அயான் ஹிர்ஸி அலி
இஸ்லாமிய பயங்கரவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் முன்னணி சிந்தனைக்கு கொண்டு வந்த 9/11 நடந்து, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் “உலக பயங்கரவாதத்தின் மீதான போரை” துவங்கி, 14 வருடங்களுக்கு பிறகு, இஸ்லாமின் வன்முறைவாத பிரிவு இன்று புற்றுநோய் போல பரவியிருக்கிறது. ஈராக், சிரியாவின் பல பகுதிகள் இன்று ”இஸ்லாமிய அரசு”வின் கீழ் வந்துள்ளன. லிபியாவும் சோமாலியாவும் அராஜகத்தின் கீழ் சென்றுள்ளன. யேமன் உள்நாட்டு போரால் சிதிலமடைந்திருக்கிறது. தாலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானத்தில் தலை தூக்கியிருக்கிறது. நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதத்தை பரப்பிகொண்டிருக்கிறது. இருப்பினும், வன்முறை இஸ்லாமிஸத்தின் அச்சுறுத்தலை நீக்குவதற்கான எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் உலக அரசியல்வாதிகள் திணறிகொண்டிருக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் தொடர்ந்து நாட்டுக்குள்ளேயே வன்முறை தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மிலிட்டரி டிரம்மர் லீ ரிக்ஸ்பியின் கொலையாக இருக்கட்டும், பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடுப்பு 2013இல் நடந்ததாக இருக்கட்டும், பார்லிமண்ட் ஹில் கனடாவில் 2014இல் நடந்த துப்பாக்கிச்சூடாக இருக்கட்டும், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், பாரிஸில் யூதர்களது சந்தையில் கடந்த ஜனவரியில் நடந்த தாக்குதல்களாக இருக்கட்டும், மிகவும் சமீபமாக, சட்டநூகா டென்னஸியில் மிலிட்டரி ஆள்சேர்ப்பு மையத்தில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்குலகு பார்த்துகொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வன்முறை தீவிரவாதம் இஸ்லாமின் புனித நூற்களிலிருந்து கிளைத்தெழுகிறதா? அல்லது இஸ்லாமின் அடித்தளத்தை திருகி சிதைத்திருக்கும் சூழ்நிலைகளின் உற்பத்தியா?
இதற்கு பதில் சொல்லவேண்டுமெனில், முதலில் இஸ்லாம் என்பதை ஒரு கருத்துதொகுப்பு என்றும், முஸ்லீம்களை அதனை பின்பற்றுபவர்கள் என்றும் முக்கியமான வேறுபாட்டை நாம் இங்கே நினைவுபடுத்திகொள்ளவேண்டும். உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களின் சமூக பொருளாதார, கலாச்சார சூழ்நிலைகள் பலவேறு தரப்பட்டவை. ஆனால், அங்கே, உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்கள் எவ்வாறு தங்களது மதநம்பிக்கையை பார்க்கிறார்கள், பயில்கிறார்கள் என்பதை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
முதலாவது பிரிவு , அடிப்படைவாதிகளால் நிறைந்தது. இவர்கள் ஷரியாவின் அடிப்படையிலான ஒரு அரசைக் கனவுகாண்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் எவ்வாறு இஸ்லாம் இருந்ததோ அதனை தூய இஸ்லாமாக கருதிகொண்டு அதேமாதிரியான இஸ்லாமை எல்லார் மீதும் திணிப்பதை தங்களது மத கடமையாக கருதுகிறார்கள். இவர்களை நான் மெதீனா முஸ்லீம்கள் என்று அழைக்கிறேன். மெதீனாவில் இருந்த முகம்மதுவின் உதாரணத்தை பின்பற்றி, இஸ்லாமின் ஷரியா மதச்சட்டத்தை கட்டாயமாக திணிப்பதை தங்கள் மதக்கடமையாக கருதுகிறார்கள். மற்ற முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தை மதிப்பதை உபயோகப்படுத்திகொண்டு தங்களது மதச்சட்டம், ஒரு நாட்டின் சிவில் சட்டத்தை விட முக்கியமானதாக எடுத்துகொள்கிறார்கள். இந்த அடிப்படையை அவர்கள் உருவாக்கிய பின்னரே, தங்களது ஜிஹாதுக்கு ஆட்களை இவர்கள் சேகரிக்கிறார்கள்.
