பூவைப்பூவண்ணா

This entry is part 13 of 18 in the series 15 நவம்பர் 2015

 

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன்

கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்[து] அருளேலோ ரெம்பாவாய்!

கடந்த 22- ஆம் பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் “சங்கமிருப்பார் போல் வந்தோம்” என்றார்கள். அதாவது ”அகங்காரங்கள் ஏதுமின்றி அகதிகள்போல் உன் திருவடியின் கீழ் வந்தோம்” என்று சரணாகதி செய்தார்கள். ஆனால் பகவான் “இவர்கள் இப்படிச் சொல்லலாமா? அதுவும் நப்பின்னையைப் பிராட்டியைப் பெற்றவர்கள் இப்படிப் பேசலாமா” என்று எண்ணினாராம். ஏனெனில் ”நப்பின்னைப் பிராட்டி புருஷகாரம் செய்பவர். அப்படிப்பட்ட நப்பின்னையின் தோள்களோடு அணையப்பெற்றதால் உண்டான ஆனந்தம் கொண்டவன் அவன்.” என்று நம்மாழ்வார் சாதிக்கிறார்.

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சம்

தன்னை அகல்விக்கத் தானுங்கில் லான்இனிப்

பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை

முன்னை அமரர் முழுமுத லானே     [1-7-8]

அப்படிப்பட்ட இவர்கள் அகதிகள் என்று சொல்லலாமா? கிடம்பியாச்சான் என்பவர் ஸ்ரீராமானுஜருடைய சீடர்களில் ஒருவர். அவர் ஒருமுறை திருமாலிருஞ்சோலை அழகர் முன் சென்று “ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமானவனாய், பயங்கரமான சம்சார சாகரத்தின் நடுவில் விழுந்து கிடக்கும் கதியற்றவான என்னை” என்று ஆளவந்தார் அருளிய ஸ்லோகத்தைச் அனுசந்தித்து   வேண்டினாராம். உடனே அழகர் “இராமானுசனை உடைமையாயிருந்து வைத்து அகதி அதாவது கதியற்றவன் என்று என்முன்னே சொல்லாதே” என்று அருளிச் செய்தாராம். அதுபோல நப்பின்னையை உடையவர்களாயிருக்கும் இவர்கள் அகதிகள் என்று சொல்லிக்கொள்ளலாமா? என்று பகவான் எண்ணினாராம்.

அதுவும் வருகின்றவர் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் சென்று அவர்களிடம் கருணை காட்டி ஆட்கொள்பவன் அன்றோ அவன்? வீடணன் வந்து தலை கவிழ்ந்து நிற்கும்போது அவனை இராவணன் தம்பி என்று தள்ளாமல் அருள் செய்தவர் அன்றோ? ஆண்களுக்கே இப்படியானால் பெண்களை அதுவும் தங்களுக்கு யாரும் இல்லை என்று வருபவர்களை ஆதரிக்காமல் விடுவாரா?

இந்த ஆயர் சிறுமிகள் பெருமானின் கிடந்த கோலம் பார்த்தவர்கள், நின்ற கோலம் கண்டவர்கள் இப்போது இப்பாசுரத்தில் அமர்ந்த கோலம் காண விழைகிறார்கள். எனவேதான் ’சீரிய சிங்காதனத்திலிருந்து’ என்று வேண்டுகிறார்கள். அதுவும் புறப்பட்டு வரும்போது அவன் நடையழகையும் பார்க்கலாம் என்று விரும்புகிறார்கள். இந்தப்பாசுரத்தை நரசிம்மனைக் கொண்டாடக்கூடிய உயர்ந்த பாசுரம் என்பார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். ஏனெனில் பாசுரத்தில் ”ஆராய்ந்து அருள்வாய்” என்று கூறப்படுகிறது. அதாவது ஆராய்ந்து அருளக்கூடியவன் ஸ்ரீ நரசிம்மன் ஆவான். அந்த அவதாரம் மட்டுமே ஆராய்ந்து எப்படி எடுத்தால் இரணியனை வதம் செய்யலாம் என்று அருளப்பட்டது.

அது மாரிக்காலம்; மழைக்காலம், அனைவரும் விரும்பும் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருக்கச்சி நம்பிகளும், கூரத்தாழ்வானும் அருளியது விரும்-பும்மழை. ஆளவந்தார் வெறுக்கத்தக்க சம்சார சாகரமான மழையைக் காட்டுவார். “மப்பு மூடப்பெற்று வழி திகைத்து அலமரும்படியாய்ப் பல்வகைத்துன்பங்கள் சொட்டு சொட்டு என்று துளிர்க்கும்”என்பார் அவர்.எல்லா இடங்களிலும் பெருமழை பெய்ததால் வெள்ளமாய் இருக்கிறது. எந்த உயிரினங்களும் வெளியே வராமல் இருக்கின்றன. அரசர்களும் அரண்மனையை விட்டுப் புறப்படாத காலம்; அதனால் மிருகராஜனான சிங்கமும் தன் இருப்பிடமான மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. சுக்ரீவன் இராமபிரானுக்குக் கொடுத்த வாக்கை மறந்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த காலம்; கண்ணனும் நப்பின்னையும் கட்டிலில் இருக்கும் காலம்; பிரிந்தார் கூடும் காலம்; கூடினார் போக ரஸம் அனுபவிக்கும் காலம்; இப்படிப்பட்ட காலத்திலே நாங்கள் மட்டும் உன் வாசலிலே கிடந்து துவண்டு கொண்டிருக்கிறோம் என்று சொல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

“இது கண்ணன் மண்ணும் விண்ணும் கடல்கொண்டெழுந்த அக்காலங்கொலோ புயற்காலங்கொலோ” [திருவிரு—18] என்று கலங்க வைக்கும் காலம்; ”காரிகையார் நிறைகாப்பவராவார் என்று கார்கொண்டின்னே மாரி கை ஏறி அறையுடும் காலம்” [திருவிரு—19]; ’பிரிந்தார் கொடுமை குழறு தண்பூம் காலம்” [திருவிரு—7]; கலந்தார் வரவெதிர் கொள்ளும் காலம்” [திருவிரு—68]; பெண்ணீர்மை ஈடழிக்கும் காலம்” [நாச்-திரு-8] என்றெல்லாம் ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர்.

இக்காலத்தில் சிங்கம் மலையைப்பற்றிக் கிடக்கிறது. பகவானான சிம்மம் பற்றிக் கொண்டிருப்பது வேதமான மலையாகும். வேதமே ஒரு மலை. பரத்வாஜ மகரிஷி 3000 ஆண்டுகள் வாழ்ந்து வாழ்நாள் முழுதும் வேதம் ஓதிக்கற்றார். ஆயுள் முடியும் போது இந்திரன் வந்தான். அவனிடம் “இன்னும் 100 ஆண்டுகள் தருக; நான் வேதம் ஓதி சதுர்வேதியாவேன்” என்று வேண்டினார். உடனே இந்திரன் இதுவரை காணாத மூன்று மலைகளைக்காட்டி, அதிலிருந்து மூன்று பிடி மண் எடுத்து “இதுதான் நீர் ஓதியது; இன்னும் ஓதாதது மூன்று மலையளவு இருக்கிறது’ என்று கூறினான். எனவே வேதமே பெரிய மலையாகும்.

சிம்மம் மலைக்குகையைப் பற்றிக்கொண்டு கிடக்கிறது. இவன் யாதவ சிம்மம் அல்லவா? ”நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்று 19- ஆம் பாசுரத்தில் சொன்னபடி அவனும் நப்பின்னையைப் பற்றிக்கொண்டு கிடக்கிறான். பெருமாளின் இருப்பிடம் பற்றி, “மலராள் தனத்துள்ளான்” சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கலுற்றவன்” என்றன்றோ ஆழ்வார்கள் பேசுகிறார்கள். அதுவும் மலைக்கு ஓர் ஆபரணம் போல் அந்தச் சிங்கம் கிடக்கிறதாம். ’மன்னிக் கிடந்து’ என்பது அச்சிங்கம் பொருந்தியிருப்பதைக் காட்டுகிறது எனலாம். ஒரு பாறை போல அம்மலையிலே அது அச்சமின்றிக் கிடக்கிறது. அம்மலையை அது தன் உரிமையாக்கிக் கொண்டுள்ளது. எனவே அது உரிமையுடன், அதே நேரத்தில் மிடுக்குடன் ’வைத்துக்கிடந்த மலர் மார்பா’ எனும்படிக்கு அச்சமின்றி ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. அது சீரிய சிங்கமாம். அதாவது வீரியமான சீர்மையுடையதாகும். “நரசிம்மம் போலே கலந்த கட்டியாய்ச் சீர்மை கெட்டிராதே சிற்றாயர் சிங்கம் கண்ணன்” என்பது ஆறாயிரப்படி.

“பற்றார் நடுங்கமுன் பாஞ்ச சன்யத்தை

வாய்வைத்த போர் ஏறே!என்

சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!

சிறுக்குட்டச் செங்கண்மாலே” [3-3-5] என்பார் பெரியாழ்வார். உடையவர் இராமானுசரே சீரிய சிங்கம்“ என்று கூறப்படுவார். “கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலை உண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன்” என்று இராமானுச நூற்றந்தாதி போற்றும். கம்ப நாட்டாழ்வார் “திசைதிறந்து அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்” என்று நரசிம்ம அவதாரத்தை எழுதுவார்.

அது உறங்கிக் கொண்டிருந்தாலும் எதிரிகள் வந்தால் உடனே வெல்லக் கூடியது. எம்பெருமான் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாலும் அவன் எதிரிகள் தவித்திருப்பார்களாம். மிருகேந்திரன் என்று முடிசூட்டப்படாமலேயே அது பிறப்பினாலேயே எல்லா விலங்குகளாலும் மிருகங்களுக்கு அரசனாகக் கொண்டாடப்படுகிறது. கண்ணனும் தன்பிறப்பினாலேயே யாதவ சிம்மம், யசோதை இளஞ்சிங்கம், சிற்றயர் சிங்கம் என்றெல்லாம் சேவிக்கப்படுகிறான்.

இதையே “வேதமாகிய மலையில் உள்ள அர்த்தங்களில் அனுபவித்து அங்கேயே கிடப்பவர் ஆச்சாரியார்” என்று பயங்கரம் அண்ணங்காச்சாரியார் சுவாமிகள் எடுத்துக்காட்டுவார்.

மழை நின்றது. மாரிக்காலம் முடிந்த்து. பாதையெல்லாம் சரியானது. சிங்கமும் அறிவுற்றுத் தீ விழித்தது. அதாவது யாரும் எழுப்ப வேண்டாமல் தானாகவே காலம் உணர்ந்து பூ மலர்வது போல கண் விழித்ததாம். பாகவதர்களின் வேண்டுதலைத் தானாகவே உணர்ந்து எழுந்து வருபவனன்றோ அவன்! அறிவுற்று என்பது இதுவரை அறிவு பெறாமலிருந்து இப்போதுதான் அறிவு பெற்றதைக்குறிக்கும். ஆமாம்! எம்பெருமான் எப்போதுமே தன்னடியார்களுக்கு என்று உணரும்போதுதான் அறிவு பெற்றவனாகிறன் போலும்?

மாரிக்காலம் முடிந்தவுடன் மலைக்குகையை விட்டு சிங்கம் வெளியில் வரும். அதை “சிம்ஹாவலோகம்” என்பர். வெளியில் வந்த சிம்மம் நம் எல்லைக்குள் மற்றைய பிராணிகள் ஏதேனும் நுழைந்ததா என்று தீவிழிப்பார்வை பார்க்கும். அச்சிங்கமானது அதன் குட்டிகளும், பேடையும் கூட அருகே நெருங்க அச்சப்படத்தக்க வண்ணம் கண்கள் நெருப்புப் பொறி கக்க கண் விழிக்குமாம். நரசிம்ம அவதாரத்தின் போது பிராட்டியும் தேவர்களும் கூட அஞ்சும் வகையில் அந்த நரசிம்மத்தின் பார்வை இருந்ததாம். “வானோர் கலங்கியோட’ [பெரிய திருமொழி 1-7-6] என்று ஆழ்வார் அருளிச்செய்வார். மற்றும்,

”எரிந்த பைங்கண் இலங்குபேழ் வாயெயிற்றொடு இதெவ்வு என்று

இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம்

நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள்நெறி வாய்உழுவை

திரிந்த ஆனைச்சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே”

என்று நான்முகன் அந்தாதி -21   கூறும். ஆனாலும் பயங்கரமான அந்தக் கண்களைப் பார்க்க அனைவரும் ஆசைப்படுகின்றனர். ஏன் தெரியுமா? அந்தக் கோபத்திலும் அவன் அழகாக விளங்குகின்றானாம். ”அழகியான் அரியுருவன்தானே” என்றும்,

இவையா பிலவாய் திறந்தெரி கான்ற

இவையா எரிவட்டக் கண்கள்—இவையா

எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்

அரிபொங்கிக் காட்டும் அழகு”

என்றும் ஆழ்வார்கள் எண்ணி எண்ணி ஆனந்தப்படுகிறார்கள்.

அச்சிம்மம் இத்தனை நாள் உறங்கிக் கொண்டிருந்து இப்போது எழுந்திருந்ததால் சோம்பல் முறிக்கிறது. தன் பிடரி மயிர்களை உதறிக் கொள்கிறது. வேரி மயிர் என்பது வாசம் மிக்க பிடரி மயிர்களைக் குறிக்கும். எல்லாக் கந்தங்களையும் தன்னுள் கொண்டவன் எனும் பொருளில் அவன் ’ஸர்வகந்த: என்று போற்றப்படுகிறான். பொன்மயமான தலை மயிரையும், பொன்மயிரான மீசையையும் உடையவன் என்றும் புகழப்படுகிறான். மழைக்காலம் முழுதும் குகையில் கிடந்ததால் பாதி விழிப்பும் பாதி உறக்கமுமாய் இருக்கிறதாம். அதனால் தன் உடல் உறுப்புகள் எல்லாம் நான்கு பக்கங்களிலும் அசையும்படிக்கு உதறுகிறது. எல்லா அவயங்களையும் தனித்தனியாக உதறுகிறது. பின் தன் உடலை நிமிர்த்துகிறது.

இவ்விடத்தில் பயங்கரம் அண்ணங்காச்சாரியார் சுவாமிகளின் வியாக்கியானம் நினைவில் கொள்ளத்தக்கது. அவர் ஆச்சரியாருக்கு உதாரணமாய் அருளிச் செய்கிறார். வேரி மயிர் பொங்க என்பதற்கு “ஸந்யாஸ்ரமம் ஸ்வீகரிக்கும் போது தலையில் மயிர் கூடாதென்று முண்டனம் பண்ணிக்கொள்வார்கள். ஸ்வாமி அப்படியில்லாமல் ”கமநீயசிகாநிவேசம்” அதாவது கனநற்சிகைமுடியும் என்று சிகாபந்தம் பொங்கி இருக்கிறார்” என்பது அவர் வியாக்கியானம்.

மேலும் ’எப்பாடும் பேர்ந்துதறி’ என்பதற்கு எம்பெருமானார் தென்னாடும் வடநாடும் உள்ள எல்லாத் திவ்யதேசங்களுக்கும் யாத்திரை சென்றதைக்காட்டுவார். ‘உதறி’ என்பதற்கு சாக்கிய, சமண, குரு, யாதவ, மதவாதிகளை உதறித்தள்ளியதை ஸ்ரீமத் மணவாள முனிகள் அருளிச் செய்த ஆர்த்திப் பிரபந்தத்திலிருந்து இவ்வாறு எடுத்துக் காட்டுவார்.

”சாறுவாக மத நீறுசெய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே

சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிறி முறித்திட

மாறுசெய்திடு கணாதவாதியர்கள் வாய்தகர்த்து அறம்மிகுத்து

\            மேல்வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராசனார்

கூறுமாகுரு மதத்தொடு ஓங்கிய குமாரிலன்

கொடியதற்கசரம் விட்டபின் குறுகி மாயவாதியரை வென்றிட

மீறிவாதில் வருவாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்துபோய்

மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெருவீர்ர் நாளும் மிக வாழியே

அமுதனார் நூற்றந்தாதியில் ‘உதறி’ என்பதற்கு “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்” என்று விளக்கம் கூறப்படுகிறது. மேலும் ’உதறி’ என்பதற்கு பயங்கரம் சுவாமிகள் “வாலி இராவணனை வாலில் கட்டிக் கொணர்ந்து கிஷ்கிந்தையிலே உதறினாற்போலே பர மத வாதிகளை உதறி என்று காட்டுவார்.

’மூரிநிமிர்ந்து’ என்பது எம்பெருமானார் நித்ய நைமித்திக கர்மானுஷ்டாங்களைச் செய்து சோம்பலை விரட்டியது காட்டப்படும். அவர் அனுஷ்டானங்களைப் பின்பற்றியதை     ”பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்து ஸந்த்யா காலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்னியருளினார்” என்று ஸ்ரீமத்ரஹஸ்யத்ரஸாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது

குகையிலிருந்து சிங்கம் முழங்கிப் புறப்பட்டு வருவது எப்படி இருக்கிறது என்றால் எம்பெருமானார் திக்விஜய யாத்திரையில் சிம்மம் போன்று முழங்கியதற்கு ஈடாக இருந்ததாம். சிங்கம் முழங்குகின்றதாம். அம்முழக்கம் கேட்ட மற்ற மிருகங்கள் தங்களிருப்பிடத்திலேயே அதாவது கிடந்த இடத்திலேயே முழுக்காயாக அவிந்து கிடந்தனாவாம். மேக முழக்கம் போன்ற அவன் முழக்கமும் எதிரிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே மண்ணுண்ணப் பண்ணுமாம். அவன் எழுந்து இவர்களைப் பார்த்து, ”ஆயர்குடிப் பெண்களே வந்தீர்களோ?” என்று முழங்குவதைக் கேட்க இப்பெண்கள் ஆவல் கொண்டார்கள். ”உன்னைக்காண்பது கண்ணுக்கு விருந்து. நீ எங்களைக்கேட்பது எம் செவிக்கு விருந்து; எனவே சிங்கம் குகையிலிருந்து புறப்படுவதைப்போலே நீ புறப்பட்டு எமக்கு அருள வேணும்” என்று வேண்டுகிறார்கள்.

இராமனையே நரசிம்மம் என்று போற்றுகிறான் சுக்ரீவன். வால்மீகி, “ந்ருசிம்ஹ ராகவா” என்கிறார். ஆஞ்சநேயன் சீதாபிராட்டியிடம், “தங்களை மீட்க என் முதுகில் ராமன் வருவான்” என்று கூறாமல் ’ந்ருஸிம்ஹாவாகமிஷ்யத’ என்கிறார். அதாவது நரசிம்மம் வருவார் என்று இராமபிரானையே நரசிம்ம்மாக கூறுகிறார்.

கண்ணன் எழுந்தான். அவர்களிடம், “பெண்களே! என்னைப்பார்த்தால் சிம்மம் போலவா தெரிகிறது? சரி நான் சிம்மம் என்றீர்களே! நான் ராகவ சிம்மமாகவா நரசிம்மமாகவா யாரைப்போல வர வேண்டும்” என்று கேட்கிறான்.

பெண்களோ, “நாங்கள் என்ன ராவணர்களா? இரணியர்களா? உன்னைச் சிம்மம் என்று ஏன் சொன்னோம் தெரியுமா? உன்னுடைய வீரம், அழகு, மேன்மை, கம்பீரம், அழகு ஆகியவற்றுக்காகச் சொன்னோம். மற்றபடி உனக்கு நிகர் ஏதும் உண்டோ? காயாம் பூ என்னும் நீலோற்ப மலரின் வண்ணம் உடையவனே! இந்த மலரின் வண்ணங்களும் உனக்குப் போலியானவைதாம்” என்கிறார்கள்.

மேகம், மலை, கடல், இருள், பூ, என்று பெருமானுக்குப் பல பொருள்களில் பூவையும் ஒன்றாக நம்மாழ்வார் அருளிசெய்வார்.

”கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்                                                      வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் -கண்டநாள்                                              காருருவம்   காண்தோறும்     நெஞ்சோடும்,   கண்ணனார்

பேருருவென் றெம்மைப் பிரிந்து”             [பெரிய திருவந்-49]

எம்பெருமானின் நிறத்திற்கு நேர் நிற்க எந்த உபமானங்களும் இல்லை. ஆண்டாள் நாச்சியாரும்,

“பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள்

வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள்

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே”

என்று அருளிச்செய்வார்.

இச்சிறுமிகள் அவனது நடையழகைப் பார்க்க விரும்புகிறார்கள். எனவே நீ எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகிறார்கள். கம்பன் இராமபிரானின் நடையழகைக் கூறுகையில் “மால்விடையும் பொன்நாகமும் நாகமும் நாண நடந்தான்” என்பார். காளை, யானை, சிங்கம், புலி ஆகியவற்றின் நடை இங்கு காட்டப்படுகிறது. காளையின் செருக்கும், யானையின் மதிப்பும், புலியின் வலிமையும், சிங்கத்தின் மேனாளிப்பும் உள்ள நடையன்றோ அது. நாச்சியார் திருமொழியில் கோளரி மாதவன் என்றும் காளை புகுதற் கனாக்கண்டேன் என்றும் ஆண்டாள் போற்றுவார்.

மேலும் கண்ணன் நடையழகைக் காண தேவலோகப் பெண்களான மேனகை, திலோத்தமை, அரம்பை, ஊர்வசி ஆகியோரே மயங்கினார்கள் என்று இப்பாசுரம் காட்டுகிறது.

”கானகம்படி உலாவி உலாவிக்

கருஞ்சிறுக்கன் குழலூதினபோது

மேனகையோடு திலோத்தமை அரம்பை

உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி

வானகம்படியில் வாய்திறப்பின்றி

ஆடல்பாடலவை மாறினர்தாமே”

அவன் நடையழகைக் கண்டாலே, “காவிமலர் நெடுங்கண்ணார் கைதொழ வீதிவருவான்” என்று கூறும்படிக்கு என்று பெண்கள் எல்லாரும் கையெடுத்துக் கும்பிடுவார்களாம்.       அப்படிப்பட்ட பெருமானிடம், ”நாங்கள் நீ படுக்கையிலே சயனக் கோலத்திலிருந்த அழகைக் கண்டு களித்து விட்டோம். இப்போது நீ நடந்து வரும் அழகையும் சீரிய சிங்கானத்தில் அமர்ந்திருக்கும் அழகையும் காண விரும்புகிறோம். என்வே உன் அரண்மனை விட்டு இங்ஙனே எழுந்தருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்கிறார்கள். “தடங்கொள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்துன் தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்” என்று நம்மாழ்வர் அருளியது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

”படுக்கையில் இருந்து சொல்லும் வார்த்தை வேண்டாம்; நடந்து சொல்லும் வார்த்தையும் வேண்டாம்; இந்த சீரிய சிங்காதனத்திலிருந்து அமர்ந்து சொல்ல வேண்டும்” என்கிறார்கள். ஏனெனில் அவன் சீரிய சிம்மம்; எனவே அதுவும் சீரிய சிங்காசாசனம். அந்த ஆசனத்திலிருக்கும்போது பொய் சொல்ல வராது. அதுதான் ஆசனத்தின் சீர்மையாகும். 16-ஆம் பாசுரத்தில் ‘நந்தகோபன் கோயில்’ என்றவர்கள் தற்போது ‘உன் கோயில்’ என்று மொழிகிறார்கள். எனவே இது இருவருக்கும் பொதுவான கோயில் என்பது புரிகிறது. ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இருவருக்கும் ஒரே உறைவிடமாய் விளங்கும் ப்ரணவம் போல் இருக்கிறதாம் அது. ‘வானவர் நாடு’ என்று போற்றப்படும் பரமபதமே ’கண்ணன் விண்’ என்றும் கூறப்படுவதைப் போன்றதாம் இது.

பயங்கரம் ஸ்வாமிகள் ’உன் கோயில்’ என்பதற்கு இராமானுஜரின் திவ்ய அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூரைக் காட்டுவார். ’எழுந்தருளி’ என்பதற்கு அவர் அத்தலம் விட்டு காஞ்சிபுரம் எழுந்தருளியதையும், திருமலைக்கு எழுந்தருளியதையும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கு எழுந்தருளியதையும், திருநாராயணபுரம் எழுந்தருளியதையும் எடுத்துச் சொல்வார். சிங்காசனம், சீரிய சிங்காசனம், கோப்புடைய சீரிய சிங்காசனம் என்று மூவகை கூறப்பட்டிருப்பதற்கு ருக், யஜுர், சாமம் எனும் மூன்று ஆசனங்களை அவர் காட்டுவார். எம்பெருமானாருக்கு ‘த்ரிவேதி’ என ஒரு திருநாமம் உண்டு என்பது இங்கு குறிபிடத்தக்கது.

”கண்ணா! நீ வந்தமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள வேண்டும்” என்று வேண்டுகிறார்கள். ஆனால் வந்த காரியம் என்ன என்பதை 29- ஆம் பாசுரமாம் ‘சிற்றஞ்சிறுகாலே’யில் கூறுகிறார்கள். ஆனால் ”கண்ணா! நாங்கள் பட்ட பாடு தெரியுமா? விடியிலிலே எழுந்திருப்பது, ஒருவரையொருவர் எழுப்புவது, வாசல் காப்போனையும் கோயில் காப்போனையும் எழுப்புவது, நந்தகோபலரை எழுப்புவது நப்பின்னைப் பிராட்டியை எழுப்புவது, பலராமரை எழுப்புவது என்றெல்லாம் படாத பாடு பட்டோம்; அவற்றையெல்லாம் நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்து விசாரித்தருள வேண்டும்” என்று இப்போது வேண்டுகிறார்கள்.

எம்பெருமான் சிங்கமாக இருந்து குற்றம் களைவார்; அதே நேரத்தில் பூவைப் பூவண்ணனாக இருந்து அருள் புரிவார் என்பது இப்பாசுரத்தில் உட்பொரு ளாக விளக்கப்படுகிறது.

இப்பாசுரம் ஸ்ரீமத்ராமானுஜருக்கு வியாக்கியானமாகக் கூறப்படுகிறது. கண்ணனுக்கு இராமானுஜன் என்று ஒரு பெயர் உண்டு. ராமர் என்றால் பலராமர். அவர் தம்பி என்பதால் கண்ணன் இராமானுஜராகிறார். முகுந்த மாலையில் “ஹே கோபாலக” என்று தொடங்கும் ஸ்லோகத்தில் “ஹேராமானுஜ” என்று கண்ணன் கூறப்படுகிறார். பூவைப்பூவண்ணா என்பது இராமானுஜர் பூவைப்போன்றவர் என்பதைக் காட்டும். அவரைச் சுற்றிச் சிஷ்யர்களாகிய வண்டுகள் சூழ்ந்திருப்பர்.

”போந்தது என் நெஞ்சு என்னும் பொன்வண்டு உனதடிப்போதில் ஒண்சீராம் தெளிதேன் உண்டமர்ந்திட வேண்டி” என்பது இராமானுச நூற்றந்தாதியாகும். மேலும் பூவைப் பூவண்ணா என்பதற்கு இராமானுஜரின் மேனி காயாம்பூவண்ண அழகுடையது என்பதைக் காட்டலாம்.

பூவைப்பூ அண்ணா என்பது ஆண்டாள் நாச்சியாருக்கு அண்ணனாகிய இராமானுஜரையே குறிப்பதாகும். “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னாளாள் வாழியே” என்பது தனியனாகும். ஆக இப்பாசுரமானது நரசிம்ம அவதாரத்தைப் போற்றுவதோடு எம்பெருமானாரையும் ஒப்பிட்டுக்காட்டுகிறது என்லாம்.

Series Navigationஅவன், அவள். அது…! 10தண்ணீரிலே தாமரைப்பூ
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

 1. Avatar
  ஷாலி says:

  திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.

  101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் கடவுள் வாழ்த்துப்பாடலில் பெருமாளைப் புகழ்ந்து பூவைப்பூ வண்ணன் என்கிறார்.

  கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
  தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
  மாயச் சகடம் உதைத்ததூஉம், – இம் மூன்றும்
  பூவைப் பூ வண்ணன் அடி.

  உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *