ஆயா

This entry is part 7 of 11 in the series 11 ஜூன் 2017

 

காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு.

 

தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது கால் குணமாகிவிட்டதா..

 

நம்ப முடியவில்லையே..

 

ஆச்சர்யமும், சந்தோசமும் கலந்த முகத்தோடு வந்து கதவை திறந்து பார்க்க, தபால்காரர் நின்று கொண்டிருந்தார். மருமகள் பேருக்கு ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது.

 

தபால்காரர் கொடுத்த கடிதத்தை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்த பூரணி, இந்த சோபாவில் கடைசியாக உட்கார்ந்தது எப்போது என்று நினைத்துப் பார்த்தாள்.

 

சமையல் ரூமுக்கு வந்து பார்த்தாள். ஆபீசுக்கு போகும் அவசரத்தில் மருமகள் அப்படியே விட்டுவிட்டுப் போன பாத்திரங்கள் கிடந்தன. துலக்கி வைக்கலாமா என்று மனதில் தோன்றியது.

 

ஏன் இப்படிச் செய்யக் கூடாது..

 

தனக்கு குணமானதை சஸ்பென்ஸாக வைத்திருந்து, மகன் கணேசனும், மருமகளும் ஆபீசில் இருந்து வந்தவுடன் அவர்கள் முன் திடீரென்று நடந்து காண்பித்து, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

ஆமாம்.. அப்படித்தான் செய்ய வேண்டும்.. அவர்கள் வந்தவுடன், அவர்களுக்கு தெரியாமல் சத்தமில்லாமல் பின் பக்கமாய் நடந்து வந்து, அவர்கள் முன் நின்று ஆச்சர்யபடுத்த வேண்டும்..

 

பாத்திரங்கள் துலக்கப் படாமல் கிடக்கிறதே..

 

மாலைவரை தானே.. மாலையில் மகனும், மருமகளும் வந்து விடுவார்களே.. அப்புறம் சமையல் சாமான் என்ன, வீட்டு வேலைகள் அனைத்தையும் நான் தானே செய்யப் போகப் போகிறேன்.. போன வருடம் வரை நான் தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன். அதனால் தானே மகனும் மருமகளும் சிரமமில்லாமல் வேலைக்கு போக முடிந்தது.

 

முடிவு செய்து விட்டாள் பூரணி. இந்த சந்தோச செய்தியை சஸ்பென்ஸாக வைத்து இருந்து சொல்வது என்று.

 

திரும்பவும் வந்து பழையபடி படுக்கையில் படுத்துக் கொண்டாள் பூரணி…

 

மாலையில் கணேசனும், மருமகளும் வந்தார்கள். எப்பவும் இருப்பது போல் படுத்துக் கொண்டிருந்தாள் பூரணி.

 

கணேசன் விசாரித்து விட்டு உள்ளே போக, மருமகள் விசாரிக்க வில்லை. கணேசனும், மருமகளும் உள்ளே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

 

இது தான் சமயம் என்று எழுந்து அவர்கள் ரூமை நோக்கி நடந்தாள் பூரணி. உடம்பெல்லாம் மகிழ்ச்சி.  அவர்கள் பேச்சு திடீரென்று சத்தமாய் கேட்க, ஏதோ பயம் தோன்றியது. நின்று விட்டாள் பூரணி…

 

மருமகள் சொன்னாள்.

 

“ எத்தனை     நாளைக்கு வீட்ல வைச்சு, இப்படியே பாத்துக்கிட்டு இருக்கறது..  ஆசிரமத்தில சேத்திடலாம்.. அங்க டாக்டர் தினமும் வர்ராங்களாம்.. இப்படி கைகால் வராம படுத்துக்கிட்டு இருக்கிறவங்கள நல்லா பாத்துகிறாங்களாம்.. எல்லாம் இலவசமாம்..”

 

கணேசன் ஏதோ மறுப்பு சொன்னது காதில் விழுந்தது. மருமகள் சத்தமாய் அதற்கு பதில் சொல்வதும் கேட்டது. பிறகு கணேசன் அடங்கிப் போனதும் புரிந்தது.

 

அதிர்ச்சி அடைந்த பூரணி, திரும்பவும் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டாள்.

 

பிறகு படுக்கையில் இருந்து எழ மனமே இல்லை.

 

அடுத்த நாள் காலை.

 

கணேசன் தயங்கித் தயங்கி பூரணியின் கட்டிலருகே வந்து, ஆசிரமத்தில் சேர்க்கப் போவதைப் பற்றிச் சொன்னான். தினமும் டாக்டர் வருவதாகவும், அங்கு இருந்தால் நீ சீக்கிரம் குணமாகி விடுவாய் என்றும் சொல்லி, ஆசிரமத்தில் சேர்ப்பதற்கான காரணங்கள் பற்றி நியாயம் கற்பித்தான். இலவச சேவை என்பதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை.

 

ஏற்கனவே காதில் கேட்ட விஷயம் தானே… சரி என்று சொல்லிவிட்டாள் பூரணி.

 

மாலையில் ஆசிரமத்துக்கு பூரணியைக் கூட்டிவந்தான் கணேசன். ஆசிரம நிர்வாகிகளிடம் தானும் தன் மனைவியும் வேலைக்கு போவதால், ஸ்டிரோக் வந்து கால்கள் இழுத்துக் கொண்ட தன் அம்மாவை வீட்டில் வைத்து கவனிக்க முடியவில்லை. அந்த காரணத்திற்காக மட்டுமே ஆசிரமத்தில் சேர்க்க வேண்டியுள்ளது என்று சொன்னான். இல்லையென்றால் தானும் தன் மனைவியும் பார்த்துக் கொள்ள முடியும் என்று சொன்னான்.

 

ஆசிரமத்தில் சேர்த்து விட்டு கணேசன் கிளம்பி விட்டான்.

 

ஆசிரமத்தில் சேர்ந்த பின் ஒரு பிரச்சினையை மட்டும் பூரணியால் சமாளிக்க முடியவில்லை.

 

அது குணமாகி விட்ட தனது காலை, உணர்வற்ற காலாக காட்டி நடிப்பது.

 

தனது கால் ஏற்கனவே குணமாகிவிட்டதைப் பற்றி சொல்லிவிடலாமா என்று தோன்றும்.

 

சொல்லிவிட்டால், நன்றாக இருந்து கொண்டு ஏன் ஆசிரமத்திற்கு வந்தாய் என்று கேட்பார்களே.. மகனுடன் சேர்ந்து நீயும் ஏமாற்றினாயா என்று கேட்பார்களே..

 

மகனும், மருமகளும் இப்படி பேசிக் கொண்டார்கள். அதனால் தான் இங்கு வந்தேன் என்று சொல்ல முடியுமா..

 

எப்போது, யாரிடம் இதைப் பற்றி சொல்வது.. பயமாக இருந்தது.

 

அடுத்த நாள் காலை.. தன்னைப் போல் ஸ்டிரோக் வந்து உணர்வற்ற காலுடன் படுத்துக் கிடக்கும் மற்ற ஆசிரம வாசிகளுக்கு பிஸியோதெரபி செய்ய ஒரு இளம் டாக்டர் வந்தார். பெயர் ரமேஷ் என்றார்கள். கணேசன் வயது தான் இருக்கும்.

 

அவர் இலவசமாக ஆசிரமத்து வாசிகளுக்கு வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார்கள். சொந்தமாகவும் ஒரு மருத்துவமனை வைத்து நடத்துவதாகச் சொன்னார்கள்.

 

டாக்டர் ரமேஷ், முதல் நாள் என்பதால் பூரணியை நடக்க வைக்கும் பயிற்சி கொடுக்க வில்லை.

 

நாளைக்கு நடக்க வைப்பதாகச் சொன்னார் அந்த டாக்டர்.

 

இரவில் யோசிக்கும் போது, பூரணிக்கு ஒரு எண்ணம் வந்தது.

 

இப்படி ஏன் செய்யக் கூடாது.

 

இந்த டாக்டர் நடைப் பயிற்சி கொடுக்கும் போது, அவரின் நடைப் பயிற்சியினால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கால் சரியாகி விட்டதாகக் காண்பிக்கலாமே..

 

அது தன்னையும் காப்பாற்றும். இலவசமாக ஆசிரமத்து வாசிகளுக்கு வைத்தியம் பார்க்கும் அந்த டாக்டர் ரமேஷின் சிகிச்சையினால் குணாமாகி விட்டது என்று காண்பித்தால் அது அவருக்கு புகழும் கொண்டு வருமே. அவர் கைராசிக்காரர் என்று பெயர் பெறுவாரே..

 

சேவை மனப் பான்மையுடன் பணம் வாங்காமல் தொண்டு செய்யும் அவர் தன் தொழிலில் முன்னேற அது உதவுமே..

 

ஒரு விதத்தில் இது பொய் என்றாலும், இந்த பொய் ஒரு நன்மைக்கு உதவுமே.. வள்ளுவரே சொல்லி இருக்கிறாரே, ஒரு நன்மைக்காக பொய் சொல்லலாம் என்று.

 

நன்மைக்கான அந்த பொய்யை அரங்கேற்ற முடிவு செய்து விட்டாள் பூரணி.

 

ஒரே நாளில் குணமாகிவிட்டதாகக் காட்டக் கூடாது என்று முடிவு செய்தாள்.

 

அந்த டாக்டரின் சிகிச்சையினால் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி விட்டதாகக் காண்பிக்க முடிவு செய்து கொண்டாள்.

 

தினமும் டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார். ஐந்து நாட்கள் ஓடின. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது போல் காட்டினாள். ஆறாவது நாள் முழுவதுமாக நடந்தாள் பூரணி. டாக்டருக்கு மிகவும் மகிழ்ச்சி.. தன்னுடைய சிகிச்சையினால் குணமாகிவிட்டதாக நினைத்து.

 

சிரமத்தில் இது தான் பேச்சு.  அந்த டாக்டர் ரமேஷினால் பூரணியின் கால் குணமாகிவிட்டதாக பேசிக்கொண்டார்கள். ஐந்தே ஐந்து நாள் சிகிச்சையில் அவர் பூரணியை குணமாக்கி விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். டாக்டரின் கைராசியைப் பற்றி புகழ்ந்தார்கள். டாக்டர் ரமேஷுக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

 

பூரணியின் மகன் கணேசனுக்கு ஆசிரமத்தில் இருந்து சொல்லி அனுப்பினார்கள். இப்போது குணமாகிவிட்டதால் வந்து தன் அம்மாவை அழைத்துக் கொண்டு போகும்படி சொன்னார்கள்.

 

அடுத்த நாள்  கணேசனும், மருமகளும் வந்து பூரணியின் எதிரில் நின்றார்கள். வீட்டிற்கு வரும்படி அழைத்தார்கள்.

 

அதற்கு பூரணி,

 

“ இல்லை கணேசா.. நான் அந்த டாக்டர் ரமேஷ் கிட்ட பேசி இருக்கேன்.. அவரோட ஆஸ்பத்திரியில சம்பளம் வாங்காமா ஆயாவா வேலை செய்யறேன்னு சொல்லி இருக்கேன்.. அங்கேயே தங்கிக்கிறேன்னு சொல்லி இருக்கேன். மூனு வேலை சாப்பாடு, வருஷம் ஒரு புடைவை மட்டும் கொடுத்தா போதும்னு சொல்லி இருக்கேன்.. அவரும் சரின்னு சொல்லி இருக்காரு..  இலவசமா எல்லாருக்கும் அவரு சிகிச்சை செய்யறதுக்கு நான் கூட ஒத்தாசையா இருக்கலாம்னு முடிவு செஞ்சியிருக்கேன்..” என்றாள்.

 

————————————————————————————————————————

vtvalavan61@gmail.com

Series Navigationஇந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளதுகலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *