யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

author
0 minutes, 44 seconds Read
This entry is part 11 of 12 in the series 31 ஜூலை 2016

பி.ஆர்.ஹரன்

 

சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான வனவிலங்கைக் கடும் துன்பத்திற்கு ஆளாக்கும் உரிமையாளர்களும் பாகன்களும் எந்த மாதிரியான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

சட்டமீறல்கள்

Lakshmi the elephant-5 (1)

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் பின்வரும் சட்டங்கள், விதிகள், அறிவிப்புகள், கட்டளைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறுகிறார்கள்.

 

சட்டத்திற்குப் புறம்பாக யானைகளை வைத்திருத்தல்: இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் 43-ம் பிரிவின்படி, தன்வசம் உள்ள சிறைப்படுத்தப்பட்ட விலங்கின் மீது உரிமைச் சான்றிதழ் வைத்திருக்கும் ஒருவர் அதை விற்பனை மூலமோ, அல்லது விற்பதற்காகவோ, அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது வழியாகவோ, அவ்விலங்கை மற்றொருவருக்கு அனுப்பக் கூடாது. அதே போல் மற்றொருவர் உரிமைச் சான்றிதழ் கொண்டுள்ள ஒரு விலங்கை ஒருவர் விலை கொடுத்து வாங்கக்கூடாது. ஆனால், பெரும்பாலான சிறைப்படுத்தப்பட்ட யானைகள், மேற்கண்ட சட்டத்தை மீறும் வகையில், விற்கவும் வாங்கவும் பட்டவையாகத்தான் இருக்கின்றன.

 

காலம்கடந்த, செல்லுபடியாகாத உரிமைச் சான்றிதழ்கள்: மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகளுக்கான திட்டத்தின்படி (Project Elephant Division of Union Ministry of Environment, Forests and Climate Change) ஐந்து வருடங்களுக்கான புதிய உரிமைச்சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் உரிமைச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டும். சிறைப்படுத்தப்பட்ட யானைகளை வைத்திருந்த பெரும்பாலான உரிமையாளர்கள், காலம்கடந்த அல்லது செல்லுபடியாகாத உரிமைச் சான்றிதழ்களைத்தான் வைத்துள்ளார்கள்.

 

காயமுற்ற, நோயுற்ற, வேலைக்குத் தகுதியில்லாத யானைகளை வேலை செய்ய வைத்தல்: பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் 11-ம் பிரிவின்படி (Section 11 of Prevention of Cruelty to Animals Act 1960), முதுமை அடைந்த, நோயுற்ற, காயமடைந்த, வேலைக்குத் தகுதியில்லாத எந்த ஒரு விலங்கையும் பணியமர்த்துவது அந்தக் குறிப்பிட்ட விலங்கைக் கொடுமைப்படுத்துவதற்குச் சமமாகும். சிறப்படுத்தப்பட்ட யானைகள் பெரும்பான்மையானவை, காயங்களும் நோயும் உள்ளதாகத்தான் இருக்கின்றன. இருப்பினும், அவற்றைப் பல்வேறு பணிகளுக்கு உரிமையாளர்கள் உட்படுத்துகின்றனர்.

 

தொடர்ந்து சங்கிலியாலும் கயிறாலும் யானைகளின் கால்களைக் கட்டுதல்: பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் 11-1-f பிரிவின்படி, நியாயமற்ற முறையில் மிகவும் குறுகிய நீளம் கொண்ட, நியாயமற்ற முறையில் மிகவும் கனமான சங்கிலியாலும், கயிற்றினாலும், பிராணிகளைக் கட்டிப்போட்டு நீண்ட நேரம் வைத்திருத்தல், அந்தப் பிராணிகளைச் சித்தரவதை செய்வதற்கு ஒப்பாகும். சிறைப்படுத்தப்பட்ட யானைகள் ஒரு நாளைக்கு 20 மணிநேரங்களுக்குக் குறையாமல் மிகவும் கனமான, குறுகிய சங்கிலிகளால் இரண்டுக்கும் அதிகமான கால்களில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த விதிமீறல் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

 

இரும்பு அங்குசங்களைப் பயன்படுத்துதல்: ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, யானைகளை அடக்கக் கூர்மையான கொக்கிகள் பொருத்தப்பட்ட இரும்பு அங்குசங்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. “மூங்கில், பிரம்பு அல்லது மரத்தினால் ஆன அங்குசங்கள் தான் பயன்படுத்தப்பட வேண்டும். உலோகங்களாலான அங்குசங்கள் பயன்படுத்தக்கூடாது; அவைகள் யானைகளின் கண்களில் படாத இடங்களில் வைத்திருக்க வேண்டும். பொது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான அபாயமான சமயங்களில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் பல இடங்களில் இந்த உத்தரவு மீறப்பட்டு, கூர்மையான கொக்கிகள் கொண்ட இரும்புக்கவசங்கள் பயன்படுத்தபடுகின்றன.

Lakshmi the elephant-4

அங்கவீனம் செய்தல்: பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் 11-1 பிரிவின்படி, ஒரு பிராணியை அடித்தல், உதைத்தல், அளவுக்கு மீறி சவாரிபி செய்தல், அளவுக்கு மீறி வேலை வாங்குதல், அதிக அளவு எடைகளை ஏற்றுதல் மற்றும் தூக்கச் செய்தல், அதன் அங்கங்கள் பாதிக்குமாறு அதனிடம் நடந்துகொள்ளுதல் போன்றவை அதைச் சித்திரவதை செய்வதற்குச் சமம். சிறப்படுத்தப்பட்ட யானைகளின் வால்களிலிருந்து முடிகள் பிய்த்து எடுகப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அவ்வாறு அதன் முடிகளை எடுக்கும்போது அதன் வால்களில் புண்கள் ஏற்படும் வகையிலும், வால்களின் எலும்புகளில் முறிவுகள் ஏற்படும் வகையிலும் நடந்துகொள்கின்றனர். இவையெல்லாம் சட்டத்தை மீறுகின்ற செயல்களாகும்.

 

தேவையான குடிநீர், உணவு ஏற்பாடு செய்யாமல் இருத்தல்: பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் 11-1-h பிரிவின்படி, உரிமையாளர் தான் உரிமம் கொண்டுள்ள பிராணிக்கு அடிப்படை தேவைகளான இருக்க இடம், உண்ண உணவு, குடிக்க நீர் ஆகியவற்றைத் தேவையான அளவு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது இருத்தல் பிராணிக்குத் துன்பம் விளைவிக்கும் செயலாகும். மேலும் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓடும் நீர் ஆதாரங்களிலிருந்து குடிநீர் வழங்கப்படவேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்கு குடிநீரும், உணவும் தேவையான அளவு வழங்கப்படுவதில்லை.

Lakshmi the elephant-3

தங்குமிடங்களின் சூழ்நிலைகளும் வசதிகளும்: இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் 42-ம் பிரிவின்படி, தலைமை வன உயிரினப் பாதுகாவலர் அல்லது சம்பந்தப்பட்ட வனத்துறையின் உயர் அதிகாரி, உரிமம் வழங்குவதற்கு முன்னால், உரிமையாளர் (இதில் கோவில்களும் அடக்கம்) அந்தக் குறிப்பிட்ட விலங்கை வைத்துப் பேணிப்பராமரிக்கும் அளவுக்குத் தேவையான வசதிகளும் சூழ்நிலைகளும் கொண்ட இடத்தை வைத்திருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொண்டுதான் உரிமம் வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குத் தேவையான வசதிகளும், சூழ்நிலைகளும் கொண்ட தங்குமிடங்கள் உறுதி செய்யப்படவில்லை.

 

மேலும் 2009-ல் விலங்ககங்களில் (ZOO) யானைகள் தடை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2013-ல் விலங்ககங்களுக்கான அதிகார மையம் (Central Zoo Authority) யானைகளுகுத் தேவையான 1.2 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டுள்ள விலங்ககங்களுக்கு மட்டும் யானைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. யானைகள் தங்களுடைய இயற்கையான குணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களுக்கே உரிய இயற்கையான வாழ்வை வாழ்வதற்கும் குறைந்தபக்ஷ தேவையாக இந்த நிலப்பரப்பு தேவைப்படுகிறது.

 

ஆனால் சிறப்படுத்தப்பட்ட யானைகளுக்குப் பெரும்பன்மையான இடங்களில் மிகவும் குறுகலான, காற்றோட்டம் இல்லாத, வெளிச்சம் இல்லாத, கான்கிரீட் தரையும் சிமெண்ட் சுவர்களும் கொண்ட, முறையான வடிகால் அற்ற அசுத்தமான இடங்களே கொடுக்கப்பட்டுள்ளன.

Lakshmi the elephant-2

மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும்: பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் 3-ம் பிரிவின்படி, “பிராணிகளைச் சொந்தமாக வைத்திருக்கும் உரிமையாளர் ஒவ்வொருவரும், அந்தப் பிராணிகள் வலியினாலும் வேதனையினாலும் துன்பப்படாதவாறு உடல்நலத்துடன் இருக்கத் தேவையான நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அவற்றை நல்லமுறையில் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டியது, அவர்களுடைய கடமையாகும். ஆனால் நடைமுறையில், புரையோடிய கண்கள், ரத்தமும் சீழும் கசியும் பாதங்கள், புண்கள் கொண்ட கால்கள் மற்றும் உடல்கள், வீங்கிய கால்கள், மூட்டுவலி, பலவீனம், கூடுதல் எடை, எடைக்குறைவு, எலும்பு முறிவுகள், காச நோய், வயிற்றுப்போக்கு, போன்ற பலவிதமான நோய்களால் யானைகள் துன்புறுவதே நிகழ்கின்றன. பல இடங்களில் யானைகள் அகால மரணம் அடைந்துள்ளன. யானைகளுக்குத் தேவையான, முறையான, மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்படுவதில்லை.

 

ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள்: தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants – Management and Maintenance – Rule 2011) படி, யானைகளின் உரிமையாளர்கள் உரிமைச் சான்றிதழ் பதிவேடு (Certificate of Ownership Register), உடல்நலன் பற்றிய தடுப்பு மருந்து பதிவேடு (Vaccination Register) மற்றும் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் பதிவேடு (Diseases and Treatment Record), இயக்கப் பதிவேடு (Movement Register), உணவுத் தீவனம் பதிவேடு (Feeding Register), பணிகள் பதிவேடு (Work Register), பாகன்கள், துணைப்பாகன்களுக்கான உடல்நலன் பதிவேடு (Health Register of Mahout and Cavady), சம்பளப் பட்டுவாடா பதிவேடு (Register of Salary Disbursement) ஆகிய ஆவணங்களும் பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் உரிமையாளர்கள் இவ்விஷயத்தில் மிகவும் பொறுப்பின்றியே இருக்கின்றனர்.

 

பொறுப்பின்றி மீறப்படும் சட்டவிதிகள்: தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011-ல் யானைகள் உரிமம், யானைகள் தங்குமிடங்களுக்கான சூழல்கள் வசதிகள், யானைகளின் பராமரிப்பு, யானைகளுக்கான உணவுகள் தீவனங்கள், யானைகளுக்கான பணிகள், யானைகளைக் கவனித்துக்கொள்ளும் பாகன்கள், துணைப்பாகன்கள், யானைகள் போகுவரத்து, யானைகள் சம்பந்தமான ஆவணங்கள், பதிவேடுகள், தந்தங்கள் அறுத்தல், யானைகளைத் துன்புறுத்துவதற்கு ஒப்பான செயல்கள், முதுமை அடைந்த யானைகள், யானைகள் நலக் குழுக்கள், பொதுமக்களுக்கான செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, போன்ற விஷயங்களுக்கான பல்வேறு விதிகளும் வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Lakshmi the elephant-1

இருப்பினும், தமிழகத்தில் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயத்தில் மேற்கூறப்பட விதிகளில் பெரும்பான்மையான விதிகள் மீறப்படுகின்றன என்பதும், உரிமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என்பதும் உண்மை. மேலும் இந்த விதிகள் மீறப்படாமல், முறையாக செயல்படுத்தும் கடமையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளும் அலுவலர்களும் இந்தச் சட்ட மீறல்களுக்கும், விதி மீறல்களுக்கும் துணை போகின்றனர் என்பதும் கசப்பான உண்மை. யானைகள் விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ள வனத்துறை, கால்நடைத்துறை, இந்து அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் ஊழல் புரையோடியிருப்பது, யானைகளின் நலனைப் பெரிதும் பாதிக்கின்றது.

 

நீதிமன்றங்களில் வழக்குகள்

 

சென்னையைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலர் திருமதி ராதாராஜன் அவர்கள் கோவில்களில் உள்ள கோசாலைகள் மற்றும் பசுக்களின் பராமரிப்பை முறைப்படுத்த வேண்டி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தான், கோவில் கோசாலைகளின் பரமாரிப்பை சோதனைச் செய்ய அமைத்த குழுவின் சட்ட உரிமைக் கட்டளையை Mandate) நீட்டித்து, யானைகளையும் அவற்றின் பராமரிப்பையும் கூட பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து, கோவில்களிலும், தனியார் இடங்களிலும் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் நிலையைத்தான் நாம் பார்த்தோம்.

Lakshmi the elephant-5Sunder the Elephant-4

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் துன்பம் மிகுந்த நிலை தமிழகத்தில் மட்டும் அல்ல; இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், தாய்லாந்து, இலங்கை என்று உலக அளவில் பல நாடுகளிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்பது ஊடகச் செய்திகளின் மூலமும், ஆவணப்படங்களின் மூலமும் தெரியவருகின்றது.

 

இந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களில் சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் பற்றிய பிரசனைகள் எழுப்பப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் சில வழக்குகளைப் பார்ப்போம்.

 

மஹாராஷ்டிரம்

 

மஹாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் உள்ள ஜோதிபா கோவிலில் சுந்தர் என்கிற யானை தன்னுடைய 8 வயதிலிருந்து (2007 முதல்) இறைப்பணி செய்து வந்தது. இந்த யானையை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் வினய் கோரே ஜோதிபா கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அதற்கு வாய்த்த பாகன் ஜமீர் முறையான பயிற்சியற்றவராதலால், கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானது சுந்தர். சுந்தர் கொடுமைப்படுத்தப்படும் தகவல்கள் PETA (People for Ethical Treatment of Animals) என்கிற பிராணிகள் நல அமைப்பிற்குக் கிடைத்தன. அவ்வமைப்பு உடனடியாக மஹாராஷ்டிரா வனத்துறையிடம் புகார் அளித்தது. இதனிடையே பாகன் ஜமீர் மேல் நிறைய புகார்கள் எழுப்பப்பட்டதும், கோவில் நிர்வாகம் ஹைதர் அபூ பக்கர் என்கிற 18 வயது பாகனையும் அவனுக்கு உதவியாளனாக அதீஃப் என்கிறவனையும் வரவழைத்து சுந்தரைக் கவனிக்கச் செய்தது. அவர்களும் சுந்தரைக் ஒடுமைப் படுத்தினர். சரியான சத்துணவின்றியும், முறையான மருத்துவ சிகிச்சையின்றியும், சுந்தர் வலியிலும் வேதனையிலும் துன்புற்றது.

 

அதனைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் விலங்கு மருத்துவர்களும் கோலாபூர் சென்று சுந்தரைப் பரிசோதனை செய்தனர். ஆகஸ்டு 2012-ல் நடத்தப்பட்ட பரிசோதனையில், சுந்தர் எடை குறைவாகவும், உடலில் காயங்களுடனும், காதில் இரும்பு அங்குசத்தால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட ஓட்டையுடனும், கால்களில் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால் ஏற்பட்ட புண்களுடனும் வலியுடனும் வேதனையுடனும் இருப்பது தெரிந்தது. பாகனால் துன்புறுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. அதன் விளைவாக, சுந்தரை கர்நாடகத்தில் உள்ள வனவிலங்குகள் காப்பகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு நாக்பூர் தலைமை வனக்காப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது. அதைக் கொண்டுசெல்வதற்கான செலவை PETA அமைப்பு ஏற்றுக்கொண்டது. இருப்பினும், நாக்பூர் தலைமை வனக்காப்பாளர் அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

 

அதனைத் தொடர்ந்து, விலங்ககங்களுக்கான அதிகார மையத்தின் அதிகாரிகள் அக்டோபர் 2012-ல் கோலாபூர் வந்து சுந்தரைப் பரிசோதனை செய்தனர். அவர்களின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சகம், இறுதி உத்தரவு இடப்படும் வரை, சுந்தரைத் தற்காலிகமாக கர்நாடக வனவிலங்குகள் காப்பகத்திற்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும் மஹராஷ்டிர அரசு சுந்தரை இடமாற்றம் செய்யவில்லை.

Sunder the Elephant-3

யானையைக் கோவிலுக்கு நன்கொடையாக அளித்த அரசியல்வாதி வினய் கோரே, தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சுந்தரைக் கோவிலிலிருந்து எடுத்துச் சென்று வாரணாநகர் என்னுமிடத்தில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் சுந்தரைச் சிறப்படுத்தி வைத்தார். சுந்தரின் துன்பங்களும், வேதனைகளும் தொடர்ந்தன.

 

இரண்டு உத்தரவுகள் நிறைவேற்றப்படாத நிலையில், டிசம்பர் 2013-ல் PETA அமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில், சுந்தரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தது. சுந்தரின் இடமாற்றம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான தண்டனையும் தரவேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

Sunder the Elephant-2

இதனிடையே, PETA உலகளவில் பிரபலமான பலம் வாய்ந்த அமைப்பு என்பதால், பால் மெகார்டினி, அமிதாப் பச்சன், மாதுரி தீக்ஷித், பமேலா ஆண்டர்ஸன், அர்ஜுன் ராம்பால், மாதவன், குல்ஷன் கோவர் போன்ற திரைப் பிரபலங்களை வைத்து சுந்தரின் விடுதலையை முன்னிறுத்தி பெரும் பிரச்சாரம் மேற்கொண்டது. இதன் விளைவாக சர்வதேச அளவில் சுந்தரின் நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

சுந்தரைக் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய வினய் கோரே, சுந்தரின் இடமாற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று PETA அமைப்புக்கு எதிராக மனு சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 6 எப்ரல் 2014 அன்று சுந்தரைக் கர்நாடகத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மழைக்காலம் ஆரம்பமாவதற்குள் இடமற்றம் செய்ய வேண்டும் என்று கூறியது.

Sunder the Elephant-1

அதனைத் தொடர்ந்து வினய் கோரே, உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 21 ‘மே’ 2014 அன்று, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, சுந்தர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

கோலாப்பூரிலிருந்து கர்நாடகம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசியப் பூங்காவிற்கு சுந்தர் இடமாற்றம் செய்யப்பட்டது. பக்கர்கட்டா தேசியப் பூங்காவுக்கு வந்தடைந்தவுடன், சுந்தரை 13 யானைகள் வவேற்று வனவுயிரினங்கள் மீட்பு மற்றும் புனர்வழ்வு மையத்திற்கு(WRRC) கொண்டு சென்றன. தற்போது சுந்தர் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடல்நலனில் முன்னேற்றத்துடன் காணப்படுகின்றது.

 

கர்நாடகம்

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள CUPA (Compassion Unlimited Plus Action) என்கிற அமைப்பு, ஃபிப்ரவரி 2013-ல் “பிச்சை எடுப்பதற்கும், காட்சிப்பொருளாக நடத்தப்படுவதற்கும், உர்வலங்களில் ஈடுபடுத்தப்படுவதற்கும் சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளைப் பயன்படுத்துவதை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும்” என்று கோரிய மனு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்தது.

 

வழக்கை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் சம்பந்தப்படடவர்கள் அனைவரையும் கொண்டு, சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பிச்சை எடுப்பதற்கும், காட்சிப்பொருளாக நடத்தப்படுவதற்கும், உர்வலங்களில் ஈடுபடுத்தப்படுவதற்கும், பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் விதமாக, வழிகாட்டுதல்களைத் தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கு உத்தரவிட்டது.

 

2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தின் நகர்ப்புறம் சார்ந்த வனப்பிரதேசங்களில் 20க்கும் மேற்பட்ட யானைகள் விபத்துகளில் இறந்தன. தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்திக்குறிப்பை தானே பொதுநல மனுவாக கவனத்தில்கொண்ட உயர் நீதிமன்றம் அரசுக்கும், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் பதில்தரக்கோரி அறிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வழக்கு நடந்தது. இறுதியாக 8 அக்டோபர் 2013-ல் கர்நாடக யானை பணிக் குழு (Karnataka Elephant Task Force) அளித்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவற்றைக் கவந்த்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் அதனடிப்படையில் சில கட்டளைகளையும் பிறப்பித்தது. பணிக்குழு சிறப்படுத்தப்பட்ட யானைகளின் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

 

தமிழகம்

 

பிராணிகள் நல ஆர்வலர் தொடுத்திருந்த வழக்கின் தொடர் விசாரணை இம்மாதம் 22-ம் தேதி மீண்டும் நடத்தப்பட்டது.  மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கோவில்களில் உள்ள யானைகளை பராமரிக்க அந்தக் கோவில் நிர்வாகத்தினரால் முடியுமா? என்பதை வனத்துறை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்த பின்னரே, வனவிலங்குகளைக் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். வனப்பகுதியில் யானைகள் சிக்குகின்றன. அந்த யானைகளின் உடலில் ‘மைக்ரோ சிப்’ (MICRO CHIP) என்கிற கண்காணிப்பு கருவி பொருத்தினால், அந்த யானை எங்கெல்லாம் செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும். ஆனால், அவ்வாறு ஆய்வு செய்ய வனத்துறையிடம் ‘ஸ்கேனர்’ கருவிகள் இல்லை. அதனால், இந்த வசதிகளைச் செய்ய அரசுக்கு உத்தரவிடவேண்டும். கோவில் யானைகள், மாடுகள் அவற்றின் குட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைப்பது அவசியமாகும்’  என்று வாதிட்டார்.

 

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன்,  “கோவில் விலங்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கக் கடந்த 20-ஆம் தேதி மாநில அளவிலான ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவிலும் இதேபோல குழுக்கள் அமைக்கப்படும். அதற்கு 2 மாத கால அவகாசம் தேவைப்படும்” என்று கூறினார்.

 

திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவில் யானை கோமதியின் துன்பம் நிறைந்த நிலையும் விசாரணைக்கு வந்தது. அந்தக் கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞரின் வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.

 

அனைவரின் வாதங்களைடயும் கேட்ட பிறகு, “வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை, வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தவேண்டும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். மேலும், கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர் கோவில் யானை உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. தற்போது சிகிச்சைக்கு பின்னர், மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. எனவே, அந்த கோவில் யானை எந்த நிலையில் உள்ளது? என்பதை விலங்குகள் நலவாரியம் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

 

இந்த மைக்ரோ சிப் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பழனியில் லக்ஷ்மி என்கிற 58 வயது யானையை சௌந்திரராஜன் என்பவர் வைத்திருந்தார் என்று பார்த்தோமல்லவா? அந்த யானை அவரிடமிருந்து மீட்கப்பட்டு தற்போது புனர் வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்த யானையை இந்திய விலங்குகள் நலவரியம் மீட்பதற்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்தது.

 

சௌந்தரராஜன் லக்ஷ்மியைப் பிச்சை எடுக்க வைப்பதற்காக சாலையில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது லக்ஷ்மி கால்களில் புண்களுடன் கஷ்டப்படுவதைப் பார்த்த சில பிராணிகள் நலவிரும்பிகள், அவரிடம் லக்ஷ்மியைப் பற்றி விசரித்துள்ளனர். அவர் அவர்களிடம், லக்ஷ்மி நீரிழிவு நோயினால் கஷ்டப்படுவதாயும் அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் அளவுக்குத் தன்னிடம் வசதியில்லை என்றும் கூறியுள்ளார். அவர்கள், சிகிச்சைத் தரும் பிராணிகள் நல அமைப்புகளிடம் யானையைத் தர சம்மதமா என்று கேட்டதற்கு, சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து இந்திய விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை எடுத்தபோது, அவரிடம் இருந்த உரிமைச் சான்றிதழில் இருந்த தகவல் வேறு, யானையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்பில் இருந்த தகவல் வேறு, என்பது தெரிந்தது. அதாவது மைக்ரோ சிப்பில் யானையின் பெயர் இந்திராணி என்று இருக்கையில், அவருடைய உரிமச் சான்றிதழில் லக்ஷ்மி என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, சௌந்தரராஜன் உரிமைச் சான்றிதழை யாரிடமிருந்தோ பணம் கொடுத்து வாங்கியிருக்க வாய்ப்புள்ளது. உரிமைச் சான்றிதழ் வழங்கும் வனத்துறை அதிகாரி நேர்மையாக இருக்கும் பக்ஷத்தில் அவர் இந்திராணி என்கிற பெயரில் தான் சான்றிதழ் தந்திருக்க வேண்டும். ஆகவே, சௌந்தரராஜன் இந்திரணியை எங்கிருந்து வாங்கினார் என்பதும், லக்ஷ்மி (இறந்து போன யானையாகக் கூட இருக்கலாம்) என்கிற பெயருள்ள சான்றிதழை யாரிடமிருந்தாவது வாங்கினாரா என்பதும், வனத்துறை அதிகாரிகள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதும், மேற்கொண்டு விசாரணையில்தான் தெரியவரும்.

 

 

(தொடரும்)          

Series Navigationபடித்தோம் சொல்கிறோம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரைஎங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *