இரட்ணேஸ்வரன் சுயாந்தன்
=================
“மிளாசி எரிந்தது பனங்கூடல்.
காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்”
-‘நடனம்’- கருணாகரன் கவிதைகள்.
●
2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரணதரம்(தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும் போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை முஸ்ரிபா, செழியன், அனார், ஊர்வசி, மைத்திரேயி, ஆழியாள் முதலான ஈழக்கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆபிரிக்கக் கவிஞர் கெப்ரியல் ஓகராவின் கவிதைகளும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. கவிதைமீது உண்டான பெருவிருப்பினால் தட்டிக்கழிக்காது அனைத்தையும் வாசித்துவிடுவதுண்டு. அந்த வாசிப்பினால் தான் தமிழகக் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஈழக்கவிதைகளும் எனக்கு அறிமுகமாகியிருந்தது. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த கவிதைகளில் ஒன்று கருணாகரனின் “ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்” தொகுப்பிலிருக்கும், “யாருடைய வீடு” என்ற கவிதையாகும். மறுபடியும் அந்தக் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அவரது சொல்-பொருள் வீச்சு விமர்சன ரீதியில் ஏதோ ஒரு தாக்கத்தை என்னுள் உண்டாக்கிற்று. அதன் பின்னர் கருணாகரனின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை வாசித்த நேர்த்தியில் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனை இங்கு கூறக் காரணம் ஒரு கவிஞன் எங்களெதிரே இருக்கும் போதே அவரின் படைப்புக்களை எங்களது பாடப்புத்தகத்தில் படித்துள்ளோம் என்று அக்கவிஞனுக்கு அறிவித்துவிடத்தான்.
ஈழத்துக் கவிஞர் கருணாகரனின் கவிதைகள் மீது தீவிரமான கவிதை வாசிப்பாளர்களுக்கு இடையறாத பிரியம் எழுவது இயல்பான ஒன்றுதான். ஏனெனில் அவர் மண் சார்ந்த கவிஞர். கவிஞர் சேரனுக்குப் பிறகு “சேர்ந்த நிலம்” பற்றிய இடத்தில் இருந்து கவிதையை நகர்த்தும் வல்லமை கருணாகரனுக்குக் கிடைத்துள்ள சிறப்பு எனலாம். இவரின் அநேக கவிதைகளில் மனிதப் பண்புகளின் விசும்பல் பெருமளவில் விகாசமாகி வளர்ந்தேயுள்ளது. இந்தக் கட்டுரைக்கான தலைப்பை “கருணாகரனின் கவிதைகளிலுள்ள மனித உந்துதல்களும், வேறுசில பண்புகளும்” என்றே தலைப்பிட்டிருந்தேன். பின்னர் அவர்தம் கவிதையின் லாவகத்தைக் கட்டுரைகளில் தருவிப்பதற்காக மாற்றிவிட்டேன். ஏறத்தாள கட்டுரையின் பொருளும் அதேகதிதான்.
கருணாகரனின் கவிதைகளில் இடம்பெறும் வருணனைகள், உயிர்த்தெழுதல் பற்றிய ஓர்மைகள், வெறுமை பற்றியதான தோற்றப்பாடுகள், பாசிசம் என்ற உருவழிப்பு நிலை என்பன ஈழக்கவிதைகள் இலக்கியவுணர்வுடனான தொடர்புமுறையை (Form of Communication) மேலும் அதிகரித்துவிடச் செய்யும். யுத்தகால, யுத்தத்தின் பின்னரான கவிதைகள் என்ற காண்நிலையை வைத்து இவர்தம் கவிதைகளை ஆராயலாம். ஆனால் அது ஒரு நீளமான பகுப்பாய்வாகவும், சவால் மிகுந்ததாகவும் மாறலாம். ஆதலால் பொதுவாக கருணாகரன் கவிதையிலுள்ள நிலம் பற்றி நோக்கலாம்.
கவிதையில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் நாளைய அல்லது எதிர்வருங்காலங்களில் ஆவணப்படுத்தக்கூடிய ஒன்றாகும். War Poetry என்றெழுதும் கவிதைகள் சில நூற்றாண்டுகளில் Epic Poetry என்றழைக்கப்படுவதுண்டு. அதேபோலத்தான் ஒவ்வொரு நிலத்துக்குமான பண்பாட்டியைபாக்கங்களை (Accultration) கவிதைகள் பரந்து வெளிக்கொணர்ந்து விடுகின்றது. அந்த இடத்தில்தான் கவிஞனின் ஆளுகை நிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் விடுகின்றது.
‘பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம்.
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை.’
இக்கவிதை 2012 ல் எழுதப்பட்டிருந்தது. “வன்னி மரணவெளிக்குறிப்புகள்” என்ற கவிதையில் வன்னிப் பெருநிலப்பரப்புப் பற்றிய விவரணம் எவ்வளவு பிரக்ஞைபூர்வமானது. யுத்தம் முடிந்திருந்தாலும் அங்கு நடந்த மரண அவலங்கள் பற்றி எத்தனை முறை எழுதினாலும் துயரம் மீந்துவதுதான் உறுதி. பிணங்கள் என்ற ஒரு ஜடத்தையும், சாவு என்ற உணர்வுநிலை விரக்தியையும் முன்வைத்தே இக்கவிதை நகர்ந்து விடுகின்றுது. ‘உயிரற்ற பிணம், உயிருள்ள சாவு’ அதாவது எங்கு பார்த்தாலும் துயரத்தின், துன்பத்தின் ஞாபகங்கள் கூடவே ஒட்டிக்கொண்டது வாழ்க்கை என்பது போன்ற துன்பியல் (Tragedy) உணர்வுடன் மண்ணை முன்னிறுத்திக் கவிதையாற்றி விடுகிறார்.
தோமஸ் ஹார்டி (Thomas Hardy) எனும் இங்கிலாந்துக் கவிஞரின் கவிதைகளில் வருகின்ற பாத்திரங்களின் பிரயாசை, (Character Struggling), மற்றும் சமூகச் சூழ்நிலை (Social Circumstances) முதலானவற்றை நிலம்சார்ந்து கூறும் வல்லமை மிக்கவராகக் கருணாகரன் உள்ளார்.
“நாங்கள் கூரைகளற்ற
வெளியில் அலைந்தோம்.
போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை.”
அலைதலுக்கான போதையில் வெற்றி என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான இலட்சியம். ஆனால் இங்கு பாத்திரங்களின் போராட்டம் மீது சமூக இலக்கற்ற வெற்றிகள் திணிக்கப்பட்டு எதுவும் நிரந்தரமின்றி வெறுமையாக்கப்பட்டுள்ளது.
தோமஸ் ஹார்டியின் “The man he killed” என்ற கவிதை மிகவும் பிரபலமானது. இதில் தனிமனிதப் போராட்டம்/உணர்வுந்துகை காட்டப்பட்டிருக்கும். மனங்கவரும் பழமையும், ஆர்வமும் யுத்தத்தின் நிலைப்பாடுகள் “Quaint and curious war is” என்ற வரியில் வெளிக்கொணரப்படுகிறது. இந்தத் தன்மையில் இருந்து தான் கருணாகரனின் கவிதைகளிலுள்ள வெளிப்பாட்டுத் தன்மையைக் காணவேண்டி வரும். ஹார்டி தனிமனித உணர்வினை அகநிலை விவாதங்களுக்குள் விட்டுச் சென்றார். ஆனால் கருணாகரன் அதனை நிலம் சார்ந்த கருப்பொருளுடன் சேர்த்து கவிதைக்குள் காணப்படும் உபகவிதையுடனான உணர்வுடன் தான் கூறமுனையும் விடயங்களை முன்னிறுத்துகின்றார்.
1. ஆற்றலுள்ளோரை அழைத்துச் சென்றன பாதைகள்.
அவர்களுக்குக் கடல் வழி திறந்தது.
2. புதைகுழிகள் எழுந்த சனங்களையும் இருந்த சனங்களையும் மூடின.
3. பிணங்களாலும் புதைகுழிகளாலும் நிறைந்தது மாத்தளன் மணற்பரப்பு.
4. தென்னாசியாவின் மிகப்பெரிய கொலைக்களம் நானிருக்கும் இந்த மலக்கரை என்று மணலில் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.
நானிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்தின் அவலப் பாஷையை கவிதைகளில் கரைத்துவிடுகிறார் கவிஞர். கடல், மணல், புதைகுழி, மலக்கரை போன்ற தொடர் சொற்கள் கவிதைகளில் இடையிட்டு வந்தாலும் தனது கவிதைகளின் ஆழ்மன ஓட்டங்களைக் கூற இந்த நிலம் பற்றிய கோர்வையாக்கம் சிறப்பான வெளிப்பாடு என்றே கூறவேண்டும். வெளியிலிருந்து காணும்போது இந்த சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் தொடர்புபட்ட நிலத்திலிருந்து மேற்சொன்ன விடயங்களை அனுபவித்தால் அசாதாரணமானது என்ற எண்ணமே மேலோங்கும். இதே போன்ற கருத்தினாலான கவிதைகளைக் கவிஞர் சேரனும் எழுதியிருந்தார்.
“கடவுளரும் பிசாசுகளும் இணைந்து புரிந்த இனப்படுகொலையின் ஒரு குருதித்துளி பாலைப்பட்டினத்தின் ஒதுக்குப் புறத்தில் தெறித்து வீழ்ந்தது”
(‘மீண்டும் கடலுக்கு’ தொகுப்பு- சேரன்)
சேரனின் அநேக கவிதைகளில் பாலைநிலத்தின் அழுகை காட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் நெய்தல் நில மனவோட்டத்தில் இருந்து என்றும் நீங்கியதில்லை.
அதே போலத்தான் கருணாகரனும் தனது கவிதைகளின் வெளியை வெவ்வேறு தளத்தினின்று விபரித்திருந்தார். இதனை எடுத்துரைப்புக் கவிதைகள் (Narrative Poems) என்றும் கூறலாம். அதாவது சம்பவத்தை நேர்முக வருணனை போல துயர வெளிகளில் இருந்து அதற்குள் மூழ்கிவிடாமல் இடம், பொருள் என்பவற்றைப் பட்டை தீட்டிக் கவிதைகளை நகர்த்துவதாகும்.
ஒரு நிலத்தின் வளங்கள் என்பது பரந்துபட்டது. அதில் மனிதனை விலக்காக எடுத்தால், அவனுடன் பயணிக்கும் உணர்வுகள், காதல், சம்பிரதாயம் அனைத்தையும் தவிர்த்துவிடலாம். நிலம் எனும் கவிதைப் பொருளில் மனிதன் தவிர்ந்தால் அங்கிருக்கும் ஏனைய பொருட்கள் மனிதனுக்கான பாடுபொருளாகவும், உதாரண சமிக்ஞையாகவும் இருக்கலாம் அல்லவா. (காடு, மலை, மணல், நீரூற்று முதலானவை)
“எரியும் காட்டில் பழங்களையும் விதைகளையும் சேகரித்துக் கொண்டிருக்கும் குருவியிடம் காட்டின் ஆனந்தத்தைப் பற்றி யாரோ கேட்டுக் கொண்டிருந்தனர்”
(கருணாகரன் கவிதைகள்)
கருணாகரனின் கவிதைகள் எப்போதும் அழுத்தம் திருத்தமாக ஒரு வெளியை நிறுவி வைத்திருக்கும். அதுதான் நிலம் பற்றிய பற்றுகை. அதில் அழகியலுணர்வுகளை (Aesthetic Sensibility) உள்நுழைக்கும் வல்லமை கிடைக்கின்ற போது கவிஞனுக்கான அங்கீகாரம் ஏனைய மொழிக் கவிதாவாதிகளால் விரைவில் கிடைத்துவிடுகிறது. இது கருணாகரனுக்கு வாய்த்துவிட்டது. அல்லது பேறாகிவிட்டது. இதனால்தான் இவர்தம் கவிதைகள் மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது போலும்.
ஆரம்பத்தில் நடனம் என்ற கவிதையில் கருணாகரன் கூறியது போலவே தனது கவிதைகளால் தானே மிளாசி எரிகிறார். அதில் நிறைய நிலத்தையும், கொஞ்சம் காட்டையும், வானத்தையும், இன்னும் கொஞ்சம் மனிதர்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து பற்றி எரிய வைக்கிறார் கருணாகரன். கருணாகரன் சமகால ஈழக்கவிதைக் கடலின் திமிங்கலம். காலாவதியாகத நவீனத்துவத்தின் புதுமை என்றும் கூறலாம்.
=====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.
- வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்
- ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..
- ஈரத் தீக்குச்சிகள்
- அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்
- ஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்
- தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9
- தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்
- திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்