செந்தி கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 16 in the series 22 நவம்பர் 2015

 

 

திருமங்கலம் அருகில் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் செந்தி [ 1968 ] ‘ நினைவுகளுக்குப் பின் — ஹைக்கூ ‘ ,

‘ பிறிதொன்றான மண் ‘ போன்ற கவிதைத் தொகுதிகளுக்குப் பின் இந்த ‘ தனித்தலையும் செம்போத்து ‘ தொகுப்பைத் தந்துள்ளார். இவர்

‘ குல சாமி கதை ‘ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். இந்நூல் முதல் பதிப்பு வெளிவந்த அடுத்த ஆண்டே இரண்டாம் பதிப்பு வந்துள்ளது.

இவர் கவிதைகள் உயிர் எழுத்து , காலச்சுவடு , கொம்பு , அகநாழிகை , உயிர் மொழி , கதவு , கல்கி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

புத்தகத்தின் ‘ தனித்தலையும் செம்போத்து ‘ என்ற கவிதை யதார்த்தமும் அழகியல் பாங்கான முடிவும் கொண்டது. செம்போத்துப்

பறவையை ஆழ்ந்து நோக்கியுள்ளார் செந்தி ! அதன் நடமாட்டத்தை நன்றாகப் பதிவு செய்துள்ளார்.

பச்சை அடர்ந்த கருவேல மரங்கள் நீரில்

மூழ்கிக் கிடந்த ஏரிக்கரையில்

…… என இயற்கைச் சூழல் தெளிவாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. செம்போத்து , வழிப்போக்கனைப் போல மௌனமாக எட்டு வைப்பது ,

புளிய மரங்களின் நிழல் தாண்டி அமைதி நிலவும் பகுதியில் அலைந்து திரிவதும் சுட்டப்படுகின்றன.

முத்தய்ப்பு :

செம்பட்டை நிறைந்த அதன் இறகுகள்

அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கின்றன

குனிந்து அவைகளை எடுக்கும்

எனது விரல்களெங்கும் தனிமை உறையத்

தொடங்கியது

……. கடைசி வரி இணையில்லாமல் இருப்பதைக் கவித்துவத்துடன் தூக்கி நிறுத்துகிறது. இயற்கை நேயம் இயல்பாகப் பதிவு செய்யப்

பட்டுள்ள கவிதையிது !

‘ மகரந்த கணம் ‘ பெண் நேசத்தைப் பேசுகிறது.

இன்று என்னுடல் முழுவதும்

மகரந்தத்தூள் படிந்து கிடக்கிறது

……. கவிதையோட்டம் அதிக உரைநடைப் பாங்குடன் உள்ளது.

உறக்கமற்ற இந்த நண்பகலில்

அவளது பிஞ்சு விரல்களைச் சொடுக்கியபடிக்

கிடக்கிறன் எனது அறையில்

……… எனக் கவிதை முடிகிறது. இன்னும் இக்கவிதை கவனமாக வளர்க்கப்பட்டிருக்கலாம்.

‘ பிழை நட்பு ‘ என்ற கவிதை கனமான சொற்களைக் கொண்டது மன வேதனை சொற்களில் நிரம்பித் தளும்புகிறது.

வன்மம் தோய்ந்த உங்கள் உதடுகள்

துப்பிகின்ற வார்த்தைகளில் நிரூபணமாகின்றன

நீங்கள் எவரென்று

…….. என்பது கவிதையின் தொடக்கம். கோபத்திலும் ஒரு நல்ல படிமம் வந்து விழுகிறது.

யாந்திரீகமான உங்கள் நட்பில்

நூறு பூக்களென ஒரு பூ கூட மலர்வதில்லையே

…… என்கிறார் செந்தி !

விஷமத்தில் வெட்டுண்ட எனது

பிரியங்கள் வெளியெங்கும் சுழல்கின்றன

….. என்ற வரிகளில் நட்பு உள்வாங்கப் படாத அவலம் நயமாகச் சுட்டப்படுகிறது.

நன்றாக மகுடி வாசிக்கிறீர்கள்

…… என்ற வரி நண்பர் குழாம் என ஒரு கணிசமான நபர்களைக் குறிக்கிறது. கவிஞனின் கோபம் இங்கு கவிதையாகக் கொப்பளிக்கிறது.

‘ பஞ்சு மிட்டாய் விற்றுச் செல்பவனின் பன்னிரண்டாவது குறுக்குத் தெரு ‘ என்ற தலைப்பில் யதார்த்தக் கவிதை ஒன்று காட்சிப்

படுத்துதலோடு தொடங்குகிறது.

காற்று நிரம்பிப் புடைத்திருக்கும் பைகளில்

ரோஜா நிறத்திலிருக்கும் பஞ்சு மிட்டாய்கள்

தொங்கும்

கழியினைத் தோளில் சாய்த்தவாறு மீசை

அரும்பத் தொடங்கியிருக்கும்

முகம் கொண்ட ஒருவன்

…….. ‘ ஓரிரு தமிழ்ச் சொற்கள் பேசத் தெரிந்தவன் ‘ என்பது சிறப்படையாளமாகும்.

‘ தெருவைக் கடக்கும் நகுலன் ‘ என்ற கவிதை பூனையைப் பற்றிப் பேசுகிறது. நகுலனின் குரல் மிக மெல்லியதாக இருக்கும் என்று

கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே நகுலனோடு பூனையை ஒப்பிடுகிறார் செந்தி !

பூனையைப் பார்க்கும் போதெல்லாம்

நகுலனும்

நகுலனை நினைவிலிருக்கையில்

பூனை எதிர்படுவதும்

தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போனது

……. எனக் கவிதை முடிகிறது.

‘ நிலவினை விழுங்கியவன் ‘ என்ற கவிதை குழந்தைமை பற்றிப் பேசுகிறது

நேற்றிரவு

யானைப் பசியோடிருந்த கவின்

அவளிடம் தோசை

நிலா போலிருப்பதாகச்

சலித்துக் கொண்டான்

பருக்கைகளுள் ஒன்றாக

அவனது வயிற்றினுள்

கடக்கிறது நிலா

…….. குழந்தைமை அழகாகப் பதிவாகியுள்ளது.

 

‘ மற்றொரு பகல் மற்றோரு பறவை ‘ என்ற கவிதையில் ஒரு நுணுக்கமான பார்வை பதிவாகியுள்ளது. தண்ணீரில் நீந்திச் செல்கிறது

முக்குளிப்பான். அதை ஒருவன் பார்க்கிறான் ஒருவன்.

பொறாமையுற்ற அவன் நிழல்

அக்குளத்தில் எட்டிக் குளித்து மூழ்கத்

திராணியற்றுத் தத்தளிக்கிறது.

……. இந்த அழகியல் தடம் அடுத்த வரிகளில் மிகையுணர்வில் கவிதையை முடித்து வைக்கிறது.

அப்போது குளம்

தன்னைப் பெயர்த்துக் கொண்டு மொட்டைப்

பாறையிலிருந்து

குதித்துத் தற்கொலை செய்துகொண்டது

……. இந்த முத்தாய்ப்பு கவிதையில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

சில கவிதைகள் காமம் பற்றிப் பேசுகின்றன. இன்றுள்ள சமூக அவலங்களுள் காமம் சார்ந்த குற்றங்கள் பெண்களைச் சீரழிக்கின்றன.

எனவே வெளிப்படையான தகவல்கள் எவ்வித நற்பலங்களையும் தர வாய்ப்பில்லை.

‘ கூடு ‘ கவிதையில் இயற்கை நேசம் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது ; மிக எளிமையானது.

 

அப்பனை மரக்கூடு

குழந்தைகள் தவழ்ந்து திரியும்

வீடு போலிருக்கிறது

அக்கூட்டில் என்னைக் கிடத்தி

வாய் பிளந்து காத்திருக்கிறேன்

ஒரு கவளம் உண்பதற்காக

…….. கவிமனமும் குழந்தை மனமும் அழகாகச் சங்கமமாகியுள்ளன !

 

செந்தியின் கவிதைகளில் காணப்படும் நேர்படப் பேசும் தன்மை பாராட்டத்தக்கது. கிராமத்து அழகை சில கவிதைகளில் நிரப்பியிருக்கிறார்.

படித்து ரசிக்கலாம்.

Series Navigationதுல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்தொடுவானம் 95. இதமான பொழுது
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *