எறும்பைப்போல் செல்ல வேண்டும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன்

மரம்போல உயர்வாக வளர்வ தாலே
மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது
மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும்
மனமிருந்தால் தான்அவனை மனித னென்பர் !
அரம்போலக் கூரறிவு இருப்ப தாலே
ஆன்றோனாய்ப் புகழ்வந்து குவிந்தி டாது
கரத்தாலே அணைத்துபிறர் துயரைப் போக்கும்
கருணையிருந் தால்தான்இப் புவியும் போற்றும் !

என்னஇந்த சாதியிலே பிறந்தோ மென்றே
எண்ணிமனம் ஏளனத்தில் குறுகி டாமல்
என்னயிங்கே சாதிக்கப் பிறந்தோ மென்றே
எண்ணிமனம் செயல்செய்து நிமிர வேண்டும் !
சின்னதொரு தோல்விக்கும் மனம்த ளர்ந்து
சிறகொடிந்த பறவையென விழுந்தி டாமல்
முன்நிற்கும் தடைதன்னை மோதி மோதி
முன்னேறும் எறும்பைப்போல் செல்ல வேண்டும் !

இலவசமாய்க் கொடுக்கின்ற பொருளைத் தம்மின்
இருகரத்தால் விருப்பமுடன் வாங்கு வோனோ
நிலம்தன்னில் தவறுசெய்யும் கயவர் தம்மை
நின்றெதிர்க்கும் உரிமையினை இழந்து போவான் !
புலம்பாமல் துன்பினிலும் துணிவு கொண்டு
புகுந்தஏழ்மை நிலையினிலும் நேர்மை யோடு
புலம்தன்னில் பொறுமையுடன் உழைப்ப வன்தான்
புரிந்திடுவான் சாதனைகள் வெற்றி காண்பான் !

Series Navigationஅன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *