காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை

This entry is part 2 of 15 in the series 5 ஜூன் 2016

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை என்று குறிப்பிடுவர். சீவகசிந்தாமணியில் துறவு வாழ்க்கை பற்றிய செய்திகள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

அச்சணந்தி முனிவரின் துறவு, சீவகனின் தாயான விசயை, சுநந்தையின் துறவு, அசோதரன் மனைவி துறவு, சீவகன் அவனது மனைவியர், அவனது நண்பர்கள் ஆகியோரின் துறவு ஆகிய துறவு நிகழ்வுகள் குறித்து திருத்தக்கதேவர் தெளிவுபடுத்தி அத்துறவின் பெருமைகளை விவரித்துச் செல்கிறார்.

அச்சணந்தி முனிவரின் துறவு

பண்டை வினைகள் தொலையத் தவம் செய்வதற்காக வர்த்தமான மகாவீரரின் சமசரணம் என்னும் இடத்திற்குச் சென்று ஆசை வேரை அறுத்து ஸ்ரீவர்த்தமானரின் திருவடி அடையத் தளர்வில்லாத தவம் இருந்து நீர்க்குமிழி போன்ற பொய்யுடம்பை விடுத்து வானவர் தொழ வீடடைவதற்காக அச்சணந்தி முனிவர் துறவு மேற்கொண்டு தவத்தில் ஈடுபட்டு வாழ்ந்தார்(408) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

அசோதரன் துறவு

கொலைத் தொழிலுக்கு நிகரான அன்னப் பார்ப்பை அதன் சுற்றத்திடம் இருந்து பிரித்த செயலுக்காக வருந்தி அவ்வன்னப்பார்ப்பைப் பிடித்த தடாகத்திலேயே கொண்டு போய்விட்டுவிட்டுக் காமவேட்கையை வெறுத்துப் பாவமும் அதன் தன்மையும் கொடியது என்று பயந்து அதற்குக் காரணமான பிறவித் துயரைப் போக்க அசோதரன் எண்ணினான்(2880-2882). ஐம்புல இச்சையெல்லாம் அற்று விழ நல்வினைப் பயனால் வரும் இன்பத்தையும் விட்டு இரண்டாயிரம் அரசர்கள் சூழத் தவ வாழ்க்கையை மேற்கொண்டான்(2886). சிறந்த தவத்தைச் செய்து கற்பக மாலையணிந்த சாசரன் என்பவனாய்ப் பிறந்து பெருமை மிக்க செல்வச் சிறப்புடைய இந்திரலோகத்தை ஆண்டு அழகிய மனைவியருடன் வாழ்ந்து இப்பிறவியில் சீவகனாய்ப் பிறந்தான் அசோதரன்(2889) என்று அசோதரன் காமத்தைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு நற்கதியை அடைந்ததை சீவகசிந்தாமணி எடுத்துரைக்கின்றது.

விசயை, சுநந்தை துறவு

சீவகனின் தாய் விசயை ஆவாள். அவனை வளர்த்தவர் சுநந்தை ஆவாள். விசயையும் சுநந்தையும்  சீவகனின் இல்லற வாழ்க்கையைக் கண்டு மகிழ்ந்திருப்பது பாவம் தரும் என்பதை உணர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டு வாழ்கின்றனர்(2647). தவத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தன் மகனை விசயை அழைத்துப் பெண்ணின்பத்தால் வரும் கேட்டை,

“நாகத்தால் விழுங்கப்பட்ட நகைமதிக் கடவுள் போலப்

போகத்தால் விழுங்கப்பட்டுப் புறப்படான் புன்சொல் நாணான்

ஆகத்தா னனமைச்சர் நுண்ணூற் றோட்டியா லழுத்தி வெல்லும்

பாகர்க்குந் தொடக்க நில்லாப் பகடுபோற் பொங்கியிட்டான்”(2612)

என்று சச்சந்தனின் வாழ்க்கையை வைத்து எடுத்துரைத்து சீவகனுக்கு அறிவுரை வழங்குகின்றாள்.

சீவகனைப் பார்த்து, “நீயும் காமத்தை மறந்து இவ்வுலகை ஆட்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினாள்(2615). பின்னர் வாழூக்கை நிலையாமை பற்றி எடுத்துரைக்கின்றாள். வாழ்க்கையல் நாம் வாழும் வாழ்நாள் எவ்வளவு நாள் என்பதை அறிய முடியாது. இத்தகைய வாழ்நாளில் பெண்ணின்பத்தில் மயங்கிக் கள்ளுண்டு, கருந்தலைகள் வெள்ளைத் தலைகளாய் மூப்பதற்கு முன்னர் துறவு மேற்கொண்டு அரிய தவம் செய்ய என்ற வேண்டுகோளையும் சீவகனைப் பார்த்து விடுக்கின்றாள்(2626). மேலும் முல்லை அரும்பைக் குவித்தாற்போன்ற இனிய பாற்சோற்றை மகளிர் ஏந்த நல்ல பொரித்த கறிகளுடன் நாளெல்லாம் பொற்கலத்தில் விரும்பி உண்போர் பின்பொரு கால்தில் அச்செல்வமெல்லாம் கரைந்து போக அல்லல்பட்டு ஓட்டிலே கீரையைகொட்டிக் கொடுங்கள் என்று இரந்து நிற்பர்(2623). அதனால் செல்வம் நிலையில்லாதது என்பதை அறிந்து வாழ்வாயாக என்று செல்வ நிலையாமையைப் பற்றி சீவகனுக்கு விசயை எடுத்துரைத்து செல்வத்தின் மீதுள்ள பற்றை விட்டொழிக்குமாறு கூறுகின்றாள்.

இவ்வாறு தன் மகன் சீவகனுக்கு அறிவுரை கூறிய விசயை ஆயிரம் பல்லக்குகள் புடைசூழ துறவு மேற்கொண்டு தவமிருப்பதற்காகத் தவப்பள்ளியைச் சென்றடைந்தாள்(2630). அத்தவப்பள்ளியைப் பம்மை என்பவள் தலைமை ஏற்று நடத்தி வந்தாள்(2631). அவள் விசயையின் துறவைக் கேட்டு விசயைக்குத் துறவின் கடுமையைப் பின்வருமாறு எடுத்துரைத்தாள்.

நிறைந்த தவம் என்பது விறகிலே பற்றிய நெருப்புப் போலக் கொடியது. அதை உங்களால் பின்பற்ற இயலாது. அதனை விடுத்துத் தானத்தை இம்மண்ணில் விதைத்து ஒழுக்கமாகிய நீரைப் பெய்து வந்தால் அது உத்தரகுருவிலே முளைத்துப் பல புகழையும் ஈன்று பிறகு வானுலக இன்பத்தை நல்கும்(2632) என்று விசயைக்கு விளக்கியுரைக்கின்றாள்.

பம்மை கூறியவற்றைக் கேட்ட விசயை, தங்களின் அறவுரையைப் பின்னர் கேட்கிறோம். இப்போது எங்களுக்குத் துறவினை அருளுக என்று வேண்டுகிறாள். விசயைக்குத் துறவின் மேலுள்ள உறுதியைப் புரிந்து கொண்ட பம்மை மகிழ்ந்து துறவு நல்க முன்வந்தாள்(2633).

தவப் பள்ளியிலிருந்த தவ மகளிரைத் துறவு வாழ்க்கைக்கு ஏற்பிடைய வகையில் தவப்பள்ளியை அழகு செய்தனர்(2634). மலர்மாலைகளை வானத்தை மறைக்கும் வகையில் கட்டினர். அழகிய இருக்கைகளை அமைத்து அந்த இடத்தில் நறும்புகையிட்டு விளக்கேற்றினர். நூல் முறைப்படி விசயை, சுநந்தை ஆகிய இருவரின் பாதங்களைப் பாலினால் கழுவி வெண்மையான மெல்லிய கோடித்துகிலால் மார்பினை இறுக்கிக் கட்டினர்((2634). உடலிலிருந்த மலர் மாலைகளையும் அணிகலன்களையும் எடுத்தெறிந்தனர்(2635). வெள்ளைத் துகிலை அணிவித்து, நல்ல தவிசின் மேல் கிழக்குத் திசையை நோக்கி அமருமாறு செய்தனர்(2636). அவர்களின் கருங்கூந்தலைப் பறித்தனர். பறித்த மயிர்களை மகளிர் தவப்பள்ளியில் வீழா வண்ணம் அவற்றைத் தட்டுக்களில் ஏந்திக் கொண்டுபோய் வேறிடத்தில் வைத்தனர்(2637,2638). பின்னர் எலும்பாலாகிய உடம்பை எண்ணற்ற பண்புகளாலே நிறைத்துப் பல்லுயிர்க்கும் அருளைப் பரப்பித் தவத்தை மேற்கொண்டனர்(2639). இவ்வாறு தவத்தை மேற்கொண்டதும் இவ்வுலகத்திற்கும் தங்களுக்கும் எவ்விதப் பற்றும் உறவும் இல்லையென்று உணர்ந்து புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் வேறுபாடு அறியாத உயர்ந்த நிலையில் தவத்தை மேற்கொண்டனர்(2640) என்று சிந்தாமணி துறவு வாழ்வின் தன்மையையும் தவத்தின் நிலையையும் விசயை, சுநந்தை வழி எடுத்துரைக்கின்றது.

சீவகன் உள்ளிட்டோரின் துறவு

சீவகன் ஆண்டு முடித்த பின்னர், தனது பழம்பிறப்பையும் சமணத் தத்துவங்களையும் மணிவண்ணன் என்ற சாரணரால் உணர்ந்து கொண்டு வீடுபேறு அடைவதற்குரிய செயலை மேற்கொண்டான். தம்முடைய மனைவியரை அழைத்து இளமை நிலையாமை பற்றி எடுத்துரைத்தான். மேலும் உயர்ந்த குலத்தில் பிறத்தல் என்பது முன்வினையில் செய்த பயனேயாகும்(2752). அதனால் வறியவர்களுக்குத் தானம் செய்யுங்கள். பொருளற்ற ஏழைகளின் துயரை நீக்கிச் சிறந்த உயிருக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற உணவை அவர்களுக்கு அளித்தால் அது வானுலக சொர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்(2924). உயிரினங்களிடம் அன்பும் மது மாமிசத்திடம் வெறுப்பும் செலுத்தி வாழ்பவர்கள் காலடியில் விண்ணும் மண்ணும் வந்து பணியும்(2927). இன்று உலகம் காக்கும் வேந்தராக இருப்பவர்கள் அனைவரும் முற்பிறப்பில் கள்ளுண்ணாமை என்னும் நோன்பை மேற்கொண்டவர்களாக இருந்ததால்தான் அவர்கள் அரசர்களாகப் பிறக்க முடிந்தது(2928).

முற்பிறவியில் பிறருக்குத் தானமாக ஒன்றையும் கொடுக்காதவர்கள் இப்பிறவியில் மாசிக்குளிரில் கிழிந்த ஆடையை அணிந்து கொண்டு தாயே பிச்சை! என்று அழைத்தவாறு கையிலே ஓட்டை ஏந்திக் கொண்டு செல்வர்(2929). எனவே நல்லறத்தைச் செய்யுங்கள். நல்லறத்தை மேற்கொண்டால் உயிர் உடலை விட்டு விலகி வீட்டின்பத்தையடையும்(2935). நல்லறத்தைச் செய்யாது உயிர் வாழுமேயானால் அது நரகத்தில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் அலறித் துடிக்க நேரும்(2934). இத்தகைய வாழ்க்கையின் மீது எனக்கு ஆசை இல்லை. அரசுரிமையைத் துறக்கிறேன் என்று கூறி அரசு துறந்து துறவு வாழ்க்கையை சீவகன் மேற்கொள்கிறான்(2941).

துறவு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்னர் தன்னிடமிருந்த பெரும் பொருள்களை வறியவர்களுக்குத் தானமாகக் கொடுத்தான்(2995-2997). தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்து செல்வம், உடல் ஆகியவற்றின் நிலையாமையை எடுத்துக் கூறி நீங்களும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வீடுபேற்றை அடைவீர்களாக என்று எடுத்துரைத்து துறவாகிய உயர்ந்த பயணத்தை மேற்கொண்டான்.     பொன், பொருள், மண், அரசுரிமை உள்ளிட்ட அனைத்தையும் துறந்து, உறவுகளையும் விடுத்து பற்றற்ற மனநிலையில் தவத்தை மேற்கொள்வதே உண்மையான துறவு வாழ்க்கை என்று சிந்தாமணி எடுத்துரைக்கின்றது. சமண சமயத்தின் உயர்ந்த நெறியாக இத்துறவு வாழ்க்கை அமைந்திலங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  (தொடரும்…..8)

Series Navigationஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *