அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது

author
0 minutes, 6 seconds Read
This entry is part 10 of 13 in the series 2 ஏப்ரல் 2017

 அசோகமித்திரன்02.jpg

பிரயாணம் கதையில் கற்றதும் பெற்றதும் தேடலும்

                                            முருகபூபதி – அவுஸ்திரேலியா

 

”  என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்  இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து  யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து வைத்துக் கொண்டும்கூட  மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு
மூச்சுக்கு  இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும்.  இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார். ”

இந்த வரிகள் அண்மையில் மறைந்த இலக்கிய மேதை அசோகமித்திரனை நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்ட  சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

ஒருவரின் மறைவைக்கொண்டாட முடியுமா…? எனக்கேட்க முடியும். நாம் பல பேராளுமைகளைக் கொண்டாடிக்கொண்டிருப்பதற்கு அவர்களின்  ஆத்ம பலம்தான் அடிப்படை. கம்பனையும் பாரதியையும் பாரதிதாசனையும் புதுமைப்பித்தனையும் அவர்கள் மறைந்தபின்னர்தான் கொண்டாடி வருகின்றோம்.

அந்த வரிசையில் கடந்த வியாழனன்று 23 ஆம்திகதி சென்னையில் தமது 86 வயதில் மறைந்த அசோகமித்திரனை நினைவுகூர்ந்து அண்மையில்  மெல்பனில் எப்பிங் என்ற நகரத்தில் – படைப்பாளியும் கலை இலக்கிய ஆர்வலருமான ஜே.கே.யின் இல்லத்தில் சிலர் ஒன்றுகூடி  கலந்துரையாடினோம்.

அறுபது ஆண்டுகாலம்  ஆக்க இலக்கியத்தில் ஆழமான தடம் பதித்துவிட்டு,  சென்னையின் கோடைகாலத்தில் உயிரை உதிர்த்துவிட்டுச்சென்றவரின் நினைவுகளை மெல்பனின் இலையுதிர்காலத்தின் பொன்மாலைப்பொழுதில் நாம் நினைவுகூர்ந்தோம்.

இந்தநிகழ்வில் அசோகமித்திரனின் புகழ்பெற்ற பிரயாணம் என்னும்  சிறுகதையை ஜீவிகா விவேகானந்தன் வாசித்தார். பேராளுமைகள் மறைந்தபின்னர்தான் அவர்களின் பலம் பேசப்படுகிறது. அவர்கள் படைப்பாளிகளாயின் அவர்களின் படைப்புகள் மறுவாசிப்புக்குட்படுத்தப்படுகிறது.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட பலரும் வியந்துபேசிய எழுதிய அசோகமித்திரனின் பிரயாணம் சிறுகதையை முன்னர் படித்திராதவர்களும் கேட்கும் தருணத்தை வழங்கிய ஜே.கே. – ஜீவிகா தம்பதியருக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன்.

அதுமட்டுமல்ல – அசோகமித்திரன் மறைந்தவுடன் கணனி தந்த வரப்பிரசாதத்தினை பயன்படுத்தி  முகநூல்களிலும் வலைப்பூக்களிலும் அசோகமித்திரன் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பரவியிருந்த  சூழலில் – மிகக் மிகக்  குறுகிய காலத்துள் – அவுஸ்திரேலியா மெல்பனின் ஒரு திசையின் மூலையில்  –அசோகமித்திரனின் ஆழ்ந்த அமைதியைப்போன்றும்,   துயரத்தையும் அங்கதமாக்கி  மற்றவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அசோகமித்திரனின் இயல்புகளைப்போன்றும்  இந்தக்கொண்டாட்டம்  அமைந்திருந்ததும் தற்செயலானது.

இலக்கியத்திலிருந்து இருத்தலியல் என்ற தத்துவத்தை தெரிந்துகொள்கின்றோம்.  இருத்தலியனின் ஊடாக வாழ்வின் அபத்தங்கள் உணரப்படும் தருணத்தை சித்திரித்த இச்சிறுகதையை ஜீவிகா,  தங்கு தடையின்றி ஏற்ற இறக்கங்களுடன் களைப்பேயின்றி  முழுமையாக வாசித்தார்.

ஜே.கே. யின்  இல்லத்தின் தரையில்  வட்டமாக அமர்ந்து  அசோகமித்திரனைக்கொண்டாடியபோது, கால், இடுப்பு உபாதைகளினால் தரையில் அமரமுடியாத என்போன்றவர்களுக்காக ஆசனங்களும் ஒதுக்கப்பட்டது.

1970 காலப்பகுதியில் அசோகமித்திரனின் வாழ்விலே ஒரு முறையில் தொகுப்பில் படித்த ரிக்க்ஷா என்ற கதையிலிருந்து அவர் எனக்கும் நெருக்கமானார்.  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவர்  கைலாசபதி பதவியிலிருந்த காலத்தில் அங்கு நடந்த தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு அசோகமித்திரன் வருகை தந்து  நேரில் அறிமுகமானது, மல்லிகைக்காக பேட்டி கண்டது,  மீண்டும் சென்னையில் சந்தித்த தருணங்கள், அவரது நேர்காணல்கள், படைப்புகள் குறித்த வாசிப்பு அனுபவங்கள் குறித்து எனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டேன்.

தியாகராஜன் என்ற இயற்பெயர்கொண்டிருந்தவர் எவ்வாறு அசோகமித்திரனாக இலக்கிய உலகில் அறிமுகமானார் என்ற தகவலை 1991 அக்டோபர் சுபமங்களா இதழில் பரீக்ஷா ஞாநிக்கு அவர் தந்த பேட்டியில் சொல்லியிருந்த தகவலின் அடிப்படையிலும்  எனது உரை அமைந்தது.

குறிப்பிட்ட  இதழை என்னிடமிருந்து பலவருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்து,  இதுவரை காலமும் பாதுகாத்து வைத்திருந்த இலக்கிய நண்பர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,  இச்சந்திப்புக்கு   அதனை எடுத்துவந்திருந்தார். அத்துடன் ஜீவிகா வாசித்த பிரயாணம் கதை வெளியாகியிருந்த எஸ். ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் எனத்தேர்ந்தெடுத்து தொகுத்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட பெரிய தொகுப்பையும் கையோடு கொண்டுவந்திருந்தார்.

எழுத்தாளர்  ஜே.கே. – அசோகமித்திரனின் படைப்புகளுடன் தனக்கிருந்த வாசிப்பு அனுபவ நெருக்கத்தைப்பற்றி பேசும்பொழுது, அப்பாவின் சினேகிதர், புலிக்கலைஞன், எலி, முறைப்பெண், அம்மாவுடன்  ஒரு நாள், ஐநூறு கோப்பைத்தட்டுகள், தண்ணீர் முதலானவற்றைக்குறிப்பிட்டார்.

அவரைத்  தொடர்ந்து  இலக்கிய ஆர்வலர் கேதா, தாம் இலக்கியப்பிரதிகளை வாசிக்கத்தொடங்கிய காலம் முதல் அசோகமித்திரனின் படைப்புகளில் தன்னை பெரிதும் கவர்ந்த அம்சங்களைச்சொன்னார். அவரும் பிரயாணம் கதையின் முடிவு ஏற்படுத்தும் அதிர்வை சிலாகித்தார்.

கிருஷ்ணமூர்த்தி அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதைபற்றி தமது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

Ambrose Bierce எழுதிய The Boarded Window  என்ற கதையின் தழுவல் பிரயாணம்  என்ற செய்தியை ஒருவர் குறிப்பிட்டதும், வீரகேசரியில் முன்னர் பத்திரிகையாளராக இருந்த ஊடகவியலாளரும் இலக்கிய ஆர்வலருமான, தெய்வீகன் தாம் அங்கு பணியாற்றியவேளையில் சக பத்திரிகையாளர் கேதாரநாதன் இக்கதைபற்றி தராக்கி  சிவராமுடன் வாதிட்ட  தகவலை  நினைவுபடுத்தினார்.

பிரயாணம்  கதையை,  யார் எழுதிய கதையின்  அருட்டுணர்வில்  அசோகமித்திரன் எழுதியிருக்கிறார் என்ற தகவலை, வீட்டுக்குத்திரும்பியதும் www. siliconshelf.wordpress.com இல் தேடிப்பார்த்தேன், அதில்  அசோகமித்திரன் இந்தக் கதையைப் பற்றி சொல்வது:

கதை மூலம் நான் என்ன சொல்ல முயற்சி செய்திருக்கிறேன் என்று அன்று விளங்கவில்லை. இன்று புரிகிறது: எவ்வளவு உயரிய குரு கிடைத்தாலும், சீடன் எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் வாழ்க்கை சில தருணங்களில் அவனுக்கு முழுப்பயனை அளிக்க மறுத்துவிடுகிறது.

இந்த வாசிப்பு அரங்கு,  அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்கான களமாகவே அமைந்திருந்தமையால் பயனும் பலனும் கொண்ட சந்திப்பாகியது.

தேர்ந்த இலக்கியவாசகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு அசோகமித்திரனை கொண்டாடியது மனதிற்கு நிறைவாக இருந்தது.

நண்பர்கள் ‘பாடும் மீன்’ சிறீகந்தராசா, சிறீபாலன், வீடியோ கலைஞர் கிருஷ்ணமூர்த்தி, சுபாஷிகன், ஆகியோரும் தமது இதர வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், அசோகமித்திரன் மட்டுமல்ல, பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், மற்றும் ஈழத்தின் எழுத்தாளர்கள் சிலரும் நினைவுகூரப்பட்டார்கள்.

வாசிப்பு அனுபவம் தரும்  நற்பலனையே  இதுபோன்ற இலக்கியச்சந்திப்புகளும் தருவதையிட்டு மனநிறைவுடன் வீடு திரும்பினேன். தொடர்ந்தும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தவேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஏககுரலில் சொன்னது உற்சாகத்தைத்தந்தது.

அசோகமித்திரன் குறித்து அநாவசியமாக முகநூல்களில் அலட்டிக்கொண்டிருப்பவர்கள், அதனைவிடுத்து  ஆக்கபூர்வமாக சிந்திப்பதும் செயற்படுவதும்தான் மறைந்த படைப்புக்கலைஞனுக்கு வழங்கும் மரியாதை எனக்கருதுகின்றேன்.

எவ்வாறு பாரதியும் புதுமைப்பித்தனும் தொடர்ந்தும் வாசிக்கப்படுகிறார்களோ அதேபோன்று அசோகமித்திரனும் வாசிக்கப்படுவார், கொண்டாடப்படுவார்.

—-0—-

 

Series Navigationபாக்கத்தான போறேன்…….அம்பலம் – 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *