தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

This entry is part 4 of 15 in the series 5 ஜூன் 2016

                            Little India                              

பிரயாணத்திற்கு  இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின்          ” லிட்டில் இந்தியா “.  இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள் என அனைத்து பொருட்களையும் அங்கு வாங்கலாம். அது இந்தியர்களின் வர்த்தக மையம். இந்திய உணவகங்களும் நிறைந்த பகுதி. அங்கு விற்கப்படும் இனிப்புகளும், பூக்களும் மலைகளும் காய்கறிகளும் தமிழகத்து கடைத்தெருவை நினைவுபடுத்தும். இன்று லிட்டில் இந்தியா சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து  வரும் சுற்றுலாக் குழுவினர் இந்தியர்களின் பாரம்பரியத்தைக் காணும் வகையில் இங்கு கொண்டுவரப்படுகின்றனர். இதற்காகவே இங்குள்ள வீதிகளும் கட்டிடங்களும் வீடுகளும் கடைகளும் துவக்க காலங்களில் இருந்ததுபோன்றே பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு சிங்கப்பூரில் இந்தியர்களில் மரபாண்மை ( heritage ) பாதுகாக்கப்படுகின்றது,

          லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில்தான் காலனித்தவ சிங்கப்பூரின்  துவக்க காலத்தில் இந்திய சிறைக் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களின் குடியிருப்புகள் இருந்தன. சிராங்கூன் நதி அந்தப் பகுதியில் செல்வதால், மாட்டுப் பண்ணைகள் வைத்து தமிழர்கள் சிறு வியாபாரம் செய்தனர். பின்பு காய்கறிகள், பழங்கள் போன்றவையும் பயிரிட்டு விற்றனர். பின்னாட்களில் நகரசபைத் தொழிலாளர்கள் இப்பகுதியில் குடியிருக்க நீண்ட ஓரடுக்கு கடை வீடுகள் கட்டப்பட்டன. தமிழகத்திலிருந்து இங்கு வேலை செய்ய வந்த ஏராளமான தமிழர்கள் அவற்றில் குடியேறினர். அதன் பின்புதான் உணவகம், பூக்கடைகள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், நகைக் கடைகள் என்று ஒவ்வொன்றாகத் தோன்றின. இன்று லிட்டில் இந்தியாவில் தமிழர்கள் பல்வேறு வியாபாரம் செய்கின்றனர்.
          ஊர் செல்பவர்கள் துணிமணிகளை இங்குதான் வாங்குவார்கள். அப்பா எனக்கு நிறைய சட்டைகள், பனியன்கள், கைக்குட்டைகள் வாங்கினார். தேவையான முழுக்கால் சிலுவார்கள் தைத்து வைத்திருந்தோம். அண்ணனுக்கும் சட்டைகள் வாங்கினார். அம்மாவுக்கு, அண்ணிக்கு, அத்தைக்கு, அத்தை மகள் நேசமணிக்கு, பாட்டிக்கு புடவைகள் வாங்கினார். நான்கூட வெரோனிக்காவுக்கு ஒரு புடவை வாங்க வேண்டும். அதை அப்பாவுக்குத் தெரியாமல்தான் வாங்கி பத்திரப்படுத்த வேண்டும். தங்கைகளுக்கு பாவாடை தாவணிகள் வாங்கினார். நான் ஏர் இந்தியா விமானத்தில் செல்வதால் இருபது கிலோ எடையுள்ள பெட்டிதான் கொண்டுசெல்ல முடியும். அதனால் கனமான சாமான்கள் வாங்க முடியாது. பெட்டி நிறைய துணிகள் கொண்டு செல்லலாம். பிரயாண நாள் காலையிலேயே பெட்டியை பலசரக்கு கடைக்குக் கொண்டு சென்று எடை பார்த்துக் கொள்ளலாம்.

எனக்கு ஒரு பிலிப் ரேடியோ கொண்டு செல்ல ஆசை.ஆனால் அதை எப்படி கேட்பது என்ற தயக்கம். அதனால் படிப்பு கெடும் என்பார். எதற்கு வீண் வம்பு. நான் அதுபற்றி சொல்லவில்லை. ஊர் செல்லும் வரை அப்பாவிடம் பிரச்னை இல்லாமல் திரும்பினால் போதும். பின்பு கடிதமூலம் தெரிவிக்கலாம். அவராக அனுப்பினால் பரவாயில்லை. இல்லையேல் அங்கேயே ஒரு ரேடியோ வாங்கிக்கொள்ளலாம். சிங்கப்பூரில் வாங்கினால் தரமானதாக இருக்கும். என் வகுப்பில் கிச்சினர் ஒரு பெரிய ” அக்காய் ” டேப் ரெக்கார்டர் வைத்திருந்தான். அதோடு மோட்டார் பைக்கும் வைத்திருந்தான்.என் அறையில் சம்ருதிக்கும் ரேடியோ இல்லை. அவன் அவ்வப்போது இந்திப் பாடல்கள் பாடுவதோடு சரி.

எனக்கு புது சிட்டிசன் கைக்கடிகாரம் வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது.ஒரு நல்ல கேமரா வாங்க ஆசைதான். ஆனால் அப்பாவிடம் கேட்கவில்லை. என்னிடம் பழைய கோடாக் கேமாராதான் இன்னும் இருந்தது.

          கோமள விலாஸ் உணவகத்தில் தோசை அருந்தினோம். தமிழகத்தின் சுவை அப்படியே இருந்தது. அது மிகவும் பழமையான உணவகம். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும்.
          அதன் எதிர்புறத்தில்தான் தமிழர் சீர்திருத்தச் சங்கம். அதன் தலைவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. அங்கு தமிழர் திருநாள் பேச்சுப் போட்டியில் நான் பங்கு பெறுவதுண்டு. அந்த வரிசையில் பல தமிழ்ப் புத்தகக் கடைகள் இருந்தன. அனைத்தும் தமிழ் நாட்டு நூல்கள்தான்.

ஊர் செல்வது பற்றி அப்பா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நானும்தான். எனக்கு படிப்பு பிடித்துள்ளதுபோல் ஊரும் பிடித்துவிட்டது. சிங்கப்பூர் வாழ்க்கை செயற்கையானதுபோல் தோன்றியது. ஆனால் நண்பர்கள்தான் அதிகம் கவலைப்பட்டனர். அன்றாடம் மாலையில் சீன உணவகத்தில் ஜெயப்பிரகாசமும் நானும் சந்திப்போம். கோவிந்தசாமியை அவன் வீட்டில் பார்ப்பேன். பன்னீர்  எப்படியும் இரவில்  வருவான்.கடைசி நாட்கள் என்பதால் நான் நண்பர்களுடன் வெளியில் சென்றுவருவதை அப்பா கண்டுகொள்ளவில்லை.

Serangoon Road

லதாவை அன்று பேருந்தில் விடை பெற்றதோடு சரி. அதன்பின்பு அவளைத்  தனியாகச்  சந்திக்கவில்லை. ஒரு முறை அவள் வேலை  முடிந்து திரும்பிய போது பேருந்து நிற்கும் இடத்திலிருந்து அவள் வீடு வரைச் சென்றேன். என்னைக் கண்ட அனைவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், அக்காள், தங்கைகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். இரவு உணவும் அங்கேயே உட்கொண்டேன். அப்போது அவளிடம் கடைசியாக மீண்டும் விடை பெற்றேன். பிரயாண ஆர்வத்தில் அவ்வளவாகக் கவலை கொள்ளவில்லை. அவளும் உற்சாகமாகவே விடை தந்தாள்.

           பிரயாண நாளும் வந்தது. அது நள்ளிரவுப் பயணம். நண்பர்கள் அனைவரும் என்னை வழியனுப்ப பாய லேபார் அனைத்துலக விமான நிலையத்திற்கு  வந்தனர். அப்பாவுடன் செல்லப்பெருமாள் மாமாவும், சிதம்பரம் சித்தப்பாவும் வந்திருந்தனர்.அப்போது விடைபெறுவது சோகமாக இருந்தது. இன்னும் நான்கு வருடங்கள்தானே. விரைவில் ஓடிவிடும். ஒருவாறாக மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். அப்போதுதான் முதல் முறையாக அப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது. என் படிப்புக்காக இப்படி உற்றார் உறவினரைப் பிரிந்து தனிமையில் இருந்தே வாழ்நாளை தியாகம் செய்துவிட்டாரே என்ற எண்ணம் மனதில் மேலோங்கியது.கலங்கிய கண்களுடன் கையசைத்துவிட்டு பிரயாணிகளுடன் சேர்ந்து விமானம் ஏற சென்றேன்.
          அந்த மூன்றரை நேர பிரயாணம் முழுதும் நான் உறங்கவில்லை. மனதில் ஏதேதோ எண்ண அலைகள் அலைமோதின.கல்லூரி சென்றபின் உடற்கூறு, உடலியல் பாடங்களில் முழு கவனம் செலுத்தி ஆறு மாதங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்று சபதம் மேற்கொண்டேன். மீண்டும் படித்த பாடங்களைத்தானே படிக்கவேண்டும் என்பதால் அது சுலபம் என்று தோன்றியது. கல்லூரி செல்லுமுன் ஊர் சென்று, கொண்டுவந்துள்ள துணிமணிகளைத் தந்துவிட முடிவு செய்தேன்.
          மீனம்பாக்கம்  விமான நிலையத்தில் என்னை வரவேற்க அத்தை மகன் பாஸ்கரன் வந்திருந்தான். டாக்சி எடுத்து தாம்பரம் சென்றோம். என்னைக் கண்ட நேசமணிக்கு அளவில்லாத ஆனந்தம். துள்ளிக் குதித்தாள். அத்தைக்கும் பெருமிதம்தான். அவருடைய சின்ன அண்ணன் ( அப்பா ) பற்றி விசாரித்தார். அப்பா அவர்களுக்கு வாங்கியிருந்த பொருட்களைக் கொடுத்தேன். அவர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி.
          மாலையில் வெரோனிக்கா வீடு சென்றேன். அவளுக்காக கொண்டுவந்திருந்த ஜப்பான் நைலெக்ஸ் புடவையைத் தந்தேன். அது மிகவும் அழகாக உள்ளது என்றாள். மிகவும் பிடித்துள்ளதாகக் கூறினாள். நாங்கள் வெளியில் செல்லவில்லை. அன்று இரவு உணவு அவள் வீட்டில்தான்.
          அன்று நள்ளிரவில் சிதம்பரம் செல்ல தொடர் வண்டி ஏறினேன். முதல் வகுப்பில் நன்றாக தூங்கினேன். விடியலில் சிதம்பரத்தில் இறங்கினேன்.டாக்சி மூலம் தெம்மூர் கிராமம் சென்றேன்.அங்கும் எனக்கு கோலாகலமான வரவேற்புதான்!
          அப்பா கொடுத்தனுப்பிய  சிங்கப்பூர் துணிமணிகளைக் கண்டு தங்கைகள் இருவரும் குதூகளித்தனர். அங்கு தங்கிய மூன்று நாட்களும் இனிமையாகவே  கழிந்தன. பால்பிள்ளையுடன் கோகிலம் பற்றியும் பேசி அவளை நினைவு கூர்ந்தேன். பாவம் அவள்! ஆசை நிறைவேறாமலேயே சென்றுவிட்டாள்!

         இந்த விடுமுறை திருப்திகரமாக முடிந்தது. நிறைவான மனதுடன் கல்லூரி புறப்பட்டேன்.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஎஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *