விலாசம்

This entry is part 10 of 19 in the series 2 அக்டோபர் 2016

அவன் அந்த விலாசத்தை தேடினான். 11, முத்துக்கிருஷ்ணன் தெரு
அசோக் நகர்.

அங்கு வந்து நின்றான். ஒன்றிரண்டு பேர் தவிர தெருவில் யாரும் இல்லை.

தேடினான். கொஞ்சம் தடுமாற வேண்டியிருந்தது. ஆனால், இறுதியாக மாட்டிக்கொண்டது. தனி வீடே தான்.

வீட்டு வாசலை வந்தடைந்தான். கதவு லேசாக திறந்திருந்தது.

வேறொரு சமயமானால், கதவைத்தட்டி, அனுமதி கேட்டு, கிடைக்கும்வரை வாசலில் காத்திருந்திருப்பான். ஆனால், அன்று….

திறந்திருந்த கதவினுள் நுழைந்து, உள்பக்கம் தாழிட்டான். வீட்டில் எங்கும் இருள். கண்ணாடி ஜன்னலிலிருந்து வெளிச்சம் பலகீனமாக நுழைந்து தரையில் விழுந்திருந்தது. அதன் கனவுகள் தூசிகளாய் இறங்கிக் கொண்டிருந்தன. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது.

டிவி, அணைக்கப்பட்டிருந்தது. பிலிப்ஸ் மியூசிக் சிஸ்டம் இருந்தது. பெரிய அலமாறி. அதன் மேல், ஏகத்தும் புகைப்படங்கள், புத்தகங்கள், சின்னச்சின்னதாய் பீங்கான் பொம்மைகள், செயற்கை பூக்கள், புசுபுசு நாய் மற்றும் பூனை பொம்மைகள். உயர் ரக சோபா செட். அதன் மீதி விரிப்பு.

போட்டிருந்த செருப்பை கழட்டினான்.

‘யாராவது இருக்கீங்களா?’ என்று கேட்கலாமென்று தோன்றியது. ஆனால், கேட்கவில்லை.

‘எத்தனை நேரம் காத்திருப்பது!’

இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பான். யாரோ வரும் அரவம் கேட்டது. நின்றான். கவனித்தான்.

திரைச்சீலை தொங்கி மறைத்த அறைக்குள்ளிருந்து அவள் வந்தாள். நைட்டிதான் அணிந்திருந்தாள்.

கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய செயின் அந்த இருளிலும் தெரிந்தது. மார்பில் நல்ல பருமன். கேசம் சன்னமான ஒளியில், கண்ணாடி என மின்னியது.

அவள் இவனைப் பார்த்ததும் லேசாக அதிர்ந்தாள். ஆனால், ஏதும் சொல்லவில்லை. எக்கி அவனுக்கு பின்னே கதவைப் பார்ப்பது அவனுக்கும் புரிந்தது. அப்படியே சிலையென நின்றாள்.

அவன் நெருங்கினான். அருகே வந்து நின்றான். கன்னத்தை கிள்ளினான். அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவனது கை, அவள் கன்னத்திலிருந்து சரிந்து கழுத்துக்கு வந்தது. அவள் கண்களை திறக்கவில்லை. அவன் கை மெல்ல மேலும் சரிந்து, மார்பின் மேல் வந்து நின்றது. அவள் கண்கள் திறக்கவில்லை.

அவன் அவளது நைட்டியின் ஜிப்பை பிடித்து கீழே இழுக்க, மெல்ல மார்பின் பிளவு தெரிந்தது.

அவள் கண்கள் திறந்தன. அவனை பார்த்தாள்.

‘உள்ளே போகலாம்’ என்றாள்.

அவன் அவளை, மார்பில் கைவைத்தபடியே தள்ள,  அப்படியே பின்னால் நடந்தாள். அவன் பின்னே, அந்த திரைச்சீலை சரிந்து விழுந்தது.

அரை மணி நேரம் கடந்த பின்னர், அவன் எழுந்தான்.

அவள் இன்னும் களைப்பாய் படுத்திருந்தாள். அவன் பாண்ட், சர்ட் அணிந்து பர்சிலிருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை உருவி அவளருகே படுக்கை மீது அவள் கண்களில் படுமாறு வைத்தபோது  தான் கவனித்தான்.அவளுடைய உடல் ஒரு முறை தூக்கிப்போட்டது. சற்றைக்கெல்லாம் அவள் வாயிலிருந்து நுரை வந்தது. அதன் பிறகு அவள் உடலில் எவ்வித சலனமும் இல்லை.

சுற்றிலும் பார்த்தான். படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையில், ஒரு கோப்பையில் கஷாயம் போல் ஏதோ இருந்தது. அவனுக்கு பயமாக இருந்தது. திரும்பி நடந்தான். கதவு திறந்தான்.

வெளியே வந்து கதவு சார்த்திவிட்டு சாலையில் இறங்கி நடந்தான். இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு விளையாட்டு மைதானம் அருகே நிறுத்தியிருந்த தனது பைக்கிற்கு வந்தான்.

சட்டை பாக்கேட்டிலிருந்த அந்த துண்டுச் சீட்டை எடுத்தான்.

11, முத்துக்கிருஷ்ணன் தெரு
அசோக் நகர்

என்றிருந்த காகிதத்தின் இடது ஓரம் லேசாக மடிந்திருந்ததை அப்போது தான் கவனித்தான். அதை லேசாக விரலால் நெகிழ்த்தினான்.

91, முத்துக்கிருஷ்ணன் தெரு
அசோக் நகர்

என்று இருந்தது.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationநினைவிலாடும் சுடர்தொடுவானம் 138. சமூக சுகாதாரம்
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *