இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்

This entry is part 18 of 19 in the series 7 பெப்ருவரி 2016

 

ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுப் பொங்கல் மலராக உதயகண்ணன் இலக்கிய மலர் வெளியிட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இதை ஒரு தவமாகச் செய்து வருகிறார். இந்த ஆண்டும் வெளிவந்திருக்கிறது இருவாட்சி. மொத்தம் 32 படைப்பாளிகளின் பல்வகையான படைப்புகள் கொண்ட இம்மலரை எஸ். சங்கர நாராயணன் தொகுத்தளித்துள்ளார்.

முதலில் கதைகளைப் பார்ப்போம். பாரதி கூறுவார். ”ஏடுகளில் இலக்கியத்தில் வீதியில், தெருவில், நாட்டில் காதலென்றார் களிக்கின்றார். ஆனால் வீட்டில் என்றால் வெறுக்கின்றார்”. [சொற்கள் மாறியிருக்கலாம்] இதை மையமாகக் கொண்டுள்ளது ச. சுப்பாராவின் “ஜெபான்னிஸா” எனும் சிறுகதை; முகலாயச்சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் மகள் ஜெபான்னிஸா, ஒரு மனிதன் அதுவும் அவள் காதலன் வெந்நீர் அடுப்பில் வேகும் வாடையை மறக்கமுடியாமல் இருப்பதைக் காட்டிப் பின்னோக்கு உத்தியில் கதை காட்டப்படுகிறது.

தன் ஆசை மகளைத் தன் மத சம்பிரதாயங்களை எல்லாம் மீறி கல்வி கற்பித்து அவள் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி அறிவுள்ளவளாக்குகிறார் ஔரங்கசீப். ஆனால் அவள் ஒரு சாதாரண, ஆனால் வீரம் உள்ள கவிஞனைக் காதலிப்பதைக் கண்ட அவர் மனம் பொறுக்கவில்லை. அவன் ஒளிந்து கொண்டிருக்கும் வெந்நீர் அண்டாவுக்குத் தீ மூட்டி அவனை வேக வைக்கிறார். அவனும் சத்தம் எழுப்பாமல் இறந்து போகிறான். தனக்கு மெய்க்காவல் புரியும் தன்னைச் சிறு வயது முதல் அறிந்த நியாஸ் என்பவளிடம், ஜெபான்னிஸா கேட்கிறாள்.

“அப்பா, ஏன் இப்படிச் செய்தார் நியாஸ்?”

மென்மையான குரலில், “ மகள் காதலிக்கும்போது எத்தனை நல்ல தகப்பனுக்கும் கிறுக்கு பிடித்து விடுகிறது இளவரசி” என்றாள் நியாஸ்.

இந்தக் கடைசி வரிகளில்தான் கதையின் மையம் அடங்கிக் கிடக்கிறது. இது எப்போதோ நடந்த கதை போல் தோன்றினாலும் இப்போதும் எல்லா அப்பாக்களுக்கும் பொருந்துகிறது அல்லவா? கதையில் ஜெபான்னிஸா மேல் அவள் அப்பா காட்டும் அன்பு, அவளின் அறிவு வெளிப்படும் விதம் எல்லாம் கச்சிதமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு சிறுகதைக்கான எல்லாத் தன்மைகளும் கொண்டது அறிவழகன் எழுதி உள்ள ‘வேகம்’ என்னும் கதை. வித்யாவிற்கு ஐந்து மணிக்குத் தன் காதலனைச் சந்திக்க வேண்டும். பல்வேறு தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி ஐந்தாயிடப் போகிறதே என்று அவள் அலறி அடித்துக் கொண்டு வருகிறாள். அங்கே கடற்கரையில் முன்னமே வந்து காத்துக்கொண்டிருக்கிறான் அவள் காதலன். அவனுக்கு நேரமே போகவில்லை.

இருவரும் சந்தித்த உடனே வித்யா, “எங்க அஞ்சாயிடப் போவுதுன்னு அவசரமா ஓடியாந்தேன்” என்கிறாள் அவள் காதலனோ, “இன்னும் ஐந்தாகலையேன்னு அவஸ்தைப்பட்டுக் கிடக்கேன்…….நீ என்னடான்னா” என்கிறான். கதை முடிகிறது. பாலுக்குச் சர்க்கரை இல்லை என்று வருத்தப்படுபவனுக்கும் கஞ்சிக்கு உப்பிலை என்று வருத்தப்படுபவனுக்கும் கவலை ஒன்றுதானே? அவளுக்கு மணி ஆகிவிடுமே என்று கவலை; ஆனால் அவனுக்கோ மணி ஆகவில்லையே என்ற கவலை. கதையில் இரண்டே பாத்திரங்கள்தாம். அம்மாவும் அத்தையும் ஒரு நொடிதான் வந்து போகிறார்கள். வித்யாவின் பெயர்கூட அவள் அத்தை ஒருமுறை அழைக்கும்போதுதான் வெளிப்படுகிறது. காதலனுக்குப் பெயரே இல்லை. இருவரின் மன உணர்வுகளை நன்கு படம் பிடித்து வாசகன் உணரும்படி எழுதி உள்ளார் ஆசிரியர்.

“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே” என்று இறைவனைத் தேடுவதை ஒரு திரைப்பாடலில் காட்டியிருப்பார் கண்ணதாசன். [இப்பாடல் கவி கா.மு..ஷெரிப்புடையது என்றும் சொல்லப்படுவதுண்டு.] இந்த வாக்காளர் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, போன்றவற்றுக்கெல்லாம் ஆசிரியர்கள்தாம் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். கல்விப்பணியல்லாத மற்ற பணிகள் தர வேண்டாம் என்ற ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் செவிமடுப்பதில்லை. அப்பணிகளில் ஈடுபடும் குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சிரமங்கள் சொல்லி மாளாது. அதுவும் பெண் ஆசிரியைகளுக்கு ஏற்படும் தொல்லைகள் மிக அதிகம். சில வீடுகளில் நாய்கள் இருக்கும். சில வீடுகளில் கதவைத் தட்டினாலே வந்து நாய் போல குரைப்பார்கள்.

”அலெக்சாண்டரியா விக்டோரியா” கதையில் இதையெல்லாம் அனுபவிக்கிறார் ஒரு பெண்மணி. கதையின் பெயரே அபெண்மணியின் பெயரேதான். தலைப்பு தேடாமல் இது மாதிரி பெயர் வைப்பது ஒரு வசதிதான். அவர் மக்கள்தொகைக் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்பெண்மணி ஐந்து நிமிடம் தட்டியும் திறக்காத ஒரு வீட்டின் கதவை சற்று ஓங்கித் தட்டுகிறார். உள்ளே இருந்து வந்தவர், “அறிவு கெட்ட முண்டம்; உனக்குப் புத்தி இருக்கா? எதுக்கு இப்பிடிக் கதவைப் போட்டு இடிக்கறே. உன் புருஷன் வீடா? செருப்ப எடுத்து அடிப்பேன்” என்று அவர் மனைவி பக்கத்தில் இருக்கத் திட்டுகிறார். இத்தனைக்கும் வீட்டுக்காரர் ஒரு சின்னத் திரை நடிகர்.

இதையெல்லாம் கதைசொல்லியின் வீட்டுக்குக் கணக்கெடுக்க வரும்போது அவர் சொல்லி ஆறுதல் அடைகிறார். கதைசொல்லியிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடிக்கிறார். குடித்து விட்டு “நீங்க கடவுள் மாதிரி தண்ணீர் கொடுத்து உட்காரச் சொல்லி நாற்காலி கொடுக்கறீங்க” என்கிறார். இருவரும் மற்றவரின் குடும்ப விவரங்கள் பற்றிப் பேசி முடித்ததும் அந்தப் பெண்மணி கணக்கெடுத்து முடிக்கிறார். இப்போது அலெக்சாண்டரியா விக்டோரியா சிரிக்கிறார். காரணம் கேட்கும்போது, “அதுவா சார்; கடவுளை எங்கெல்லாம் போய்த் தேடுகிறோம்…….என்று நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது” எனச் சொல்லிச் சென்றுவிடுகிறாள். கடவுள் என்பவர் எந்த ரூபத்தில் இருக்கிறார் என்பது மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. அவர் அன்பின் திருவுருவம். கருணையின் வடிவம் என்றெல்லாம் சொல்லி விளக்குவதை இக்கதை அந்த நடிகர் மற்றும் கதைசொல்லியின் நடவடிக்கைகளால் விளக்கிவிடுகிறது.

”ஏரிக்கரை நாகரிகம்” என்ற இம்மலரின் தொகுப்பாசிரியர் எஸ். சங்கர நாராயணன் கதை சில நாள்களுக்கு முன் சென்னையை மிக மோசமாகப் பாதித்த அடைமழையைப் பற்றியதாகும். தலைப்பே எள்ளலாகும். தற்போது ஏரிக்கரைகளை ஆக்கிரமிப்பதுதான் நாகரிகம் என்பதை இக்கதை சொல்லாமல் சொல்கிறது. கீழ்வீட்டில் முழுதும் தண்ணீர் புகுந்துவிட அங்கே வசித்த குடும்பத்தை மேலே உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துக் காப்பாற்றுகிறர்கள் மகேந்திரனும் அவர் மனைவி ராதிகாவும். அவள் ஒரு செய்தி வாசிப்பாளர். அவள் மறுநாள் காலை தன் மாமியாரிடம் சொல்லி முப்பது நாற்பது சப்பாத்திப் பொட்டலங்களுடன் படகில் சென்று கதியற்றோருக்குக் கடுத்து விட்டு அலுவலகம் செல்கிறாள். அலுவலகம் நுழையும் முன் அங்கு வாயிலில் இருக்கும் வாட்ச்மேனை விசாரித்து டீ குடிக்க பத்து ரூபாய் தருகிறாள். கதை முடிகிறது.

கொட்டுகின்ற மழையின் நடுவில் அவளது நிர்வாகி, “நாளைக்கு வேலைக்கு வர முடியுமா? என்று கேட்பது உண்மையில் நடந்த பதிவு. ”சென்னை அலுவலகத்தில் தண்ணீர் புகுந்தால் என்ன? நீங்களெல்லாம் பெங்களூரு சென்று அங்குள்ள நம் அலுவலகத்தில் பணி செய்யுங்கள்” என்று சொன்ன அதிகாரிகள் உண்டு. அவஸ்தைகள், மனிதநேயம் ஆகியவற்றோடு அதிகாரிகள் மனப்பாங்கினையும் காட்டும் கதை இது. கதை முடியும்போது ஒரு காகம் பற்றிச் சில வரிகள் உண்டு.

’சன்னல் மேல்கதவில் காகம் ஒன்று நடுங்கியபடி அமர்ந்திருந்தது. அதன் கூடு எங்கே இருக்கிறதோ தெரியவில்லை.”

இது காகத்தைப்பற்றிய பதிவன்று. இதைக் காகத்தின் நிலையில் ஏகப்பட்ட மனிதர்கள் இருந்ததைக் காட்டும் குறியீடாகக் கருதலாம். ஒரு படைப்பாளன் தன் காலத்திய முக்கிய நிகழ்வைத் தன் படைப்பில் பதிவு செய்ய வேண்டும். அதுதான் காலம் கடந்தாலும் நின்று வரலாறாகும். அவ்வகையில் இக்கதை முக்கியமான ஒன்றாகும்.

தொடர்கதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சைலபதியின் ‘பித்து’ இன்னும்கூட நன்றாக வந்திருக்க வேண்டிய ஒன்றாகும். எழுதிய வகையில் ஒரு நாட்டுப்புறத்தாரின் மனநிலையை நன்கு பிடித்திருக்கிறார். துறவறம் என்பது சாதாரணமான ஒன்றன்று என்பதும் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. உரையாடல்கள், தளவருணனைகள் கச்சிதமாக உள்ளன. அவன் ஏன் பைத்தியமானான் என்பதில்தான் ஒரு கதையே மறைந்திருக்கிறது. வேகாத தோசையைத் திருப்பி போட்டதுபோல் உள்ளது.

க. கதிரவனின் “காவியக் கூரை விலக்கி” எனும் கட்டுரை தொன்மங்களை புதுப் பார்வையில் பார்க்கிறது. ஆனால் இதுதான் மூல ஆசிரியரின் நோக்கம் என்று வகுத்துக் கொண்டு அதிலிருந்து பைரப்பாவும் வாசுதேவனும் பிறழ்ந்து விட்டார்கள் என்று சொல்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தொன்மங்களை எப்படியும் பார்க்க, அவற்றில் புகுந்து கட்டுடைக்க எல்லாப் படைப்பாளருக்கும் முழு உரிமை உண்டு. மற்றொன்று நூலின் தலைப்பை அப்படியே மொழிபெயர்க்க வேண்டுமென்பதில்லை. குறிஞ்சிவேலன் சூட்டி உள்ள ’இரண்டாம் இடம்’ என்பது மிகப்பொருத்தமே! பருவம் நூலை மொழிபெயர்த்த பாவண்ணன் பெயரை எங்குமே குறிப்பிடாதது ஏனோ?

சொற்கோலம் பகுதியில் உள்ள ஏழு படைப்புகளும் வாசிக்க சுவாரசியமாக இருப்பதுடன் புதிய செய்திகளையும் தெரிவிக்கின்றன. குறிப்பாக நா. விச்வநாதனின் ’இசைப்பிறவரல்’. தஞ்சாவூர் மேலவீதியில் இருந்த   ஹார்மோனியம் பழுது பார்க்கும் காசியைப் பற்றிய பதிவு முக்கியமான ஒன்று. மற்றும் எம்.டி.ராமநாதனின் குழந்தை மனம், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் சொந்த ஊருக்கு எதுவுமே செய்யாதது, வியாதி வந்தும் குரல் வளம் குன்றாத மதுரை மணி ஐயர், திருவாடுதுறை ராஜரத்தினத்தின் வித்யா கர்வம், ஜி. என் பாலசுப்ரமணியத்தின் அலங்காரம், போன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மதுரை சோமுவின் தாளம்போடும் பாணியை “ஊறுகாய் ஜாடியின் உற்சாகக் குலுங்கல்” என்று உவமிக்கும் விச்வநாதனின் நடை படிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது. சிலவற்றைச் சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும். இசை பற்றி நன்கு அறிந்துள்ளதால் இவருக்கு அது கைகூடிஉள்ளது. குன்னக்குடியின் பாணி சித்ரவதை பாணி, எம். எஸ்ஸின் முகத்தில் காணப்படும் சோகமான இறுக்கம், ராஜாஜியின் அபத்தமான ‘குறையொன்றுமில்லை’ பாடல், இறுதிக் காலத்தில் எம்.கே.டி. பாகவதர் கண்பார்வை இழந்து மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் விழுந்து கிடந்தது போன்றவற்றையெல்லாம் இவர் தெரிவிக்கையில் சுப்புடுதான் நினைவுக்கு வருகிறார்.

தலித் இலக்கியம் என்று பெயர் சொல்லிக்கொண்டு வராமல் வாழ்வில் விளிம்புக்குக் கீழே இருக்கும் மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்யும் அருமையான கதைதான் ’பொட்டுகிளாஸ்’. இது சொற்கோலமன்று. முக்கியமான சிறுகதை.

மணிராமலிங்கம் எழுதியதைப் பழக நீண்ட கடுமையான் மனப்பயிற்சி தேவை. ஆனால் அது வாய்க்கப் பெற்றால் வாழ்க்கை ஆனந்தமே. மௌனத்தின் ருசி என்பது சாதாரணமனதல்ல. அது ஒரு சிலருக்கே வாய்க்கக் கூடும்.

ஆழ்வாப்பிள்ளையின் சொற்கோலம் கூட நல்ல சிறுகதைதான். கிராமத்தில் நலிந்த பிரிவான சின்னத்துரையை யார் என்ன செய்தாலும் கேட்கப் போவதில்லை. அவன் காணாமல் போனது ஒரு புதிர்தான்; கதையில் கள்ளத் தொடர்பு காரணமாக பிஞ்சு மனம் ஒன்றுமே தெரியாமல் காத்திருப்பது; கதைக்குள் வரும் இன்னுமொரு கதைசொல்லி என்று வரும் பார்வதியக்கா என கதையை நகர்த்த ஆழ்வாப்பிள்ளைக்குப் பலவித காரணிகள் நன்கு உதவி செய்துள்ளன.

மோனார்க் பூச்சிகள் பற்றிய சொற்கோலம் இதுவரை அறியாத பல செய்திகளைத் தெரிவிக்கிறது. ஓர் உயிரியல் கட்டுரையை எளிய இலகுவான நடையில் எழுதி உள்ளார் கிருஷ்ணன் ரஞ்சனா. 4000 கி.மீ கூடப்பறந்து சென்று தான் புழுவாகி வெளிவந்த இடத்திற்கே பறந்து சென்று முட்டையிடும் என்பது வியப்பான செய்திதான். மழைக்காலத்தில் அன்றாடம் காணும் ஒருவகை பட்டாம்பூச்சிதான் இது.

அதேபோல நீலத்தாமரை பற்றிப் பல செய்திகள் உள்ள சொற்கோலத்தைப் பத்மலக்ஷ்மி தந்துள்ளார். வேதம், இதிகாசம், புராணம், மேல்நாட்டாய்வு, போன்ற பல தரவுகளைப் புள்ளிகளாக வைத்துத் தன் சொற்கோலத்தை வரைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து 5 மைல் தொலைவில் இருக்கும் புஷ்கர் ஏரியில் முன்பு காடுபோல் இருந்த மலர்கள் இப்போது ஒன்று கூட இல்லை. ஐ.நாவும் நீலத்தாமரையை அழிவிலிருக்கும் பட்டியலில் சேர்த்து விட்டதாம்.

ஜவகர்லாலின் சொற்கோலம் சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.

கவிதைகளில் ராகவப்பிரியனின் ’நெருப்பு வித்தை’ மனத்தில் படிகிறது. நாம் பல பேருந்து நிலையங்களில் பார்க்கும் காட்சிதான் அது. கடைசியில் வாயால் ஊதப்படும் நெருப்பைவிட அவன் வயிற்றின் பசி நெருப்புதான் அவனைச் சுட்டது என்பதும் அவன் குழந்தைக்குக் கூட அவன் பீடிப்புகையின் வாசம் பிடித்திருந்தது; இப்போதே அது புகைக்குப் பழகுகிறது என்பதுவும் நல்ல நயம்.

சுப்ராவின் கவிதையில் அணில்கள் கேட்கும் கேள்வி மிக்க முக்கியமானது என்பதை விட அதுவே அவரைக் கவிதை எழுதத் தூண்டியிருக்கிறது என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.

வீதியில் ஒரு பால்காரனின் வண்டி கீழே விழுந்து பாலெல்லாம் கொட்டிப்போய் விடுகிறது. அது கூட ஒருகுடிகாரனின் மீது மோதாமலிருக்கச் சாலையை விட்டிறங்கியதால் ஏற்படுகிறது. இது யார்யாருக்கெல்லம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. என்று கவிதை எழுதிருக்கிறார் இனியன் பிரகாஷ். சமூக அக்’கறை’கள் என்ற சொல் இக்கவிதையில் முக்கியமானது.

வானவனின் கவிதை கிராமத்து வாழ்க்கைக்கும், நகர வாழ்க்கைக்கும் நடைபெறும் மோதலில் நகரம் வெற்றிபெற்று கலாச்சாரம் மாறுவது காட்டப்படுகிறது. தேவகியின் ஐகூக்கள் வெறும் செய்திகளாக நிற்கின்றன.

மேலே ஏறிவிட்டவர்கள் கீழே உள்ளவர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் குறியீடாகக் காட்டும் செல்வராஜ் ஜெகதீசனின்கவிதை அருமை. சில பழையனவற்றைப் புறந்தள்ள முடியாது அன்றோ? அதுபோல்தான் அந்தக்கால நினைவும். இதுதான் மையம் துரை. நந்தகுமாரின் கவிதைக்கு. கட்டுரைகள் இரண்டுமே நன்கு உழைத்து ஆய்வு செய்து எழுதப்பட்டுச் சிறப்பாக உள்ளன.

எம்.ஜி.சுரேஷ் காட்டும் திரைப்படங்களில் “பையின் வாழ்க்கை” தவிர மற்றவை யான் அறியாதவை. அவருக்கு நன்றிகள்.

ஒரு சில நாள்களுக்கு முன்னர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆ. மாதவனின் நேர்காணலையும், அவரைப் பற்றிச் சுந்தரராமசாமி சொல்லியிருப்பதையும் தக்க நேரத்தில் அதுவும் மலரின் முதலிலேயே வெளியிட்டு அவருக்குச் சிறப்பு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது மலரைக் கடுமையாக உழைத்துத் தயாரித்துள்ள எஸ். சங்கரநாராயணனுக்கும், சிறப்பாக வெளியிட்டுள்ள உதயகண்ணனுக்கும் பாராட்டுகள்

{இருவாட்சி—பொங்கல் சிறப்பு வெளியீடு—உதயகண்ணன்—41, கல்யாண சுந்தரம் தெரு—பெரம்பூர்—சென்னை—600 011 / பக் : 208 / விலை; ரூ 150

பேச : 94446 40986 / 89393 07443}

===============================================================================

Series Navigationபிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…மெக்காவை தேடி -1
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *