பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)

This entry is part 14 of 14 in the series 18 ஜூன் 2017

 

(அன்புடையீர், கடந்த ஒரு மாதமாக உடல் நலமின்றி இருந்ததால் தொடர் தாமதமாக வெளிவருகிறது. திண்ணை இதழ் வாசக நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்)

 

பிரான்சு நாட்டின் பதினேழாம் நூற்றாண்டு பதினான்காம் லூயியின் நூற்றாண்டு என்றால் மிகையில்லை. 1638 தொடங்கி 1715 வரை அவர் ஆட்சி செய்த தாக வரலாறு சொல்கிறது. ஏற்கனவே கூறியிருந்ததைப் போல அவர் பட்டத்திற்கு வந்தபோது  வயது ஐந்து.  பதின்மூன்றாம் லூயியைப்போலவே தொடக்கத்தில் பிரதிநிதித்துவ ஆட்சி. இங்கும் மகனுக்குப் பதிலாக தாயின் ஆட்சி, ஆலோசகர் கார்டினல் மஸாரன். மஸாரன் வரிவிதிப்புமுறை கடுமையான எதிர்ப்பையும் சந்தித்த து, அதன்காரணமாக தாயும் மகனும் தங்கள் இருப்பிடத்தை பாரீஸ் வெர்ஸாய் பகுதிக்கு பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. பதினான்காம் லூயி உண்மையில்  பட்டத்திற்கு வந்து  23 ஆண்டுகள்  கழித்தே அரசு பொறுப்பேற்றார்., அதாவது மஸாரன் இறப்பிற்குப் பின்னர்.  காலம் கடந்து அரசு பொறுப்பேற்றபோதும் ஆட்சி அதிகாரம் இரண்டிலும் தம் அடையாளத்தைப் பதிக்க அனைத்துவகையிலும் செயல்பட்டார். பிரான்சு நாட்டின் ஆட்சி பரப்பு ஐரோப்பாவில் மட்டுமின்றி, காலனி ஆதிக்கத்தின் மூலம் பிறநாடுகளிலும் காலூன்ற ஆரம்பித்தது. இந்தியாவில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கம் உருவானதும் இவர் ஆட்சியின்போதுதான். உள்நாட்டிலும் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக களையெடுப்பை நடத்தினார்.. அவருடைய அன்னையின் பிரதிநிதித்துவ ஆட்சியில் செல்வாக்குடனிருந்த நிதி அமைச்சர் ஃபூக்கே என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இவர் காலத்தில் பிரெஞ்சுக் கலயும் இலக்கியமும் கடந்த காலத்தினும் பார்க்க பெரும் பாய்ச்சலைக்கண்டன.

பதினேழாம் நூற்றாண்டு கலை இலைக்கிய போக்கை முற்காலம் பிற்காலம் என இருவகையாகப் பிரிக்கலாம் . இவ்விரண்டு பிரிவிலும் தடம் பதித்த ஆளுமைகள் என்கிறபோது ரெனே தெக்கார்த், பிலேஸ் பஸ்க்கால், லா ஃபோந்த்தேன், மொலியேர், புவாலோ, ராசீன் என பல  பெயர்களை நினைவுகூறமுடியும். அனைவருமே உலகப் புகழ்பெற்றவர்கள். இவர்களைத் தவிர இந்த நூற்றாண்டில் வழக்கிற்கு வந்த வரம்பற்ற சுதந்திரம்(Libertinage), தொன்மம்(le Classicisme), ழான்ழெனிஸம் (le Jansenisme) எனும் தீவிர சமயநம்பிக்கை,.போன்ற சொற்களையும் புரிந்து கொள்ளவேண்டும்.

 

கலைச்சொற்கள்

. கிளாஸிஸம் (Le Classicisme) என்ற சொல்லை  ‘antique’  என்ற சொல்லோடு இணைத்து தொன்மம் எனப் பார்க்கும் வழக்கம்  தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் உள்ளது. ஆனால் கிளாசிஸம் சொல் முக்கியத்துவம் பெற்ற பதினேழாம் நூற்றாண்டில் அதில் ஓரளவிற்குத்தான் , நியாயமுண்டு. முதலாவதாக ‘Classicus’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘மேட்டுக்குடியினருக்குச் சொந்தமானது’ எனப் பொருளாம். சமூகத்தில் மேன்மக்களின் நன்மதிப்பை பெறவேண்டி ஒரு வித அழகியல் நெறியை  தங்கள் படைப்புகளில் படைப்பாளர்களில் ஒரு சிலர் கடைபிடிக்கின்றனர். அந்த அழகியலின் பண்புகளாக  இக்கிளாசிஸ்டுகள்  தங்கள் கலை இலக்கிய படைப்புகளில் முன்னெடுத்தவை :’ஒழுங்கு மற்றும் இசைவு’,  ‘மேன்மை மற்றும் எளிமை’, ‘தெளிந்த சிந்தனை’ மற்றும்  பாரம்பர்ய பண்பாட்டை உயர்த்திபிடித்தல். தவிர இப்பிரிவினர் தங்கள் முன்மாதிரியாக  இலத்தீன் மற்றும் கிரேக்க படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புக்களையும் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் மிகச்சிறந்த படைப்புகளைக் கிளாசிக்  என அழைத்தனர்.

கிளாசிஸத்தை வரையறுக்க முயன்றவர் புவாலோ(Boileau) அவருடைய கவிதைக் கலை(Art poétique) கிளாசிஸத்தைக் கீழ்க்கண்டவகையில் அடையாளப்படுத்துகிறது :

– இலக்கியகலை என்பது மனிதர் இயல்பின் சாயல்.

–  சீர்மை என்பது உண்மை. உண்மையைக் கலை இலக்கியத்தில் கையாளுவதே மகிழ்ச்சி அளிக்க வல்லது.

– நியாயமென்று உண்மையை ஏற்பது அது நம்பகத்திற்கு உரியதாக இருக்கிறபோதுதான்.

 

. ழான்ழெனிஸம்(le Jansenisme) 1640 ல் கொர்னேலியுஸ் ஜான்ஸன் (Cornelius Janson) என்ற சமயகுரு(இலத்தீன் மொழியில் ழான்செனியுஸ் (Jansénius)), புனித அகுஸ்த்தின் பெயரால் (Saint Augustin) அகுஸ்த்த்னிஸ் (Augustinus)  என்ற நூலை எழுதினார். நூல் முழுக்க புனித அகுஸ்த்தின் போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடியொற்றி உருவானதே ழான்ஸெனிஸம். இவ்வியக்கத்தினர் போர்-ரொயாலை (Port-Royal) தலைமைப் பீடமாக அமைத்துக்கொண்டு  செயல்பட்டனர் .  பதினாறாம் நூற்றாண்டில் புரோட்டஸ்டண்ட்  என்கிற சமய சீர்திருத்தம் கிறித்துவ மரபுக்கு எதிராகப்  புதிய சிந்தனைக்கு வித்திட்டதைத் தொடர்ந்து அவ்வப்போது கத்தோலிக்க மதத்திற்குள்ளும் புணரமைப்புக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. புரோட்டஸ்டண்ட்களைத் தீவிரமாக எதிர்த்த பதினேழாம் நூற்றாண்டில் செல்வாக்குடனிருந்த வரம்பற்ற சுதந்திர அபிமானிகளின் போக்கைக் கண்டித்த, மதச் சீர்திருத்தச் சிந்தனைகளை அனுமதிக்க விரும்பாத  எதிர் சீர்திருத்த கருத்தியங்களில் (Contre-Réforme)ஒன்றாக ஜான்ழெனிஸத்தைக் கருதவேண்டும். மனிதர்கள் இயல்பிலேயேஅறநெறி பிறழ்ந்தவர்கள்  எனவே தேவனின் கருணையின்றி இரட்சிக்கப்பட சாத்தியமில்லை என ழான்ழெனிஸம் கூறியது. இப்போதனை மனிதர்களுக்கு நம்பிக்கை அளித்த இயேசு சபையினரின் கொள்கைக்கு எதிராக இருந்தது, இதனால் அப்போதையை பிரெஞ்சு அரசின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டது. பாரீஸ் நகரம் முதலான முக்கிய பேராயர்களின் ஆதரவு இவ்வியக்கத்திற்குக் கிடைத்ததால்  கத்தோலிக்க மதத்திற்குள் ஒரு சிறு பிரிவினரின் இயக்கமாக கருதவும் கூடாது. பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசாங்கத்தை வழி நடத்திய கார்டினல் ரிஷ்லியெ(Richelieu), அவர் இறப்பிற்குப்பின்னர் கார்டினல் மஸாரன்(Mazarin) ஆகியோரின் பகைமையைச் சம்பாதித்துக்கொண்ட இயக்கம், எனவே அப்போதைய முடியாட்சியின் சமய கொள்கைக்கு  எதிரானதொரு அரசியல் அமைப்பென்றும் இவ்வியக்கத்தினரைக் கருதலாம். .

. வரம்பற்ற சுதந்திர அபிமானிகள்(Libertins) : சமூதயாத்தின் பெருவாரியான மக்கள்  அறம், ஒழுங்கு என்று கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக  சிந்தனை, செயல், புலன்கள் அனைத்திலும் வரம்பு மீறலை நெறியாகக் கொண்டிருந்த  அமைப்பினர். இதன் உச்சமாக பதினெட்டாம் நூற்றாண்டு பாலுறவுகளில் கண்மூடித்தனமான அத்துமீறல்களுடன் முடிவுற்றது. Libertinage என்ற சொல்லுக்கு சமயம் மற்றும் சமூகமரபிலிருந்து விடுதலை அல்லது அதற்கான உரிம ம் (Licence de l’esprit en matière de pensée religieuse et mœurs) என்று பொருள். பதினெட்டாம் நூற்றாண்டிலும் இக்கோட்பாடு செல்வாக்கினைப் பெற்றிருந்தபோதிலும், பதினேழாம் நூற்றாண்டு இதன் ஆரம்பம். மனிதர்களின் இயற்கைப் பண்பை தத்துவமாக கட்டமைக்க நடந்த முயற்சி. குறிப்பாக 1620ல் மேட்டுக்குடி இளைஞர்களைப்பெரிதும் கவர்ந்த  இச்சிந்தனைகளை இலக்கியவெளிக்கு அழைத்துபோனவர் தெயோஃபில் தெவியோ(Théophile de vieu). சமயத்திற்கு எதிரான கிளர்ச்சி, சமூக நெறி மீறல் இச்சுதந்திர சிந்தனையை வளர்த்தெடுக்க உதவின. தவிர பதின்மூன்றாம் மற்றும் பதினான்காம் லூலிகளின் தொடக்க கால பிரதிநிதித்துவ அரசியல் சூழலும் பிரபுக்கள் குடும்ப இளைஞர்களின் வரம்பற்ற போக்கிற்குக் காரணமாயின. இம்மனநிலை இலக்கியம், நாடகம் ஆகியவற்றிலும் எதிரொலித்தது வரம்பற்ற சுதந்திர அபிமானிகளில் தவிர்க்கமுடியாதபெயர் பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த மார்க்கிஸ் தெ சாத்(Marquis de Sade) என உலகம் அறிந்த  பிரான்சுவா தெ சாத்.

.பிரெஸியஸ் (Précieuse) அல்லது பெருந்தகைப் பெண்கள் :பதினேழாம் நூற்றாண்டில் ராம் பூய்யே விடுதி அல்லது Hôtel de Rembouillet வில் இலக்கிய உரையாடலுக்கென கூடும் மரபு உருவானது. அறிவு பூர்வமான இவ்வுரையாடலில் இலக்கியம், பண்பாடு, கலை முதலான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. மேட்டுக்குடிபெண்கள், கல்விமான்கள், கலை இலக்கிய அபிமானிகள் பங்கேற்றனர். இப்பெண்களே  ‘Précieuse’ என அழைக்கப்பட்ட னர். நாகரிகமாக, நாசூக்காக, இன்னாததைத் தவிர்த்து, இனியதைச் சொற்களிலும் உரை பொருளிலும் தேர்வு செய்தவர்கள். உயர்ந்த உள்ளமும் நல்லறிவும் கொண்ட ரம்பூய்யெ சீமாட்டி , நான்காம் ஹாரியின் அவையில் சில பிரபுக்களின் இழி நடத்தையில்  வெறுப்புற்று அவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட இதனை ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.  தமிழில் இடக்கரடக்கல்  என்றொரு வழக்குண்டு. பொதுவிடத்தில், சபைகளில், பலர் முன்னிலையில் பேசும்பொழுது  சிலசொற்களை வெளிப்படையாக கூறுவது நாகரீகமல்ல என்று கருதி மாற்று சொற்களை உபயோகிக்கும் மரபு. இப்பெண்மணிகளும் அவ்வாறே அநாகரீகம் எனக் கருதும் சொற்களுக்கு மாற்றுச் சொற்களை தங்கள் உரையாடலில் கையாண்டனர்.

 

கலை இலக்கியம் :

நாடகம்

பிரான்சு நாட்டில் இன்று  சின்னசிறு நகரங்களில்கூட ஒபேரா அரங்கு,, நாடக அரங்கு, கலை நிகழ்ச்சி அரங்கு என உள்ளன. வாரம் தோறும் நிகழ்சிகள் இருக்கின்றன. பெரிய  நகரங்களில் இவ்வரங்குகளின் எண்ணிக்கையும் அதிகம். தொழில் முறை நாடக க் கலைஞர்களைத் தவிர்த்து, திரைப்பட நடிகர்களும் அவ்வப்போது  நாடகங்களில் நடித்து வருகின்றனர். தங்கள் வாழ்நாளில் மேடையேறாத பிரெஞ்சு நடிகர் நடிகையை பிரெஞ்சு திரைப்பட உலகில் காண்பது அரிது.

தொடக்கத்தில் நாடகக்கலை உயர்மக்களுக்கான தல்ல என்ற கருத்து  பிரெஞ்சு சமூகத்தில்  இருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நாடகங்களை நடத்தியவர்கள் நாடோடி மக்கள். இவற்றின் பார்வையாளர்களாக இருந்தவர்கள்  அடித்தட்டுமக்கள், போதிய கல்வி அறிவு பெறாதவர்கள்.  எனவே இநாடகப் படைப்புகள் மோசமான வசன ங்கள், கீழ்த்தரமான உடல்மொழிகள் என்றிருந்தன.  இந்நிலமை பதினேழாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்  மாறிற்று. கல்வியாளர்கள், அரசர் உட்பட பிரபுக்கள், அரசவையிலிருந்த மூத்த குடிமக்கள் , கலை இலக்கிய அபிமானிகள் பார்வையாளர்கள் ஆனார்கள்., இன்றளவும் நிலைமையில் மாற்றமில்லை.

வெகுகாலம் தொட்டே  பிரெஞ்சு சமூகம் ஒழுக்கம், புதிர், மடமை, எள்ளல் ஆகியவற்றை மையப்பொருளாகக் கொண்ட விடயங்களை ஆராதிப்பதில்  சோர்வுறாமல் இயங்கியவர்கள். மன்னர் அவைகளில் ஒரு பிரிவினரை, வருத்தப் படாத மனிதர்கள் என்ற பொருளில் ‘Les enfants sans souci’ என்றே அழைத்தனர். இவர்களுடன் பேரார்வலர்கள் என்ற அமைப்பினர், தொழிலாளர்கள், குட்டி பூர்ஷ்வாக்கள்,தொழில்முறை சாரா நடிகர்கள் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.  சமூக ஒழுக்கம், மரபு இவற்றைக் கேலி செய்யும் அங்கத நாட கங்களில் இதற்கு முந்தைய நூற்றாண்டுகளுக்கு அனுபவங்கள் உண்டென்கிறபோதும், தீவிரமான நாடக ங்கள் குறிப்பாக துன்பவியல் நாடகங்கள் அரங்கேறியதும், அரசு மற்றும் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றதும் பதினேழாம் நூற்றாண்டே.  மொலியேர், பிலாந்த்ரூ போன்றவர்கள் தங்களுக்கென நாடக க் குழுவும் வைத்திருந்தனர். அரசு இவர்கள் நாடகங்களுக்குப் பயிற்றுப் பட்டறைகளையையும்  உள்ளரங்கங்களையும் தானமாக அளித்தது.   எனினும் கிறித்துவமத த்தினர், (சீர்திருத்த சபையினர் உட்பட) நாடக த்துறையினரைச் சமூகத்திற்கு எதிரானவர்களாகப் பார்த்தனர். அவற்றை சமயம் மற்றும் சமூக நெறிகளுக்கு முரண்பட்டவையென கருதி , நாடகத்துறை சார்ந்தவர்களுக்கு சமய ச் சடங்குகள் மறுக்கப்பட்டன. கல்லறையின் கதவைக்கூட அடைத்தார்கள், பாதிக்கப்பட்டவர்களில் மொலியேரும் ஒருவர்.

அ. பியர் கொர்னெய் (Pierre Corneille) 1606 -1684

இலக்கிய அபிமானிகளால் அங்கீகரிக்கப்பட்டிராத மேடை நாடகங்களுக்கு முதன்முதலாக கலை வடிவம் தந்தவர் பியர் கொர்னெய். பிரெஞ்சுத் துன்பவியல் நாடகங்களின் தந்தையும் கூட. முதல் நாடகம் 1629ல் மேடையேற்றப்பட்டது. 16ம் நூற்றாண்டைச்சேர்ந்த  அலெக்ஸாண்டர் ஹார்டிக்கு(Alexanre Hardy) இதை அர்ப்பணித்தார். கொர்னெய் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய முதற்படைப்பு ‘Cid’ அடுத்தது’Pompée’.

1637 ல் ‘ le Cid ‘ மேடைக்கு வந்தது. இந்நாடகம்  ருவான்(Rouen) பிரபுஅவையைச் சேர்ந்த  ஸ்பானிய வம்சாவழியினரான  ரோட்ரிக் தெ ஷலோன்(Rodrigue de chalon)பிரபு , ஸ்பெய்ன் நாட்டைச்சேர்ந்த கிய்யென் தெ காஸ்த்ரோ (Guillén de Castro) ஸ்பானிய மொழியில்  எழுதிய  இந்நாடகத்தை கொர்னெய்க்கு  அறிமுகப்படுத்தியதாகவும்,  எனவேதான் கொர்னெய் பிரெஞ்சில் இந்தக் கவிதை நாடகத்தை எழுத முடிந்தது என்ற கதையுமுண்டு.  ரொட்ரிக்  தெ ஷலோன் அறிமுகப்படுத்தியது குறித்துச் சான்றுகள் இல்லை என்கிறார்கள். ஆனால்  ஸ்பெய்ன் நாடக ஆசிரியர் கொர்னெய் தமது நாடகத்தைத் திருடியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இப்பிரச்சினை தவிர, மெரே (Mairet) போன்ற நாடகத்துறை சார்ந்த சிலர்  நாடகக் கலைக்கென  உள்ள சிறப்பு அம்சங்களை கொர்னெய் பின்பற்றவில்லையென தூற்றவும் செய்தனர். . பதின்மூன்றாம் லூயி அரசின் செல்வாக்குமிக்க கார்டினல் ரிஷ்லியெவின் ஆதரவும் கொர்னெய் எதிரிகளுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது. இப்பிரச்சினையால் மூன்றாண்டுகாலம் சோர்வுற்றிருந்த கொர்னெய் 1740 ல் புத்துணர்வுபெற்றவராய் மீண்டும் நாடக உலகிற்கு வருகிறார்.  தொடர்ந்து  இரண்டு ஆண்டுகள், எழுதப்பட்ட நாடகங்கள் அனைத்திற்கும் வெற்றியும் புகழும் பெருமளவிற்குக் குவிந்தன. இதற்கிடையில்  பிரெஞ்சு அகாதெமிக்கு உறுப்பினராகவும் ஆனார். எனினும் 1650ல் எழுதப்பட்ட நாடகம் தோல்வியைத் தழுவ, மொழிபெயர்ப்பொன்றில் கவனம் செலுத்துகிறார்.  பின்னர்  பிரெஞ்சு நாடகத்துறையில் ராசின் (Racine) என்ற இளைஞரின் வரவு அவரது புகழை மங்கச் செய்த து எனலாம்.  கொர்னெய்யுடைய சமகாலத்தவரான லா ப்ருய்யேர்(La Bruère),  « மனிதர்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அவர்களைப் படைத்தவர் »  என கொர்னெய்பற்றிக் கூறுகிறார்.

 

. ராசின் (Jean Racine) -1639-1699

ழான் ராசின் என்கிற ராசின் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு புகழ்பெற்ற நாடக ஆசிரியர். மிகவும் இளையவயதில் பெற்றோர்களை இழந்தவர்.தொடக்கத்தில் கவிதைகளை மட்டுமே எழுதிவந்தவர். இவருடைய முதல் துன்பவியல் படைப்பு La Thébaïde. இந்நாடகத்தில் மொலியேர் நடித்துள்ளார்.மொலியேருக்கும் இவருக்குமான ஆரம்பகால நட்பு பின்னர்  கசந்த து. ராசின் எழுதிய இரண்டாவது நாடகம் மகா அலெக்சாந்தர் . இநாடகத்தை மொலியேர் நாடக க்குழு மேடையேற்ற சம்மதம் பெற்றது. ஆனால் அதனை அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்று ராசினுக்கு வருத்தம். இக்கோபம் இருவர் விரிசலுக்கும் காரணமாயிற்று. ராசினுக்குப் புகழ் தேடித்தந்த நாடகம் Phèdre. கி.பி 1667லிருந்து தொடர்ந்து  பத்தாண்டுகள் ராசின் எழுதிய நாடகங்கள் அவருக்குப் புகழைத் தந்தன. பிரெஞ்சு அகாதெமி உறுப்பினர் ஆகும் வாய்ப்பு இவருக்கும் அமைந்த து. இவருடையநாடகங்களில் முக்கியமானவை : Andrmaque, Britannicus  Bérénice , Bajazet  முதலியன.: « மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி படைக்கிறவர் » என ராசினை புருய்யேர் மதிப்பிட்டுள்ளார்.

 

இ. மொலியேர் ((1622-1673)

மொலியேர் (Molière )என அழைக்கபட்ட  ழான் பப்திஸ்த்  பொக்லியன் (Jean-Baptiste Poquelin), பிரெஞ்சு நாடக உலகில் முக்கியமானவர். இன்றளவும் பிரெஞ்சு நாடக க் கலை விருதுகள் இவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. எழுத்து இயக்கம் நடிப்பு என நாடகத்தின் அச்சாணியாக செயல்பட்டவர். நாடகத்திற்காக க் கடன்பட்டு அதனை அடைக்க முடியாது சிறையிலிருந்த அனுபவமும் அவருக்குண்டு. புகழ்சேர்த்த முதல் நாடகம் Les Précieuses ridicules (1659). இவரது நாடகங்களுக்கு நாட்டின் பெருவாரியான மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவைக்கண்ட அரசர் இரண்டு நாடக அரங்குகளை  நன்கொடையாக அளித்தார். இவ்வரங்கங்களில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் தொடர்ந்து  வெற்றியை அளித்தன. எனினும் 1664ல் மேடையேறிய ‘Tartuffe’ம் 1665ல்  மேடைகண்ட ‘Don Juan ‘  ம் அரசாங்கத்தின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொடுத்தன. எனினும் அரசர் தனிப்பட்டவகையில் மொலியேரின் நாடகங்களுக்கு தமது ஆதரவைத் தந்தார். கி.பி 1673 ஆம் ஆண்டு காசநோயினால் இறக்குவரை நாடங்கள் எழுதுவதையும் அவற்றில் நடிப்பதையும் நிறுத்தியவரல்ல. நகை முரணாக அவர் மேடையேறிய  இறுதி நாடகத்தின் பெயர் Le Malade imaginaire (பாசாங்கு  நோயாளி  ). மனைவியை இழந்த கணவன், இரண்டாவது  மணம் புரிந்துகொள்கிறான். ஆர்ரோக்கியமாக இருக்கிறபோதும்  தானொரு நோயாளி என சந்தேகித்து வாழ்பவன். பணிப்பெண் யோசனையின் பேரில்  இறந்த தாக நடிக்கும்போதுதான் இரண்டாம் மனைவியைப் புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவர்களை எள்ளலுடன்  கண்டிக்கும்  நாடகம்.

 

(தொடரும்)

Series Navigationசுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *