திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது

author
0 minutes, 3 seconds Read
This entry is part 16 of 22 in the series 24 ஜனவரி 2016

Ms.kunthavaiமுருகபூபதி – அவுஸ்திரேலியா

1963  இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம்  பெற்ற ஈழத்தின் குந்தவை.


அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள்  தொடர்ந்துகொண்டே இருப்பது இயல்பு.

எனது அம்மாவுக்கும் நான் மூத்த மகன் என்பதால்தானோ என்னவோ என்னைப்பற்றிய கவலைகள் அதிகம் இருந்தன. சோதிடத்தில் நம்பிக்கைகொண்டிருந்த அம்மா, எனக்காக நான் பிறந்தவுடன் கணித்து எழுதப்பட்ட சாதகக்குறிப்பை தான் சந்திக்கும் சோதிடர்களிடம் காண்பித்துக்கேட்பார்.

அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும்பொழுதும் அதனை என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச்சொன்னார். இன்றும் அது பாதுகாப்பாக இருக்கிறது. தொட்டெழுதும் பேனையால் எழுதப்பட்ட குறிப்பு.

நீர்கொழும்பில் எமது வீட்டின்  இரண்டு  அறைகளை ஒரு யாழ்ப்பாணத்து சோதிடருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்கள். அவர்  பெரும்பாலும் தனது ஊரில்தான் இருப்பார்.  எப்பொழுதாவது மனைவி , குழந்தைகளுடன் வருவார். ஒருநாள் அவரிடம் எனது சாதகக்குறிப்பைக்கொடுத்து எனது எதிர்காலப்பலன் கேட்டார்.

நான் அருகில் நின்றேன்.

அந்தச்சோதிடர் லக்கிணம், ராசி, கிரகம், சூரியன், சந்திரன், ராகு, என்றெல்லாம் ஏதேதோ சொன்னார். எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், அவர் சொன்ன இரண்டுவிடயங்களில் ஒன்று அதிர்ச்சியானது???!!!  மற்றது, மகிழ்ச்சியானது !!!???.

அந்தச் சோதிடர் வாக்கு, சுமார் 25 ஆண்டுகளின்  பின்னர் பலித்துவிட்டது. அம்மாவை அந்த அதிர்ச்சி கலக்கிவிட்டது. ஆனால், மகிழ்ச்சியான அந்தச்செய்தியின் பின்னால் எனக்கும் ஒரு கனவு இருந்தது.

” மும்மனை கட்டுவான் ” என்று அந்த சோதிடர் சொன்னதும் நடந்தது. ஆனால், எனது கனவு இன்னமும் பலிதமாகவில்லை. அதுதான்  நாற்சார்வீடு. எனக்கு தென்னிந்தியப்படங்கள் பார்க்கும்பொழுது  அதில் வரும் நாற்சார்வீடுகளின் மீது ஆழ்ந்த பார்வை இருக்கும்.

என்றைக்காவது ஒரு நாள் ஒரு  நாற்சார் வீடு அமைக்கவேண்டும் என்ற கனவு, பாரதியின் காணிநிலம் வேண்டும் என்ற கவிதைக்கனவுபோன்று  தொடருகின்றது.

——-   ——- ——-

நான் சந்திக்கபெரிதும் விரும்பியிருந்த குந்தவை  என்ற புனைபெயரில்  எழுதும் சடாட்சரதேவியை தொண்டமனாறுக்குச்சென்று, அவருடைய பழைய நாற்சார் வீட்டில் பார்த்தபோது அந்தக்கனவு மீண்டும் துளிர்த்தது.

கப்பலோட்டிய தமிழர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் மாத்திரம்தான் இருந்தார்கள் என்போம். ..சிதம்பரப்பிள்ளையவர்களினால் அந்த ஊருக்குப்பெருமை கிட்டியது.

இலங்கை வடமராட்சியிலும் முன்னர் கப்பலோட்டிய தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

இந்த கப்பலோட்டிகள் பற்றி லண்டனில் வதியும் மூத்த பத்திரிகையாளர் பாமா ராஜகோபால் எழுதிய நூல் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளது.

குந்தவையும் இலங்கையிலிருந்து கப்பலோட்டிய தமிழர்களின் பரம்பரையில் வந்தவர்தான் என்பதை இந்தப்பதிவை எழுதும் தருணத்தில்தான் அறிந்தேன். குந்தவையின் முன்னோர்கள் பயன்படுத்திய கப்பலை தரித்துவைக்கும் பாரிய நங்கூரம் ஒன்று வடமாராட்சி – வல்வெட்டித்துறை  ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது. அதனை வழங்கியவர் குந்தவை.

ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நண்பர் தெணியானுக்கு பிறந்த தினம் வரும் நாள். 2016   புத்தாண்டு பிறந்ததும்,  கடந்த 6 ஆம் திகதியும்  தொலைபேசியில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.

2013 ஆம் ஆண்டு அன்றைய தினத்தில் அவருடைய இரண்டு நூல்களையும் வெளியிட்டு,  பிறந்த தினத்தை இலக்கிய விழாவாக நடத்தவிரும்பியிருந்த ஜீவநதி ஆசிரியர்    கலாமணி பரணீதரன் அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கவருமாறு அழைத்திருந்தார்.

பல்வேறு பணிகளுக்கிடையில் அந்தப் பயணத்தில் இரண்டு நோக்கங்களுடன் வடமராட்சிக்குப் புறப்பட்டேன்.

ஒன்று தெணியான் பிறந்த தினவிழா. மற்றது குந்தவையை சந்திப்பது.    தெணியானுக்கு நான் வருவது தெரியும். ஆனால், குந்தவைக்குத் தெரியாது.

ஏற்கனவே  குந்தவையின் நீட்சி என்ற   சிறுகதையை    ஜீவநதியில் படித்துவிட்டு,  அது  ஏற்படுத்திய சலனத்தினால் அவரையும் சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்துடன் 05-01-2013 ஆம் திகதி காலை  நெல்லியடியில் இறங்கியதும், என்னை ஏற்றிச்செல்ல தனது மோட்டார் சைக்கிளுடன் வந்திருந்த பரணிதரனிடம்,  அன்றே என்னை  குந்தவையிடம் அழைத்துச்செல்லுமாறு கேட்டேன்.

ஒரு  பெரியகுடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளை  குந்தவை, நாம் அறிந்த சடாட்சரதேவி.  அஞ்சாவது பெண்பிள்ளை கெஞ்சினாலும் கிடைக்காது  என்பார்கள்.  அதில் ஏதோ   நம்பிக்கை இருக்கிறதோ தெரியவில்லை.  ஆனால், ஒன்பதாவது பிள்ளையாக பெண் கிடைத்தால்  என்ன சொல்வார்கள் எமது முன்னோர்கள்…?

தொண்டமனாறில் தனது ஆரம்பக்கல்வியையும் இராமநாதன் கல்லூரியில்  இடை நிலைக்கல்வியையும் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாகி, ஆசிரியப்பணி மேற்கொண்டு  ஓய்வுபெற்றிருக்கும் சடாட்சரதேவிக்கு குந்தவை என்ற பெயர்  ராஜராஜசோழன் குடும்பத்திலிருந்து கிடைத்ததோ தெரியவில்லை.    இந்தக்குந்தவையும் ஒளவையாரைப் போன்று தனித்தவர்தான்.

முற்காலத்தில் அரண்மனைகள் அமைக்கப்பட்டதன், பின்னர் உருவான    நாற்சார் வீடுகள் போன்ற குடிமனைகளின் தோற்றத்தில் தொண்டமனாறில் சரித்திர நாயகியின் பெயர்கொண்ட எழுத்தாளர் குந்தவை  குடியிருக்கும் இல்லத்திற்கு பரணிதரன் அன்று மதியம் அழைத்துச்சென்றார்.

அண்மையில் தமிழகத்தில் மறைந்த சார்வாகன் போன்று,  ஈழத்து இலக்கிய உலகில் குறைந்த எண்ணிக்கையில் சிறுகதைகள் படைத்திருக்கும் குந்தவை, தேர்ந்த வாசகர்கள்,  விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதற்கு  அவருடை  கதைகளின் கருவும் படைப்புமொழியும்தான்  காரணம்.

ஆனந்தவிகடனில் 1963 இல்    சிறுமைகண்டு பொங்குவாய் என்ற சிறுகதையை    எழுதியிருக்கிறார். அது முக்கியமான அங்கீகாரம்.

இச்சிறுகதையின் பின்னணியில், இலங்கைப்பல்கலைக்கழகம் ஒன்றில் 1960 களில் நடந்த ஒரு உண்மைச்சம்பவம் இருக்கிறது என்ற தகவலும் இந்தப்பதிவை நான் எழுதியவேளையில் தெரியவந்தது. ஆயினும், அதனை ஊர்ஜிதப்படுத்துவதற்கு முடியவில்லை.

குந்தவை அந்நாளிலேயே வாழ்வின் தரிசனங்களை  தனது கதைகளில் எழுதத்தொடங்கிவிட்டார் என்பது  மாத்திரம் தெரிகிறது.

அக்காலப்பகுதியில் ஈழத்தவர் படைப்புகளை  சரஸ்வதியும், தாமரையும்தான்  வெளியிட்டிருக்கின்றன.

இவருடைய பெயர்வு சிறுகதையை  ஏ.ஜே.கனகரத்தினா ஆங்கிலத்தில்    மொழிபெயர்த்திருக்கிறார்.    இந்தக்கதை போர்க்காலத்தில்    இடம்பெயர்ந்து    அவதியுறும் மக்களையும் பசியில் வாடும்    குழந்தைகளைப்பற்றியதுமாகும்.    இதனை நாடக வடிவமாக்கிய  லண்டனில் வதியும் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியர்  தங்களின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் ஊடாக அய்ரோப்பிய நாடுகளில்  மேடையேற்றினர்.

ஈழத்துச் சிறுகதையொன்று அய்ரோப்பாவில் மேடையேறியதற்கு அதன்  சர்வதேசத்தன்மையே காரணம். அகதி வாழ்வில் குழந்தைகள்  எதிர்கொள்ளும் நெருக்கடிகள், ஈழத்து தமிழ் அகதிகளின்  கதை  மட்டுமல்ல.  பாலஸ்தீனிய, அல்பேனிய, சோமாலிய, சிரியா அகதிகளுக்கும் பொதுவானதுதான். இலங்கையில் தொண்டமனாறு என்ற ஒரு புறநகர்பிரதேசத்தை வாழ்விடமாகக்கொண்டிருப்பவரிடம் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த கதையொன்று  உருவானதற்கு  போர்க்காலச்சூழல் காரணமாக இருக்கலாம்.  ஆனால், வெளிநாட்டில் குந்தவையின் படைப்புக்குக்கிட்டிய  அங்கீகாரம் ஒரு பேறுதான்.

ஆனால், இந்தத்தகவல் அவருக்கு காலம் கடந்துதான் தெரியவந்திருக்கிறது.

நாடகத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தாம் தெரிவுசெய்யும் மற்றவர்களின் கதை பற்றி உரியமுறையில் சொல்லி அனுமதிபெறும் மரபு எம்மவர்களிடம் இல்லை.

ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்,  கோமல் சாமிநாதனின் தண்ணீர்,  உட்பட பல கதைகள் இலங்கையில் இவ்வாறு முன் அனுமதிபெறாமல் மேடையேறியிருக்கின்றன. அதனால் இளங்கீரன் தமது  வானொலி நாடகங்களை நூலாகத்தொகுத்து அச்சிட்டவேளையில், அவற்றை மேடையேற்றவிரும்புவோர் தம்மிடம்  அனுமதி கோரவேண்டும் என அந்நூலில் பதிவுசெய்தார்.

இன்று இளங்கீரனும் இல்லை.  தொலைக்காட்சி நாடகங்களில் மோகங்கொண்டுள்ளவர்களினால் சமகாலத்தில் மேடை நாடகங்களுக்கும் வரவேற்பும் இல்லை.

இந்திரா பார்த்தசாரதியின் மழை, குந்தவையின் பெயர்வு முதலானவற்றை  லண்டன் அவைக்காற்று கலைக்கழகத்தினர் அவர்களிடம்  அனுமதியின்றியே மேடையேற்றினர். மேடையேற்றிய பின்னரும் தகவல் தெரிவிக்க ஏனோ  மறந்தனர்.

காலம் கடந்து, இந்திரா பார்த்தசாரதி அமெரிக்க சென்ற சமயத்தில் அவரை  அழைத்து அவர் முன்னிலையில் மீண்டும் மேடையேற்றினார்கள்.

ஆனால் , அத்தகைய ஒரு சந்தர்ப்பம் குந்தவைக்கு கிடைக்கவில்லை.  அதனால் குந்தவை கவலைப்படவும் இல்லை. தனக்கு – தனது கதை  நாடகமாகியது தெரியாது என்று மாத்திரம் ஊடறு இதழ் நேர்காணலில் சொல்லியிருந்தார்.

இதுவரையில் யோகம் இருக்கிறது என்ற  ஒரே ஒரு தொகுதியைத்தான் வரவாக்கியிருக்கிறார்.

ஆனந்தவிகடன், கணையாழி, அலை, சரிநிகர், மூன்றாவது மனிதன், சக்தி  ஆகிய இதழ்களில்தான் இவருடைய கதைகள் வெளியாகியிருக்கின்றன.    அதனால் பரவலான வாசிப்புக்கு அவர் தெரியவில்லை.    தேர்ந்த வாசகர்களின் கவனத்திற்குள்ளானார்.

ஜீவநதியில்  குந்தவையின் சிறுகதை நீட்சியை  படித்ததும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மௌனத்தில் கரைந்தேன்.    அச்சிறுகதை எனக்குள்  ஏற்படுத்திய அதிர்வுகளை  கட்டுப்படுத்திக்கொள்ளவே அந்த மௌனம்.

மௌனம்  களைந்ததும் ஜீவநதி ஆசிரியர் பரணீதரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குந்தவை எங்கே இருக்கிறார்…? அவருடன் உரையாடி வாழ்த்துக்கூற விரும்புகின்றேன்” எனச்சொன்னேன்.

“ ஏன்…சேர்..?”

“ உங்கள் ஜீவநதியில் வெளியான குந்தவையின் நீட்சி சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவருடன் தொடர்புகொண்டு உரையாடவிரும்புகின்றேன். தொலைபேசி இலக்கம் தாருங்கள்” என்றேன்.

மறுமுனையில் சில கணங்கள் மௌனம். “ சேர்…உங்கள் வாழ்த்துக்களை அவரை நேரில் சந்தித்து சொல்கின்றேன். ஆனால், நீங்கள்  தொலைபேசியில் உரையாடுவது சற்று சிரமம். வாருங்கள் அவரது  இருப்பிடத்திற்கே அழைத்துச்செல்கிறேன்.” என்றார்.

இந்த உரையாடல் நடந்தபோது அவுஸ்திரேலியாவில் நின்றேன். குறிப்பிட்ட  சிறுகதை பற்றி இந்தப்பத்தியில் நான் எதனையும் சொல்லமாட்டேன்.    இதனைப்படிக்கின்றவர்கள் குறிப்பிட்ட சிறுகதை வெளியான  ஜீவநதி இதழை தேடி எடுத்துப்படித்தால் அதுவே எனக்கு மனநிறைவுதரும்.

அவுஸ்திரேலியாவில்  வதியும் இலக்கிய நண்பர்கள் மற்றும் இலக்கிய  ஆர்வமுள்ள சகோதரிகளிடம் அச்சிறுகதை பற்றி சிலாகித்தேன்.  அவர்களில் சிலர் படித்துவிட்டு, “ஆமாம். சமகாலத்தில்  தரமான நல்ல சிறுகதை” என்றார்கள்.    அந்த  இதழின் பிரதி யாரிடம் இருக்கிறது…? என்பதையும் தற்பொழுது மறந்துவிட்டேன்.

தொண்டமனாறில் செல்வச்சந்நிதி கேயிலுக்கு அருகாமையால் செல்லும் வீதியில் இறங்கி சிறிது தூரம் சென்று,  அந்த நாற்சார் இல்லத்தின்  முன்றலில் நிற்கின்றோம். குந்தவை  வசிக்கும் அந்த இல்லத்தின் சுற்றுப்புறம் சரியான கவனிப்பும் பராமரிப்புமின்றி தனிஅழகோடு காட்சி அளிக்கிறது. அந்த நாற்சார் இல்லத்தில் முன்பு  வாழ்ந்தவர்கள் நன்றாக செழிப்போடு வாழ்ந்திருக்கவேண்டும்.

முற்றத்திலிருந்து  குரல் கொடுத்தோம்.

அம்மாஅம்மா…”

எமது குரல்கேட்டு  அயல்வீட்டுப்பெண்தான் வெளியே வந்து, “ ரீச்சர் உள்ளேதான்   இருக்கிறாங்க… அவுங்களுக்கு கொஞ்சம் சுகமில்iலை… மீண்டும் கூப்பிட்டுப்பாருங்க…” எனச்சொல்லிவிட்டு  அகன்றார்.

இப்போது    உரத்த  குரலில் அழைத்தோம்.

“அம்மா…அம்மா..”

“ வாரன்…வாரன்…” உள்ளிருந்து குரல் வந்தது.

“ சேர்…. அது குந்தவையின் குரல்தான். வந்து இருங்கள்.” என்றார் பரணி.   விறாந்தாவில்  அமர்ந்தோம்.

“ யார்…?”    எனக்கேட்டவாறு வெளியே வந்தவரை, “ சேர்… இவர்தான் குந்தவை.    நீங்கள் பார்க்கவிரும்பிய படைப்பாளி.”  என்றார் பரணி.

கண்களை  இடுக்கியவாறு “ யார்…தம்பி … பரணியா…? யார்…வந்திருப்பது?” எனக்கேட்டவரின் அருகில் சென்று  என்னை அறிமுகப்படுத்தினேன்.

அவரது  தோற்றம் என்னை அதிர்வுகலந்த வியப்பில் ஆழ்த்தியது.

பலவருடங்களுக்கு  முன்னர் குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்தியையும் அளவெட்டியில் அ.செ. முருகானந்தனையும் நேரில்  சந்தித்தபோதிருந்த உணர்வுகளையும் மீறியதாக அக்கணங்கள் என்னை  வெகுவாகப்பாதித்தது. செவிப்புலன், கட்புலன் பாதிப்புக்குள்ளாகியிருந்தபோதிலும் தொடர்ச்சியான வாசிப்பு, எழுத்தூழியம்  என வாழ்ந்துகொண்டிருக்கும் குந்தவை, சில நாட்கள் காய்ச்சலினால் அவதியுற்றதாகச் சொன்னார்.  அவரது முகத்தில் அந்தத் தாக்கம் தெரிந்தது. அந்த நடுப்பகலிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவரை,    எங்கள்    “அம்மா…அம்மா..”  குரல்தான் துயில்  எழுப்பியிருக்கிறது.

தன்னைத்தான் தேடிவந்திருக்கிறோம் என்பதறிந்து உற்சாகம் மேலிட    இலக்கியம்   பேசினார். அக்காலப்பகுதியில் வெளியான மகுடம்,    கணையாழி இதழ்களைப் படித்திருந்த அவர் கருத்துச்சொன்னார்.    அ.யேசுராசா,    பத்மநாப ஐயர் உட்பட சிலரை குறிப்பிட்டார்.    தற்கால    விமர்சனங்கள்   தனிநபர்   தாக்குதலாக வெளியாவது    குறித்து    புன்முறுவலோடு    வருந்தினார்.

கோகிலா மகேந்திரன், சித்திரலேகா மௌனகுரு, அன்னலட்சுமி இராஜதுரை  முதலான சில எழுத்தாளர்களை    விசாரித்தார்.

“ஜீவநதியில்    வெளியான நீட்சி சிறுகதைதான் அவுஸ்திரேலியாவிலிருந்து உங்களை தேடிவரச்செய்தது” எனச்சொன்னபோது, ஒரு குழந்தையைப்போன்று நாணிச்சிரித்தார். தன்னைப்பற்றி  அவர் எதுவும் சொல்லவில்லை.

தனக்கிருந்த ஓர்  அண்ணன் காலமாகிவிட்டதைச்சொல்லி, சுவரில் மாட்டியிருந்த அவரின் படத்தை காண்பித்தார். அருகே எவரும் இல்லை.    சில உறவுகள் வெளிநாட்டில்.  தனிமையில் அந்த வீடும் அவரும்.

தனிமைதான் அவரது உற்ற சொந்தமோ என்று யோசித்தேன். இல்லை.    இலக்கியம் அவருடன் வாழும் சொந்தம் என்பது ஆறுதலானது.

அவரது  தோற்றமும்  அந்த நாற்சார் இல்லமும் எனது மனதில் நிறைந்திருக்கிறது.

அவரது  ஏற்கனவே வெளியான படைப்புகள் குறித்த மறுவாசிப்புகள் இலக்கியப்பரப்பில் நிகழவேண்டும். அவரை எம்மவர்கள் அவ்வப்போது  சென்று பார்த்து உரையாடவேண்டும். அவரை இலக்கிய உலகம் கனம் பண்ணவேண்டும். புதிய தலைமுறைப்படைப்பாளிகளுக்கு  குந்தவையின்    படைப்புகள் அறிமுகமாகவேண்டும்.

பெர்லினில்  வதியும் கருணாகரமூர்த்தி, தமிழ்நாடு இரா. முருகன் ஆகியோ குந்தவையின்    யோகம் இருக்கிறது தொகுப்பை மதிப்பீடு செய்துள்ளனர்.  இது ஓர் மித்ர வெளியீடு.

2013  இல் அந்தப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிரபல  மாக்சிய இலக்கிய விமர்சகர் கோவை  ஞானி அவர்களைச்சந்தித்து நீண்ட நேரம் உரையாடினேன். முற்றாக கண்பார்வை இழந்திருக்கும் அவர் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு படிக்கிறார்.    எழுதுகிறார்.    அவரது  மனைவியும் காலமாகிவிட்டார்.

அன்று  மாலைவேளை, எனது கரம்பற்றியவாறு அருகில் வீதியோரமாக  சுமார் ஒருமணிநேரம் நடந்தார். நடந்துகொண்டே இலக்கியம், அரசியல் பேசினார்.

சடுதியாக நின்று,   “ இவ்வளவு நேரம் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்… ஆனால் – ஒரு படைப்பாளிக்கே உரித்தான மேட்டிமைக்குணத்தை உங்களிடம் காணமுடியவில்லையே    முருகபூபதி. அது ஏன்..?” எனக்கேட்டார்.

அதற்கு  என்னிடம் அவர்கேட்கும் விதமான சிரிப்பு மாத்திரமே பதிலாக  வெளிப்பட்டது. வார்த்தைகளில் பதில் தெரியவில்லை .

கனகசெந்திநாதன்,  அ.செ.முருகானந்தன், குந்தவை  முதலான எளியமனிதர்களுடன்  பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தமைதான் அதற்குக் காரணமா என்ற பதில் எனக்கு அப்போது உடனடியாக வரவில்லை.

குந்தவை  பற்றி ஜீவநதியில்  (2013 இல்) சொல்லவேண்டிய கதைகள்  என்ற எனது தொடர்பத்தியில்  எழுதியிருக்கின்றேன்.

—00–

Series Navigation“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்லநெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *