குமரன்
“சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைதானே சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம் தானே” என்னும் வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலசந்தரின் படைப்புகளை மனதுக்குள் படர வைத்து பத்திரப்படுத்தியிருக்கும் ரசிகர் எவருக்கும் இந்த வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். “ரயில் சினேகம்” தொலைக்காட்சித் தொடரில் வரும் வைரமுத்து எழுதிய பாடலின் வரிகள் இவை. பாலசந்தரின் படைப்புகளின் இதயம் எது? ஜீவன் எது? அந்த ஜீவன் வழியே வெளிப்படும் உணர்வுகள் எவை? அந்த உணர்வுகள் கொடுக்கும் சிந்தனைகள் எவை? அந்த சிந்தனையின் மூலம் விரியும் வாழ்வியல் பரிமாணங்கள் எவை? இவை அனைத்துக்கான பதிலும் இந்த இரண்டு வரிகளின் பொருளில் அடங்கும்.
தனி மனித ஒழுங்கு மற்றும் நெறி என்ற சமூக கட்டமைப்பிலிருந்து (தனி மனித மற்றும் சமூக பாசாங்கு?) விலகியோ முரண்பட்டோ நிற்கும் உறவுகளை, அந்த உறவுகளில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் உணர்வுகளில் வழியும் மனம் சார்ந்த நேர்மை ஒன்றின் துணை கொண்டே அத்தகைய உறவுகளும் ஒருவகை வாழ்க்கை நெறியோ அல்லது சூழ்நிலையால் நெய்யப்பட்ட காலத்தின் தறியோ என்ற சிந்தனைத் திரியை நமக்குள் கொளுத்திப் போடும் அற்புதம் அவருக்கு கை வந்த கலையாக இருந்தது. எனவே அவர் தோற்றுவித்த எண்ணற்ற பாத்திரங்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் தங்கள் சிந்தனையளவில் நேர்மையானவர்களாகவே உலா வந்தனர்.
அவரின் படைப்புகள் நெடுக ஒரு அதிசய பூச்சு உண்டு. நம் மனதை அந்தப் பூச்சின் மேல் உரசினால், அவரின் ஏதோ ஒரு படத்தில் வரும் ஏதோ ஒரு வசனத்தின் மூலம், அந்த பூச்சுகள் உதிர்ந்து, அதனடியில், ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் நமக்குள் உள்ள நம்மையே சட்டென்று வெளிச்சம் போட்டுக் காட்டும் பொழுது, அவரின் அத்தனை படங்களையும் பல முறை பார்க்கும் ஆவல் நமக்குள் பிறக்கும். அவற்றில் எங்கேனும் நாம் மறைந்திருக்கிறோமோ என்று பார்க்கும் ஆவலாகக் கூட அது இருக்கக் கூடும்… அத்தகைய ஆவல் உண்டாக்கும் திறன் அந்த அற்புதப் பூச்சுக்கு உண்டு. “மகத்தானவை” என்று எந்தெந்த உறவுகளுக்கெல்லாம், நம்பிக்கைகளுக்கெல்லாம் இந்தச் சமூகம் போலிச் சான்றிதழ் வழங்கி வைத்திருக்கிறதோ, அவற்றின் பொய்மைகளையெல்லாம் “நடு வீட்டில்” போட்டு உடைப்பதையும் அதன் மூலம் உணர்வுகள் குறித்த கேள்விகள் எழுப்புவதையும் தன் பாணியாகவே கையாண்டார் பாலசந்தர். நீர்க்குமிழி துவங்கி “அவள் ஒரு தொடர்கதை”யில் உக்கிரம் பெற்ற அந்த பாணி, “பொய்” வரை தொடர்ந்தது.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பருவத்தின் வாயிலில் இருந்த பதின்வயது மனங்களில் சிந்தனை சாளரங்களை திறந்து விடும் எண்ணற்ற கதை மாந்தர்கள் பாலசந்தரின் படைப்புகள் வழியே உலா வந்தனர். “புன்னகை” என்றொரு படம். சத்திய தர்மங்கள் சார்ந்த வாழ்க்கையின் சாத்தியங்கள் மற்றும் இழப்புகள் பற்றிய பயம், சந்தேகம், உறுதி என அனைத்தையும் நமக்குள் உருவாக்கிப் போகும் படைப்பு. அப்படத்தின் இறுதியில் வரும் வசனம் “ஒரு நடிகை கையில் காந்தி படம் போட்ட புத்தகத்தை கொடுத்துடலாம் சார். விலை போயிரும்” என்பார் நாகேஷ். எது விலை போகும்? என்ற கேள்வியை எண்ணற்ற விதங்களில் நமக்குள் விட்டுப் போகும் “புன்னகை”!
தன் படைப்பைப் பார்க்க வரும் ஒவ்வொருவரின் மனதையும், நேரத்தையும் அவர் எந்தளவு மதித்தார், என்ன கொடுக்க நினைத்தார் என்பது அவர் தனது படைப்பின் இரண்டு மணி நேரங்களில் உள்ள ஒவ்வொரு நொடியையும் எவ்வாறு கையாண்டார் என்பதில் விளங்கும். “அகர முதல் எழுத்தெல்லாம்…” என்று திரையில் ஒலிக்கத் துவங்கும் பொழுதே, நம் மனது, உழவு மாடு இறங்கிய நிலம் கணக்காய் மாறத் துவங்கி விடும்…டைட்டில் கார்டில் கூட ஏதேனும் பயனுள்ளதாக சொல்ல முடியுமா என்று பார்த்தவர் பாலசந்தர். “புவி மேலே நீ விதையானால் பூமி ஒன்றும் சுமையில்லை” என்ற “ஸ்லைடு” கொண்டுதான் வானமே எல்லை படமே துவங்கும். அவரின் எந்தவொரு பாத்திரப் படைப்பும் அர்த்தமின்றி ஒரு நிமிடம் கூட “ஃபிரேம்” உள்ளே வாராது. சிந்துபைரவி படத்தில் வரும் “பூமாலை வாங்கி வந்தான்” பாடலில் இரண்டாம் ஸ்டான்ஸாவில் வரும் வயலின் இழையை, அது தரும் உணர்வு ரேகையை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பது சான்று…கதையின் கரு அந்நொடியில் கொண்டிருக்கும் நிலையை, அந்த ஒரே காட்சியில், விற்கப்படும் காரைப் பார்த்து அழும் டிரைவர் மூலமும், அதே காரின் ஜன்னல் வழியே, அதைப்பற்றி கவலையேதுமின்றி தள்ளி அமர்ந்திருக்கும் நாயகன் மூலமும் உணர்த்தியிருப்பார் பாலசந்தர். அந்த டிரைவர் நம் மனதில் தங்கி விடுகிறார். “மனதில் உறுதி வேண்டும்” படத்தில் வரும் ஒரு ஷாட்: ”தம்பி எப்படி படிக்கிறான்” என்ற கேள்விக்கு, கடைக்குப் போயிருக்கும் தம்பி “அம்மா, முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று கோழி முட்டைகளுடன் வீட்டுக்குள் ஓடி வரும் காட்சி, “பாலசந்தர் டச்” என்ற பிரபலமான வார்த்தைப் பிரயோகத்திற்கு சாட்சி. இதற்கு பல ஆண்டுகள் முன் வந்த “இரு கோடுகள்” படத்திலேயே, அந்த “டச்” தெரியும். கதை நாயகன், இந்திப் பெண் ஒருவருடன் கொண்டிருந்த தொடர்பை மனைவி அறிந்து கொண்டு விட்டார் என்பதை “அச்சா” என்ற ஒற்றை வார்த்தையில் நிறுவியிருப்பார் பாலசந்தர்.
வறுமையின் நிறம் சிவப்பில் வரும் மாற்றுத் திறனாளி ஓவியர், வானமே எல்லையில் வரும் நிஜ வாழ்க்கை மனிதராகவே தோன்றும் ராமகிருஷ்ணன், உன்னால் முடியும் தம்பியில் வரும் மரம் வளர்க்கும் தாத்தா என, சில நிமிடங்களே வந்தாலும் நமக்குள் எத்தனையோ விதைகளை தூவிப் போனவர்கள் ஏராளம்…
பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்கள், கம்பீர ரசம் பூசிய கண்ணாடியில் பெண்மையின் பிம்பத்தை மிளிர விடுபவர்களாகவே உருவாக்கப்பட்டனர். கிராமத்துப் பெண்ணோ (அச்சமில்லை அச்சமில்லை) நகரத்து நர்ஸோ (மனதில் உறுதி வேண்டும்), அவர்கள் அனைவருமே, தனி மனித அல்லது சமூக நேர்மைகளுக்காக தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை தூக்கியெறியும் துணிவு கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டனர். அவர் காட்டிய பெண்கள், அங்கங்களை முன் வைக்காமல் தங்கள் ஆழ்மன எண்ணங்களை முன் வைத்தார்கள். அதனால் தான், சுஜாதாவும் சரிதாவும், டைட் க்ளோசப்பில், முகத்தின் தசை அசைவுகளையே உணர்வுகளின் ஊடகமாக மாற்றி நமக்குள் ஊடுருவினார்கள்… “சிந்தை தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு” எனப் பாடும் முதிர்ச்சி அவரின் நாயகிகளுக்கு இருந்தது. அரங்கேற்றத்தில் வரும் “நீங்க எல்லாருமே இப்படித்தானா” என்னும் பிரமிளா ஆண்களை சற்று நேரமேனும் தலை குனிந்து சிந்திக்க வைப்பார். “இப்படியோர் தாலாட்டு பாடவா” [அவர்கள்] என்று பாடலுக்குள் கதையையே தோய்த்து எடுக்கும் கலையை, பாலச்சந்தர், அவரின் பெண் படைப்புகள் மூலம் பல படங்களில் காண்பித்தார்…தன் கதையை மட்டும் தாலாட்டில் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை பாலச்சந்தரின் பெண் மனங்கள். தண்ணீர் தண்ணீரில் “கண்ணான பூ மகனே” என்று குழந்தையை தாலாட்டும் சரிதா, ஊர் பிரச்சனைகளையும் தாலாட்டின் வழியே சிசுக்கு புகட்டுகிறார்!
பாமரன் தலையிலும் பாரதியை ஏற்றியவர் அவர். சரஸ்வதிக்கு, பாரதியை பரிமாறாத பாலசந்தரின் படையலே இல்லை. “நல்லதோர் வீணை செய்தே”வை அவர் பரிமாணப்படுத்திய விதம் ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம்…காமெடி படத்தில் கூட தன்னுடைய சமூக பிரக்ஞையை விடாமல் பதித்தவர் அவர். “தில்லு முல்லு”வில் வரும் நேரு ஆடை விற்கும் காதி கடைக்காரர் சொல்லி விட்டுப் போகும் வரி அதற்கு ஒரு உதாரணம்…
கண்ணதாசனும் வைரமுத்துவும் பாலசந்தருக்கு மட்டுமென்று தனியே ஒரு மொழிப் பாத்திரத்தை பாதுகாத்து வந்தார்கள் போலும்! அந்தப் பாத்திரத்தில் அவர்கள் சமைத்த சொற்கள் பாலச்சந்தரால் பரிமாறப்பட்டு நாம் உண்ணும் பொழுது, செரிமானம் ஆவதற்கு வெகு நாட்கள் ஆகி விடும்! “நூல் வேலி”யில் வரும் “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” – தத்துவ சாரத்தை சுண்டக் காய்ச்சி கண்ணதாசன் கொடுத்த பாடல். அதை படமாக்கிய விதம்…தத்தளிக்கும் நான்கு மனங்கள். அந்த மனங்களின் இயல்புக்கேற்ப வரிகளுக்கு வரிகள் தாவி அவர்களிடம் மாறி மாறி காமிரா போகும். “அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைச்சு வெச்சது யாரு?” , “வாழ்க்கையின் இன்பம் நாட்களில் இல்லை” என்பது போன்ற வைரமுத்துவின் வரிகள் பாலச்சந்தரிடம் வாகாக வந்து அமர்ந்து கொண்டது.
கலைஞனை காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஆனால், சமகாலத்தை மீறிய தனி மனித மற்றும் சமூக சிக்கல்களை கூட அதன் வருங்கால வரவுக்கு முன்னரே வரைவுபடுத்தி, அதிர்ச்சிகரமான கூர் வசனங்களின் வழியே அர்த்தப்படுத்தி, ஆழமான சிந்தனைகளை ஒரு பொழுது போக்கு ஊடகத்தின் வழியாகவும் அள்ளி வழங்க முடியும் என்பதை ஆணித்தரமாக தன் ஒவ்வொரு படைப்பின் வாயிலாகவும் காட்டியவர் பாலசந்தர்.
நம் அனைவரின் வாழ்க்கை பயணத்திலும் எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்கெனவே கலந்திருக்கும் அல்லது நிகழ்வதற்காக காத்திருக்கும். அத்தகைய திருப்பங்களின் ஏதோ ஒரு முனையில் தொக்கி நிற்கும் அனுபவத்தின் துளி, பாலசந்தரின் ஏதோ ஒரு நொடி காட்சியமைப்பின் பிம்பமாக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். தனி மனித சங்கமம் தானே சமுகம்? சமூகம், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஏதுவாக உள்ள எந்த படைப்பையும் படைப்பாளியையும் காலத்தின் அறையில் பத்திரப்படுத்திக் கொள்ளும். பாலசந்தரும், அவர் நமக்கு தந்தவையும் அத்தகைய சிறப்புடையதே!
- விளக்கு விருது விழா – சி மோகன் – 9-1-2016
- குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை
- தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்
- நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது
- சிவகுமாரின் மகாபாரதம்
- ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
- தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை
- பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்
- எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)
- மௌனத்தின் பக்கங்கள்
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )
- தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.
- இன்று இடம் உண்டு
- பாம்பா? பழுதா?
- பாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி
- தொட்ட இடமெல்லாம்…..
- நித்ய சைதன்யா – கவிதைகள்