செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக

This entry is part 11 of 14 in the series 29 மே 2016

 

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை வர்ணிக்கிறது.

”அந்த ஊஞ்சல் ஒரு மலர்ப்பந்தலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசலைத் தாங்க பதுமராக மணிகளாலான தூண்கள் உள்ளன. விட்டமானது வைர மணிகளால் ஆக்கப்பட்டது.  அதிலிருந்து தொங்கும் சங்கிலிகள் எல்லாம் தந்தத்திலாலானவை. ஊசலில் அமைக்கப்பட்டுள்ள தட்டோ   மாணிக்கத்தால் செய்யப்பட்டது” என்று கோனேரியப்பனையங்கார் பாடுகிறார்.

” துங்கமலர்ப் பந்தரின்கீழ் பதும ராகத்

தூண்நிறுத்தி வயிரவிட்டம் தொகுத்து மீதில்

தங்கநெடுஞ் சங்கிலியிட்டு அதில்மா ணிக்கத்

தவிசுபுனைந்து அலங்கரித்த ஊசல் மீதில்

மங்கலநாண் திருவாவார் ஆடி ரூசல்

மதிலரங்கர் தமக்கினியார் ஆடி ரூசல்

1           செங்கமல மாளிகையார் ஆடி ரூசல்

சீரங்க நாயகியார் ஆடி ரூசல்”

”அப்படிப்பட்ட அழகிய ஊஞ்சலில் அமர்ந்து, திருமங்கல நாண் அணிந்த பெரியபிராட்டியாரே! ஊஞ்சல் ஆடுக! ஏழு மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ள எம்பெருமானுக்கு இனியவரே! ஊஞ்சல் ஆடுக! செந்தாமரையாகிய திருமாளிகையில் வீற்றிருப்பவரே! ஊஞ்சல் ஆடுக! ஸ்ரீரங்கநாயகித்தாயாரே! ஊஞ்சல் ஆடுக” என்று ஐயங்கார் வேண்டுகிறார்.

சீரங்கநாயகியார் ஆடக்கூடிய ஊஞ்சலை பதுமராக மணிகளால் ஆன தூண்கள் தாங்குகின்றனவாம். ஆனால் திருமால் இவ்வுலகையும் உலகில் உள்ள அனைவரையும் தாங்கி அருள் பாலிப்பவன்; ஆதலால் திருமங்கை மன்னன் பெருமாளையே ”பவளத்தூண் போன்றவன்” என்பார். “நிதியினை பவளத்தூணை நெறிமையால்” [திருக்குறுந்தாண்டகம் 1] என்பது அவர் அருளிச்செயலாகும். அவரே “பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே” [7-1-6] என்றும் கூறுவார்.  பெரியாழ்வார் திருமாலை ”தூமணிவண்ணன், மாமணிவண்ணன்” என்பார். ”திருமாமணிவண்ணன்” என்பார் பேயாழ்வார். [மூன்—9] “கருமணியை” என்பார் குலசேகரப்பெருமாள். [1-1] அத்தகைய பெருமையுடைய பெருமானின் நாயகியின் ஊஞ்சலுக்கு வைர மணிகளால் விட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊஞ்சலில் தொங்கும் சங்கிலிகளோ பொன்னாலானவை.  நம்மாழ்வார் “கட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது;” [3-1-2] என்று அருளுவார். அதாவது எம்பெருமானின் திருமேனி அழகுக்கு உருக்கி மெருகு வைத்த பொன் கூட ஒப்பாகாது.” என்கிறார். எனவேதான் திருமகளுக்கும் பொன் சங்கிலிகளாலான ஊஞ்சல் உள்ளதாம். ஊஞ்சல் பலகையோ மாணிக்கத்தாலானதாம். பெரியாழ்வார், ”தம் உடலை மாணிக்கப் பண்டாரம்” என்கிறார். அதாவது ”மாணிக்கத்தை வைத்துள்ள பொருள்சாலை” என்கிறார். எது மாணிக்கம்? பெருமான்தான் மாணிக்கமாவார். ”வாமனனை என் உள்ளத்தில் வைத்துக்கொண்டேன்; திருடர்களகிய இந்திரியங்களே! செல்லுங்கள், என் உடல் பெருமானின் காவலைப் பெற்றுள்ளது” எனும் பொருளில்,

”மாணிக் குறளுருவாய மாயனை என்மனத்துள்ளே

பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன் பிறிதின்றி

மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்கள் உள்ளீர்

பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே     [5-2-5]

என்று அருளிச் செய்கிறார்.

இப்பாடலில் தாயாரின் இருப்பிடமாகத் தாமரை மலரைக் குறிப்பிடுமுகத்தான் அவர் ’செங்கமலமாளிகையார்’ என்று போற்றப்படுகிறார். ஆழ்வார் பெருமக்கள் தம் பாசுரங்களில் தாயார் தாமரையில் வீற்றிருப்பதைப் பல இடங்களில் அருளிச் செய்துள்ளனர். திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார்,

”அல்லிநாண் மலர்க்கிழத்தி நாத! பாத போதினைப்

புல்லி உள்ளம் விள்விலாது பூண்டுமீண்ட தில்லையே” என்கிறார். அதாவது ”தாமரை மலரில் இருப்பிடமாகக் கொண்ட திருமகளின் நாதனே! உன் திருவடிகளை எப்போதும் என் மனமானது சேர்ந்து பிரிவில்லாமல் அந்த அனுபவத்திலிருந்து பின் வாங்கியதில்லை” என்கிறார். திருப்புளிங்குடியில் பள்ளிகொண்டுள்ள பெருமாளிடம் “உம் திருவிழிகளால் எம்மை நோக்கக் கூடாதா? நீயும் உன் தேவியான தாமரை மலரில் அமர்ந்துள்ள திருமகளும் எழுந்து மூவுலகங்களும் தொழுவதற்கேற்றபடி வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும்” என்ற பொருளில் நம்மாழ்வார்,

” தடம்கொள் தாமரைக்கண் விழித்துநீ எழுந்துஉன்

தாமரை மங்கையும் நீயும்

இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருந் தருளாய்

திருப்புளிங் குடிக்கிடந் தானே”   [9-2-3]  என்று அருளிச்செய்வார்.

ஆக சீரங்கநாயகியாரை ஊசல் ஆட வேண்டுகையில் பெருமாளையும் இணைத்து அருள் வேண்டுவதாக  ஐயங்கார் பாடியிருக்கிறார் என மகிழலாம்.

Series Navigationவாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *