கள்ளா, வா, புலியைக்குத்து

This entry is part 17 of 29 in the series 19 ஜூலை 2015

வளவ. துரையன்

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.
சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது.
சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் கூறுகிறான்.
அவன் கூறும் சொற்களைக் கொண்ட செய்யுள் இதுதான்.
”வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றான்
ஒள்ளிய னென்று மாந்தர் உவாக்கடல் மெலிய ஆர்ப்பக்
கள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க் கெல்லாம்”

“சீவகன் தத்தையை யாழும் பாட்டும் வென்றான். நல்லனென்று மாந்தர் ஆர்ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினான் என்க”
இந்த உரை அச்செய்யுளுக்கு நச்சினார்க்கினியரால் எழுதப்பட்டது. இச்செய்யுளில் உள்ள ‘கள்ளராற் புலியை வேறு காணிய’ என்ற பகுதி உ.வே.சா அவர்களுக்கு விளங்கவில்லை.
“இங்கே கள்ளரும் புலியும் வந்த காரணம் என்ன? சீவகனைப் புலி என்றால் அத்த் தாக்க இயலாத பசுக்கூட்டங்களாக அல்லவா மன்னரைச் சொல்லியிருக்க வேண்டும். தனது உரையில் நச்சினார்க்கினியர் இதை விளக்காமாற் போனாரே!” என்றெல்லாம் அவர் சிந்தித்தார்.
கும்பகோணத்தில் உ.வே.சா வாழ்ந்து வந்தபோது அவர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் சாமப்பா என்ற முதியவர் வசித்து வந்தார். அவர் அடிக்கடி உ.வே.சா இல்லம் வந்து அளவளாவுவது வழக்கம்.
அந்த முதியவருக்கு வேண்டாதவராகிய ஒருவர் மற்றொருவரிடம், இந்த முதியவரைப் பற்றிக் குறை கூறி இருவருக்கும் சண்டை மூட்டிவிட்டாராம்.
அந்தச் செய்தியை உ.வே.சா அவர்களிடம், “எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக் கொண்டு சாகட்டுமே என்பது அவன் எண்ணம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே. அதற்குத்தான், கள்ளா, வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்” என்று அந்த முதியவர் கூறினார்.
உடனே உ.வே.சா நினைவில் ‘கள்ளராற் புலியை வேறு காணிய’ என்ற தொடர் தோன்றியது. அவர் அந்த முதியவரிடம் ‘கள்ளா, வா, புலியைக் குத்து” என்று சொன்னீர்களே? அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.
அதற்கு முதியவர், “அதுவா, ஒரு மனிதன் பணமூட்டையோடு காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தான். வழியில் ஒரு திருடன் அவனைத் துரத்தினான். அப்போது எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இரு அபாயங்களிலிருந்து தப்பிவிட அம்மனிதன் ஒரு தந்திரம் செய்தான். திருடனிடம், ‘அதோ பார், அந்தப் புலியைக்கொன்று விடு. இந்தப் பண மூட்டையை உனக்கே தந்து விடுகிறேன்’. என்று கூறினான். திருடன் புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்துத் தின்றது. அந்த மனிதன் ஓடி விட்டான். இப்படி தனது இரு பகையையும் மோதவிட்டு அவன் தப்பினான். இக்கதையைக் கூறும் பழமொழிதான் ‘கள்ளா, வா, புலியைக்குத்து’ என்பது என்று விரிவாகக் கூறினார்.
உ.வே.சா.விற்கு அத்தொடர் விளங்கிவிட்டது. கடியங்காரன் தனக்கு சிரமமில்லாமல் சீவகனையும் மன்னர்களையும் மோதவிட்டுத் தன் காரியம் சாதிக்க எண்ணினான். எனவே கள்ளர்களாகிய அரசர்களால், புலியாகிய சீவகனை வெற்றி காணும்பொருட்டு அத்தொடர் வந்துள்ளது என்று எண்ணித் தம் ஐயம் தீர்த்தார்.
1907- ஆம் ஆண்டு சீவக சிந்தாமணி இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது, இப்பாடலின் கீழ், “கள்ளா, வா, புலியைக் குத்து” என்பது ஒரு பழமொழி என்ற ஒரு குறிப்பை உ.வே.சா சேர்த்தார்.

Series Navigationவாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்சிவப்பு முக்கோணம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *