அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

This entry is part 5 of 11 in the series 25 டிசம்பர் 2016

img_0066

முனைவர் மு.பழனியப்பன்,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறைத் தலைவர்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருவாடானை

கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், நீர்நிலை போன்றன மண்வள மேம்பாடு சார்ந்தன. கோயில் திருவிழாக்கள் பக்தி அடிப்படை மட்டும் வாய்ந்தன அல்ல. சமுதாயக் கட்டுமானம், சமுதாய ஒத்திசைவு ஆகியன சார்ந்துன.

இந்நிலையில் ஒரு கோயிலைக் காண்பதென்றால் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கண்டுவிட்டுச் சென்றுவிட  இயலாது. அதன் பருப்பொருள், நுண்பொருள் ஆகியனவற்றை உணர்ந்தாக வேண்டும். உணர்ந்ததை வெளியுலகிற்கு உணர்த்தியாகவேண்டும். இவ்வாறு  தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தக்கப் பின்னணியோடு ஆவணப்படுத்தும் முயற்சி தற்போது தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தமிழன்பர் அன்பு ஜெயா அவர்கள் தமிழகக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருவதிகை பற்றிய அவரின் பதிவை, மேற்சொன்ன அத்தனை உயர்ச்சிகள் சார்ந்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அந்நூலின் பெயர் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்பதாகும். மலேசியா நாட்டில் சேலாங்கூர் பகுதியில் அமைந்துள்ள திருபீடம் அமைப்பு இதனை வெளியிட்டுள்ளது.

அன்பு ஜெயா என்ற பெயரை  முதன்முதலாக மதுரைத்திட்டத்தின் சிலப்பதிகாரப் பதிப்புப் பணியாற்றிய பெருமக்களுள் ஒருவராக அவரைக் கண்டுகொள்ள முடிந்தது. முன்னேற்றமான  சிந்தனைக்குரியவர் அன்பு ஜெயா என்பதன் அறிகுறி அது. தொடர்ந்து பல கருத்தரங்குகள், சந்திப்புகள், இணைய இயங்கு வட்டம் போன்றவற்றில் அவர் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது.

அவர் திருவதிகை பற்றி எழுதியுள்ள இந்நூலில் மிக முக்கியமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக திருவதிகைக் கல்வெட்டுகளை அவர் மீள்பதிவாக்கம் செய்துள்ள முறைமை அவரின் வரலாறு சார் வளமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் திரிபுரம் எரித்த நிலையில் அவ்வெப்பத்தைத் தணிவிக்க வேகாக் கொள்ளைக்குச் சிவபிரான் சென்ற நாட்டுப்புற வழக்கும் நூலில் தரப்பெற்றிருப்பது உரிய மதிப்பினை மக்கள் இலக்கியத்திற்கும் அளித்துள்ள பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஏழு பகுதிகளைக் கொண்டுவிளங்குகிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர், கோயில் அமைப்பு, சுயம்புலிங்க வழிபாடு, தீரத்தங்களும் திருவிழாக்களும், திரிபுரங்களின் தோற்றமும் அழிவும், திருநாவுக்கரசு சுவாமிகள், கல்வெட்டும் திருப்பணிகளும், திரவதிகைப் பாடல்கள் ஆகியன உட்தலைப்புகளாக அமைக்கப்பெற்றுள்ளன. நூலின் இடை இடையே அழகான வண்ண நயமிக்க புகைப்படங்கள் இணைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருவதிகையை நேரடியாகக் கண்டதுபோல் ஓர் உணர்வு படிக்கும்போது ஏற்படுகிறது.

அன்பு ஜெயா இந்நூல் எழுதும்போது உருகி நின்ற இடம் மூலட்டானத்தி்ன் சுற்றுச்சுவர் பகுதியாகும். அங்குள்ள சிற்ப கலை நயங்களைக் கண்ட வண்ணம் அங்கேயே அன்பு ஜெயா நின்றிருந்திருக்க வேண்டும். எத்தனை மணிநேரம் நின்றாரோ. மேலும் திரிபுரம் அழித்த தேர்க்கோலத்தைக் கண்டு கண்டு அவர் மெய் உருகுகிறார். இராவணன் ஆணவமழித்த இறைவனை அவர் பெரிதும் போற்றுகிறார்.

இந்நூலின் கூடுதல் இணைப்பு திருநாவுக்கரசு சுவாமிகள். அவரின் தொண்டு, அவரின் உடன்பிறந்தார் திலகவதியின் சிறப்பும் உருவமும் இந்நூலில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. அப்பெருமாட்டி அழகுடன் வெள்ளைக்கலை உடுத்தி பூக்குடலையுடன் நம்மை வணங்குகிறார்.

அரிமோகினி கதை திருவதிகைக்கே உரிய கதை. இதுவரை வெளிப்படுத்தப்படாத கதை. இதுபோன்ற பற்பல சிறுகதைகளை உள்ளடக்கிய பெருநூல் இந்நூல். சைவம் தழைக்க வைத்த ஊர் திருவதிகை. அதிகை என்ற இவ்வூரின் பெயர் அதிகமான அளவில் சைவத்திற்குத் தொண்டு செய்தமையால் பெற்றதாகும். அதிகைக்கு ஒரு அன்பு ஜெயா. அதுபோல் மற்ற கோயில்களுக்கும் அன்பு ஜெயாக்கள் பெருகுக.

 

விலை- 120 ரூபாய்.

நூல் காந்தளகம், சென்னையில் கிடைக்கிறது.

 

Series Navigationஈரத் தீக்குச்சிகள்ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *