பசியாக இருக்குமோ…

author
3
0 minutes, 1 second Read
This entry is part 12 of 18 in the series 27 டிசம்பர் 2015

 

கோ. மன்றவாணன்

 

 

“மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன். நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். அவர்கள் பறித்த மாங்காய்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து இல்லத்தரசியிடம் அறிக்கை சமர்ப்பித்தேன்.

“தெண்டம் தெண்டம்… அந்தப் பசங்கள புடிக்கத் துப்பில்ல ஒங்களுக்கு. விட்டுவிட்டு வந்து கத சொல்றீங்க கத. புடிச்சுக் கட்டி வச்சிருக்க வேணாமா?” என்று வார்த்தைகளை வாரி வீசினார். வேறு யாரு? என் மகாராணியார்தான்.

“அணில் சாப்பிட்டுப்போறத ஆசையா சாப்பிடப் பறிச்சிருக்கானுவ.”

அணில் சாப்பிடலாம்ங்க. அதுக்கு அதுதான் விதி. அணில் என்ன வேலைக்குப் போயி சம்பாதிச்சு வந்தா சாப்பிட முடியும்.

“சரி விடு சின்னப் பசங்க.”

“என்ன சின்னப் பசங்க? இன்னைக்கு மாங்கா திருடுறவன் நாளைக்கு நகைநட்ட திருடுவான். இந்த மாதிரிப் பசங்கள சும்மா விடக்கூடாது”

“அதுக்கு நாம என்ன செய்றது.          சின்ன வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஏன் நானே சின்ன வயசில ஒரு வீட்டுத் தோட்டத்துல வேலியை லாவகமா விலக்கிட்டு, கைய உட்டு, பட்டு ரோஜா செடிய திருடிட்டு வந்து எங்க வீட்டுல நட்டிருக்கேன் தெரியுமா… அதனால நான் என்ன இப்ப திருடனாவா ஆயிட்டேன்?”

“அதனாலதானோ என்னவோ திருடனுக்கு ஆஜராவற வக்கீலா ஆயிட்டீங்க” என்று சொன்ன என் மனைவி, “சொரட்டுக்கோல எடுத்துக்கிட்டு என் பின்னாலேயே வாங்க” என்ற ஆணையை பிறப்பித்துவிட்டு, ஒரு சாக்குப்பையோடு மாடிக்குப் போனாள். நானும் பின்தொடா்ந்தேன்.

கைக்கு எட்டிய மாங்காய்களை என் மனைவியின் வளைக்கரம் வளைத்துப்போட்டது. வாங்கரிவாளுக்கு எட்டிய மட்டும் மாங்காய்க் காம்புகளைத் திருகி மாங்காய்களை விழச்செய்தேன். விழுந்த மாங்காய்களை நானும் என் மனைவியும் எடுத்துச் சாக்குப்பையில் நிரப்பினோம். அந்த மூட்டையைப் படியில் தேய்த்தவாறே இருவரும் சோ்ந்து இழுத்துவந்து வீட்டுக்குள் போட்டோம்.

“த்தோ பாருங்க இப்படியே விட்டா எல்லா மாங்காயையும் திருடிட்டுப் போயிடுவாங்க. யாருகிட்டயாவது விலைபேசி மரத்துல இருக்கற மாங்காய பறிச்சிட்டுப் போ சொல்லுங்க”

“எங்க போயி ஆளத் தேடறது?”

“ம்க்கும்… அதெல்லாம் நான்தான் சொல்லணும்?”

“யாராவது மொத்தமா மாங்கா பறிச்சிட்டுப் பணம்கொடுக்குற ஆளு இருந்தா சொல்லுங்க. வீட்டு மரத்துல நிறைய மாங்கா இருக்கு” என்று தெரிந்தவா்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன்.

 

***

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் வந்து பார்த்தேன்.

“மாங்கா தரீங்களா?”

“ஆமா… தர்றதுதான். யார் சொல்லி அனுப்புனது?”

“யாரும் சொல்லலீங்களே… நானாத்தான் வா்றேன்.”

“சரி என்ன வெல சொல்றே?”

“மரத்துல மாங்கா ஒண்ணும் அதிகமா இல்லீங்களே”

“அதுக்கு நான் என்ன பண்ணுவேன். இருக்குற மாங்காய பறிச்சிட்டுப் போ. சீக்கிரம் வெலய சொல்லு”

“நானூறு ரூவா தர்றன். அதுக்கே எனக்கு நஷ்டம்தான்” என்று இழுத்தார்.

“கடையில கிலோ 20 ரூபா விக்குது. நீ என்னா இவ்வளவு கம்மியா கேக்குற?”

“அது வேற மாங்காங்க. இது ஓடாது.”

“யோவ் நாங்க இந்த மாங்காயைச் சாப்பிடுறோம் அவ்வளவு டேஸ்டா இருக்கு”

“அதோ பாருங்க… மாங்காய் கருப்படிச்சிருக்கு. யாரு வாங்குவாங்க?”

“சரி என்ன சொல்றே”

“நானூறுன்னு நான் சொன்னதே அதிகங்க.”

இதைக்கேட்டபடி உள்ளே இருந்துவந்த என்மனைவி “ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டுப் பறிச்சிட்டுப் போ” என்று சொன்னார்.

என் மனைவி சொன்ன விலையைக் கேட்டு, வியாபாரி அதிர்ச்சி அடையவில்லை. நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னார்.

“ஆமாம்மா… இரண்டாயிரம்கூடக் கேளுங்க… அப்படியே விட்டுவையுங்க. அழுகித்தான் போவும். இந்த நானூறுகூடத் தேறாது.”

“நானூறுக்கெல்லாம் தர முடியாது.” என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். வியாபாரி வாசலிலே நின்றுகொண்டிருந்தார்.

“சார்… சார்…” என்று வியாபாரியின் குரல்கேட்டு மீண்டும் வெளியில் வந்தேன்.

சார்… யோசித்துச் சொல்லுங்க சார். காய் ஒண்ணும் அதிகம் தேறாதுங்க.

யோசிக்கறதுக்கு என்னய்யா இருக்கு. பத்து மூட்ட காய் வரும்.

அட நீங்க ஒண்ணு. இரண்டு மூட்ட கூட வராது. ஒன்றரை மூட்ட வர்றதே ரொம்ப பெரிசு

நான் ஒன்றும் பேசவில்லை. அவரே பேசினார்.

“சார்… ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நானூத்தைம்பது ரூவா தர்றேன்.”

“வேணாம் வேணாம் நீ கிளம்பு. ஊங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு நெறய வேல இருக்கு.”

அப்படியும் அவர் விடுவதாயில்லை. ஒரு வழியாக ஐநூறுக்கு முடிவானது. நூறு ரூபாய் முன்பணமாகக் கொடுத்தார். சாக்கு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிப் போனார். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார். கூடவே ஒரு பையனும் வந்தான். அவன் அவருடைய மகனாக இருக்கக் கூடும். நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. முனையில் வலைக்கூடை கொண்ட ஒரு நீண்ட வாங்கரிவாளை அவர்கள் வைத்திருந்தார்கள். அவரும் அந்தப் பையனும் மாடிக்குப் போனார்கள். “சார்… நீங்க கீழேயே இருங்க. பறிச்சிட்டு வந்து சொல்றோம்” என்றார் வியாபாரி. நானும் வீட்டுக்குள்ளே நாளிதழ் படித்துக்கொண்டிருந்தேன். மாங்காய் விழும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்தில் கீழே விழுந்த மாங்காய்களை அந்தப் பையன் பொறுக்கிச் சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான். அருகே இருந்த எலுமிச்ச மரத்தின் மீது மாங்காய் விழுந்து எலுமிச்சம் பழங்கள் வேறு கீழே விழுந்துகொண்டிருந்தன. சன்னல் வழியாக எட்டிப் பார்த்து அந்தப் பையனிடம் சொன்னேன்.

“ஏய் எலுமிச்சம் பழத்த எல்லாம் வெல பேசல்ல. அதெல்லாம் எங்ககிட்ட கொடுத்துட்டுப் போவணும்.”

“அது எங்களுக்கு எதுக்கு சார்? அத பொறுக்கி அப்படியே கொடுத்துட்டுப் போறோம்” என்று நாணயத்தைத் தம்பட்டம் அடித்தான்.

கொண்டுவந்த சாக்குப்பைகளில் பறித்த.. விழுந்த மாங்காய்களை நிரப்பினார்கள். பன்னிரண்டு மூட்டைகள் நிரம்பி, பதிமூன்றாவது மூட்டையில் பாதியளவு மாங்காய்கள் இருந்தன.

“யோவ்… ஒன்றரை மூட்டக்கூட வராதுன்னு சொன்ன… இப்ப 13 மூட்ட வா்றது.”

“சார்… ஒங்ககிட்டெல்லாம் அப்படிப் பேசினாத்தான் இறங்கி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். என் ஏமாளித்தனம் என் முகத்திலேயே எழுதி இருக்குறத அவன் படிச்சிருக்கான் போலிருக்கு என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் பிடி கொடுக்காமல்,

“13 மூட்ட மாங்கா வந்துடுச்சி. ஆயிரம் ரூபாயாய கொடுக்கணும்” என்று கண்டிப்பாகச் சொன்னேன்.

“பேசனது பேசனதுதான். ஐநூறுக்குப் பேசி முடிச்சாச்சு. இப்பக் கூட கேக்குறது ஒங்களுக்கே நல்லா இருக்கா சார்”

இதை எதிர்வீட்டுக்காரர் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு வியாபாரியிடம் மேற்கொண்டு பேசவில்லை. எப்படியாவது ஒழியுது என்று விட்டுவிட்டேன்.

டிவிஎஸ் 50ல் இரண்டிரண்டு மூட்டைகளாக வைத்துக்கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். கடைசி நடையின் போது, மீதிப் பணத்தைத் தருவார்கள் என்று வாசல்படியிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

“சார்… இந்த மூட்டையை போட்டுட்டு வந்து பைசல் பண்றோம்.”

“யோவ்… இப்பவே கொடுத்துட்டுப் போய்யா.”

“சார்… நாங்க சின்ன வியாபாரிங்க. மொத்த வியாபாரிக்கிட்ட போடுறோம். த்தோ… அரை மணிநேரத்துல பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுறோம். உங்க பணம் எங்களுக்கு எதுக்கு சார்.”

அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என்று நம்பினேன். வியாபாரி விர்ரென்று பறந்தார். பையனைக் காணவில்லை. அவன் எப்பொழுது போனான்? எப்படிப் போனான்? என்று தெரியவில்லை.

தோட்டத்தைச் சுற்றி வந்தேன். விழுந்த எலுமிச்சப் பழங்களில் ஒன்றைக்கூடக் காணோம். ஐம்பது பழங்களாவது தேறும். அவற்றையும் மூட்டையிலேயே வைத்துக் கட்டிக்கொண்டு போய்விட்டிருக்கிறார்கள். ஓஸ் பைப்பையும் காணவில்லை. அதன் மதிப்பு ஐநூறு ரூபாய் இருக்கும்.

பணம்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வியாபாரி, மூன்று மணிநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

“என்னங்க… மீதி நானூறு ரூபாய வாங்கினீங்களா?”

“கொண்டுவந்து தர்றதா சொல்லிப் போன ஆள இன்னும் காணல”

“அப்ப நாமந்தான் போங்க. அவன் அட்ரஸ கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்களே… நீங்களும் ஒரு வக்கீலு? எனக்கென்னு வந்து வாச்சீங்களே”

“அப்படியே அட்ரஸைக் கேட்டாலும், ஏமாத்த நெனக்கறவன் சரியான அட்ரஸையா சொல்லிட்டுப் போவான்?”

ஒரு வாரம் ஓடிப் போனது. மார்க்கெட்டில் எல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அப்படி ஒருவரை யாருக்கும் தெரியவில்லை.

 

***

மரத்தில் அணில்கள் கிறீச் கிறீச் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

பசியாக இருக்குமோ…

Series Navigationஞானத்தின் ஸ்தூல வடிவம்ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  valava. Duraiyan says:

  நல்ல கதை. அணில்கள் தின்ன வேண்டிய மாங்காய்களைப் பணமாக்க ஆசைப்பட்டதன் விளைவு உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்பது போல எலுமிச்சைப் பழமும் போய் பைப்பும் போனது. கதை எல்லார் வாழ்விலும் இடம் பெறக் கூடிய ஒரு சாதாரணமான ந்கழ்வு. எல்லாரும் ஒரு வகையில் யாரிடமாவத்கு ஏமார்ந்துத்கானே போகிறோம்

 2. Avatar
  எழிலன் says:

  கதை ஓட்டம் அருமை. கதையின் முடிவு மனதில் ஒரு இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்துகிறது.

 3. Avatar
  Neelakandan says:

  அருமை. நண்பர் எஸ்ஸார்சி தேக்கு மரம் வெட்டியது பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *