அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….

This entry is part 17 of 23 in the series 11 அக்டோபர் 2015

 

‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பின் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை [ சில கவிதைகளுக்குத் தலைப்பு இருப்பதுதான் சிறப்பு ] .

வெண்ணிலா கவிதைகள் எளியவை , நேர்படப் பேசுகின்றன. யதார்த்தம் பளிச்சிடும் இடங்கள் பல. மனைவியைக் கணவன் எப்படி

எழுப்ப வேண்டுமென்று சொல்கிறது ஒரு கவிதை. மெல்ல உதடு தொட்டு முத்தமிட்டு , தலையை வருடி அல்லது முகத்தோடு முகம்

வைத்து , விரல் பிடித்து நெட்டி எடுத்து என்றெல்லாம் ‘ ஆப்ஷன்ஸ் ‘ தரப்படுகின்றன.

இவ்வளவையும் விடுத்து

‘ ஏய் ‘ என கால் சீண்டி

போகிற போக்கில்

எழுப்பிப் போகிறாய்

……. என்று கவிதை முடிகிறது. இக்கவிதையில் சொல்லாட்சி இயல்பாக அமைந்துள்ளது. எளிமையினாலேயே ஓர் அழகு வசப்படுகிறது

அம்மாவின் அருகாமைக்கு ஏங்குவது குழந்தைகளின் இயல்பு. வேலைக்குப் போகும் அம்மா அந்த நேரத்தில் பிரிவைத் திணித்துவிட்டே

போக வேண்டியிருக்கிறது. இந்நிகழ்ச்சியைச் சொல்கிறது , ‘ தலை வாருகிறேன் ‘ என்று தொடங்கும் கவிதை !

தலை வாருகிறேன்

புடவை மாற்றுகிறேன்

வேக வேகமாக

பைக்குள் பொருள்களை அமைக்கிறேன்

என்று தொடங்குகிறது கவிதை.

‘ நீ இல்லா இரவுகளில் ‘ என்று தொடங்கும் ஒரு கவிதை உளவியல் சார்ந்தது. ஆணாதிக்கத்தின் கெட்டியான போர்வைக்குள் மூச்சு

முட்டும் சங்கடம் தரக்கூடியது.

நீ இல்லாத இரவுகளில்

என்னையே நினைத்துக் கொண்டிருப்பாய்

என நினைத்து

தூங்கிப்போய்விட முடிகிறது

 

இருக்கும் இரவுகளில்

மௌனங்களில்

நழுவிப் போகும் இடைவெளிகள்

தூங்க விடாமல் செய்கின்றன

இரவுகளை

……. பேசித் தீர்வு காணவேண்டியது மௌனத்தில் கரைகிறது.

உயர்ந்த சமூகப் பண்பை வலியுறுத்திகிறது ‘ மிதியடிச் சத்தத்தை ‘ எனத் தொடங்கும் ஒரு கவிதை. மிதியடிச் சத்தத்தை மிதப்படுத்த

வேண்டும் , அழைப்பு மணியை , கதவு தட்டுவதை மெதுவாகச் செய்ய வேண்டும். குரலை மென்மையாக்கி ‘ யார் வீட்ல ? ‘ என

அழைக்கலாம். இவை உயர் பண்புகள் என வலியுறுத்தப்படுகின்றன.

‘ தனித்திருந்து ‘ என்று கவிதையில் குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கும் நாட்களில் அந்த அருகாமையின் இழப்பை , இயற்கை

நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்கும் தாய் மனம் – கவிமனம் பதிவாகியுள்ளது. தனித்திருந்து வானம் பார்க்கும் இரவில் விழும் எரிநட்சத்திரம்

கொல்லையில் பறவையின் இறகு , முற்றத்தில் நீரில் காகிதக் கப்பல்விட ஆளில்லாத வெறுமையைத் தர ஒரு மழை வந்து போவதெல்லாம்

நினைக்கப்படுகின்றன. இதையெல்லாம் பார்த்து ரசிக்க , குழந்தைகள் பக்கத்தில் இல்லை என்பதே ஆதங்கம் !

நிரந்தரமாய்த் தழிடப்பட்ட கதவு உள்ள ஒரு வீட்டைக் கருப்பொருளாகக்கொண்டது , ‘ பேருந்துப் பயணத்தில் ‘ என்று தொடங்கும்

கவிதை. இதே கருப்பொருளைச் சிலர் கையாண்டுள்ளனர். சாலையோரத் தூசிகளைத் தாங்கிய தாழ்வாரம் , ஈரமற்ற கிணற்றோரம் ,

காக்காயோ நாயோ ஈரம் தேடி உருட்டிய வாளி , அதே நிலையில் நின்றிருக்கும் கார் , நிரந்திரமாய்த் தாளிடப்பட்ட கதவு எல்லாம் ஒரு

மெல்லிய சோகப் பின்னணியை உருவாக்கிவிடுகின்றன.

பல ஆண்டுகள் தாய் வீட்டில் வளரும் பெண் ஒரு நாள் புகுந்த வீடு செல்லத்தான் வேண்டும். அந்த எதிர்காலச் சோகத்தை இப்போதே

நினைத்துப் பார்க்கும் ஒரு பெண் ‘ அடுத்த ஆண்டும் ‘ என்று தொடங்கும் கவிதையில் பேசப்படுகிறாள். இதில் இரண்டு செய்திகள் –

பெண்ணின் ரசனையை , வெறுப்பைக் காட்டுகின்றன,

அடுத்த ஆண்டு

கொல்லையில்

தேன்சிட்டு முட்டையிடும்

முட்டையை

நேசப் பார்வையில்

அடைகாக்க நானிருக்கமாட்டேன்

இரண்டாவது செய்தி ; நினைவில் அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டு அலற ‘ அந்தப் பெண் இருக்கமாட்டாளாம். இக்

கருப்பொருளை வேறு யாரும் கையாண்டதாகத் தெரியவில்லை.

பொதுவாக , வெண்ணிலா கவிதைகள் வாழ்க்கையின் அபூர்வ கணங்களைக் கருப்பொருளாகக் கொண்டவை. மொழி ஆளுமை சார்ந்த

அடுத்த கட்டத்திற்கு இவர் நகர்ந்தால் அது இவர் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் !

 

 

 

Series Navigationமிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வைஒத்தப்பனை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *