எஸ்.ஹஸீனா பேகம்
நேற்று தற்செயலாக லோக்கல் டிவி சேனலில் வரும் கல்வி நிலையத்திற்கான விளம்பர படத்தினை காண நேர்ந்தது.விளம்பர படம் அல்ல விளம்பர குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த விளம்பர காட்சியை பாா்க்கும்போது அந்த பள்ளி முதல்வருடனான ஒரு சந்தி்ப்பு நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நான் பணிபுரிந்த பள்ளியின் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேற்குறிப்பிட்ட பள்ளி முதல்வா் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியா்களை மட்டும் அமர்த்தி பள்ளியையும் கல்வித்தரத்தினையும் முன்னேற்றுவதற்கான உத்திகளையும் கூறத்துவங்கினார் அம்முதல்வா்.
பள்ளியில் மாணவா்களை சரளமாக ஆங்கிலம் பேச வைக்க முதலில் ஆசிரியர்களாகிய நீங்களனைவரும் தூய ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும் , அதற்கு நீங்களனைவரும் வீட்டிற்குள் நுழையும்போது செருப்பை வாசலிலே விட்டு வருவதைப்போன்று பள்ளிவளாகத்திற்குள் நுழையும் போது உங்களது தாய்மொழியை பள்ளிவளாகத்திற்கு வெளிளே விட்டுவர வேண்டும் என்று அறிவார்ந்த சிந்தனையொன்றை உதிர்த்தார். அவருடைய மற்றைய நடவடிக்கைகள் எப்படியோ! எனக்கு வெறுப்பூட்டியது அவரின் செருப்பு ஒப்புமை தான். அன்றைய பொழுது ஓடு வேய்ந்த கட்டிடத்தில் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி இயங்கி வந்த அவருடைய பள்ளி இன்று கான்கிரீட் போட்ட பலமாடி கட்டிடத்தில் இன்டர்நேசனல் பள்ளி என்ற பெயரில் இயங்கிவருவது குறிப்பி்டத்தக்கது.
ஒழுக்கத்துடனான கல்வி, செய்முறையுடன் கூடிய கல்வி, சரளமான ஆங்கில பயன்பாடு,விசாலமான வகுப்பறை வசதி, காற்றோட்டமான இடவசததி, நூலக வசதி, ஆய்வுக்கூட வசதி என்று பள்ளி குறித்த சிறப்பம்சங்கள்அந்த விளம்பர படத்தில் அள்ளிவீசப்பட்டன. மேலே கூறப்பட்ட காற்றோட்டமான இடவசதி, வகுப்பறை வசதி, ஆய்வுக்கூடம், விளையாட்டுத்திடல், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவையெல்லாம் கல்விநிலையங்களின் தகுதிகளுக்கான அடிப்படை கூறுகள் தாம். இத்தகைய அடிப்படை கூறுகளையெல்லாம் அடையப்பெறாத கல்வி நிறுவனங்கள் அரசு அங்கீகாரத்தை வழங்க தகுதியற்றவை என்பது அனைவரும் அறிந்த செய்தியே. இருந்தாலும் அவற்றைக்கூட பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி விளம்பரம் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது தற்போதைய கல்வியாளா்களின் வியாபார சாதுர்யம். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விசயமென்னவென்றால் இவா்களில் பெரும்பாலானோல் தத்தம் மாணவக்கன்மணிகளை பயன்படுத்தியே விளம்பரப்படங்களை தயாரிக்கின்றனா்.
ஆக நம் பிள்ளைகள் கல்விகட்டணம் செலுத்துவதோடு கூலியில்லாத வேலையாளாக கேமரா முன் நின்று நடித்தும் கொடுக்கின்ற அளப்பறிய வேலையையும் செய்து கொடுக்கின்றனா். தம் பிள்ளை தொலைக்காட்சியில் தோன்றி ஐ வான்டு பிகம் எ சயின்டிஸ்ட், இந்த ஸ்கூல் எனக்கு கிடைத்த வரம் என்றும் வசனம் பேசிடும் காட்சிகளை காணுகையில் சில பெற்றோர்களுக்கு உள்ளுக்குள் அவ்வளவு பேரானநதம். .போதாக்குறைக்கு முதல் மதிப்பெண் பெற்றிடும் மாணவரின் புகைப்படத்துடன் வீதிகள் தோறும் பதாகைகள் அமைத்து விளம்பரம் செய்வோருக்கு என்னிடத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. மழலையர் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு கட்டணம் செலுத்தி படித்து வந்து பத்தாம் வகுப்பில் நூறு விழுக்காடு தேர்ச்சி எனும் பெயரை பெறுவதற்காக பத்தாம் வகுப்பின் துவக்கத்தில் கழற்றிவிடப்பட்ட சராசரி மற்றும் கற்றலில் பின்தங்கிய மாணவா்களின் புகைப்படங்களை எங்கே காட்சி்ப்படு்த்துவார்கள்?.
தற்போதைய காலகட்டத்தில் சிறு தோல்வியையும் ஏமாற்றத்தையும் கூட தாங்கிக்கொள்ளவியலாத மற்றும் பிரச்சினைகளையும் அதன் அழுத்தங்களையும் மனவியல் போராட்டங்களையும் கடந்து வர சிரமப்படும் மாணவா்களை தான் அதிகம் காண முடிகின்றது. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் முறையாக அணுக முடியாத நிலையில் தான் வன்முறை எண்ணம் அல்லது தற்கொலை முடிவு போன்ற எதிர்மறை தாக்கங்கள் எட்டப்படுகிறது. முதல் தர மதிப்பெண் மட்டுமே வெற்றிக்கான வழி என்றால் மற்றையவா்கள் யாரும் இங்கு வாழ்தல் சாத்தியமல்ல.
இவ்விடத்தில் நீங்கள் கூறலாம் இது கம்ப்யுட்டர் காலம், விஞஞான உலகம் என்று.ஒருவன் சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி பயணித்து சூரிய உதயத்தை காணும் பயணத்திற்கு திட்டமிடுகிறான் எனில், அவன் தான் கடந்து வர வேண்டிய தூரத்தை விமானத்திலும் பயணிக்கலாம், இரயிலிலும் பயணிக்கலாம். சொகுசு வாகனத்திலும் பயணிக்கலாம். அரசு பேருந்திலும் பயணிக்கலாம், விரும்பியவன் பாதயாத்திரையாகவும் பயணிக்கலாம். இவ்விடத்தில் விமானத்திலோ, சொகுசு வாகனத்திலோ பயணித்தவன் வெற்றி பெற்றவனாகவோ பேருந்தில் பயணிப்பவன் தோல்வியுற்றதாகவோ ஆகிவிடுமா? இலக்கு என்பது சூரிய உதயத்தை காண்பது, இயற்கையை மேன்மையை தரிசிப்பது, நேர்மையான முறையில் பயணித்து கடந்து வரும் ஒவ்வொரு விநாடியை அனுபவித்து நற்செயல்களின் வாழ்க்கையை நிறைவு பெற வாழ்வது தான் வெற்றி என்பதை உணர்த்துவதுவே சிறந்த கல்வியின் நோக்கமாகும் .
மாணவா்களை மருத்துவராகவும் விஞ்ஞானிகளாகவும் உருவாக்க முனையும் பள்ளிக்கூடங்கள், அவா்களை நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாக, தலைசிறந்த மாந்தர்களாகவும் உருவாக்க முயலுவாா்களெனில் அவா்கள் இந்த தேசத்திற்கு புரிந்திடும் மகத்தான சேவை வேறென்று இருக்கப்போவதில்லை.
எஸ்.ஹஸீனா பேகம்.
- தொடுவானம் 173. அப்பாவின் அவசர அழைப்பு
- எனது ஜோசியர் அனுபவங்கள்
- ஒரு தவறான வாயில் வழியாக …
- பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!
- கல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது
- ஆயா
- கலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதைகள்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 16