முனைவர் ப.சுதா
மின்னஞ்சல்
Semmozhitamil84@gmail.com
சங்க நூல்களில் எட்டுத்தொகை நுல்களுள் ஒன்றான கலித்தொகை ‘கற்றறிந்தா ரேத்துங்கலி” என்று சான்றோரால் பாராட்டப் பெறும் பெருமையுடையது ஆகும். கலிப்பாக்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுவது. இதன் சிறப்பாகும். இலக்கண நூல்களில் கூறும் அகப்பொருட் பகுதிக்கு இந்நூல் இலக்கியமாகத் திகழ்கறது. பாலைக் கலியைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக்க் கலியைக் கபிலரும், மருதக்கலியை மருதநில நாகனாரும், முல்லைக் கலியை நல்லுருத்திரனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் இயற்றியுள்ளனர். இக்கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூல் முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இத்தகையச் சிறப்பு மிக்க கலித்தொகையில் மகளிர் கற்புக் கோட்பாட்டினை வரையறைச் செய்துள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.
கற்பு – விளக்கம்
கல்+பு = கற்பு. இச்சொல் ‘கல்‘ என்னும் பகுதியடியாகப் பிறந்தது. கற்பு என்பதற்கு இளம்பூரணர், “மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது என்கிறார். நச்சினார்க்கினியர், தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்” என்கிறார். வ.சுப.மாணிக்கம், “கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது” என்கிறார். புலவர் குழந்தை, “கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் நெஞ்சுகலந்த அன்பின் பயனே கற்பு ஆகும்” என்கிறார்
கற்பு என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் தந்தாலும் இச்சொல் ‘கல்‘ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. ‘கல்‘ என்பதற்குக் கற்றல் என்ற பொருளுண்டு. அதாவது வாழ்வுக் கலையைக் கற்றலாகும் எனலாம். கற்பொழுக்கம் இருபாலுக்கும் பொதுவானதென அறியமுடிகின்றது. எனினும் பெண்டிர்க்கே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது
கடவுளும் கற்பும்
கற்புடையப் பெண்ணைச் சங்ககால மக்கள் தெய்வத்திற்கு நிகராகப் போற்றினர். தலைவன் பொருளீட்டப் போகும் வழியின் அருமையை எண்ணித் தலைவி வருந்துகிறாள். தோழி அவளிடம் தலைவன் நலம் வேண்டி, மழையையும், வெம்மையையும், காற்றையும் நீ வேண்டினால் உன்கற்பின் மேன்மை காரணமாக அக்கடவுளின் உதவியைப் பெறுவாய் என்று கூறுவதை,
“தெய்வத்துத் திறன்நோக்கித் தெருமரல் ;தேமொழி
வறன்ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்
திறன்ஓடிப் பசப்பூர்தல் உண்டுஎன
அறன்ஓடி விலங்கின்று அவர் ஆள்வினைத் திறத்தே”
(பாலைக்கலி.15: 19-22)
என்ற கலித்தொகை அடிகள் சுட்டுகின்றன. கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொண்டு தன் கணவனையும் காப்பாற்றி தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி கொண்டவளாய் வாழ்கின்றவளே பெண் என்பதை,
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (குறள்.56)
என்னும் குறளும் கலித்தொகைவழி சுட்டிச் செல்கிறது
அருந்ததி வசிட்டன் மனைவி, இவற் கற்பில் சிறந்தவள். இவளின் கற்பினை, தலைவியின் கற்போடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அருந்ததி போன்ற கற்புடைய உன் மனைவியின் பருத்த மெல்லிய தோள்களைப் பிரியாதிருப்பதே பெருஞ்செல்வம் என்பதை,
“வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை”
(பாலைக்கலி.1 :21-22)
என்னும் கலித்தொகை பாடல்வரிகள் சுட்டிச் செல்கின்றன
காதல் உறுதி
ஒருவனிடம் காதல் கொண்ட பெண்ணொருத்தி, அவனைத்தவிரப் பிற ஆடவனை எண்ணாத திண்ணிய கற்புடையவளாகத் திகழ்ந்ததை,
காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக்கண் புதைத்து அஞ்சி, தளர்ந்து அதனொடு ஒழுகலால்
நீள்நாக நறும்தண்தார் தயங்கப் பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உறந்தழீஇய போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி”
(குறிஞ்சிக்கலி.3:1-5)
என்ற குறிஞ்சிக்கலிப் பாடலின் மூலம் அறியமுடிகின்றது. அதாவது, ஆற்று வெள்ளத்தில் எங்களோடு சேர்ந்து ஆடிமகிழ்ந்த உன்மகள், வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டாள். அப்போது அங்கு வந்த ஓர் இளைஞன், இயல்பாகப் பாய்ந்து அணிகலன் அணிந்த உன் மகள் மார்பைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு வந்து கரைசேர்த்தான் தாயே அவன் மார்பைத் தன் மார்பு தழுவிற்று என்பதை அறிந்து என்தோழி, அன்றே அவனுக்கு மனைவியாம் என்ற உரிமையைக் கொண்டதனால் மழை பெய்ய விரும்பினால், பெய்விக்கும் தெய்வக் கற்புடையவளாகி விட்டாள் என்று செவிலிக்குத் தோழி உணர்த்துகிறாள்.
மழை பெய்விக்கும் கற்பு
உலகமே வறட்சியால் வாடிய காலத்தும் மழையைப் பெய்விக்கம் கற்புச்சக்தி உடையவள் இவன் தலைவி என்று கலித்தொகைச் சுட்டிக் காட்டுகிறது. இதனை,
“வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்”
(பாலைக்கலி.15 :20)
என்னும் கலித்தொகை பாடல்வரி விளக்கும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் திருவள்ளுவரும், கற்புடைய பெண் தெய்வத்தைக் கூட தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழைபெய்யும்படியான தெய்வ பலம் உடையவள் என்கிறார்.
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55)
காதல் வலிமையும் கற்பின் சிறப்பும்
தலைவியின் காதலையும் கற்பு நெறியையும் அறியாது, தலைவியின் காதல் நெஞ்சத்திற்கு மாறாகத் திருமணம் நடத்தினால், வள்ளிக்கொடி கிழங்கு விடாது, மலைமேல் தேனடைகள் கட்டப்பெறா, தினைக்கொல்லையிலும் கதிர்கள் வளமாக வளராது என்று தோழி, சிறுகுடியில் வாழும் மக்களைப் பார்த்து அச்சுறுத்தும் வகையில் தலைவியின் கற்புச் சிறப்பினைக் கலித்தொகைச் சுட்டிக் காட்டும் வகையைக் காணலாம்.
“சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ்வீழா வரை மிசைத்தேன் தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா; மலைவாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்” (குறிஞ்சிக்கலி.3: 11-14)
முடிவுரை
களவொழுக்கம் கற்பொழுக்கமாக நிறைவேறும் சமூகப் போக்கு இருந்தது என்பதை அறியமுடிகிறது. தோழியின் முயற்சிகள் அனைத்துமே காதலர்கள் களவு ஒழுக்கத்திலிருந்து கற்பொழுக்கம் எய்தவேண்டும் என்பதை நோக்கியே அமைகின்றன. சங்க இலக்கியங்கள் கற்பைக் கடவுளோடு ஒப்பிடக்கூடியப் போக்கு காணப்படுகின்றன. இவ்வாறாகக் கலித்தொகை முழுவதிலும் அக்கால மகளிர்தம் கற்புக் கோட்பாடு வெளிப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.
பயன்கொண்ட நூல்கள்
- நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (1970), கழக வெளியீடு, சென்னை.
- இளம்பூரணர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (1986), கழக வெளியீடு, சென்னை.
- புலவர் குழந்தை, தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (2007) பூம்புகார் பதிப்பகம், சென்னை.
- மாணிக்கம்.வ.சுப, தமிழ்க்காதல் (2007), சாரதா பதிப்பகம், சென்னை.
- நாமக்கல் கவிஞர், திருக்குறள் தெளிவுரை(2008), தென்றல் நிலையம், சிதம்பரம்.
- இராசமாணிக்கனார்.மா, கலித்தொகை உரை (2011), பூம்புகார் பதிப்பகம், சென்னை.
- தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு
- எனது ஜோசியர் அனுபவங்கள்
- ஒரு தவறான வாயில் வழியாக …
- பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!
- கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது
- ஆயா
- கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதைகள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16