இரண்டாவது பிரிவு, உலகத்தின் பெரும்பாலான முஸ்லீம்கள், இஸ்லாமின் அடிப்படை கருதுகோள்களுக்கு உண்மையாக இருந்துகொண்டும், தினந்தோறும் தொழுகை செய்துகொண்டிருந்தாலும், முஸ்லீமல்லாதவர்கள் மீது வன்முறையோ அல்லது சகிப்பின்மையையோ செய்யாதவர்கள், செய்யவிரும்பாதவர்கள். இவர்களை நான் மெக்கா முஸ்லீம்கள் என்று அழைக்கிறேன். இந்த பெரும்பான்மை முஸ்லீம்களிடம் இருக்கும் அடிப்படை பிரச்னை, இவர்கள் தங்களது மத நூல்களில் ஆழப் பதிந்திருக்கும், சகிப்புத்தன்மை இன்மையையும், அதிலிருக்கும் வன்முறையையும் நிராகரிப்பதை விடுவோம், அங்கீகரிப்பது கூட இல்லை.
சமீப காலங்களில், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் எழுச்சியோடு கூடவே, மூன்றாவது பிரிவு இஸ்லாமுக்குள்ளேயே எழுந்துவருகிறது. இவர்கள் முஸ்லீம் சீர்திருத்தவாதிகள். இவர்களை நான் “சீர்திருத்த முஸ்லிம்கள்” அல்லது “மாற்றம் கோரும் முஸ்லீம்கள்” என்று அழைக்கிறேன். அரசியலிலிருந்து இஸ்லாமைப் பிரிப்பதையும், மற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதையும், இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். சிலர் இஸ்லாமிலிருந்தே வெளியேறியவர்களாக இருந்தாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் மத நம்பிக்கைகொண்டவர்கள். அரசியல் வன்முறையில் முஸ்லீம்கள் மாட்டிகொள்ளக்கூடாது என்றால், மதமே மாறுதலடைய வேண்டும் என்று உணர்ந்த பலரில் பல இஸ்லாமிய மத அறிஞர்களும் அடக்கம்.
இஸ்லாமின் எதிர்காலமும், முஸ்லீம்களோடு உலகம் கொள்ளும் உறவும், இந்த இரண்டு சிறுபான்மை குழுக்களில், அதாவது மெதீனா முஸ்லீம்களா, அல்லது சீர்திருத்தவாதிகளா, எவர் மெஜாரிட்டியாக இருக்கும் மெக்கா முஸ்லீம்களின் ஆதரவை பெறப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
இஸ்லாமியக் கொள்கையில் வன்முறை ஒரு இன்றியமையாத அங்கமா என்று புரிந்துகொள்ள, நாம் இஸ்லாமை தோற்றுவித்த முகம்மதின் உதாரணத்தையும் குரானில் இருக்கும் வசனங்களையும், முஸ்லீம் நாடுகளில் நாம் பார்க்கும் வன்முறைகளை நியாயப்படுத்தும் இஸ்லாமிய நீதிமுறைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மெக்காவில், முகம்மது தனது ஜாதியினரை அவர்களது தெய்வங்களை வணங்குவதை நிறுத்திவிட்டு தனது தெய்வத்தை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தானங்கள் செய்வதையும், விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவுவதை பற்றியும் பிரச்சாரம் செய்தார். (இப்படி பிரச்சாரம் செய்வது இன்றும் இஸ்லாமின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. இது அரபியில் தாவா என்று அழைக்கப்படுகிறது) இருப்பினும், மெக்காவில் இவரை பின்பற்றியவர்களாலும் இவராலும், பலரை தனது புதிய மதத்துக்கு திருப்பமுடியவில்லை. ஆகவே, முகம்மது தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு பிறகு, அவர் மெதீனாவுக்கு தப்பிச்சென்றார். அங்கு பலரை தனது ஆட்களாக சேர்த்துகொண்டு ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கி போர்நடத்த ஆரம்பிக்கிறார்.
ஆயுதம் தாங்கிய வன்முறை ஜிஹாத் செய்ய விரும்பும் எவரும், முகம்மதின் மெதீனா காலத்தை பற்றிய ஹதீஸ்களிலும், குரானிலும் ஏராளமான ஆதரவைப் பெறலாம். உதாரணமாக 4.95 குரான் வசனம், “நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது. 8.60 குரான் வசனம், உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது. இறுதியாக குரான் வசனம் 9:29, ”வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!” என்று முஸ்லீம்களுக்கு அறிவுரை அளிக்கிறது.
இந்த வாள் வசனங்கள் என்று அழைக்கப் படும் “sword verses” (9:5 and 9:29) ஆகியவை, குரானில் காணப்படும், சகிப்புத்தன்மை, கருணை, அமைதியை வலியுறுத்தும் வசனங்களை நீக்கி விட்டன என்று மையநீரோட்ட இஸ்லாமிய அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
முகம்மதின் உதாரணங்களை எடுத்துகொண்டோமானால், ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சஹீ முஸ்லீம் என்னும் ஹதீஸ் தொகுப்பு சுமார் 19 ராணுவ படையெடுப்புகளை செய்தார் என்றும் அதில் எட்டு ராணுவ படையெடுப்புகளில் தானே கலந்துகொண்டார் என்றும் தெரிவிக்கிறது. கிபி 627இல் அகழிப்போரின் முடிவில், “பானு குரைஸா ஜாதியினரை கடுமையாக ஒடுக்க, அவர்களது ஆண்களையெல்லாம் கொன்று, அவர்களது பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் அடிமைகளாக விற்றார்” என்று யேல் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுப் பேராசிரியர் கெர்ஹார்ட் போவரிங் தனது இஸ்லாமிய அரசியல் சிந்தனை என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பிரின்ஸ்டன் ஆய்வாளர் மைக்கல் குக், தனது ”புராதன மதங்கள், நவீன அரசியல்” என்ற புத்தகத்தில் ”காபிர்களின் மீதான போர் என்பது இஸ்லாமின் அடிப்படை மத நூற்களில் எழுதப்பட்டுவிட்ட விஷயம்” என்று கூறுகிறார்.
இங்கேதான் இஸ்லாமில் இருமை இருக்கிறது. மெக்காவில் முகம்மதின் உதாரணங்களை வைத்து இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம் என்று கோரவும் இடம் இருக்கிறது. அதே போல இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ் செய்வது போல, மெதீனாவில் முகம்மதின் உதாரணங்களை பின்பற்றி, முஸ்லீம்கள் அனைவரும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்றுகொள்ளவேண்டும் அல்லது அடிமையாக வாழவே வேண்டும் என்று ஜிஹாத் தொடுக்கவேண்டும் என்று முகம்மதுவுக்கு அனுப்பப்பட்ட வெளிப்பாடு இருக்கிறது என்று கோரவும் இடம் இருக்கிறது.
ஆகவே, இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா என்பது முக்கியமான கேள்வி அல்ல. மாறாக, முஸ்லீம்கள் ( சுன்னியோ, ஷியாவோ) மெதீனாவின் முகம்மதை பின்பற்றுகிறார்களா என்பதுதான் கேள்வி.
இன்று, இன்று வளர்ந்துவரும் மெதீனா கொள்கையின் மத நியாயங்களை புரிந்துகொள்ள மேற்குலகம் திணறுகிறது. இஸ்லாம் மதத்திற்குள் இருக்கும் வன்முறைக்கும், அமைதிக்குமான உறவை புரிந்துகொள்ளவும் திணறுகிறது. இஸ்லாமின் வன்முறை தீவிரவாதத்தை பற்றிய விவாதத்தில் இரண்டு முக்கிய பார்வைகள் உருவாகி வந்திருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் என்ன வார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றன என்பது அதில் உள்ள வித்தியாசங்களை உணர ஏதுவானது.
ஜான் எஸ்போஸிட்டோ என்னும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக பேராசிரியர், காரென் ஆர்ம்ஸ்ட்ராங் போன்றோர்கள் இஸ்லாம் என்பது பிரச்னைக்கு வெளியே உள்ளது என்று கருதுகிறார்கள். இஸ்லாமிய வன்முறைக்கு முக்கிய மூலாதாரமான காரணங்கள் என வறுமை, அரசியலில் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டமை, கலாச்சார தனிமை, இன்னும் இது போன்ற அந்நியமாதல்கள் ஆகியவையே முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இஸ்லாமுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்றவர்கள், “தீவிரவாதம்”, “வன்முறை தீவிரவாதம்”, பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளை கொண்டு உலகெங்கும் இஸ்லாமின் பெயரால் நடக்கும் பயங்கரவாதங்களை விவரிக்கிறார்கள். இஸ்லாமின் பெயரை உபயோகப்படுத்தினால், இஸ்லாம் எவ்வாறு வக்கிரப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது கடத்தப்பட்டுள்ளது என்று விவரிக்க உபயோகிக்கிறார்கள். வெகுவேகமாக, இஸ்லாமுக்கும் மற்ற மதங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று அடித்து பேசுகிறார்கள். மற்ற மதங்களிலும் மோசமான அங்கங்கள் இருக்கின்றன என்று எடுத்துகாட்டுகிறார்கள். ஆகவே இஸ்லாம் ஒருவகையிலும் தனித்த வித்தியாசமான மதம் இல்லை என்று பேசுகிறார்கள். இது ஏறத்தாழ எல்லா அரசியல்வாதிகளின் குரலுமாகும். இது அமெரிக்காவின் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மேற்குலகின் அரசியல்வாதிகளும் இதையே பேசுகிறார்கள். (பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேறு ஒரு குரல் எழும்ப ஆரம்பித்திருக்கிறது)
ஆனால், இந்த இஸ்லாமிய வக்காலத்தாளர்களின் நிலைப்பாடு முழுக்க முழுக்க கொள்கைத் தோல்வி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில், இது வன்முறை, பெண் ஒடுக்குமுறை, மற்ற மதத்தினரின் மீதான அடக்குமுறை ஆகியவற்றை நியாயப்படுத்தும் குரானிலும், ஹதீஸிலும் இருக்கும் நிலைப்பாடுகளை நிராகரிக்கிறது.
மாறுபட்ட கருத்தை கூறும், பாட்ரிஸியா க்ரோன், பால் பெர்மான் ஆகியோர், “அரசியல் இஸ்லாம், இஸ்லாமிஸம், சலாபிசம், வஹாபிஸம், ஜிஹாதிஸம் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இவை அனைத்துமே, இந்த வன்முறைச் செயல்பாடுகளின் மத அடிப்படையை உணர்த்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஏன் ஐரோப்பாவிலும், ஷரியா சட்டத்தை மக்கள் மீது திணிக்க கொள்கை நிலைப்பாடு கொண்ட இயக்கங்கள் உருவாகி வந்திருக்கின்றன என்பதையே வாதமாக வைக்கின்றன. கடந்த ஜூலையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான், ”மதத்துக்கும் தீவிரவாதிகளுக்கு இடையேயான உறவை மறுதலிப்பது வேலைசெய்யாது. ஏனெனில் இந்த தீவிரவாதிகள் தங்களை முஸ்லீம்கள் என்றே அடையாளப்படுத்திகொள்கிறார்கள். ஊல்விச்சிலிருந்து துனிஸியா வரைக்கும், ஒட்டோவாவிலிருந்து பாலி வரைக்கும் இந்த கொலைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட மதத்தின் காரணமாகத்தான் செய்கிறோம் என்று அவர்களே கூறுகிறார்கள். அதனை நாம் மறுப்பது வீணான முயற்சி” என்று கூறினார். நான் ஒப்புகொள்கிறேன்.
தீவிரவாத இஸ்லாமின் கொள்கை இஸ்லாமிய மதநூல்களின் வேரில் இருக்கிறது என்ற பார்வை பயங்கரவாதத்தை முழுவதுமாக புரிந்துகொள்ளத்தான். இது மதக் கொள்கையை அதன் தீவிரத்துடன் எடுத்துகொள்கிறது. அது அதன் கீழே இருக்கும் “உண்மையான காரணங்கள்” என்ற புகை மூட்டத்தின் கீழே மறைப்பதில்லை. ஒரு தற்கொலைதாரி தன் தற்கொலை குண்டுகளை தன் உடலின் தரிக்கும் முன்னரே தீவிரவாதம் துவங்கிவிடுகிறது என்று இந்தப் பார்வை புரிந்துகொள்கிறது. இது மசூதிகளிலும் பள்ளிகளிலும் இமாம்கள் வெறுப்பையும், சகிப்புத் தன்மையின்மையையும், மெதீனா இஸ்லாத்தை ஏற்றுகொள்வதையும் பிரச்சாரம் செய்யும்போதே ஆரம்பித்துவிடுகிறது.
மேற்கத்திய அரசாங்கங்கள் “மிதவாத முஸ்லீம்களோடு” பேச முயற்சி செய்திருக்கின்றன. பயங்கரவாத செயல்களைக் கண்டிக்கும் இமாம்களும், சமூக தலைவர்களும் உண்மையான அமைதியான இஸ்லாமை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கோருவார்கள். ஆனால், இது ஒரு பொருளார்ந்த கொள்கைரீதியான பேசும் முயற்சி அல்ல. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று பேசும் எந்த இமாமும், குரானிலும் ஹதீஸிலும் இருக்கும் வன்முறை போதனைகளை இருப்பதாக அங்கீகரிப்பதில்லை. இஸ்லாமுக்குள்ளேயே நடக்கவேண்டிய மாறுதல்களை பற்றிய எந்த விவாதமும் இல்லை. புராதன காலத்தில் உருவான போதனைகளை மாற்றி நவீன காலத்தின் சகிப்புத் தன்மை, மாறுபட்ட சிந்தனையாளர்களை மதிப்பது என்பதைக் கொண்டுவரும் முயற்சியும் இல்லை.
எதேச்சதிகார அரசாங்கங்கள், உள்நாட்டு போர்கள், அராஜகம், பொருளாதார சீர்கேடு ஆகிய அனைத்துமே இஸ்லாமிஸ்ட் இயக்கங்கள் பரவ நிச்சயமாக காரணங்களாக இருந்திருக்கின்றன. ஆனால், மேற்குலகும் முஸ்லீம்களும் மதக் கொள்கையின் தோல்வியாலேயே இந்த பயங்கர வாத இயக்கத்தின் தோல்வியும் ஏற்பட முடியும் என்பதை அங்கீகரிக்கவேண்டும். இந்தக் கொள்கையை தோற்கடிக்கவேண்டுமெனில், இதன் வன்முறை தீவிரவாதத்தை மட்டுமே குறிவைத்தால் பயனில்லை. ஷரியாவின் வன்முறையற்ற போதனைகளையும், ஜிஹாதுக்கு முன்னால் வரும் வீரச்சாவுகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டும்.
தற்கொலைகுண்டுதாரி வெடிக்கும் முன்னர் தடுப்பதன் மூலம் மெதீனா கொள்கையை நாம் தோற்கடிக்கமுடியாது. அவரது இடத்தை வேறொருவர் எடுத்துகொள்வார். இஸ்லாமிய அரசு என்னும் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்குவேதா, அல்லது போகோ ஹராம், அல் ஷபாப் ஆகியவற்றை தோற்கடிப்பதன் மூலம் வெற்றியடைய முடியாது. இன்னொரு தீவிரவாத குழு இன்னொரு இடத்தில் முளைக்கும். இஸ்லாமிய தீவிரவாத கொள்கையின் சாவு, சகிப்புத்தன்மையின்மை, செத்தபின்னால் சுவனத்தின் மீதான ஆசை ஆகியவற்றிற்கு மாற்றாக நமது விலை மதிப்பற்ற வாழ்க்கை, சுதந்திரம், சந்தோஷத்துக்கான தேடல் ஆகியவற்றை முன் வைக்கும்போதுதான் நாம் வெற்றியடையமுடியும்.
- சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்
- இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?
- ” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
- மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
- மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி
- பொன்னியின் செல்வன் படக்கதை – 12
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- மாறி நுழைந்த அறை
- ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்
- தேடப்படாதவர்கள்
- பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி
- அவன், அவள். அது…! 10
- பூவைப்பூவண்ணா
- தண்ணீரிலே தாமரைப்பூ
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு
- தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்
- திரை விமர்சனம் தூங்காவனம்