முறையான செயலா?

This entry is part 10 of 12 in the series 10 ஜனவரி 2016

காலை இளவெயில் சூடாக ஒத்தடம் கொடுக்கச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன். சுற்றுப்புறச் சுவர் மீது ஒரு காக்கை “உள்ளே வரலாமா?” என்று கேட்பது போல் உட்கார்ந்திருந்தது. மணல் ஏற்றிய ‘டயர்’ வண்டிகள் சென்று கொண்டிருந்தன. கட்ட வண்டிகள் எனப்படும் மரச் சக்கர வண்டிகளின் காலம் முடிந்து விட்டது.
காய்கறி வியாபாரி தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனார். அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் யார் வீட்டில் மேயலாம் என்று வேவு பார்த்துக் கொண்டு சென்றன.
திடீரென ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓட்டமும் நடையுமாகச் செல்வதைப் பார்த்தேன். அவர்களைத் தொடர்ந்து இன்னும் இருபது பேர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சுவர் ஓரம் சென்றேன். “என்னங்க? எல்லாம் ஓடறீங்க?” என்று கேட்டேன்.
“எல்லாம் இடிக்கறாங்க; பெரிய பெரிய வீட்டையே சாய்க்கறாங்களாம்”
எனக்கும் என்னவென்று பார்க்கத் தோன்றியது. உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டு சென்றேன்.
நகரத்தை ஒட்டி வளர்ந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதி இது. இப்பகுதியை நகரப் பகுதியிலிருந்து ஒரு சாலை பிரிப்பது போல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சாலையை அடைந்தபோதுதான் அந்த விபரீதத்தை என்னால் உணர முடிந்தது. குஜராத் பூகம்பமும் சுனாமியும் ஏற்படுத்திய களேபரங்களைத் தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். இப்போது நேரடியாகப் பார்க்க முடிந்தது.
பெரிய பெரிய ராட்சச பொக்ரேன் இயந்திரங்கள் தங்கள் கூரிய நகங்களால் கட்டிடங்களைக் கீறி இழுத்துப் போட்டன. அவற்றின் இடிபாடுகளை வேறு ஓர் இயந்திரம் வாரி எடுத்துப் போட்டு லாரி ஒன்றின் வயிற்றை நிரப்பியது. வேறு புறத்தில் புல்டோசர் என்னும் பெரிய அரக்கன் எல்லாவற்றையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான்.
எங்கும் ஒரே கூக்குரல்கள்; இரும்பு பீரோக்கள் கட்டிட இடிபாடுகள், துணிமணிகள், மேசைகள், நாற்காலிகள், தொலக்காட்சிப்பெட்டிகள், இவற்றைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் சாதாரண மக்கள்.
”பட்டாவுல கட்டியத எப்படி இடிக்கலாம்?”
”என்னுது பட்டாதாங்க; கட்டிப் பத்து வருசமாச்சு; வாங்கும்போது மூலாதாரப் பத்திரம் வில்லங்கம் எல்லாம் பாத்துட்டுதான் வாங்கினேன்”
“அப்புறம் நீங்க கேக்க வேண்டியதுதானே?”
“யாரைப் போயி கேக்கறது? அதோ பாரு.” என்று கையைக் காட்டினார்.
“அந்த நூறு மீட்டருக்கு அப்பால இருக்கறது புறம்போக்கு” என்றார்.
”புறம்போக்கான அங்க மனைபோட்டு வித்து வீடு கட்டி இருந்தாங்க”
“அதைத்தானே இப்ப இடிச்சாங்க”
“சரி; அது நியாயம்; ஒங்களுத ஏன் இடிச்சாங்க?”
”அந்தப் புறம்போக்கு நிலத்தை ஒரு கட்சிக்காரன் மனைபோட்டு வித்துட்டான். எல்லாம் வாங்கி வீடு கட்டினாங்க; அவங்க கட்சி மாறி வேற கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. இப்ப இந்தப் பிரச்சினையைக் கிளப்பினாங்க; அதைமட்டும் இடிச்சா அரசியலாயிடும்னு நெனச்சாங்க. அதால புறவழிச்சாலை போடணும்னு பட்டாவையும் சேர்த்து எடுத்துக்கிட்டாங்களாம்; வழக்கெல்லாம் நடந்து முடிஞ்சு போச்சுங்க.” மறுபடியும் அவர் அழுவார் போல இருந்தது.
”கட்சிக்காரனைப் பழி வங்கணும்னு கண்டவங்களுக்கெல்லாம் பாதிப்பு செய்யறதா? என்று கேட்டேன் ஆறுதலாக.”
”அதான இங்க நடக்குது. தவறு செஞ்சவனுக்கு தண்டனை கொடுக்கறது நியாயம். இப்ப புற வழிச்சாலையா போடப் போறாங்க? அப்படியே போட்டாலும் இங்க வராது. எல்லாம் மோசம் போயிடுச்சு” என்றவர், திடீரென “அவன் புறம்போக்கை வித்தான்; வாங்கினவங்க பாக்காம வாங்கினாங்க; அது குத்தம்தான்; இடிக்க வேண்டியதுதான்; நா என்ன தவறு செஞ்சேன்? என் வீடு அதுவும் பட்டா நெலத்துல கட்டியத ஏன் திட்டம் போட்டு இடிக்கணும்?” என்று உரக்கக்குரல் கொடுத்துத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். படபடவென்று சத்தத்துடன் அவர் வீடு இடிபட’ஐயோ’ என்று கத்திக் கொண்டே மயக்கமானார்.
மறுபுறம் ஏறக்குறைய இருநூறு பேர் கொண்ட காவலர் பட்டாளம், சிறப்புக் காவலர் படை, பெண்காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என்று ஒரு பெரிய போராட்டக்குழுவே இயங்கிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் மாரிசாமியின் நினைவு வந்தது. அங்கிருந்து இருபது வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது. நான் அங்கே போய்ச்சேரும்போது “சீக்கிரம், சீக்கிரம்” என்று காவலர் விரட்ட அவர் தன் வீட்டுச் சாமான்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார். இன்னமும் அவர் வீட்டிற்கு ஒன்றும் ஆகவில்ல. ஆனால் எந்த நேரமும் பலியாகத் தயாராகி உள்ள ஆடு போல அந்த வீடு நின்று கொண்டிருந்தது.
லாரி புறப்பட்டுப் போன பிறகு அப்போதுதான் வந்தவன் போல் மாரிசாமியிடம் சென்றேன்.
”என்னங்க திடீர்னு?”
குரல் கேட்டுத் திரும்பியவர் ‘ஓ’ வென்று குரல் எழுப்பி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத்தொடங்கினார். எல்லாரும் எங்களைப் பார்ப்பதை உணர்ந்தேன்.
அவரை அப்படியே கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டுபோய் மரத்தடியில் நின்று கொண்டேன். அழுது முடித்தவர் கண்களைத் துடைத்துக் கொண்டு ‘நிக்க முடியலிங்க’ என்று உட்கார்ந்து விட்டார்.
”வீட்ல பசங்களாம் எங்க? என்றேன்.
“அவங்கள்ளாம் நேத்திக்கே தம்பி ஊட்டுக்குப் போய்ட்டாங்க; சாமானும் இப்ப அங்கதான் போகுது.” என்றவர் எதிரே இருந்த வீட்டைப் பார்த்து மீண்டும் அழ ஆரம்பித்தார்.
”கொஞ்சம் கொஞ்சமா கடன் வாங்கிக் கட்டின வீடுங்க; ஒவ்வொரு கல்லும் பாத்துப் பாத்து வச்சதுங்க; நாங்க என்னா தப்பு செஞ்சோம்? இப்படி ஆகும்னு நெனச்சே பாக்கலீங்க” என்றார்.
“ஏங்க நீங்க வாங்கிய மனை எல்லாம் பட்டாதான?’
“அது பெரிய கதைங்க; போன வாரம்தாம் எங்களுக்கு நெலவரமே தெரியும்”
”போன வாரமே தெரியுமா?” என்று கேட்டேன்.
“ஆமா இன்னிக்கு இடிக்க வரதா கடிதாசி கொடுத்திட்டுப் போனாங்க; எல்லாரும் எங்க வரப் போறாங்கன்னு அலட்சியமா இருந்திட்டாங்க”
மறுநாள் வகுப்பில் பாடம் கற்பிக்கையில் மாரிசாமி கேட்ட கேள்வி ஒரு பொறிபோல் படீரென வெடித்தது.
நான் என்ன தவறு செய்தேன் என்று அந்தப் பருவப் பெண் கேட்கிறாள்.
பாண்டிய மன்னனைச் சிறுவன் என எண்னி மாற்றரசர்கள் எள்ளி நகையாடினர். அவனுக்குத் திரை செலுத்தாமல் வணங்காமல் இருந்தனர். அவன் சினம் கொண்டான்; படை எடுத்தான்; வணங்காதவர் தம் நாட்டை இழந்தனர்.
இப்போது வெற்றி வாகை சூடிய மன்னன் உலா வருகிறான். இவள் வீட்டினுள்ளிருந்து மன்னனைப் பார்த்தாள். வணங்கினாள்; உருகினாள்; நெகிழ்ந்தாள்; உள்ளம் பறி கொடுத்தாள்.
அவற்றின் விளைவாய் அவளின் அழகிய மாந்தளிர் நிறம் போயிற்று. முகத்தில் குறு மறுக்கள் தோன்றின. கண்ணாடியில் முகம் பார்த்தாள். நிறத்தையும், அழகையும் மன்னன் கவர்ந்து போனதை அறிந்தாள்.
“பகையரசர் நாடு இழந்தது குற்றம் இல்லை; அவர்கள் வணங்கவில்லை; மதிக்கவில்லை. அந்தக் குற்றத்திற்கு அது பொருந்தும். ஆனால் நான் வணங்கினேனே? நானுமா என் அழகையும், நிறத்தையும் இழக்க வேண்டும்? இவற்றை மன்னன் கவர்ந்தது முறையான செயல் அல்லவே? அவர்கள் நிலத்தை இழந்து தவிக்கும் நிலைபோலா எனக்கு வர வேண்டும்?” என வருந்தினாள்.
அகத்துறையாயினும், புறத்துறையாயினும் மனம்படும் வேதனை ஒன்றுதானே?

“களியானைத் தென்னன் இளங்கோஎன்[று] எள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க——-அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்”
[முத்தொள்ளாயிரம்—36]

Series Navigationதொடுவானம் 102- பழுதற்ற படைப்பு மனித உடல்ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *