மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பார்த்து மாலை அணிவித்து,வாழ்த்துகூறி, அவருடைய வாழ்த்தையும் பெற்று விடைபெற்றேன். மழை பெய்துகொண்டிருந்தது.
மதிய உணவைமுடித்து டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பனுடன் உரையாடி, ஓய்வுபெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குநர் கே.எம் இராமானுஜம் அவர்களையும் சந்தித்து திருவான்மியூர் சித்த மருத்துவர் உமாசங்கரன் அவர்களையும் சந்தித்து
இரவு 11 மணிக்கு மகன் இள்மாறன் இருக்கும் மாம்பாகம் திரும்பினேன். மழை பெய்துகொண்டிருந்தது.இரவும் மழை. பொழுது விடிந்த்தும் காலை 10 மணிக்கு என்காரில் மனைவியுடன் புறப்பட்டேன். அப்பொழுது மழையின் விளைவு எதுவும் தெரியவில்லை. டிசம்பர் 4ஆம் தேதி காலை 1.45க்கு சிங்கப்பூருக்கு விமானம் திருச்சியில். 3 தேதி இரவு திருச்சி விமான நிலையம் வரவேண்டும்.ஆகவே அனைவரிடமும் விடைபெற்று மழையைப்பற்றி எதுவும் நினைக்காமல் சிங்கப்பூர் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்டேன். மேடவாக்கம் தாம்பரம் சாலை இயல்பாக இயங்கியது. தாம்பரத்தை நெருங்கியதும் மேம்பாலத்தில் ஏறி நெடுஞ்சாலையை அடையவேண்டும்.அந்த இட்த்தில் பெரு வெள்ளம். சின்ன கார். மாருதி ஆல்டோ. என்ன செய்வது? கடந்துவிட்டால் கவலையில்லை. நெடுஞ்சாலையில் சிக்கலில்லை. வெள்ளத்தில் கார் நின்றுவிட்டால் தப்பிக்க வழியில்லை. ஆனால் பயமின்றி காரை செலுத்தினோம். நிற்காமல் சென்றுவிட்டது. முதல் கண்டம் தப்பித்தோம். தாம்பரம் திருச்சி சாலையில் இறங்கியதுதான் அப்பாடா என்று மூச்சு விட்டோம். நெடுஞ்சாலையில் வண்டி ஊர்ந்தது. காரணம் தெரியவில்லை. எதிரே வண்டிகள் வந்தவண்ணம் இருந்தன. யாரையும் கேட்க முடியவில்லை. மழை பெய்துகொண்டே இருக்கிறது.சுமார் நான்கு மணிநேரம் கழித்து ஒருதகவல். சிங்கப்பெருமாள் கோவில் எனும் இடத்தில் வெள்ளம் சாலையில். வண்டிபோகாது. ஊரப்பாக்கம் ஏறி உடைத்துக்கொண்டது. வண்டலூர்வரைதான் போகமுடியும்.மாலை ஆறுமணியளவில் வண்டலூரை நெருங்கினோம். எட்டுமணி நேரம் காருக்குள்.வண்டலூரில் திரும்பும் இடத்தில் மீண்டும் வெள்ளம். வழிகாட்டுதலோடு திரும்பினோம். மகன் வீட்டுக்கு போகலாம் என்றால் நாங்கள் சந்தித்த வெள்ளப்பெருக்கு நினைவுக்கு வந்தது. அதனால் எங்காவுது விடுதியில் தங்கிவிடலாம் என்று எண்ணினோம். ஆனால் தாம்பரம் சாலையிலேயே வெள்ளம். உங்கள் வண்டி போகாது என்றார்கள். இளைஞர்கள் வேறுவழியைக்காட்டினார்கள். ஒரு ஆட்டோ போனது. அதன்பின் நாங்களும் போனோம். மீண்டும் பெரு வெள்ளம். பாதி கார் மூழ்கும் அளவுக்கு ஓடியது. இங்கேயும் சிக்கல். கடந்துவிட்டால் சாலையிலேயே வ்ண்டியை நிறுத்திவிடலாம். விடுதியில் தங்கலாம் என்பது திட்டம்.கார்நின்றுவிட்டால் வெள்ளம் புகுந்துவிடும். தப்பிக்க முடியாது. என்ன செய்வது. மீண்டும் மரணதைரியத்தில் காரைச்செலுத்தினோம். அப்போது குறுக்கே இன்னோவா கார் வந்துவிட்டது.அதையும் சமாளித்து உயிரை கையில்பிடித்துக்கொண்டு கடந்தோம்.அப்புறம்தான் மூச்சுவிட்டோம். இந்த இடம் குரோம்பேட்டை.இனி இந்த மரண விளையாட்டு தேவையில்லை எனமுடிவெடுத்து விடுதியில் அறை கேட்டால் 5ஆயிரம் ஏழாயிரம் கேட்டார்கள். பரவாயில்லை என்று பார்த்தால் அறைகிடைக்கவில்லை. தேநீர் அருந்தினோம். மகன் இளமாறன் கவலையில். அம்மாவிடம் அழுகிறான்.அசோக்நகரில் அண்ணன் மகள் வீட்டின் கீழ் வெள்ளம்.என் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. மழை தொடர்கிறது. காருக்குள் தங்கிவிடுவதென முடிவெடுத்தோம்.டீக்கடை தம்பிகள் அதிகாலை 2.30க்கு மூடி காலை 5 மணிக்கு டீ கடையைத்திறந்தார்கள். காருக்குள்ளேயே தூங்கினோம். விழித்தது 5மணி. இன்று டிசம்பர் 2 நாள்.இதுவரை 19 மணி நேரம். 7.30 க்கு நகருக்குள் போய்விட்டால் பெரிய விடுதிகளில் தங்கலாம் என்ற யோசனை. கிண்டியில் வெள்ளம் என்றார்கள் . வண்டிபோகலாம் என்றார்கள். உடனே புறப்பட்டோம். விமான நிலையத்தில் தங்கலாம் என்றும் இரவு எண்ணியதுண்டு. போகும் வழில்யில் வெள்ளம் இல்லை. எனவே வேளச்சேரி வழியாக மாம்பாக்கம் போய்விடலாம் என்று எண்ணி சைதாப்பேட்டை பாலம்வரை வந்து ஒருவழிச்சாலையில் திரும்பி வேளச்சேரி போகும்போது எங்களை நிறுத்திவிட்டார்கள். உங்கள் கார் போகாதென்றார்கள். உடனே திரும்பினோம் சைதாப்பேட்டை பாலம் வந்ததும் பாலத்திற்குமேல் த்ண்ணீர் போகிறது. செம்பரப்பாக்கம் ஏரியை திறந்துவிட்டார்கள். 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. பெரும் சேதம் நிகழப்போகிறது என்றார்கள். உடனே திரும்பினோம். மீண்டும் ஒருவழிச்சாலையில் வந்து எம்ஜியார் பல்கலைக்கழகத்தின் அருகில்நிறுத்திவிட்டார்கள். வண்டிபோகாதென்றார்கள்.சென்னையே அழியப்போகிறது செம்பரப்பாக்கம் ஏரியால் என்றார்கள். நேரம் ஆகாஅக வெள்ளம் கூடிக்கொண்டே இருந்தது. நாங்கள் பின்னோக்கி நகர்ந்தோம். இப்பொழுது நேரம் மாலை 4மணி. ஆக 30 மணிநேரம் காருக்க்குள். ஒரு இளைஞன் அருகில் வந்தான். எங்கே போகவேண்டும் என்று கேட்டான். குரோம்பேட்டை.வண்டியை எடுங்கள். வேளச்சேரி சாலையில் வண்டிக்காரன் தெருவழியாக சென்று கிண்டி மேம்பாலத்தை அடையுங்கள். அங்கிருந்து போய்விடலாம். அங்கே தண்ணீர் இல்லை. வண்டிகாரன் சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீர்தான். பயப்படவேண்டாம். முழங்கால் அளவுதான் இருக்கிறது. உங்க வண்டி போகும் என்றான். இதற்கிடையில் மகன் கலைக்கோவன் அமெரிகாவிலிருந்து அழைத்தான். அவனுடைய நண்பன் தனபால் வீட்டில் தங்கலாம் என்றான். தனபாலும் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தார்.தன்பால் இருக்கும் இடம் குரோம்பேட்டை. அந்த இளைஞன் சொன்னபடி வண்டிய எடுத்தோம். வழியில் காவலர் வழிகாட்டினார். ஆனால் கேட்காமல் அந்த இளைஞன் சொன்ன வழியிலேயே சென்றோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வெள்ளம்தான். ஆனால் கிண்டிபாலத்தில் போக முடியாது. அங்கே வெள்ளம் என்றார்கள். என்ன செய்வது எங்கே நிற்பது? இதற்கிடையே கடற்கரையிலிருந்து படகுகள் வந்தவண்ணம் இருந்தன. ஸ்பிக் அலுவலக்ம், செல்லம்மாள் கல்லூரியெல்லாம் வெள்ளத்தில் என்றார்கள். நாங்கள் உள்ளே நுழையும்போது வெள்ளமில்லை. காரை அங்கேயே போட்டுவிட்டு செல்ல முடிவெடுத்திருந்தோம். அந்தப்பையன் வழிகாட்டியதால் சென்றோம். இப்போது இங்கே வெள்ளம். வந்தவழியிலேயே திரும்பினோம். எந்த வழியும் தெரியாது. இது யாருக்கும் தெரியாத பகுதி. ஒருவர் வழிசொன்னார். இப்படியே போங்கள் என்றார். அப்படியே சென்றோம். வெள்ளமில்லை. குரோம்பேட்டை வந்தடைந்தோம். தனபால் முகவரியில் வந்து நின்றோம். தனபால் காத்திருந்தார். மணி மாலை 6. இதுவரை காரில் 32 மணிநேரம். அதே ஆடை. உணவில்லை. கடைத்தெருவுக்குச்சென்று திண்பதற்கு அதாவது கொரிப்பதற்கு வாங்கிவந்தோம். இரவு சூடாக இட்லி செய்து கொடுத்தார்கள். அதிகம் சாப்பிடவில்லை. சாப்பாடு உணர்வில்லை. பசியில்லை. தொலைக்காட்சியில் நேரத்தைத்தொலைத்தோம். 32 மஃணிநேரம் காருக்குள்ளேயே இருந்தது என் மனைவிதான். நானும் ஓட்டுநரும் கொஞ்சம் வெளியில் நின்றிருக்கிறோம்.தந்தி தொலைக்காட்சி உடனுக்கு உடன் வியாபார நோக்கமில்லமல் செய்திகளைத்தந்து மக்களுக்கு உதவியது. பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன். காலையில் விழித்து பல்விளக்கி காலை உணவை வாங்கிவந்து சாப்பிட்டோம். இன்று டிசம்பர் 3ஆம் நாள். மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனாலும் ரமணன் அறிக்கை நம்பிக்கையைத்தரவில்லை. தனபாலுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. தனபால் குடும்பத்தின் உதவியை மறக்கமுடியாது. தொலைக்காட்சியில் திடீரென்று திருச்சி விழுப்புரம் சாலை போக்குவரத்திற்குத் தயார் என்று வந்தது. உடனே புறப்படத்தயாரானோம். ஆனாலும் சந்தேகம். காவலரை அணுகி விபரம்கேட்டோம். கேட்டுச்சொல்கிறேன் என்றார். அவர் தந்த தகவல்படி பிற்பகல் 2.30க்குப்புறப்பட்டோம்.மனைவியை அங்கேயே விட்டுவிட்டு மகன் இளமாறனிடம் தகவலைச்சொல்லி மழை விட்ட்தும் ஆபத்தில்லை என்பதறிந்து வந்து அம்மாவை அழைத்துச்செல் என்றேன். வழியில் ஏரிகளின் காட்சி பயத்தை ஊட்டியது. பாலாறு பெருக்கெடுத்து ஓடிய காட்சி பார்க்கமுடியாத காட்சி. வந்துகொண்டிருக்கும்போது ஆங்காங்கே தகவல் கொடுத்துக்கொண்டே வந்தேன். மகன் இளமாறனுக்கு அம்மா ஓர் இடம். அப்பா ஓர் இடம். நாம் ஒரு இடம் என்பதுணர்ந்து வேதனை. எப்படியோ அப்பவே புறப்பட்டு மனைவியை வீட்டுக்கு அதாவது மாம்பாக்கத்திற்கு அழைத்துவந்துவிட்டான். நான் மழையோடு திருச்சி வந்து சேர்ந்தேன்.விழுப்புரத்தில் சாப்பிட்டோம். கடுமையான களைப்பு. கன்னத்தில் தாடி, மூன்றுநாள் ஆடை கிழற்றவில்லை. பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தேன். என் கைபேசியில் ஒரு படம் எடுத்துக்கொள்ளாமல் விட்டது தப்பாகிவிட்டது. திருச்சியில் முகத்தை மழித்துக்கொண்டு ஒரு புதிய வெள்ளைச்சட்டையை வாங்கிப்போட்டுக்கொண்டு விமான நிலையத்திற்குள் இரவு 10மணிக்கெல்லாம் நுழைந்துவிட்டேன். கொஞ்சம் ஓய்வெடுத்தேன். சென்னை வெள்ளத்தை நீங்கள் பார்த்த அளவுக்கு நான் பார்க்கவில்லை. காரணம் நான் காருக்குள்ளேயே இருந்துவிட்டேன். ஆனாலும் அசைபோடவைக்கும் சில உணர்வுகள். வெள்ளத்தின் ஆபத்து தெரியாமல் கார் ஓட்டியது. மழையில் சிக்கிய எங்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவிய ஏழை இளைஞர்கள். வெள்ளத்தில் சிக்கியபோதும் தொலைகாட்சிக்குச் சிரித்த சென்னை மக்கள், வெள்ளத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது விலையை உயர்த்திய வியாபாரிகள்,யாரும் பிழைக்க முடியாது என்ற நிலைவந்தால் யார் காப்பாற்றப்படலாம் என்ற கேள்வி எழுந்தால் அதற்கு என் மனைவி சொன்ன பதில் இன்னும் என்னை வியக்க வைக்கிறது. எங்கள் மூன்றுபேரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் அது ஓட்டுநராக இருக்கட்டும் என்றது. காரணம் ஓட்டுநர் புதிதாக திருமணம் செய்துகொண்டவன். ஒரு வயது குழந்தை இருக்கிறது. அவன்தான் பிழைக்கவேண்டும் என்ற உள்ளம். இந்த நினைவுகளோடுதான் என் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன். கவிதையா? கட்டுரையா? கதையா? என்று யோசித்ததுண்டு.
நீருக்குள் சென்னை
காருக்குள் என்னை
வைத்துப் பார்த்த்து
இயற்கை அன்னை
நத்தையும் ஆமையும்
நகர்தலில் தோற்றது
என் காரிடம்
விழிகள் விழித்தது
வயிறு தவித்த்து
மூச்சு கொதித்தது
முப்பத்து இரண்டுமணிநேரம்
காருக்குள் கழிந்தது
ஊரப்பாக்கத்தில் ஏரி
உடைந்ததால்
சாலையில் வெள்ளம்
வண்டலூர்வரைதான்
வாகன்ங்கள் நகர்ந்தன
திருச்சிக்கு முடியாது என
திருப்பி விட்டார்கள்
தாம்பரத்தில் வெள்ளம்
சாலையில்
தார்ச்சாலையோ
கார்ச்சாலையோ
தென்படவில்லை
எல்லாம்
நீர்ச்சாலையாய் நெளிந்தன
வெள்ளப்பகுதியைக் கடப்பது
கேள்வியாய் இருந்தது
கடப்பது என
முடிவெடுத்தபின்
நீர்கிழித்த்து என் கார்
மரணதைரியம்
அன்று
தன்முகம் காட்டியது
ஏழை இளைஞர்கள்
ஏதையும் எதிர்பார்க்காமல்
கைகொடுத்து உதவினார்கள்
தமிழ்நாட்டில் இன்னும்
நெஞ்சின் ஈரம்
காயவில்லை என்பதை
உணரமுடிந்தது.
தொலைகாட்சி என்றால்
மரணத்திலும் சிரிக்கும்
அவலத்தை காணத்தவறவில்லை
வியாபாரிகள்
எங்கேயும் வியாபாரிகள்தாம்என்பதை
குழந்தைகளின் பாலின் விலைஉயர்த்தி
நிருபித்தார்கள்
ஆறு ஆறாக
இல்லாததற்கும்
ஏரிகுளங்களில்
அடுக்குமாடி கட்டிக்கொண்ட்தால்
தண்ணீரைத் தவிக்க விட்டதற்கும்
யார் காரணம்.என்பதை
ஒவ்வொருவரும் உணரவைத்தது
மழைவெள்ளம்.
இப்படி இந்த அளவில் முடிக்கமனமில்லாமல் முடிக்கிறேன்.
- உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்
- இந்த வார்த்தைகளின் மீது
- கணிதன்
- ஆறாது சினம்
- தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …
- அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா
- தொடுவானம் 110. தமிழகத்தில் திராவிட ஆட்சி.
- கனவு நீங்கிய தருணங்கள்
- பால்
- “போந்தாக்குழி”
- தமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “
- சொல்வது
- நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் படத்தொகுப்பு பயிற்சிப் பட்டறை
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி
- செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை