப் படுத்தினாலும், அந்தப் பக்கம் சித்தூவுக்கு வேதனையைத் தந்தாலும் அவள் மனம்தான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. அபிஜித் தன்னுடன் வரவில்லை. வருவான் என்று தான் நம்பினாள். அவன் வர மாட்டான். தொடக்கத்திலிருந்து அவன் சொல்லிக்கொண்டுதான் இருந்தான். இன்னொருவருடன் உன்னைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று. சொன்னதைத்தான் செய்தான்.
இந்த கேட்டைத் தாண்டிய பிறகு இதுதான் அவனைக் கடைசி தடவையாக பார்ப்பது என்று தோன்றியது.
சித்தூ இங்கே வர மாட்டான். அவனுக்கு இது நரகத்திற்கு சமம் என்பான். அபிஜித் தன்னை போக விடமாட்டான். அது அவனுக்கு நரகம் என்பான். தன்னால் என்ன செய்ய முடியும்? அழுதுக் கொண்டிருந்த மைதிலியின் தோளில் கை ஒன்று படிந்தது.
நிமிர்ந்து பார்த்தாள். எதிரே அபிஜித்!
“கிளம்பு. நான் உன்னை அழைத்துப் போய் சித்தூவிடம் இறக்கிவிட்டு வருகிறேன்.” அவள் தோளைச் சுற்றி ஷாலை போற்றிக் கொண்டே சொன்னான்.
*****
நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருந்தது.
அபிஜித் டிரைவ் செய்து கொண்டிருந்த கார் சித்தார்த்தாவின் வீட்டுக்கு சற்று தொலைவில் வந்து நின்றது. சித்தார்த்தாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
கார் நின்றது. அபிஜித் மௌனமாக உட்கார்ந்து இருந்தான். மைதிலி ஒரு நிமிஷம் அப்படியே உட்கார்ந்து இருந்தாள். சற்றுத் தொலைவில் எரிந்து எலும்புக் கூடு போல் தென்பட்டுக் கொண்டிருந்த கார் தன்னுடைய இருப்பை அந்த நிலா வெளிச்சத்தில் பறைசாற்றிக் கொண்டிருந்தது. குளிர் காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தது. மைதிலி ஷாலை சரிப் படுத்திக் கொண்டாள். அவள் தோளில் படியப் போன அபிஜித்தின் கை அப்படியே நின்றுவிட்டு பின்னால் இருக்கையின் மீது படிந்தது.
மைதிலி அவன் பக்கம் குனிந்து ஒரு நிமிடம் அவன் தோளில் தலையைச் சாய்த்துக்கொள்ள நினைத்தாள். தன்னை மனப்பூர்வமாக நேசித்து, களைப்பை போக்கும் நபரை சாசுவதமாக இழக்கப் போகிறாள். அந்த தண்டனை அவனுக்கு இல்லை, தனக்குத்தான் என்று மைதிலிக்குத் தெரியும்.
அபிஜித் பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலி இறங்கும் முயற்சி எதுவும் செய்யவில்லை. அவன் குனிந்து கையை நீட்டி கார் கதவை திறந்தான். நிசப்தமான அந்த இரவு நேரத்தில் அந்த சிறிய சத்தமே பெரிதாக ஒலித்தது. மைதிலி சட்டென்று அவன் கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் கைகள் அவனை தாயை விட முடியாத குழந்தையைப் போல் பலமாக பற்றிக் கொண்டன.
அபிஜித் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விடுவதாக இல்லை.
“மைதிலி!” என்றான் அவன்.
அவளுக்கு அந்த அழைப்பில் இருந்த குறிப்பு புரிந்துவிட்டது. “என்னை மன்னித்து விடு” என்றாள்.
“பரஸ்பரம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு வேற்று ஆட்களா நாம்?”
மைதிலி அவன் கையை பலமாக பற்றிக்கொண்டு தன் தோளைச் சுற்றிலும் போட்டுக் கொண்டாள். அந்த தொடுகையில் நெருக்கம் இருக்கவில்லை. இயந்திரகதியில் தொடுவது போல் இருந்தது.
அவன் கையில் முத்தம் பதித்துவிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அடுத்த நிமிடம் காரை விட்டு இறங்கிவிட்டாள். அபிஜித் பின் இருக்கையில் இருந்து சூட்கேஸை எடுத்துக் கொடுத்தான். எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.
போகப்போக அவள் நடை ஓட்டமாக மாறி விட்டது. அந்த வேகத்தில் அவள் மனம் கண்ணாடியைப் போல் தென்பட்டுக் கொண்டிருந்தது.
அபிஜித் கார்க் கண்ணாடியை கீழே இறக்கி பார்த்துக் கொண்டிருந்தான்.
மைதிலி கதவைத் தட்டினாள். முன் அறையில் விளக்கு எரிந்தது. கொஞ்ச நேரம் கழித்து கதவுகள் திறந்து கொண்டன. எதிரே மைதிலியைப் பார்த்து சித்தார்த்தா பின்னால் நகரப் போன பொழுது, “சித்தூ! நான் வந்து விட்டேன். சாசுவதமாக வந்து விட்டேன். உன்னுடைய அம்மாவாக மட்டுமே இந்த நிமிடம் முதல் வாழப் போகிறேன்” என்றாள்.
“நான் எதையும் வேண்டவில்லை.” அவன் தாழ்போடுவதற்கு கதவின் மீது கையை வைத்தான்.
“சித்தூ! நான் சாசுவதமாக வந்துவிட்டேன். நீ போகச் சொன்னால் எனக்கு வேறு போக்கிடம் இல்லை. இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன். இந்த உலகம் என்னைக் கல்லால் அடிக்கட்டும். வேறு ஏதாவது செய்யட்டும். என்னைக் காப்பாற்றுவாயோ அல்லது இந்த உலகத்திற்கு விட்டுவிடுவாயோ உன் விருப்பம்.” இப்போ அவள் குரல் திடமாக ஒலித்தது. தீனமாக இருக்கவில்லை. வேண்டுகோள் விடுக்கவும் இல்லை.
சித்தூ அவளையே பார்த்தான். அவனை வேண்டி எல்லாவற்றையும் துறந்துவிட்டு வந்திருக்கும் தாய்! அவன் விரும்பியபடியே அவனிடம் வந்து சேர்ந்துவிட்டாள். சித்தூ வெளியே வந்தான். தாயின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு உள்ளே அழைத்துப் போனான்.
காரில் உட்கார்ந்தபடி தொலைவிலிருந்து அபிஜித் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கதவுகள் சாத்திக் கொண்டன. அபிஜித் காரை ஸ்டார்ட் செய்தான். அவனுடைய தைரியமும், உரிமையும் மைதிலியின் பின்னாலேயே போய்விட்டது போல் இருந்தது. தனியனாகி விட்டது போல் உணர்ந்தான். மைதிலிக்காக இந்த தனிமையை, தோல்வியை தாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
தராசில் அஷ்ட ஐஸ்வரியங்கள், தன்னுடைய் அன்பு எல்லாம் கலந்து ஒரு பக்கம் நிறைவாக வைத்திருந்தாலும், ஒற்றை துளசிதளம் போல் சித்தூ மறுபக்கம் இருந்து தன்னை தோற்கடித்துவிட்டு தன் தாயை தன்னிடம் வரவழைத்துக் கொண்டு விட்டான்.
*****
வெளிச்சக் கிரணங்கள் இன்னும் பரவவில்லை. கதவை யாரோ லேசாக சத்தப்படுத்துவது கேட்டது. சித்தூ வந்து “யார்?” என்று கேட்டான்.
“நான்தான் சின்னா.”
சித்தூ கதவைத் திறந்தான். அவனுடன் அவன் தாய் அனசூயாவும் இருந்தாள்.
“என்ன எது? இந்த நேரத்தில்?” சித்தூ கேட்டுக் கொண்டிருந்த போது அனசூயா,” உஷ்!” என்று உள்ளே வந்து கதவைச் சாத்தினாள்.
மைதிலியும் அங்கே வந்தாள். அனசூயா மைதிலியை பார்த்ததும் வணங்கினாள்.
“சித்தூ! நேற்று இரவு நம் பேட்டைக்கு போலீசார் வந்து காரை கொளுத்தியது யார் என்று விசாரித்து இரண்டு மூன்று பசங்களை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம். மற்ற பசங்கள் நேற்று இரவு கூட்டம் போட்டு கோபமாக பேசி இருக்கிறார்கள். நேற்று இரவு மைதிலியம்மா வந்ததை பார்த்து விட்டார்கள். நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். இவர்கள் ரகளை செய்வார்கள்.”
“செய்யட்டும். இப்போ எங்கே போக முடியும்?” என்றான் சித்தூ.
“அப்படிச் சொல்லாதே இப்பொழுதே எல்லோரும் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள். கடைத் தெருவில் எங்க அண்ணாவின் வீடு இருக்கு. இன்று ஒரு நாள் அங்கே இருந்தால் பிறகு பார்த்துக் கொள்வோம்.”
சித்தூ மைதிலியின் பக்கம் பார்த்தான்.
“போகலாம் வா சித்தூ” என்றாள் மைதிலி.
“பாட்டி எங்கே?” அனசூயா கேட்டாள்.
“நேற்று இரவு என்னுடன் சண்டை போட்டுவிட்டு ரமாகாந்த் மாமாவுடன் ஊருக்குச் சென்றுவிட்டாள்” என்றான்.
சித்தூ, மைதிலி, அனசூயா, சின்னா கிளம்பினார்கள். இருட்டுச் சந்துகள் வழியாக அனசூயா அவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். சித்தூ பழக்கப் பட்டவன் போல் முன்னால் நடந்து கொண்டிருந்தான்.
மைதிலியின் கால்களுக்கு செருப்பு இல்லை. இருட்டில் கல் தடுக்கி விழப் போனாள். சித்தூ பிடித்துக் கொண்டு தடுத்தான். செருப்பு இல்லாத அவள் கால்களைப் பார்த்தான். தன்னுடையதை கொடுத்தான்.
“வேண்டாம்” என்றாள்.
சித்தூ குனிந்து அவள் கால்களுக்கு செருப்பு அணிவித்தான். மைதிலி அவன் தலை மீது கையை வைத்து வருடிக் கொடுத்தாள். சித்தூ மைதிலியின் தோளைச் சுற்றி கையைப் போட்டான். அவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர்! அவள் தலை அவன் தோளில் சாய்ந்தது.
அவள் மனதில் எல்லையில்லாத திருப்தி பரவியது. வரப்போகும் எதிர்காலத்திற்கு இது தொடக்கமாக தோன்றியது.
*****
நல்லவேளையாக அனசூயா அண்ணாவின் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு போர்ஷன் வாடகைக்குக் கிடைத்தது. இரண்டு அறைகள் கொண்ட போஷன் அது வாடக்கை ஐநூறு சொல்வதாக அனசூயாவின் அண்ணன் தெரிவித்தார்.
விடியற்காலை வேளையில் அனசூயா வந்து அவர்களை எழுப்பினாள், சித்தூ, மைதிலியை காண்பித்து இந்த வேளை இவர்கள் உங்கள் வீட்டில் இருப்பார்கள் என்று சொன்னாள். சித்தூவுடன், பெரிய வீட்டுப் பெண்ணாக தென்பட்ட மைதிலியைப் பார்த்த பிறகு அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
“ஐநூறு வாடகை கொடுக்க முடிந்தால் வசதியாகத்தான் இருக்கும்” என்றாள் அனசூயா.
“அவ்வளவு பணம் எப்படிக் கொடுக்க முடியும்?” வாழ்க்கையில் முதல் முறையாக பணத்தைப் பற்றிக் கவலைப் பட்டாள் மைதிலி.
அனசூயா தன் வீட்டிலிருந்து கிரோசின் ஸ்டவ், சில பாத்திரங்கள், தம்ளர்கள் கொண்டு வந்து கொடுத்தாள். ஸ்டவ் மீது பாலை வைத்துக் கொண்டே, “சித்தூ தங்கமான பையன். நீங்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தீர்களோ?” என்றாள்.
“உனக்கும் தெரிந்து விட்டதா அனசூயா?”
“வீட்டுக்காரம்மாள் உங்கள் வீட்டில் நடந்த ரகளை கேட்டிருக்கிறாள். என்னிடம் சொன்னாள். சின்னாவுக்கு சித்தூவைக் கண்டால் ரொம்ப பிடிக்கும். அந்த தெருவில் என்னை எல்லோரும் பலவிதமாக பேசும் போது சித்தூ மட்டும் என்னை மதிப்புடன் நடத்தி வந்தான். என் மகனுக்கு நாலு எழுத்து வந்தது என்றால் அது சித்தூவின் தயவுதான். சின்னாவுக்கு புத்தகங்கள், காற்றாடி சிலசமயம் வாங்கிக் கொடுத்திருக்கிறான். சின்னாவின் அப்பா அவனை விட்டுவிட்டு போய் விட்டார் என்று எல்லோரும் கேலி செய்து கொண்டு இருக்கும் போது வயதில் சிறியவனாக இருந்தாலும் சித்தூ எங்கள் வேதனையைப் புரிந்து கொண்டான்.”
வேண்டாமென்று மறுத்தாலும் அனசூயாதான் அன்று சமையல் செய்தாள். மைதிலி தேநீர் தயாரித்து வந்து ஸ்டீல் டம்பரில் சித்தூவிடம் கொடுத்தாள். சித்தூ வெட்கப்பட்டுக்கொண்டே வாங்கிக் குடித்தான். தயக்கத்துடன், ”நல்லா இருக்கு” என்று’ சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான்.
சித்தூ முகத்தில் தெரிந்த சந்தோஷம் மைதிலிக்கு தைரியத்தை அளித்தது. அவன் கையிலிருந்து டம்பரை பெற்றுக் கொண்டவள் அப்படியே கொஞ்ச நேரம் நின்றுவிட்டாள்.
அபிஜித் என்ன செய்து கொண்டிருப்பான்? தூங்கி எழுந்திருந்து இருப்பானா? நேற்று இரவு காரை விட்டு இறங்குகையில் அவன் கையைப் பற்றிக் கொண்ட போது சூடாக இருந்தது. நேற்று இரவு அவனுக்கு ஜுரமாக இருந்தது என்று இப்போது நினைவுக்கு வருகிறது.
மைதிலி அந்த எண்ணங்களை தள்ளிவிட முயன்றாள். அவன் பெரியவன். தன் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ள அவனுக்கு தெரியும். நேற்று இரவு அவன் தன்னை அழைத்து வந்து கொண்டுவிட்டது நினைவுக்கு வந்தது. அபிஜித்தின் தனித்தன்மை அதுதான். தன்னுடைய கடமையைச் செய்வதில் எப்போதும் ஒரு அடி முன்னாலேயே இருப்பான்.
அனசூயா தன்னுடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவை எதுவும் மைதிலியில் மனதில் பதியவில்லை. சித்தூவுக்கு அருகில் வந்து விட்டோம் என்ற சந்தோஷம் மனம் முழுவதும் நிரம்பி இருந்தாலும் அந்த மனம் தன்னிடம் இல்லாமல் அபிஜித்திடம் சென்று விட்டது போல் இருந்தது.
பன்னிரண்டு மணி ஆகும் போது சித்தூ திரும்பி வந்தான்,
“எங்கே போயிருந்தாய்?” மைதிலி எதிரே வந்து கேட்டாள்.
பதில் சொல்வது போல் சட்டை பையிலிருந்து ஐநூறு எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“என்ன இது?” அவள் கேட்டாள்.
“வீட்டுக்கு அட்வான்ஸ். அனசூயாக்காவிடம் கொடுத்து அவங்க அண்ணன் மூலமாக கொடுக்கச் சொல்லு.”
“இவ்வளவு பணம் திடீரென்று எங்கிருந்து வந்தது?”
“இதற்கு முன் நான் வேலை பார்த்த டைலரிங் கடையில் எனக்கு வரவேண்டிய பணம். கேட்டு வாங்கி வந்தேன்.” ஸ்டூல் மீது உட்கார்ந்துகொண்டே சொன்னான்.
“சித்தூ! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போகாதே. எனக்கு ரொம்ப பயமாக இருந்தது, எங்கேயாவது ஓடிப்போய் விட்டாயோ என்று.” அவன் தலை மீது கையை வைத்தபடி சொன்னாள்.
சித்தூ நிமிர்ந்து பார்த்தான். முதல் முறையாக அவள் கண்களுக்குள் பார்த்தான். “ஓடிப் போவதா? எதுக்கு? மாட்டேன். எனக்கு வேண்டியவர்கள் என்னிடமே வந்து விட்டார்கள் இல்லையா!” என்றான்.
மைதிலி அவன் தோளைச் சுற்றி கையை போட்டு அருகில் இழுத்துக் கொண்டாள்.
அனசூயா பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சித்தூ மெதுவாக விடுவித்துக் கொண்டு நகர்ந்து விட்டான். அவன் குளித்து முடித்து விட்டு வரும் போது அனசூயா அவன் ஷர்டில் இருந்த கிழிசலை தைத்து பக்கத்தில் வைத்தாள்.
“நான் மூன்று மணிக்கு திரும்பவும் வருகிறேன். சின்னாவை அனுப்பி வைக்கிறேன். இங்கேயே இருப்பான். ஏதாவது தேவையாக இருந்தால் சொல்லி அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.
மைதிலி தரையில் தட்டை வைத்து இருவருக்கும் சாதம் பரிமாறினாள். அவனுக்கு தானே சாதம் பிசைந்து வாயில் ஊட்டப் போனாள். அவன் மறுத்தான்.. “என் கண் இல்லையா. சாப்பிடு கண்ணா” என்றாள்.
அவள் கேட்ட முறைக்கு அவனால மறுக்க முடியவில்லை. மைதிலி சந்தோஷமாக அவனுக்கு சாதம் ஊட்டிவிட்டாள்.
சித்தூ பாதியில் அவள் கையைப் பற்றி நிறுத்திவிட்டு, “இது உண்மைதானா அம்மா?” என்றான்.
“உண்மையில்லை என்று ஏன் நினைக்கிறாய்?” எதிர்கேள்வி கேட்டாள்.
அவன் கண்களில் ஏதோ பயம், சந்தேகத்தின் நிழல்கள். “இதெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை” என்றான் சீரியஸ் ஆக.
“விருப்பம் இல்லையா? அம்மாவுக்கு விருப்பமானதை சித்தூ பண்ணுவான் இல்லையா?” என்றாள்.
சீரியஸ் ஆக பார்க்கப் போனவன் பிறகு ஆமாம் என்று தலையை அசைத்தான்.
சாப்பாடு முடிந்து விட்டது. மைதிலி பாயின் மீது உட்கார்ந்து கொண்டாள்.
“இங்கே வசதிகள் எதுவும் இருக்காது” என்றான் சித்தூ.
“நான் இங்கே சுகமாக இருக்கிறேன்” என்றாள். அதற்கு முன்னால் சித்தூ வரைந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நடுநடுவில் அவள் கண்கள் கைகடியாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அதை சித்தூ கவனித்து விட்டான். “எங்கேயாவது போகணுமா?” கேட்டான்.
“இல்லை.”
“பின்னே நேரத்தை எதற்காக பார்க்கணும்?”
“சும்மாதான்.” அவனிடம் பொய் சொன்னதற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவன் குழந்தை மனம் உண்மையைச் சொன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அபிஜித் சாப்பிட்டு இருப்பானா? ஜுரம் குறைந்து இருக்குமா? அவள் யோசனைகளை அந்தப் பக்கம் சாய்ந்தன.
அவள் மனம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தது. வீட்டை எப்படி சமாளிப்பது? தானும் எங்கேயாவது வேலை பார்க்க வேண்டும். ஆனால் இதே ஊரில் அபிஜித் இருக்கையில் அது சாத்தியமா?

Series Navigationதொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *