சர்க்கஸ்

author
3
0 minutes, 3 seconds Read
This entry is part 16 of 17 in the series 19 மார்ச் 2017

சோம.அழகு

முன்பெல்லாம் சர்க்கஸ் என்றாலே…….. “வந்துட்டாய்யா ! முன்பெல்லாம், அப்போதெல்லாம், சென்ற நூற்றாண்டில், அது ஒரு ஞாயிற்றுக்கிழமைனு……இப்படி ஆரம்பிச்சு எழுதி கழுத்தறுக்குறவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்….” என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டுவிட்டது ஆகையால் நேராக புலனத்திற்கு வருவோம்.

சென்ற வாரம் எங்கள் ஊரில் சர்க்கஸ் ஆரம்பமாயிற்று. பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் டவுண் தொண்டர் சன்னதியில் மட்டும் இரண்டு அல்லது மூன்று சுவரொட்டிகள் சர்க்கஸ் நடப்பதை அறிவித்துக் கொண்டிருந்தன. நடக்கும் இடத்தையும் காட்சி நேரத்தையும் கண்டுபிடித்து வாசிப்பதற்குள் வண்டி அந்த நெரிசலான திருப்பத்தைக் கடந்துவிடும். ஒரு வாரமாக ஒவ்வொரு எழுத்தாக வாசித்து தகவல்களைச் சேகரித்து ஒரு விடுமுறை நன்னாளில் சர்க்கஸ் பார்க்கச் செல்லலாம் என வீட்டில் ஒவ்வொருவரிடமும் கேட்டேன். ‘சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு….’ என மூவரும் ஏற இறங்க என்னைப் பார்த்து வர மறுக்க, என் ஆருயிர்த் தோழி சுதாவைக் கேட்டேன். என் தோழியாயிற்றே ! அதுவரை தான் சர்க்கஸ் பார்த்ததே இல்லை எனவும், இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கப் போவதாகவும் சொல்லி உற்சாகமானாள். ஞாயிற்றுக்கிழமை 4 மணிக் காட்சிக்குச் செல்வதாகத் திட்டம். நாங்கள் இருவரும் ‘தனியாகச்(!)’ செல்வதால் (குங்க்ஃபூ, கராத்தே, ஜூடோ ஆகிய எல்லாவற்றிலும் கலர் கலராக(!?$%!?) பெல்ட் பெற்றிருக்கும்) அம்மாவும் உடன் வருவதாகச் சொன்னாள். பாதுகாப்புக்காம்! அம்மா எங்கள் பாதுகாப்புக்குத் தான் வருவதாக நினைத்துக் கொள்ள, நாங்கள் அப்படியே உல்டாவாக அம்மாவின் இருபுறமும் கறுப்புப் பூனைகளாகச் சென்றோம்.

சிறு வயதில் தத்தாவுடன் 4 அல்லது 5 முறை சர்க்கஸுக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரசித்தது நினைவில் இருக்கிறது. ஐந்தாவது வயதில், முதல் முறை சென்ற போது முதல் நிகழ்சியாக பார் விளையாட்டு – 20 நிமிடங்கள். 20 நிமிடங்கள் சற்றே நீண்ட நேரம் என்பதால் சர்க்கஸ் என்பதே பார் விளையாட்டு மட்டும்தான் என நினைத்து கிளம்ப ஆயத்தமாகி தாத்தாவையும் கிளப்புகையில் சுற்றி இருந்தவர்களில் ஒருவர் நமட்டுச் சிரிப்புடன், “உட்காரும்மா……100 ரூபாய்க்கு எப்படி 20 நிமிஷத்துல வெளிய அனுப்புவான்? சர்க்கஸ் இன்னும் இரண்டரை மணிநேரம் நடக்கும்.” என்று எனக்குப் புரியாத கணக்கெல்லாம் சொன்னார். “இவ்வளவு நேரம் நல்லாதான் இருந்துச்சு. அதுக்காக, அவர் சொன்ன மிச்ச நேரத்துக்கும் இவங்க அங்கயும் இங்கயும் தாவுறதயே எப்படி பாத்துட்டு இருக்க முடியும்?” என்று சலிப்போடு மனதுக்குள் அந்த அங்கிளைக் காரணமே இல்லாமல் திட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் “அடுத்த நிகழ்ச்சி……..” என அறிவிப்பு தொடங்க, கட்டப்பட்டிருந்த வலை அவிழ்க்கப்பட்டது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகப் பல நிகழ்ச்சிகள். கண்கள் விரிய அனைத்தையும் ரசித்து நிழற்படங்களாகவும் காணொளிகளாவும் மூளைக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும் கூடாரம் அதிரும் கைத்தட்டல்களைக் கேட்கும் போது “சர்க்கஸ் முடிஞ்சிடுச்சோ?” என மனம் வருத்தம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கும்போதே அடுத்த நிகழ்ச்சி மனதை ஆற்றுப்படுத்தும். ஒரு கட்டத்திற்குப் பிறகு, நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அடுத்த நிகழ்ச்சிக்கான கலைஞர்கள் திரையின் பின் நிற்பதை அவ்வப்போது உறுதி செய்து மகிழ்ந்தேன்.

சற்றே வளமான ஒரு பெண்மணி Hoola hoofs எனப்படும் மூங்கிலால் ஆன பெரிய வளையங்களை இடுப்பில் போட்டுச் சுற்றினார். சிறிது நேரம் கழித்து 50 வளையங்களைப் போட்டுச் சுற்ற ஆரம்பித்தார். இடுப்பில் தொடங்கி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்கப் பரவவிட்டுச் சுற்றினார். 5 வளையங்களை இடுப்பில் சுற்றினாலே வலி உயிர் போய்விடும். மலர்ந்து சிரித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்த அவரது முகம் எனக்கு இன்னும் மறக்கவேயில்லை. ரசிகர்களின் உற்சாகம் அவரது வலியை மாயமாக மறையச் செய்திருக்கக்கூடும்.

அய்யய்யோ ! Flashbackக்கு எப்படி போனேன்? இப்போதுள்ள கதைக்கு வருவோம். சர்க்கஸுக்கு அம்மா, தோழி, நான் – மூவரும் கிளம்பினோமா…. அப்பா மகிழுந்தில் அழைத்துக்கொண்டு சென்றார். போகிற வழியில் சர்க்கஸ் நடைபெறும் இடத்தின் அருகில் கூட ஒரு சுவரொட்டியும் இல்லை. இடம் தெரியாமல் கடந்து சென்று பின்னர் திரும்பி வந்து கண்டுபிடித்தோம். சாகஸங்களை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என அதிகக் கட்டணம் உள்ள நுழைவுச்சீட்டுகள் வாங்கினோம். உள்ளே செல்லும் வழியில் பக்கவாட்டில் இரு ஒட்டகங்கள் நிற்பதைக் காண நேர்ந்த்து. திமில் மட்டும் துருத்திக் கொண்டு நோஞ்சானாக இருந்த அந்த ஒட்டகங்களைக் காணும் போதுதான் சுவரொட்டிகள் அதிகம் ஒட்டப்படாததற்கான காரணம் புரிந்தது. சுவரொட்டிகள் அடிப்பதற்கு ஆகும் செலவில் ஒட்டகத்திற்காவது உணவு வாங்கலாம் என சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். வேறு விலங்குகள் ஒன்றும் கண்ணில் படவில்லை. கூடாரத்தின் பின்புறம் இருக்குமாயிருக்கும். ஒட்டகத்தைப் பார்த்ததற்கே குதூகலித்தாள் சுதா. இப்போதுதான் முதன்முதலாக நேரில் பார்க்கிறாளாம். அதுவும் நாங்கள் அருகில் அமர்ந்து எல்லா விலங்குகளையும் காணப் போகும் குஷியில் வேகவேகமாக மூன்றாவது வரிசையில் இடம் பிடிக்கச் சென்றாள். “யானை கிரிக்கெட் விளையாடுறது Footballஅ வச்சுன்னு சொன்னேல்ல? Football மேல பட்டுட்டுன்னா? அதானால safeஅ மூணாவது rowல உக்காந்துக்குவோம்…” – ஆர்வக்கோளறாக விளக்கம் தந்து கூடாரத்தினுள் முன்னேறினாள். உள்ளே சென்று பார்த்தால் பாதிக்கும் மேலான இருக்கைகள் காலியாக இருந்தன. அதுவும் அதிகக் கட்டணம் உள்ள இருக்கைகளுக்கு ஆளே இல்லை. இருந்தாலும் முன் இரண்டு வரிசைகளைத் தாமதமாக வருபவர்களுக்கு (வருவார்கள் என உறுதியாக நம்பினேன்) விட்டு சுதாவின் ஆணைக்கிணங்க மூன்றாவது வரிசையிலேயே அமர்ந்தோம். நிகழ்ச்சிகள் முடியும் வரை முன் இரண்டு வரிசைகள் காலியாகவே இருந்தன. இவ்வளவிற்கும் அன்று விடுமுறை தினம். இதுவே, மக்களிடம் சர்க்கஸுக்கான இப்போதைய வரவேற்பை உணர்த்திற்று.

விலங்குகளுக்கு ஆகும் உணவு மற்றும் பராமரிப்புச் செலவு, கலைஞர்கள் மற்றும் வேலையாட்களுக்கான சொற்ப ஊதியம், இட வாடகை, சாகஸங்களில் பயன்படுத்தப்படும் பைக்கிற்கு ஆகும் மண்ணெண்ணெய்(!) செலவு, ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கான பயணத்திற்கு ஆகும் செலவு……. என எல்லாவற்றையும் எவ்வளவு குறைவாக வைத்துக் கணக்கிட்டாலும் கூட, சுற்றிலும் தென்பட்ட பெரும்பாலான காலி இருக்கைகள் சர்க்கஸ் பெருநஷ்டத்தில் தள்ளாடும் உண்மையை உரக்க உரைத்துக் கொண்டிருந்தன.

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. முதலில் சர்க்கஸ் கலைஞர்கள் அனைவரும் வந்து வணக்கம் கூறி எந்தெந்த முசரக்கட்டைகள் எல்லாம் தங்கள் சாகஸங்களைக் கண்டு களிக்க(!?) வந்திருக்கின்றன எனப் பார்த்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் உள்ளே வருகையில் உடன் வந்த கோமாளிகள் பார்வையாளர்களைக் கை தட்டுமாறு சைகையில் கேட்டுக் கொண்டனர். ஒருவரும் கை தட்டாதது கண்டு விரக்தியுடன் ஓர் ஓரத்தில் அமர்ந்தனர். தங்களை நடிகர்கள் என சொல்லிக் கொண்டு திரியும் சிலரின் குப்பைப் படங்களுக்கெல்லாம் விசில் அடித்து ஆர்ப்பரித்து கைதட்டி ஏற்றிவிடும் இந்த பொதுஜனம், நேரில் காணூம் கலைஞர்களை ஊக்குவிக்காதது ஒருவித எரிச்சலைத் தந்தது. அந்த சர்க்கஸ் கலைஞர்களில் 90% பேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதை அவர்களது முகங்களே உணர்த்தின. அனைவரும் 16லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள். அறிவிப்பாளர், ஆண் பிள்ளைகள் வந்து சாகஸம் செய்யும் போது 7ம் அறிவு படத்தில் வரும் சீன இசையைப் பிண்ணனியில் ஒலிக்கவிட்டு, “அடுத்த நிகழ்ச்சியாக சீன தேசத்துக் கலைஞர்களின்…….” என ஒவ்வொரு முறையும் அவர்களை விளித்தபோது சிரிப்பதா….. இல்லை, சொந்த நாட்டிலேயே வேற்று நாட்டுக்காரர்களாக அறிமுகப்படுத்தப்பட்டால்தான் மரியாதை என்னும் அவர்களின் அவல நிலையை நினைத்து அழுவதா எனத் தெரியவில்லை. அந்த இந்தியக் கலைஞர்களுக்கு வலித்ததா…தெரியாது. எனக்கு ஏனோ வலித்தது. சாகஸங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்குப் பின்தான் கவனித்தேன். மொத்தமே பத்து பேர்தான் கைதட்டிக் கொண்டிருந்தோம். இப்போது கோமாளிகள் கைதட்டுமாறு அனைவரையும் கெஞ்ச ஆரம்பித்தனர்.

எந்தவொரு கலைஞனுக்கும் விருதுகளையும் தாண்டிய அங்கீகாரம் மனந்திறந்த பாராட்டும் கைத்தட்டல்களும்தான். கிறிஸ்டோஃபர் நோலனின் ‘த பிரஸ்டீஜ்’ படத்தில் இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகள் கலைஞனுக்கு எந்த அளவுக்கு உற்சாகத்தைத் தரும் எனக் காட்டியிருப்பார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான இரு மேஜிக் நிபுணர்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது தந்திரங்களைக் கண்டுபிடித்து மக்களின் முன் மந்திரமாக மாற்ற உழைக்கிறார்கள். அதற்காகப் பெரிய தியாகங்களைச் செய்வதோடு ஈடு செய்ய முடியாத இழப்பையும் ஏற்கிறார்கள். மக்களின் முகத்தில் ஒரு நொடி அந்த ஆச்சர்யப் போர்வையைப் படரவிட்டு அவர்களின் பாராட்டைப் பெற இவர்கள் படும் பாடு….! பார்வையாளர்களிடம் மகிழ்ச்சி கலந்த வியப்பைக் காணும் போது இருவரும் வலிகளை மறந்து அனுபவிக்கும் அந்த சில நொடிகள் நீளும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் போதையை வேறு எதுவும் தர முடியாது என்பது அவர்களது உணர்வு.

பார்வையாளர்கள் சலனமற்று இருந்தபடியால் சர்க்கஸ் கலைஞர்கள் ஒரு சுரத்தே இல்லாமல் துயரம் தோய்ந்த முகத்துடன் சாகஸங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். சிறு வயதில் கூடாரமே அதிரும் அளவுக்கான ஆர்ப்பரிப்பையும் உற்சாகத்தையும் சர்க்கஸில் கண்ட எனக்கு இப்போது ஏதோ துக்க வீட்டில் (இப்போதெல்லாம் துக்க வீட்டில் யாரும் அழுவதில்லையாகையால் இந்த ஒப்புமை!) அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அந்த வாடிய கலைஞர்களின் முகம் என்னவோ செய்தது. நாம் செய்ய முடியாத பலவற்றை அவர்கள் அநாசயமாக செய்கிறார்கள் எனில் உடனடி உணர்ச்சி வெளிப்பாடு வியப்பாகத்தானே இருக்க வேண்டும். உடல் வளைத்து வயிறு காயும் கலைஞர்களை, கூடாரத்தினுள் வந்து தேமே என்று உட்கார்ந்த பின் வெற்றுப் பார்வை வீசி நோகடிக்காமல் இருந்தால்தான் என்ன? இடையில் கோமாளிகள் வந்து செய்த கோமாளித்தனங்களுக்குக் கூடாரத்தில் இருந்த அத்தனை குழந்தைகளும் கைதட்டி சிரித்தது மட்டும் இதமான ஆறுதல். எல்லோரும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். ப்ச்……

சாகஸங்கள் எல்லாவற்றையும் ஒரு நெருடலுடனேயே கடக்க வேண்டியிருந்தது. என்னை அந்தக் கலைஞர்களின் இடத்தில் வைத்து நினைத்துப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. விரக்தியுடனான கனத்த இதயத்தோடு அவர்களுடனேயே பயணித்துக் கொண்டிருந்தேன் ஆகையால் சாகஸங்களில் மனம் லயிக்கவேயில்லை. இந்த பாழாய்ப் போனவர்கள் கைதட்டித் தொலைத்தால்தான் என்ன என்ற கோபமே மேலோங்கியது. திரும்பத் திரும்ப கைதட்டல்களைப் பற்றியே மனம் யோசித்துக் கொண்டிருப்பதன் காரணம் சர்க்கஸில் மூன்று மணிநேரமும் என் மனதையும் காதையும் கிழித்த கொடூரமான அமைதியின் தாக்கம்தான் என எண்ணுகிறேன்.

இறுதிவரை டாட்டா காட்டக்கூட ஒரு விலங்கும் வரவில்லை என்பதை வீடு திரும்பும் வழியில் சுதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதுதான் உணர்ந்தேன். நல்லவேளை ! இந்தக் கலைஞர்களின் சோகம் படிந்த முகங்களின் வலியே படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. இதில் அந்த எலும்பும் தோலுமான வாயில்லா ஜீவன்களைப் பார்த்திருந்தால் நிச்சயம் கண்ணீர் துளிர்த்திருந்திருக்கும்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் எல்லாவற்றையும் சொன்னேன். “ஏம்பா இப்படி இருக்காங்க? கொஞ்சம் ரசிக்கிற மாதிரியாவது நடிச்சிருக்கலாம்ல? இந்த சர்க்கஸ்ல உள்ள பொண்ணுங்களோட எதிர்காலம்? இவங்களோட திருமண வாழ்க்கை? குடும்பம்? இவங்க வயசானதுக்கப்புறம் என்ன வேலை பார்ப்பாங்க?” என்று விடையில்லாத கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றேன். அனைத்து கேள்விகளையும் ஒரு இறுகிய மௌனத்தோடே கடந்தார்கள் அப்பா. இவர்களுடைய பாவப்பட்ட நிரந்தரமில்லாத வாழ்க்கையைப் பற்றி என்ன பெரிய பதில் சொல்லிவிடமுடியும் என்று நினைத்திருக்கலாம். அல்லது எந்த பதிலும் ஆறுதலாகவோ சமாதானப்படுத்தக்கூடியதாகவோ இருக்காது என்பதால் அமைதியாக இருந்திருக்கலாம். தமது மனம் உண்மைகளைத் தம் வாயால் கூறுவதன் மூலம் கசந்து வெம்பிப் புழுங்கும் என்று அனுமானித்திருக்கலாம். இன்னும் வேறு எதுவாகவோ இருக்கலாம். ஆனால் அந்த மௌனம் பல கற்பிதங்களைத் தந்தது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு நானேதான் பதில் தேடி தெளிந்து அது தரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உணர்த்தும்(சுடும்) உண்மைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

“சர்க்கஸுக்குன்னு இருந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சு” என்பதை என் மனது ஒரு காலமும் ஏற்றுக்கொள்ளாது. அது எப்படிங்க சர்க்கஸ் போரடிக்கும்? எப்படி போரடிக்கலாம்? இந்த சாகஸங்களை வாட்ஸ் அப்பில் பார்த்துவிட்டு வெறி கொண்டு பகிரும் அதே கூட்டம்தான் நேரில் காணும்போது மட்டும் புடித்து வைத்த எதையோ போல் உட்கார்ந்திருக்கிறது. சர்க்கஸை வலிகள் நிறைந்த ஒரு கூடமாக மாற்றியதில் உணர்வுகளற்ற இந்தப் பார்வையாளர் கூட்டத்தின் பங்கு அளப்பரியது.

சர்க்கஸ் என்பது சாகஸங்களையும் கொண்டாட்டங்களையும் கொண்ட திருவிழா என்று என் மனதில் இருந்த பிம்பம் சுக்குநூறாக நொறுங்கிய அந்தத் தருணத்தை என்னால் கடக்க முடியவேயில்லை.

– சோம.அழகு

alagu391@gmail.com

Series Navigationவெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழாTHE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  கிருஷ்ணன் says:

  சர்க்கஸ் என்னும் கலை கிட்டத்தட்ட நசித்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த இளம் கட்டுரையாளர் சிறுவயதில் கண்ட சர்க்கஸ் பதினைந்து ஆண்டு இடைவெளியில் எவ்வாறு உருக்குலைந்துபோய் அவலநிலையில் உள்ளது என்பதை ஒளிப்படமாக அற்புதமாக வார்த்தைகளில் வடித்துள்ளார்; “சுவரொட்டிகள் அடிப்பதற்கு ஆகும் செலவில் ஒட்டகத்திற்காவது உணவு வாங்கலாம் என சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும்” என்ற வரிகள் கைக்கும் வாய்க்கும் எட்டாத சர்க்கஸ் வாழ்வைப் பிரதிபலித்தன. “இந்த சாகஸங்களை வாட்ஸ் அப்பில் பார்த்துவிட்டு வெறி கொண்டு பகிரும் அதே கூட்டம்தான் நேரில் காணும்போது மட்டும் புடித்து வைத்த எதையோ போல் உட்கார்ந்திருக்கிறது. சர்க்கஸை வலிகள் நிறைந்த ஒரு கூடமாக மாற்றியதில் உணர்வுகளற்ற இந்தப் பார்வையாளர் கூட்டத்தின் பங்கு அளப்பரியது.” என்ற வரிகள் இதயத்துள் உதிரம் கொட்டும் வலியைத் தந்தன. மிருகவதைச் சட்டம் போன்ற வரைவுகள் மட்டுமல்ல, வாழ்வியல் முறைகள், உளவியல் மாற்றங்கள் எனப் பலவகை காரணிகள் இக்கலையை அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டன.

 2. Avatar
  BSV says:

  //அப்பா மகிழுந்தில் அழைத்துக்கொண்டு சென்றார். போகிற வழியில் சர்க்கஸ் நடைபெறும் இடத்தின் அருகில் கூட ஒரு சுவரொட்டியும் இல்லை//

  சிற்றுந்து என்பதுதான் சரியான தமிழாக்கமாக இருக்க முடியும். அக்காலத்தில் வெறும் மகிழ்ச்சிக்காக ஓட்டப்பட்டது. ஓரிருவரிடம் மட்டுமே இருந்தது அவர்களும் தங்கள் செல்வத்தைக்காட்டவே இதை வாங்கினார்கள். எனவே மக்கள் ப்ளஷர் கார் என்று குறிப்பிட்டார்கள். இன்று எளிதில் எல்லாரிடமும் இருக்க, அனைவரும் ஏதாவது இடத்துக்கு விரைந்து செல்லவே பயன்படுத்தும் ஓருந்தை எப்படி மகிழுந்து என்று குறிப்பிட முடியும்? காரை, மகிழுந்து, வால்போஸ்டரை, சுவரொட்டி என்றெல்லாம் எழுதியவர் சர்க்கஸ் என்ற சொல்லுக்கு ஏன் தமிழெதவில்லை? எனக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது. Anyone?

 3. Avatar
  BSV says:

  //ஆகையால் சாகஸங்களில் மனம் லயிக்கவேயில்லை. இந்த பாழாய்ப் போனவர்கள் கைதட்டித் தொலைத்தால்தான் என்ன என்ற கோபமே மேலோங்கியது. //

  எனக்கு கோபம் வரவில்லை. யார் எங்கு போக வேண்டும்? எதைச்செய்ய வேண்டும்? என்பதற்கெல்லாம் வாழ்க்கை இலக்கணம் இருக்கிறது. சர்க்கஸ் சிறார்களுக்கு மட்டுமே. அவர்கள் தனியாகச்செல்ல முடியாதெனவே பெரியவர்களோடு போகிறார்கள். சிறார்கள் மனஙகள் காட்சிப்பொருள்களை அப்படியே ஏற்று மகிழ்பவை. அப்பொருட்களுக்குள் புதைந்து கிடக்கும்; அல்லது பின்னாளிலுள்ள – ஏன், எதனால்? எப்படி? – என்ற கேள்விக்கான விடைகளைப்பற்றி அறியா. இது இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம். கண்டதே காட்சி; கொண்டதே கோலம் எனப்துதான் குழந்தை மனம். care free childhood with passive receptivity.

  சர்க்கஸ் விலங்குகளைப்பற்றி கவலை! கைதட்டல்கள் விழவில்லையே என்ற கவலை!! இம்மனிதர்களுக்கு மணவாழ்க்கை போன்று உண்டா என்ற கவலை!!! அனைத்தும் முட்டாள்தனமான கவலைகள் :-( ஏன் முட்டாள்தனமான?

  மனிதர்கள் தெரிந்தே செய்கிறார்கள். இதனால் நமக்கு என்ன நேரும்? எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் எனவறிந்தே அங்கு சேர்கிறார்கள். சர்க்கஸ் ஒரு நெடுங்குடும்பம். An extended family. காதல், மணம், குழந்தைகள் என அவர்களுக்குள்ளேயே உண்டு. அங்கேயே பிறந்து, அங்கேயே வாழ்ந்து அங்கேயே மடிகிறார்கள். குழந்தைப்பருவத்திலிருந்தே பழக்கப்படுவதால், அவர்களுக்கு அஃது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை. பிரச்சினையில்லை. விரும்பினால் வெளியே செல்லலாம். ஆனால் முடியாது. காரணம். 30 ஆண்டுகளாக ஓரிடத்தில் ஒரு வேலையை நன்கு கற்றபின், இன்னொரு இடத்தில் இன்னொன்றைச் செய்ய மனம் தோதுப்படாது. தீப்பெட்டி, மத்தாப்பு தொழிலாளர்களின் வாழ்க்கையும் இவ்வாறே.

  விலங்குகள் மேல்தான் உங்கள் கவலை செல்ல வேண்டும்? ஆனால் இன்றைய தமிழகத்தில் அதையும் செய்ய முடியாது.

  சர்க்கஸ்கள் கால்வதியாகப்போக பலபல காரணங்கள். அரசு விலங்குகள் நலத்தில் மேல் அக்கறைகொண்டு பல சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டதால், விலங்குகள் வைப்பது பல கடுச்சட்டங்களுக்குள் சிக்கிவிடுகிறது. மக்களுக்கு கேளிக்கை எனபது வீட்டிலேயே, சுற்றுப்புறத்திலேயே சிற்றூர்களில் கூட நிறைந்து கிடப்பதால், எங்கோவோரிடத்தில் நடக்கும் கேளிக்கைகளுக்கு குடும்பம்குடுமப்மாகச் செல்லும் காலம் போய்விட்டது. மக்கள் ஆதரவு சரியசரிய சர்க்கஸ் கம்பெனிகள் களைக்கப்பட்டு விட்டன. பெரிய கம்பெனிகள் செய்யும் செலவுக்கு வருமானம் கொஞ்சம் கூட இல்லை. சில சிறிய கம்பெனிகள் ஊருராகச் சென்று பிழைப்பத்தேடுகின்றன. வாழ்க்கையை ஓட்டிக்கழிக்க வேண்டுமல்லவா?

  முழவதுமாக மனிதாபிமானமற்ற கேளிக்கைகள் அழியும் போது மகிழ்ச்சி.

  Thanks for your thought-provoking sentiments on a dying art.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *