புத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )

author
0 minutes, 16 seconds Read
This entry is part 12 of 18 in the series 3 ஜனவரி 2016

jeyabaskaranஸிந்துஜா

 

நாற்பது வருஷங்களுக்கு மேலாக கவிதை எழுதி வரும்  ந. ஜயபாஸ்கரன்  ஒரு பிழைக்கத் தெரியாத மனுஷன் .

இல்லையென்றால் இந்த அனுபவத்துக்கு ஒரு பட்டம் , பதவி , விழாக் கொண்டாட்டம் என்று  ஏதாவதொன்றுக்கு

மாலை போட்டுக் கொண்டு இருக்க வேண்டாமா ? பிடிக்கிறதுதான் பிடிக்கிறார், ஒரு வலிய  குழுவைச் சார்ந்த அல்லது குழுத் தலையாய்

இருக்கிற ஆசாமியைப் பிடிக்க வேண்டாமா ? போயும் , போயும் இவருக்கு நகுலனும் , நாஞ்சில் நாடனும்தானா கிடைக்க வேண்டும் ? சரி , அதை விடலாம் . சின்னதாக அல்லது பெரிதாக  சில திருட்டுக் கவிதைகள்  எழுதியாவது பேர் எடுக்கத் தெரிந்ததா ? கவிதைகளுக்கு முன்பே , தும்பிக்கை மாதிரி,  ‘இவரிடமிருந்து பெற்றது ,  ‘இதிலிருந்து எடுத்தது’ என்று முதலில் வாக்குமூலமும் அப்புறம் கவிதையும் வருகின்றன. அதுதான் சொல்லிவிட்டேனே , ஒன்றுக்கும் லாயக்கில்லாத மனுஷன் .

 

சரி , கவிதைகளுக்கு வருவோம் . ” அர்த்தநாரி , அவன் , அவள் ” , 71  கவிதைகள் அடங்கிய தொகுப்பு . இக் கவிதைகள் காணும் உலகம்தான் என்ன ?

 

சங்கக் கவிதைகளின் குரல் தணிவு , சொல்லாமல் விடப்பட்ட மீதம் , ஆண்டாள் கவிதையின் அலறல் தவிர்த்த வலி , காரைக்கால் அம்மையாரின் ஈம பூமித் தனிமை ,எமிலி டிக்கின்ஸனின் நித்திய  , அநித்திய அகச் சிக்கல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவரின் கவிதைகள் இவை. முன்னுரை  அளிக்கும் நகுலன் இக் கவிதைத் தொகுதியை ,  ” முதன் முதலாகத் தமிழில் கவிஞன் தன் மூல ஆதாரத்தைத் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி “யாகக் காண்கிறார் .

 

பல கவிதைகள் கவிஞர்,  எமிலி டிக்கின்ஸன் மீது கொண்டிருக்கும் எல்லையற்ற பிரியத்தையும், சிநேகத்தையும் ,மயக்கத்தையும் மாய்ந்து மாய்ந்து  சொல்கின்றன .தொகுப்பின் முதல் கவிதை இவ்வாறு போகிறது :

 

தூரம்  என்பது

ஒரு

நூறு வருஷமும்

ஆயிரக் கணக்கான

மைல்களும்

மட்டு மில்லை .

 

பால்

மொழி

சாயல்

எல்லா

வற்றிலும்தான்.

 

இருந்தாலும்

மனசென்னவோ

முகம் தெரிய

முடியாத உன்னிடம்

நடுங்கி

அரற்றுகிறது .

 

இரவு பகலற்ற

எண்ண வெளி

யிடையே .

(எமிலி டிக்கின்ஸன் ( 1830-1886) பக்கம் 15 )

 

இக் கவிதையில் வெளிப்படும் எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் மீது கவிஞன் கொண்டிருக்கும் தீராப் பற்று வாசகனை உலுக்குகிறது .

எப்போதோ , எங்கோ பிறந்து , வளர்ந்து  போன ஒரு பெண் கவியின் கிட்டாத அருகாமையை எண்ணி நடுங்கி அரற்றுகிற மனது .

அவளை நினைத்து இரவு பகல் அற்ற எண்ண வெளியில் திரிகிறது . ‘அவளுடைய கவிதையின் நிரந்தர நிகழின் நிழலில், சிலவற்றில் சில கணங்கள் , பலவற்றில் பல யுகங்கள் உடன் இருப்பதாய் ‘ கவி உணருகிறார் .  (அவள் ஆகிய எமிலி டிக்கின்ஸன் – பக்கம் 17 )

 

ஜயபாஸ்கரனின்  பல கவிதைகள் மீனாக்ஷி அம்மையின்  மூன்றாம் முலை பற்றிய சரித்திரத்தை பல்வேறு நிலைகளில் வைத்துப்

பார்க்கிறது  .சரித்திரமாவது : மலையத்துவச பாண்டியனும் ,காஞ்சனமாலையும் குழந்தைப் பேறு  வேண்டி யாகம் செய்த பொழுதில் ,’ முலை  மூன்று உடையதோர் பெண்பிள்ளை ‘ வேள்விக் குண்டத்தில் தோன்றியது .அவளுக்குத் தடாதகை என்று பெயர் சூட்டப் பட்டது .அவள் அரசியாகி திசைகளை வெல்லச் சென்ற போது சிவனை எதிர் நோக்க நேர்ந்தது .’ கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது ‘என்கிறது தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரப் படலம்  ( திருவிளையாடற் புராணம் ) .

 

முளைத்து எழுந்த மூன்றாம் முலையை தடாதகை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்று ஜயபாஸ்கரன் பரிசீலிக்கும் கவிதையில் ( தடாதகையின் தனிமொழி  – பக்கம் 99) கவி மனம் காணும்

 

பொருமலும்

( இந்த இன்னொரு முலையைத் தொலைப்பதற்கு

படை திரட்டித் திசை ஜெயித்து

இமயம் வரை பயணிக்க வேண்டி இருந்திருக்கிறது )

 

நிம்மதியும்

( இனிமேல் மலையத்துவஜ பாண்டியனின் திகிலும்

காஞ்சனமாலையின் கலவரமும் தீர்ந்து போகலாம் )

 

பரிவும் அல்லது இரக்கமும்

( மூன்றாம் முலை தணித்த முக்கண் சிவனுக்கு

தகிப்பதற்கும் சுகிப்பதற்கும் இருக்கிறது இனியும் )

 

எல்லாவற்றுக்கும் மேலே சுயபச்சாத்தாபமும்

(எனக்கோ எனில்,

நீண்ட பிரயாணத்தின் அயர்ச்சியும்

மூன்றாம் முலையின் இது நாள் பாரமும்

இனி  என்றும் உடன் இருக்கப் போகும் முலைத்தழும்பும்

தான்

மெய் .)

 

மிகச் சிறந்த வாசக அனுபவமாய் இருக்கிறது .

 

புராணங்களின் இருள் அடர்ந்த வனத்துக்குள் நடமாடி இளைப்பாறுவதில் சுகம் காணுபவராகக் காண்பித்துக் கொள்வதில் ஜயபாஸ்கரனுக்குப் பெரும் விருப்பம் இருக்கிறது . இதைத்  தனது உரையில் மட்டுமல்ல , சில கவிதைகளிலும் காட்டுகிறார் :

 

இரண்டாயிரம்

ஆயிரம்

நூறு

ஆண்டுப் புராதன

ஆவிகளுடன் அலைகிறேன்

என்கிற ஆதங்கமும் அலுப்பும்

உனக்கு .

 

நிகழில் பதியக்

கால்கள் இல்லை

என்கிறாய்

எனக்கு .

 

பெயர்களுடன் உனக்கும்

பழைய சாயைகளுடன் எனக்கும்

ஆன

நிழல் யுத்தத்தில்

 

ரத்தம் கக்கி

மரிக்கிறது

உறவு .

 

(  உறவுப்பாடு  – பக்கம் 110 )

 

காலம் தொலைத்த

பிரகார மண்டப

இருள் விதானங்களில்

வௌவால் வார்த்தைகளுடன் தான்

 

என் ஜீவிதம் .

 

உன் கணிப் பொறி வாழ்க்கைக்கு

மறுப்பாக

இருப்பினும் .

 

( அகாலம் – பக்கம் 108 )

 

நாவடக்கம் பற்றி வள்ளுவரைப் போல் குறுகத் தரித்த ,   சுரீலெனத்  தெறிக்கும் ஒரு கவிதை :

 

சொல்லின்

முதுகு சொடுக்கும்

நுனி விளம்பில்

நிறுத்திக் கொண்டேன்

நல்ல வேளையாக

 

பிழைத்துக் கொண்டது

உறவு

குற்றுயி ராக

வேனும் .

 

(இதற்குத் தானே  – பக்கம் பக்கம் 35 )

 

ஆனால் இம்மாதிரிக் கவிதைகள் ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் .

 

இக் கவிதைத் தொகுப்பில் மிகப் பெரும் குறுக்கீடு என்றால் அது பெரியவாச்சான் பிள்ளையில் தொடங்கி, நகுலன், தேவைகோட்டை வா. மூர்த்தி. சிவசங்கரா , சுகுமாரன் , பிரம்மராஜன், ஆத்மாநாம் , புதுமைப் பித்தன் , லா.ச .ரா ., தி. ஜானகிராமன் ,மனுஷ்ய  புத்திரன் என்று அப்படி ஒரு கூட்டம் கவிதைகளில் விழுந்து கிடக்கிறது . இது தவிர   இன்னொரு லிஸ்ட்” புராணங்கள் , பதிகங்கள் இத்யாதி  கவிதையை நோக்கிய ஒரு முனைப் படுத்தலை விலக்கப் பார்க்கின்றன . அடுத்த தொகுதியிலாவது  இப்போக்கை ஜயபாஸ்கரன் தவிர்த்து விட வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன் .

 

கடைசியாக, இத் தொகுதியில் உள்ள ” வெள்ளம் ” என்ற கவிதையைப் பற்றி . ( பக்கம் 29 ) தலைப்பு சஜ்செஸ்டிவ்வாக சொல்ல முயலுவதாக எனக்குத் தோன்றுகிறது.  ஒரு சீரிய கலைஞன் , அவன் சீரிய கலைஞனாக இருக்கும் பட்சத்தில் , தூக்கி எறியும் ,ஒரு அருவெறுக்கத்தக்க , ஒரு குற்றம் சார்ந்த செயலை இக் கவிதை கண்டனம் செய்வதற்குப் பதிலாக , கண்டிப்பதற்குப் பதிலாக ஆதரவுக் குரலை எழுப்பிப் பார்க்கிறது .

 

புத்தகம் :     அர்த்தநாரி அவன் அவள்

வெளியீடு : உயிர் எழுத்து பதிப்பகம்

9, முதல் தளம் ,

தீபம் வணிக வளாகம்

கருமண்டபம்

திருச்சி – 1

விலை:        100/-

 

 

—————————————————————————————————————-

Series Navigationமௌனத்தின் பக்கங்கள்தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *