குற்றமே தண்டனை – விமர்சனம்

This entry is part 4 of 19 in the series 2 அக்டோபர் 2016

 

“இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா.

இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற மனப்போக்கு இன்றைய காலகட்டத்தின் மனப்போக்காகிவிட்டது.

காட்சிகள் மூலமாக கதை சொல்வது நேர்த்தியாக இருக்கிறது. பத்து ரூபாய்த்தாளை தேடி எடுத்து ஒட்டும் விதார்த் வாயில் சிகரெட். செயின் ஸ்மோக்கர். இந்த காட்சியே ஒரு குறியீடு தான். சமீபமாக ஒரு கோரிக்கை இணையத்தில் பார்த்தேன். லிவர் , கிட்னீ ஒருவருக்கு தேவைப்படுகிறது. பணம் தந்து உதவ முடியுமா என்று உள்ளம் உருக கேட்டிருந்தார்கள். கிட்னி தேவைப்படும் நோயாளி இதற்கு முன் மொடாக்குடியராக இருந்தாராம்.  குடித்து குடித்தே காசையும் அழித்து கிட்னி கெடுத்துவிட்டு உதவி என்று மீண்டும் பணம் கேட்பதைத்தான் இந்த காட்சி உணர்த்துகிறது என்று கொள்ளலாம். நியாயமாக அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவனை தயங்கி நிறுத்துவது இந்த குறியீடு தான்.

“ஹரிஜன்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது, பெண்கள் பின் மாலைகளில் வெளியே செல்லக்கூடாது, குட்டை பாவாடை அணியக்கூடாது.” என்று முழங்குபவர்களில் ஒருவர்  விபத்தில் சிக்கி கோமாவில் விழுந்தால் அவரை காப்பாற்றும் பொருட்டு அதே ஹரிஜனங்களிடமும், பெண்களிடம் உதவிகள் கேட்கிறார்கள். எல்லா தத்துவம் சார்த்த சிக்கல்களும் அறம் சார்ந்த சிக்கல்களே.

“என் தகுதிக்கெல்லாம் நான் உன்னை கிட்ட சேர்த்ததே என் தப்பு தான்..” என்கிறார் ஸ்வேதா. உடனே கலாச்சார பாதுகாவலர்களும், பெண்ணிய சிந்தனையாளர்களும் எழுந்து ‘அது அவளோட தன்னம்பிக்கை.. தோணுறதை பேசுறது கருத்து சுதந்திரம். அதுக்காக கொல்லனுமா?  ஆண் நெடிலா? பெண் குறிலா? ரிஜெக்ஷனை ஏத்துக்குற மனப்பக்குவம் ஆண்களுக்கு வேணும்.. ஆண்களெல்லாம் பயிற்றுவித்த நாய்கள் ‘ என்றெல்லாம் கொடி பிடிக்கலாம்.

“என் தகுதிக்கெல்லாம்……………..” என்று பேசிய ஸ்வேதாவை எடுத்துக்கொள்ளலாம். எது தகுதி? என்ன தகுதி? தகுதி என்பதன் அளவுகோல் அதாவது ஸ்கேல் என்ன? எத்தனை ஆண்கள் தன் பின்னால் சுற்றுகிறார்கள் என்கிற கணக்கா??

அப்படியானால் ஒரு கேள்வி. பென்சில் போன்ற உடலமைப்பு கொண்ட பெண், தைராய்டு கோளாறால் கொஞ்சம் பூசினாற்போல் மார்பு விம்மி, பிருஷ்டம்  சதைப்பிடிப்பாகியிருந்தால் அதற்கு பெயர்  உடல் நலக்குறைவா? அல்லது தகுதியா?

“தகுதிக்கெல்லாம்…” என்பது நம்மை யார் தேடுகிறார்கள் என்பதில் இருந்து உருக்கொள்கிறது என்றால், தேடுகிறவர்களின் தகுதியைத்தானே பார்க்க வேண்டி இருக்கிறது. எம்.டிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஸ்வேதாவை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள நினைத்திருக்கலாம்.  ஸ்வேதாவுடன் படுக்கையை பகிர்ந்தவன் ஸ்வேதாவை திருமணம் செய்ய விரும்பவில்லை. ஸ்வேதாவை படுக்கைக்கென‌ பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். ஸ்வேதா மீது நம்பிக்கை வைத்து திருமணம் செய்ய நினைக்கும் ஒரே ஆள் விதார்த்தான். ஆனால் விதார்த்தை ஸ்வேதாவே வேண்டாமென்கிறார். அவமானப்படுத்துகிறார். அப்படியானால் ஸ்வேதாவின் உண்மையான‌ தகுதி என்ன? ஸ்வேதா போன்ற பெண்கள் “என் தகுதிக்கெல்லாம்…” என்று பேசுவது எதை குறிக்கிறது?

எம்.டி கொல்லவில்லை. ஸ்வேதாவின் காதலனும் கொல்லவில்லை. ஆனால், எம்.டிக்கு 35 லட்சம் செலவு. காதலனுக்கு ஆயுள் தண்டனை. விதார்த் தப்பிவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், உடன் வேலை பார்த்த பெண்ணை திருமணம் செய்து எங்கோ நிம்மதியாக வாழ்வதாக காட்டுகிறார்கள். இந்த பின்னணியில் ‘குற்றமே தண்டனை’ பொறுத்தமான தலைப்பாக தெரியவில்லை. குற்றம் ஓரிடம், தண்டனை ஓரிடம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

– ஸ்ரீராம்

Series Navigationகவிதைகள்மொழி…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *