ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

This entry is part 4 of 17 in the series 19 மார்ச் 2017

பிச்சினிக்காடு இளங்கோ

okoni-payani அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான கடலோர சமதளங்களில் அமைந்திருக்கிற நிலப்பகுதிதான் ஒகோனி..
ஷெல் நிறுவனம் இயற்கை வளமிக்க அப்பகுதியில் எண்ணெய் எடுத்ததால் ஒகோனி பகுதிக்குள்
1,தூய காற்றோ, பசுமை அடர்வுகளோ இல்லாத இடமாகிவிட்டது.
2, பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் கூடியிருக்கிறது.
3, பேராசைக்காரர்களால் ஒகோனிக்காரர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்
4, ஷெல் நிறுவனத்தின் துளையிடும் கருவிகள் ஒகோனியின் இதயத்தை ஆழமாகப் பிளக்கத்தொடங்கின.
5, வேளாண்மை நிலத்தை சின்னா பின்னமாக்கின
6, கார்பன் மோனாக்சைடும் விஷவாயுக்களும் சுவாச உறுப்புகளில் புகுந்தன.
இப்படி இன்னும் எழுதிச்செல்கிறார் கென் சரோ விவா. இதற்காகப்போராடி சிறைசென்ற பட்டதாரி.

ஒகோனியின் பரப்பளவு 404 சதுர மைல்களாகும். மக்கள் தொகை 5 இலட்சம் பேர். ஒரு சதுரமைலில் 1500 பேர் வாழ்கிறார்கள். உலகில் மக்கள் நெருக்கமிக்க பகுதிகளில் ஒகோனியும் ஒன்று. நைஜீரியாவில் ஒரு சதுர மைலுக்கு 300 பேர் வாழ்கிறார்கள். விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் வாழ்கிறார்கள். கட்டுக்கோப்பான ஒரு சமுகம். வெள்ளையர்கள் அவர்களை ஆக்கிரமிக்காதவரை அதாவது 1901க்கு முன்பு வரை இந்தக்கட்டுக்கோப்பு காப்பாற்றப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகளுக்குள் வெள்ளையர்கள் எங்கள் சமூக அமைப்பைத் தகர்த்துவிட்டார்கள் என வேதனையை பெருமூச்சாய் வெளியிடுகிறார் கென் சரோ விவா. வெள்ளையரின் ஆட்சி பெருந்துன்பமென்பது அவருடைய கூற்று. 1960-ல் வெள்ளையர் ஆட்சி (காலனிய) முடிந்து நைஜீரியா எனும் புதிய தேசம் அமைப்பு உருவானதால் ஒகோனியர்களையும் அதில் பிணைத்துவிட்டார்கள். நைஜீரியா 350 இனங்களின் தொகுப்பாக உருவானது. பிரிட்டனின் வணிகத்திற்கும், ஏகாதியபத்திய உணர்வுக்கும் ஏற்ற வகையில் பலத்தின் வழியிலும் வன்முறை வழியிலும் செயல்படும் நாடாக நைஜீரியா மாறியது. இந்நிலையில் சிறுபான்மை இனமான ஒகோனியை ஒத்தவர்கள் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. விருப்பங்கள் பலியிடப்பட்டன.
1958-ல் ஒகோனியில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றுமுதல் குறைந்தளவாக 100பில்லியன் டாலர் மதிப்புடைய எண்ணெயும் இயற்கை வாயுக்களும் கொண்டுசெல்லப்பட்டன.
ஒகோனியிலிருந்து பெற்ற லாபத்தில் ஒகோனியர்களுக்கு எதுவுமில்லை என்பதுதான் கொடுமை. வேதனையான உண்மை.
சுரண்டல் எனும் ஏகாதிபத்திய தொழில்புத்தி வளமிக்க ஒகோனியையும் ஒகோனிய மக்களையும் பாழ்படுத்தி வீணடித்துவிட்டன.
7, நிலமும் வளமும் அருவிகளும் ஏரிகளும் மாசடைந்தன..
8, ஹைட்ரோ கார்பன் வாயுக்கள்,
மீதேன்,
கார்பன் மோனாக்ஸைடு,
கார்பண்டை ஆக்ஸைடு வாயுக்களால் படரும் புகைப்படலங்களால் இயற்கை
விஷமாகிவிட்டது.
9, அமில மழையும் எண்ணெய் பொங்குதலும் எண்ணெய் கிணறு வெடிப்புகளும் ஒகோனி பூமியை தரிசாக்கிவிட்டன.

எச்சரிக்கையான ஒன்று………

10, வேளாண்மை நிலங்களின் ஊடேயும் கிராமங்களின் ஊடேயும் செல்லும் மிக அதிர்வுடைய எண்ணெய் குழாய்கள் ஆபத்தான வகையில் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன.. (இது மிக மிக முக்கியம்.)
11, உயிர்வாழ்க்கைச்சூழல் நாசமாகிவிட்டன.
12, விஷம் காடுகளை விழுங்கிவிட்டன.
13, காடுகள் இருந்த இடத்தில் பாழ்செடிகள் படர்ந்திருக்கின்றன.
14, மழைக்காடுகள் அழிந்தன
15, காட்டு விலங்குகள் செத்தொழிந்தன
16, கடற்செல்வங்கள் தொலைந்தன
17, அதி அழகாயிருந்த ஒகோனியப்பகுதி தூய காற்றில்லா சூனியம் ஆகிவிட்டது.
ஒகோனிப்பகுதியில் எங்கும் நீக்கமற நிகழ்வதும் அனுபவிப்பதும் மரணம் ஒன்றே.

நிலத்தின் மீதான ஒகோனியர்களின் உரிமை பறிக்கப்பட்டதாகவே வெம்புகிறார் சரோ விவா. அதுமட்டுமல்ல சிறுபான்மையாக இருப்பது பலவிதத்திலும் பாதிக்கிறது; பலவீனப்படுத்துகிறது என்பது அவருடைய வாக்குமூலம். சுயாட்சி உரிமைக்குரலை நைஜீரியா அரசு நிராகரித்துவிட்டதையும் பதிவுசெய்கிறார்.
18,எங்கள் நிலத்தை தோண்டியதற்கான வாடகை, எண்ணெய்க்கான சிறப்புத்தொகை எதுவும் எங்களுக்குக்கிடைப்பதில்லை.
இவ்வளவு தாதுவளமிக்க மண்ணில் வாழும் எங்களுக்குக் கிடைப்பது?
1, மின்சாரமில்லை
2, தூய குடிநீர் வழங்கும் அமைப்புகள் இல்லை
3 மருத்துவ மனைகள் இல்லை
4, நல்ல வீடுகள் இல்லை
5, பள்ளிகள் இல்லை
அடிமைத்தனத்திற்கும் இன அழிவுக்கும் ஆளாகிவருகிறோம் என்பது அவருடைய வெதும்பல்.
உயிரற்ற புள்ளிவிவரப்பட்டியலை கைமுதலாகக்கொண்டவர்கள், பேராசையால் தூண்டப்படுபவர்களாலும் , இக்குணம் நிறைந்த அருகில் உள்ளவர்களாலும் தொலைவில் உள்ளவர்களாலும் வேட்டையாடப்படுகிறோம் என்பது அவருடைய கூற்று.
இப்படி ஒகோனிப்பகுதியும் மக்களும் படும் துன்பத்தை; உயிர்க்கெதிரான ஆபத்தை தன் வாழ்க்கையோடு இணைத்து எழுதுகிறார் ஆசிரியர். அவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர், பதிப்பாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். அதுமட்டுமல்ல ஆப்பிரிக்காவில் சிறுபான்மை இன உரிமைச் சங்கத்தினுடைய(Ethnic Minority Rights Organisation of Africa-EMIROAF) மற்றும் உயிர்வாழ்விற்கான ஒகோனி மக்களின் இயக்கத்தினுடைய ((Movement For the Survival of the Ogoni People-MOSOP) தலைவனாகவும் இருந்தவர்.
வன்முறையற்ற போரட்டங்கள் வழி சுதந்தரம்,சமாதானம்,நீதி பெறுவதாகும்.
1941-ல் பிறந்தவர். 1947-ல் ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால காலனிய மேலாதிக்கத்திற்குப்பிறகு ஒகோனிகளுக்குத் தங்களைத்தாங்களே ஆளும் உரிமை கிடைத்தது. ஒகோனிக்களுக்கு சுயாட்சி உரிமை கிடைக்கும்போது கென் சரோ விவாவிற்கு ஆறு வயது. குழந்தைப்பருவத்தில் ஒகோனியர்கள் சுயாட்சி உரிமையைப் பயன்படுத்துவதைப் பார்த்தாக பதிவுசெய்கிறார். ஆதிக்கத்தின்கீழ் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்க முடியாத சீர்சிறப்புகளை சுயாட்சி உரிமையைப் பயன்படுத்தி ஒகோனிக்கள் அனுபவித்ததையும் நினைவுகூர்கிறார். ஒகோனி முன்னணித்தலைவர்களுடன் பழகும் வாய்ப்பையும் பெற்றிருந்தார். அக்காலங்களில் ஒகோனி
1,ஆசீர்வதிக்கப்பட்ட்தாயிருந்தது.
2,வளம் நிறைந்த மண், தானியங்களும் காய்கறிகளும் பழங்களும் ஏராளமாக விளைந்தன.
3, தெளிந்த நீர் ஊற்றுக்களில், கடலில் மீன் வளம் நிறைந்திருந்தது.
4, மீன் வளமும் கடல் வளமும் நிறைந்திருந்தது.
5,ஒகோனியரிடம் இல்லாதது ஒன்றுமில்லை.
6, ஒகோனிகள் எக்காலத்திலும் உழைப்பில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
7, நிலம், அருவி, கடல் கருணையால் ஆனது அவர்களது வாழ்க்கை.
8, “பயன் விழைந்த”தாயிருந்தது அவர்களுடைய உழைப்பு.
அவர்கள் பாரம்பரியம். அந்த பாரம்பரியத்தை உள்வாங்கி அனுபவித்திருக்கிறார் சரோ விவா.
1951-ல் புகழ்பெற்ற கல்விச்சாலையான உமுயாஹியா அரசுக்கல்லூரியில் பயின்றார். 300 மாணவரிடையே ஒரே ஒகோனிய மாணவன் சரோ விவா.
கடின உழைப்புடனும் விசால மனத்துடனும் உண்மையுடனும் மாற பிரிட்டீஷ் பப்ளிக் பாரம்பரியம் உதவியது என்கிறார்.
‘வசப்படுத்துக’ என்பது உமுயாஹியாவின் முக்கிய சொல். அங்கே பதில்களைத்தேடவும் உண்மையைக் கண்டடையவும் தூண்டப்படுகிறார். விவாதங்களில் ஈடுபட்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
1961-ல் உமுயாஹியாவைவிட்டு வெளியேறுகிறார். அதுவரை உமுயாஹியாவில் ஒரே ஒகோனியர் இவர்மட்டும்தான். திறமைசாலியான மாணவர்களில் இவரும் ஒருவர். உமுயாஹியாவில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததாம்.
மகிழ்ச்சியான இந்த வாழ்க்கையில் மனவேதனை தந்த சம்பவங்களாக அவர் கூறுவது
1, 1956-ல் கிழக்கு நைஜீரியாவில் தேசிய ஒருங்கமைப்பு இல்லாமல்போனது. சிறிய பிரதேசங்கள் ஒகோனியில் உருவானது. 1947 முதல் ஒகோனியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய மனநிலை இல்லாமல் போனது.
சமூக முன்னேற்றத்திற்கான சூழ்நிலையும் இல்லாதுபோனது

2, கிழக்கு நைஜீரியாவின் பெரும்பான்மை இனமான இக்போக்களின் விரோதத்தையும் பகையையும் ஒகோனிக்கள் பெற்றது

3, ஷெல் நிறுவனத்தின் எந்திரங்கள் ஒகோனிக்களின் இதயத்தைப்பிளந்தன. வேளாண்மை நிலம் சின்னா பின்னமாக்கப்பட்டது . நச்சு வாயு சுவாச உறுப்புகளில் புகுந்தது.

இதை தொடக்கத்திலிருந்தே எதிர்த்தவர் சரோ விவா. புனை பெயரில் கடிதங்கள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
ஷெல்லின் நடவடிக்கைகள் ஒகோனிக்களின் நிரந்தர அழிவுக்கு காரணங்கள் என்பதை உணர்ந்திருக்கிறார் .
1962-ல் இபாதன் பல்கலைக்கழகத்தில் மாணவரானார். அன்று நைஜீரியா ஒரு சுதந்தர நாடு. அங்கேயும் ஒகோனிமணவர்கள் இருவர்தான். அங்கே உள்ளேயும் வெளியேயும் தன் இருத்தலை வெளிப்படுத்தினார். மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டார். தேர்வு இனத்தின் அடிப்படையிலேதான் இருந்தது. பெண்கள்மட்டும் அவருடைய அழகுக்கும் உயரத்திற்கும் செல்வத்திற்கும் முதன்மை இடம்கொடுத்து ஆதரித்தனர். பெரும்பான்மைமிக்க இனத்தின் ஆதிக்கம் பல்கலைக்கழகத்தில் இருந்ததுபோலவே நைஜீரியா நாட்டிலும் இருந்தது. ஹளஸா, புலாணி, இக்போ, யோருபா முதலான இனங்களின் போர்க்களமாக மாறியது நைஜீரியா. மற்ற எல்லா இனங்களும் நாட்டின் எல்லைகளுக்குத்துரத்தப்பட்டனர். பிறப்புரிமையை ஏதாவது அரசியல் அனுகூலங்களுக்காக கைமாற்றிக்கொள்ளத்தயாராக இருந்த சில முட்டாள் தலைவர்கள் பலவீனமான சமூகங்களிலிருந்து வலுவான இனங்களுக்கு கிடைத்தார்கள். சுதந்தரம், சமுத்துவம், சகோதரத்துவம் சரோவிவாவின் மனதில் பதிந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டிருந்த வேளையில் நைகர்தீர இனச்சமூகங்களின் சுயாட்சி உரிமையை பிரிட்டீஷ் காலனியவாதிகள் நிராகரித்தனர். நைஜீரியாவில் பெரும்பான்மையாக இருந்த சமூகங்கள் நைஜீரியாவின் செல்வதை உண்டாக்குகிறவர்களாக இல்லை. சிறுபான்மையினர்தான் நைஜீரியாவின் வளம்முழுவதையும் உண்டாக்குகிறார்கள். நைகர்நதி தீரங்களில்தான் இந்த வளம் உண்டாக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. நைஜீரியாவின் பேராசையும் அக்கறையும் இந்த வளங்கள் மீதுதான். மக்கள் மீதல்ல.
இந்தப்பேராசையால் 10 லட்சம்பேரைக்கொன்ற உள்நாட்டுச்சண்டை நைஜீரியாவில் நடந்தது.
1967-ஜூலை மாத்த்திற்கும் 1970 ஜனவரி மாத்த்திற்கும் இடையில் நடந்த உள்நாட்டுப்போரில் ஏறத்தாழ 30,000ஒகோனிகள் கொல்லப்பட்டனர்.
ஒகோனிகளிடம் எண்ணெய் வளம் இருந்தது என்பதே காரணம்.
எதிர்பாராமல் சரோ விவாவும் போரில் பங்கேற்றார். பேச்சு வார்த்தைகளின் வழி அமைதியின்மையை அகற்றமுடியும் என்று நம்பினார். ஆனால் நாடு யுத்த நாடாக மாறியது. கருத்து வேறுபாடுகளைத்தீர்ப்பதற்கு வன்முறைதான் வழியென ஏற்கப்பட்டது. அங்கிருந்த கூட்டு அரசாங்கத்தோடு இணைய சென்றார். அங்கிருந்து சமாதானத்தை நிறுவ போர்முனைக்குச்சென்றார். போராளியாக அல்ல. போரில் பாதித்த சாதாரண மக்களுக்கு உதவினார். இராணுவத்திற்கும் குடிமக்களுக்குமிடையே சுமுகத்தைக் கொண்டுவர, அமைதியை நிலைநாட்ட பாடுபட்டார்.
பின் நதிதீர மாநிலத்தின் ஆட்சி உறுப்பினராகவும் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
“நான் செயல்பட்டது ஒருவரிடமிருந்து நன்றியையும் கடப்பாட்டையும் பெறுவதற்காக அல்ல. எனக்கு அது கிடைக்கவும் இல்லை. நாட்டிற்கும் என் இனத்தைச்சேர்ந்தவர்களுக்கும் கடமை செய்ய முடிந்ததில் நான் மகிழ்ந்தேன்” என்பது கென் சரோ விவாவின் வாக்குமூலம். நீதிக்கும் சமத்துவத்திற்குமான இவருடைய உறுதியான வாதங்கள் ஆட்சியாளர்களுக்கு சகிக்கமுடியாமல் போனது.
1973 மார்ச்-21 ஆம் நாள் நதிதீர மாநில அரசிலிருந்து நீக்கப்பட்டார். ஆணையாராக பணிபுரிந்த நான்கு ஆண்டுகளில் ஒகோனிகளின் உண்மையான பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டார். நவீன வாழ்க்கைச்சூழ்நிலைகளைப்பெறவும் முன்னேற்றங்கள் கைவரப்பெறவும் கல்வி தவிர்க்கமுடியாத ஒன்றாக உணர்ந்தார். அதனால் கல்விபெறுவதற்கு ஒகோனிகளை ஊக்கப்படுத்தினார். 1970-ல் பொமு எண்ணெய் வயலில் 11ஆம் எண் கிணற்றில் வெடிப்பு ஏற்பட்டு அதனால் உண்டான நாசங்களை கண்ணால் பார்த்தவர் சரோ விவா. எண்ணெய் கிணறு வெடிப்பால்:
நீர்நிலைகள் விஷமாயின,.
காற்றுமண்டலம் மாசுபட்டது.
வேளாண்மை நிலங்கள் தரிசு நிலங்களாயின.
ஏற்பட்ட நஷ்டங்களுக்காக இழப்பீடோ, ஷெல் நிறுவணத்திடமிருந்து ஆறுதலோ ஆசுவாசமோ கிடைக்கவில்லை என்கிறார். மாறாக ஒகோனி மக்களை ஏமாற்றி நீதிமன்றத்தின் வாயிலாக தீர்க்கவே அதாவது ஏமாற்றவே ஷெல் நிறுவனம் செயல் பட்டதென்கிறார். இதையெல்லாம் மனதில் கொண்டு மாநிலத்தைப்பிரிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார். காத்திருப்பதுஅர்த்தமற்றது என உணர்கிறார். விளைவு இவரையும் இவர்போன்ற செயல்பாட்டாளர்களையும் “ நைஜீரியாவை அழிவின்பாதைக்கு கொண்டுசெல்பவர்கள்” என குற்றம் சாற்றினர்.
கென் சரோ விவா சமாதானத்தை விரும்புகிறவர். வன்முறைதான் தீர்வு என நம்பாதவர். கட்டுப்பாட்டில் நம்பிக்கை உடையவர்.
ராணுவ சர்வாதிகாரியாக இருந்த பாபன்கிதா ஏற்படுத்திய
பொதுமக்கள் முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக்கும் பொருளாதார முறைப்படுத்தலுக்குமான நிர்வாக சபையில் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் செயல்பட விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறார். எனினும் இயக்குநரகத்தின் வேண்டுகோளின் படி ஆறு யோசனைகளை முன்வைக்கிறார். 1988-ல் அந்த சபையிலிருந்து விலகிவிடுகிறார். பின் ஒருமுடிவுக்கு வருகிறார். என்ன முடிவு அது?

‘ஒகோனிமக்களுக்காகவும், இன அழிவிற்கு ஆளாகிற மற்றவர்களின் உயர்வுக்காக திறமைகளைப் பயன்படுத்துவது, பாடுபடுவது’ என்பதுதான். உள்ளுணர்வின் முடிவுப்படி செயல்பட முடிவெடுக்கிறார்.
மொசோபின் தத்துவங்களில் ஒரு முக்கியமான கருத்தாக ஒன்று அவர் உள்ளத்தில் வந்தது. அது “கவிஞன் தீர்க்கதரிசியும் சமூகத்தினுடைய மனசாட்சியின் பாதுகாவலனுமாவான்”
ஒகோனி உரிமைப்பத்திரம் உருவாகிறது. அவை:
1, நைஜீரியாவுக்குள் ஒகோனிக்களுக்கு சுய ஆட்சி உரிமை இருக்கவேண்டும்
2, நைஜீரியாவின் அனைத்து அரசு நிறுவன்ங்களிலும் ஒகோனிகளுக்கு போதுமான இடம் கிடைக்கவேண்டும்.
3, ஒகோனொயின் வளங்களின் நியாயமான பங்கை ஒகோனி மேம்பாட்டிற்கு பயன் படுத்த வேஎண்டும்.
4, ஒகோனியில் உயிர்வாழ்வுச்சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமை ஒகோனிகளின் நிலையான உரிமையாக இருக்க வேண்டும்..
5, ஒகோனியில் ஒகோனி மொழிகளைப் பரப்பவும் பயன்படுத்தவும் உரிமை இருக்கவேண்டும்/
இவையெல்லாம் உள்ளடக்கித்தான் ஒகோனி உரிமைப்பத்திரம் உருவாகிறது. ஏனெனில் நைஜீரியாவில் எசமானர்களுக்கு எல்லாம் உண்டு. அடிமைகளுக்கோ ஒன்றுமில்லை. எனவேதான் “ சுயாட்சி உரிமை என்பது இறைகொடையாகும். அதை அனுபவிப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு எனும் முழக்கம் ஒகோனிகளின் முழக்கமாகிறது. எல்லா இனப்பிரிவுகளுக்கும் சுதந்தரம் வேண்டுமென்பதுதான் ஒகோனிகளின் நோக்கம்.
1958-ல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குமுன் ஒகோனிகள் தரித்திராக இல்லை.
நல்ல உணவு கிடைத்தது
பிள்ளைகள் பள்ளிக்குச்சென்றார்கள்.
எதிர்பார்ப்பு நிறைந்த காலமாக இருந்தது.
இந்த நிலை மீண்டும் எங்களௌக்கு வேண்டுமென்பதே ஒகோனிகளின் விருப்பம்.
காரணம் ஒகோனியின் உயிர்வாழ்வுச்சூழலை ஷெல் நிறுவனம் அழிக்கிறது. இதையும் புறக்கணிப்பையும் ஒகோனிகள் விரும்பவில்லை.
ஒடுக்கப்பட்ட இனப்பிரிவுகளுக்கு உயர்வை உண்டாக்குவது நைஜீரிய அரசின் பொறுப்பு. அந்தப்பொறுப்பை நினைவூட்டத்தான் ஒகோனி உரிமைப் பத்திரம் வெளியிட்ப்பட்டது.
நைஜீரிய இனப்பிரிவுகளின் அடிப்படைத்தேவைகளை எதிர்கொள்வதும், அடிப்படை மாற்றத்திற்காக நிலைகொள்வதும்தான் ஒகோனி உரிமைப்பத்திரமாகும். எதிர்ப்பு பிரகடனம் பெரும் வெற்றியடைந்தது.
எல்லா கிராமங்களிலிருந்தும் ஏறத்தாழ 3லட்சம்பேர் திரண்டார்கள்; பங்குபெற்றார்கள்.. இப்படி வளர்த்தெடுக்கப்பட்ட புரிந்துணர்வில்;
சுய சிந்தனையில் ஒகோனிக்கெதிராக யுத்தத்தை எதிர்கொள்ளும் பணியில் கவனம் செலுத்தினார் சரோ விவா.
அமைதிவழியில் நடந்த போராட்டம் எதிரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
1983-ல் ஒகோனி மக்கள் அச்சத்தை வென்றார்கள்.
அவர்கள் தங்கள் விதியை தங்கள் சொந்தக்கரங்களில் எடுத்தார்கள்.
ஒகோனி மக்களை அச்சுறுத்தவும் ஒடுக்குவதற்கும் ராணுவ அரசு தயார் ஆனது. தேர்தல் புறக்கணிப்பு நிகழ்ந்தது. இதற்கெல்லாம் செலவிட்ட நேரம்போக மீதியை எழுத்திற்காகப் பயன்படுத்தினார் கென் சரோ விவா.
1993-நவம்பரில் ஆட்சிமாற்றம். 1994-ஜனவரிமுதல் வாரத்தில் வீட்டுக்காவலில் இருந்தார். மொசோபின் தலைவர்கள் சிறையிலிருந்தனர். க்யோன்கூவில் நடந்த வன்முறைக்குப் பொறுப்பை விவா மீது சுமத்தி, துப்பாக்கியைக் காட்டி நள்ளிரிவில் கைது செய்தார்கள். ராணுமுகாமிற்குக் கொண்டுசென்று சித்திரவதை செய்தார்கள். உடலைக்காயப்படுத்தினார்கள். கால்விலங்கிட்டு அழைத்துச்சென்றார்கள். அடர்த்தியான ஒகோனித்துவத்தின் உடைமையாளராய் இருந்தவர் கொபாணி.. அவரும் ஆல்பர்ட் பேதே,எஸ்..என் ஒரேக், சீப் டி.பி.ஒரேக் கொலைசெய்யப்படுகின்றனர். அதுதொடர்பாக சாட்சியளுக்கும்படி போலீஸார் கேட்கிறார்கள். கொபாணி விவாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆல்பர்ட் பேதேயும் விவாவின் நண்பர்தான். எஸ்.என் ஒரேகுவுடனும் நட்பிருந்தது.
அவரை மிகவும் நேசித்தவர் சரோ விவா. அவர்களின் மரணம் கேட்டு குமுறி அழுதவர் கெ சரோ விவா. அவர்கள்மிதான கொலை பொறுப்பை சரோ மீது சுமத்தப்பட்டது. அது அவரது துயரத்தை அதிகப்படுத்தியது. ஒகோனி மக்களின் தீரா த வேதனைக்கு அது காரணமாகியது. கொலையில் சரோவுக்கும் பங்குண்டு என்ற குற்றச்சாடை தீவிரமாக மறுக்கிறார். நான் நிரபராதி என்பது அவர் கூற்று.
கென் சரோ விவா சொல்கிறார்:
“ என் வாழ்க்கை முழுவதையும் ஒகோனி மக்களின் உயர்வுக்காகத்தான் செலவிட்டேன்.
யுத்தத்திலும் சமாதானத்திலும் ஒகோனியர்களின் அக்கறையையும் உயிரையும் காப்பாற்றினேன். நல்ல வாழ்க்கை கிடைப்பதற்காக தெய்வங்களிடம் பிரார்த்தித்தேன். இறந்தவர்களின் ஆன்மா நிலைத்த அமைதி அடையட்டும். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் நண்பர்களிடமும் ஆழமான துயரத்தை தெரிவித்துகொள்கிறேன்.”
கென் சரோ விவா மிகத்தஎளிவாக சொல்கிறார் “ ஒகோனிகளின் போராட்டம் அதிகாரத்தை நோக்கியாதனதல்ல. நீதிக்கானது. கொலை செய்யப்பட்டவர்கள் ஒகோனியர்களின் நலத்திற்கு எதிரானவர்களல்லர். அவர்களை ஒகோனியர்கள் கொலைசெய்து பெறவேண்டிய எந்த லட்சியமும் இல்லை.”
இன்னும் சொல்கிறார்….” எனக்குள்ள உரிமைகள் மற்றவர்களுக்கும் உண்டென்ற அறிவு என்னிடத்தில் ஆழமாக வேர்விட்டிருக்கின்ற ஒன்று. அதனால் முரண்பாட்டை வெளிப்படுத்துவதற்கான மற்றவர்களின் உரிமையை நான் மதிப்பவன்.”
சரோ விவா மீதான வழக்கு ஒரு அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாகிறது.
அவருக்கு எதிராக பொய்சாட்சிகள் சாட்சி சொல்கிறார்கள். காரணம் சரோ விவாமிதான பொறாமைதான் என்பது புலனாகிறது,
குற்றவாளிகளைத் தப்பவைத்து ஒகோனியர்களை குற்றவாளியாக்குவதுதான் பாதுகாப்புப்படையின் நோக்கமாக இருந்தது.
ஆண்களையும் பெண்களையும் பாதுகாப்புபடையினர் வேட்டையாடினார்கள் மொத்தத்தில் ஒகோனியர்களை குற்றவாளியாக்கியது நைஜீரியா அரசு.
1994-மே 26 ஆம் நாள் போரியில் ராணுவ முகாமில் கைதியாக இருந்தார். இலைஞர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள்
விளைவு சிறையில் துன்பப்படும் வேளையில் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். வெளிநாட்டு மரியாதைகள் அவருக்கு வந்துசேர்கின்றன.
உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததால் பெருமைய்படைத்தவராகவும் பெரும் சக்தி படைத்தவராகவும் மாறுகிறார்.
1994-மே 21 ஆம் நாள் கைதுசெய்யப்பட்ட சரோவிவா உடல் ரீதியாக, உளரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்.
தனிமைச்சிறையில் அடைக்கப்படுகிறார்.
74 வயது அவருடைய அம்மாவைச் சாட்டையால் அடிக்கிறார்கள் .
அவருடைய மனைவியைத்தாக்குகிறார்கள்.
தொலைபேசித்தொடர்பைத் துண்டிக்கிறார்கள்.
மூன்றுமுறை வீட்டைச்சலித்தெடுக்கிறார்கள்.
அவருக்கெதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நைஜீரிய கொலைக்குற்றம் சுமத்துகிறது.
ஓர் எழுத்தாளன் என்கிறமுறையில் சமூகத்தின் மனச்சாட்சியுடைய பாதுகவலானச் செயல்பட்டவர்.
அவர் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார்.
அவருக்காக வாதாட யாருமில்லை. அரசு அச்சுறுத்துகிறது. அவரின் வாக்குமூலம் இதோ…..
“நான் சமாதானத்தை விரும்புபவன். கருத்து வளமுடையவன்.
செழிப்பான நிலப்பகுதியில் தரித்திரர்களாக வாழ விதிக்கப்பட்ட எம்மக்களின் துயரம்தான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியது.
பாழ்நிலமாகும் பூமி கவலையளிக்கிறது.
எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டுமென்றும் எங்களுடைய உயிரைக்காப்பாற்றவேண்டும் மென்றும் நான் ஆசைப்படுகிறேன் .
எல்லா இனச்சமூகங்களுக்கும் மனித முன்னேற்றத்தில் உரிமையை நிலைநாட்டவும் என்னுடைய அறிவை, பொருளை, உயிரை ஒதுக்கிவைத்திருக்கிறேன் .
எங்களைத்தடுப்பதற்கோ,
எங்களது இறுதி வெற்றியை வழிதவறச்செய்யவோ சிறைகளுக்கோ மரணத்திற்கோகூட சக்தியில்லை “… தொடர்கிறது வாக்குமூலம்.
அரசுக்கு பயந்திருக்கும் அத்துணைபேரயும் “ உடைகளில் ஒட்டுகிற சொந்த மூத்திரத்தைக் கழுவியகற்றுவதற்க்குக்கூட அஞ்சுகிறார்கள்” என்கிறார். நீதிமன்றத்தில் “ நான் நிரபராதி. குற்றமற்றவன்” என்று கூறி சமாதானமுறையில் போராட அழைப்பு விடுக்கிறார்.
வரலாறு நம் பக்கம். கடவுளும் நம்பக்கம்தான். புனித குர் ஆன் அத்தியாயம் 42-ல் 41ஆம் வாக்கியம் சொல்கிறது
“அடக்கி ஒடுக்கப்படும்போது போராடுவதில் தவறொன்றுமில்லை.
அல்லா ஒடுக்குபவனைத் தண்டிப்பார்” என்ற வாக்குமூலத்தோடு ஒகோனிக்கு எதிரான யுத்தம்” என்ற நூல் முடிகிறது.
என்னைப்புரட்டிப்போட்ட நூல் இது. 86 பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு இயல்பாக இருந்து ஈர்த்தது.
அனைவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல் இது. இதன்வழி நம் மனத்தில் நிறுத்தவேண்டியவை:
1,சிறுபான்மையினருக்கு உரிமையில்லை.
2,வளங்கள் சுரண்டப்படுகின்றன.
3,இயற்கை மாசுபடுகிறது.
4 , சமாதான முறையில் போராடிய இளஞன் சிறையிலடைக்கப்படுகிறான்.
5,குற்றவாளியாக்கப்படுகிறான்.
6, அரசுக்கு அனைவரும் அஞ்சுகிறார்கள்.
7,பன்னாட்டு நிறுவனங்கள் வளங்களைச் சூறையாடுகின்றன.
8,மக்களைப் பலியிடுகின்றன.
ஆனாலும் வரலாறு வரலாறு படைக்கும் என்பது அந்த இளைஞனின் நம்பிக்கை.
இந்த நேரத்தில்தான் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கிறார்கள்.
ஒகோனிய மக்களுக்கு நிகழ்ந்தது நம் மருதநில மக்களுக்கும் நிகழும் அபாயத்திற்கு எதிராக செயல்பட; மக்களைத்தூண்ட; விழிப்புணர்வூட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கும் இந்த நூல் நம் கையிலும் பையிலும் இருக்கவேண்டியது. (யூமா வாசுகி 2017 பிப்ரவரியில் சிங்கப்பூர் வந்தபோது தந்த நூல்)

Series Navigationபிரியும் penனேகவிதைகள்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *