வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17

This entry is part 5 of 14 in the series 18 ஜூன் 2017

 

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

சுமதியையும் சுந்தரியையும் முதலில் கங்கா அழைத்துச் செல்லும் பெரிய அறையில் பதின்மர்ச் சிறுவர்கள் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டவாறு உள்ளனர். சதுரக் கண்ணாடிகளின் ஓரங்களை ஒட்டி இணைத்தல், வகை பிரித்து அடுக்குதல், பெட்டிகளில் வரிசையாக வைத்தல், எண்ணுதல் போன்ற அலுவல்கள்.  அறையின் ஓர் ஓரத்தில் ஒரு தட்டெழுத்துப் பொறி காணப்படுகிறது.

சுமதி, “கங்கா! இந்தச் சிறுவர்-சிறுமிகளுடன் நான் கொஞ்ச நேரம் இருக்க விரும்புகிறேன். நீங்கள் இப்போது போகலாம். சிறிது நேரம் கழித்து நான்  கூப்பிடும்போது வந்தால் போதும். … இதற்கிடையே நான் அதோ அந்தத் தட்டெழுத்துப் பொறியில் ஒரு கடிதம் தட்டெழுத வேண்டும். உங்கள் மேலாளர்  சேகரிடம் சொல்லிவிட்டு எனக்குச் சில வெள்ளைத் தாள்களும் மூன்று கரித்தாள்களும் கொண்டுவந்து தாருங்கள்!” என்று கங்காவிடம் வேண்டுகிறாள்.

தலையசைத்துவிட்டு அங்கிருந்து கங்கா உடனே போகிறாள்.      அதன் பின்னர் சுமதி அங்கிருக்கும் பணியாளர்களைக் கவனிக்கிறாள்.

இரகசியக் குரலில், “சுமதி! நான் சொன்னது சரிதான். பிரகாஷும் அவன் அப்பாவும் ஹைதராபாதுக்கு வந்து போயிருக்கிறார்கள்! எனக்கு அப்போதும் அதில் சந்தேகமே இல்லை! அந்த இளைஞன் ஒன்றும் பிரகாஷின் சாயலில் இருந்த வேறு எவனோ இல்லை. அது பிரகாஷேதான்! ஒருகால் ஹைதராபாத் வளையல் தொழிற்சாலையிலும் அவர்கள் குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தினார்களோ என்னாவோ! தன் அப்பாவைக் காப்பதற்காகவும், நீ அவரைச் சாடி உன் நாளிதழில் கட்டுரை எழுதிவிடுவாயோ என்னும் அச்சத்திலும்தான் பிரகாஷ் அது தன்னைப் போலவே இருந்த வேறோர் ஆள் என்று பொய் சொல்லியிருக்கிறான்! நான் ஹைதராபாதிலேயே வசிப்பவள் என்பதால் விஷயம் அறிந்து உனக்குத் தெரிவித்துவிடுவேனோ என்று அவனுக்குப் பயம்!” என்று சுந்தரி சுமதியின் காதருகே முணுமுணுக்கிறாள்.

“ஆமாம், சுந்தரி! நீ சொல்லுவது முழுவதும் சரிதான். அது பற்றி நாம் பிறகு பேசுவோம்…” என்னும் சுமதி, சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றிவிட்டு, “உங்களில் யாருக்காவது ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் வருமா?” என்று பொதுவாய்க் கேட்கிறாள்.

ஒல்லியாகவும் வலுவற்றும் தோன்றும் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் எழுந்து நின்று கையை உயர்த்துகிறான்.

“உனக்கு மட்டும்தான் ஆங்கிலம் தெரியுமா?”

“ஆமாம், ஆண்ட்டி! எட்டாம் வகுப்பு வரை நான் அங்கில வழியில்தான் படித்தேன்.”

“உன் பெயர் என்னப்பா?”

“பீமண்ணா ஆண்ட்டி. என் சொந்த ஊர் ஹைதராபாத்.”

“இங்குள்ள மற்றவர்களில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாதா?”

“சிலருக்குப் பேசினால் புரிந்துகொள்ள மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு மட்டும்தான் எழுதப் படிக்கவும் தெரியும்!”

அப்போது கங்கா வெள்ளைத்தாள்களும் கரித்தாள்களும் கொண்டுவந்து சுமதியிடம் கொடுத்துச் செல்லுகிறாள்.

“ஓ! சரி. உன் பெற்றோர்கள் இங்கே ஜெய்ப்பூரில்தான் இருக்கிறார்களா?”

“இல்லை, ஆண்ட்டி. எனக்கு அப்பா இல்லை என் அம்மாவுடன் என்னையும் என் தங்கை பானுவையும் விட்டுவிட்டு அவர் ஓடிப்போய்விட்டார். பானுவும் நானும் இரட்டைப் பிள்ளைகள்!”

“அப்படியா! உன் சம்பளத்தை நீ உன் அம்மாவுக்கு அனுப்புகிறாயா?”

“இங்கே எங்கள் சம்பளத்தை எங்களிடம் தரமாட்டார்கள். வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள். வங்கிப் புத்தகங்களை யெல்லாம் மேலாளர்தான் வைத்திருப்பார்.  எங்கள் சம்பளம் எவ்வளவு என்பது கூட எங்களுக்குத் தெரியாது. …”

அவனைச் சற்றே தள்ளி அழைத்துப் போகும் சுமதி, “பீமண்ணா! இங்கே நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று கேட்கிறாள்.

“இல்லை, ஆண்ட்டி. எப்படி ஆண்ட்டி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இங்குள்ள யாருமே மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், நான் இப்படி உங்களிடம் சொன்னேன் என்பது தெரிய வந்தால் என்னை அடிப்பார்கள்!”

அவன் கன்னத்தைத் தட்டும் சுமதி,  “இல்லை, பீமண்ணா. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். இப்போது சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.   நீ உண்மையான பதில்களைச் சொல்லவேண்டும். நான் உன்னைக் காட்டிக்கொடுக்கவே மாட்டேன். இதோ, இந்த ஆண்ட்டியின் பெயர் சுந்தரி. என் பெயர் சுமதி. உங்களை யெல்லாம் உங்கள் அம்மா-அப்பாவிடம் ஒப்படைப்பதற்காகவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். மற்றவர்களின் விஷயம் என்ன, பீமண்ணா? அவர்களுக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்களா?”

“இங்கே இல்லை, ஆண்ட்டி. எங்கள் எல்லாரையுமே வெவ்வேறு ஊர்களிலிருந்து கொண்டுவந்திருக்கிறார்கள்.”

“யார் உங்களை யெல்லாம் இங்கே கொண்டுவந்தார்கள்?”

“மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என் தங்கை பானுவும் நானும் பள்ளிக்கூடத்திருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இரண்டு குண்டு மனிதர்கள் எங்களைத் தூக்கி ஒரு காரில் போட்டு வலுக்கட்டாயமாய் இங்கே கொண்டுவந்தார்கள். எங்களுக்கு அப்போது பதின்மூன்று வயதுதான் இருக்கும்!”

“அப்படியானால் உனக்கு இப்போது பதினைந்து  வயது. பானுவும் இங்கேதான் இருக்கிறாளா?”

பீமண்ணாவின் கண்கள் உடனே கண்ணீரால் நிறைகின்றன. துயரம் தொண்டையை அடைக்க, “அவள் இங்கே இல்லை. அவளை அந்தக் குண்டர்கள் எங்கே கொண்டு போனார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஏதோ பொடியை அவர்கள் எங்கள் முகங்களில் தூவினார்கள். உடனே நாங்கள் மயக்கமாய் விட்டோம். கண் விழித்த போது நான் இங்கே இருந்தேன். ஆனால் என் தங்கை பானு இல்லை…” என்று கூறிய பின்,  “அவளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, ஆண்ட்டி? என் அம்மா அழுதுகொண்டிருப்பார். என் தங்கை மட்டுமாவது அம்மாவிடம் திரும்பிப் போனால் நன்றா யிருக்கும்” என்கிறான்.

“அழாதே, பீமண்ணா! என்னால் முடிந்த அளவுக்கு நான் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வேன். உங்கள் இருவரையுமே உங்கள் அம்மாவிடம்  எப்படியாவது ஒப்படைக்கப் பார்ப்பேன்.  முடிந்தால் மற்ற எல்லாரையும்தான்!”

விழிகள் விரிய வியப்புடன், “மெய்யாகவேயா! முடியுமா உங்களால்?”

“முயல்வேன் என்றுதான் சொன்னேன்…. அது சரி, ஹைதராபாதில் உங்கள் குடும்பம் எங்கே வசித்தது? இதோ, இந்த சுந்தரி ஆண்ட்டியும் ஹைதராபாத்காரர்தான். அவரிடம் சொல்லு. உன் அம்மாவைக் கண்டுபிடிக்க அவர் முயல்வார். ஆனால் அதற்குக் கொஞ்ச நாள் ஆகும், பீமண்ணா.”

”சரி, ஆண்ட்டி. உங்கள் இருவருக்கும் நன்றி. … ஹைதரபாதில் காச்சிகுடா ரெயில்வே நிலையத்துக்கு அருகில் ஒரு குடிசைக் குடியிருப்பு இருக்கிறது. அங்கேதான் நாங்கள் வசித்து வந்தோம்.”

“உன் அப்பா என்னவாக இருந்தார்? எல்லா விவரங்களையும் சொல்லு. சொன்னால்தான் உன் அம்மாவைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் அம்மாவின் பெயர், அப்பாவின் பெயர், தாத்தாவின் பெயர், அவர்கள் எல்லாரும் எங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள் போன்றவை,” என்று சுந்தரி அவனிடம் சொல்லுகிறாள்.

“என் அப்பா ரங்கா எங்களை விட்டு விட்டு ஓடிப்போய்விட்டார். என் அம்மாவின் பெயர் ரம்யா. எங்கள் அம்மாவுடைய அப்பாவின் பெயர் ராமதாஸ். என் அம்மாவின் தாத்தா – அதாவது என் கொள்ளுத்தாத்தா – பெயர் பீமண்ணா….”

சுந்தரி தன் குறிப்பேட்டில் அவற்றைக் குறித்துக்கொண்ட பின், “உன் அம்மாவின் தாத்தா பெயரைத்தான் உனக்கு வைத்திருக்கிறார்கள். இல்லையா?” என்று அவனைக் கேட்கிறாள்.

“ஆமாம், ஆண்ட்டி.  என் தாத்தா ராமதாசும், கொள்ளுத்தாத்தா பீமண்ணாவும் ஒரு ரெயில் விபத்தில் காலமாகிவிட்டார்கள்!”

“அதாவது, ராமதாசின் அப்பா?”

“ஆமாம், ஆண்ட்டி. இந்தத் தகவல் எல்லாம் என் அம்மா சொன்னது.  இருவரும் செத்துப் போனபின், என் பாட்டி – அதாவது ராமதாசின் மனைவி – அநாதையாகிவிட்டார். உறவினர்களால் ஏமாற்றப்பட்ட அவர் தன் பொருளை யெல்லாம் இழந்து விட்டாராம். வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத நிலையில் அவர் தன் பெண் குழந்தையுடன் குடிசைக் குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினாராம். அந்தப் பெண்தான் ரம்யா எனும் என் அம்மா…. என் பாட்டி இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன….”

“உன் அம்மாவிடம் திருப்பி யனுப்பும்படி நீ இங்கே உள்ள மேலாளரிடம் கேட்கவில்லையா?” என்று சுமதி வினவுகிறாள்.

“ஆன மட்டும் கெஞ்சினேன், ஆண்ட்டி. தினமும் அழுதேன்.  ஆனால் என்னை அதற்காக அடித்தார்கள். அப்படிக் கேட்கிற நாள்களில் எனக்குச் சாப்பாடு போட மாட்டார்கள். எனவே அதன் பின் நான் அவர்களிடம் கெஞ்சுவதை நிறுத்திவிட்டேன். இங்கே வேலை செய்யும் போது எங்களில் யாராவது ஒருவரோடொருவர் பேசினால் மேலாளர் அவர்களை அடிப்பார். அடி மிகவும் மோசமாக இருக்கும். ஒரு பையனுக்கு இரண்டு பற்கள் உடைந்துவிட்டன. இன்னொருவனுக்குக் கை எலும்பு முறிந்துவிட்டது…. நீங்கள் இருவரும் சமுதாய சேவை செய்பவர்களா, ஆண்ட்டி?”

குரலைத் தணித்துக்கொள்ளும் சுமதி, “ஒரு வகையில் அப்படித்தான். பீமண்ணா! நான் இப்போது ஒரு கடிதத்தைத் தட்டெழுதப் போகிறேன். அது நம் நாட்டின் பிரதமருக்கு நான் அனுப்பப் போகும் புகார்க் கடிதம். நீ அதில் கையெழுத்துப் போட வேண்டும். அதை நான் எடுத்துச் செல்லுவேன். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அது உதவியாக இருக்கும். ஆனால் நீ அதை ரகசியமாய் வைத்துக்கொள்ள வேண்டும். உன்னைத் தாண்டி அது வேறு யாருக்கும் தெரியவே கூடாது. அப்படி நடந்தால் உனக்குத் தொல்லை ஏற்படும். என்ன, புரிந்ததா?” என்கிறாள்.

வாயகன்ற புன்னகையுடன், பீமண்ணா, “சரி, ஆண்ட்டி. தேங்க் யூ வெரி மச்!” என்கிறான்.

சுமதி மேஜைக்கு முன் அமர்ந்து அந்தப் புகார்க் கடிதத்தைத் தட்டெழுதுகிறாள். இந்தியப் பிரதமரின் முகவரிக்கான அதில் பீமண்ணாவின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டபின் அதை மடித்துத் தன் கைப்பையில் பத்திரப்படுத்திக்கொள்ளுகிறாள்.

பின்னர், “பீமண்ணா! நீ சொன்ன எல்லா விவரங்களைய்ம்  புகார்க் கடிதத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். பிரதமரின் நேரடியான கவனத்துக்கு இது போகச் செய்வேன். எனவே அவரே இதில் முனைப்புடன் செயல்படுவார் என்று நம்புகிறேன்….இங்கே யாராவது இது பற்றி உன்னைக் கேட்டால், உன் அம்மாவைக் கண்டுபிடித்து நான் பத்திரமாய் இங்கே இருப்பதாய்ச் சொல்லச் சொல்லி எனக்குக் கடிதம் கொடுத்ததாய்ச் சொல்லு. வேறு எதுவும் சொல்லாதே.”

“சரி ஆண்ட்டி!” என்ற பின் அவன் தன்னிடத்துக்குப் போகிறான்.

“சுந்தரி! உனக்கு ஒன்று தெரியுமா? தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர் சிறுமிகள் வேலை நேரத்தில் பேசக்கூடாது என்பதற்காகத் தலையை மிகவும் தாழ்த்திக்கொண்டு, முகவாய்க்கும் நெஞ்சுக்கும் இடையே ஒரு தீப்பெட்டியைச் செருகிவைத்துக்கொள்ள வேண்டுமாம்! அவர்களால் கழுத்தைத் திருப்பக் கூட முடியாதே! அப்புறம் எங்கே பேசுவது?”

சுந்தரி அதைக் கேட்டுத் துணுக்குறுகிறாள்.

பின்னர் சுமதி கங்காவுக்குச் சொல்லியனுப்பி அவளை வரவழைத்துத் தொழிற்சாலையின் பிற பகுதிகளுக்குத் தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்கிறாள். பின்னர் அவளுடன் இருவரும் நடக்கிறார்கள்.

 

… நான்கு நாள்களுக்குப் பிறகு பீமண்ணா பணிபுரியும் அதே கூடம். சிறுவர்கள் தலை குனிந்தபடி தத்தம் பணியில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.  அப்போது மேலாளர் சேகர் அங்கே வருகிறார். அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.

தம் வலக்கையில் உள்ள கைத்தடியால் தம் இடக்கையில் தட்டியவாறே, “வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வம்பு பேசுவது, வேலையில் சுணக்கம் காட்டுவது, சிரிப்பது, கழிவறையில் வெகு நேரம் கழிப்பது போன்ற கழப்பாளித்தனமெல்லாம் கூடாது. தெரிகிறதா?” என்று அனைவரையும் நோக்கிப் பேசுகிறார்.

அனைவருமே ஒட்டுமொத்தக் குரலில், “சரி, சார்!” என்கிறார்கள்.

“இப்போது உட்கார்ந்து ஒழுங்காக வேலை செய்யுங்கள். செய்ய வேண்டிய அளவை  விடவும் குறைந்தால், சரியாக வேலை செய்யாதவர்களுக்குச் சோறு கிடைக்காது!”

சிறுவர்கள் அனைவரும் உட்காருகிறார்கள். பீமண்ணாவைத் தவிர மற்ற எல்லாருடைய முகங்களும் வாட்டமாய் இருக்கின்றன. பீமண்ணாவின் முகத்தில் மட்டும் மெல்லிய புன்னகை தோன்றுகிறது. அதைக் கவனித்துவிடும் சேகருக்கு வியப்பு ஏற்படுகிறது. பீமண்ணாவை நெருங்கிக் குனிந்திருக்கும் அவன் முகவாயைத் தம் கைத்தடிகொண்டு நிமிர்த்துகிறார். திடுக்கிட்டுப் போகும் பீமண்ணா பீதியுடன் எழுந்து நிற்கிறான்.

அவன் இடத்தோளில் கைத்தடியால் ஓங்கியடித்த பின், “உன் புன்னகைக்கு என்ன அர்த்தம்?  என்னைக் கேலியா செய்கிறாய்?” என்கிறார்.

வலியில் நெளிந்தபடி, பீமண்ணா, “இல்லை, சார்! நான் புன்னகை செய்யவில்லை. உங்களைக் கேலிசெய்யவும் இல்லை!” என்கிறான்

அதே தோளில் மீண்டும் அடித்த பின், “கேலி செய்யவில்லையா? அப்படியானால் அந்தச் சிரிப்புக்கு என்னடா அர்த்தம்? ஒருவேளை உனக்கு இயல்பாகவே சிரித்த முகமோ? ஆனால் இது போன்ற புன்னகையுடன் நான் உன்னை இதற்கு முன்னால் பார்த்ததே இல்லையே! என்ன விஷயம்?” என்று சேகர் கடுமை ஒலிக்கக் கேட்கிறார்.

வலியைப் பொறுக்க முடியாமல் பொங்கிய கண்ணீருடன் தலை குனிந்தபடி, “ஒரு விஷயமும் இல்லை, சார்! நான் சிரிக்கவில்லை, சார். தயவு செய்து என்னை நம்புங்கள்!” என்று பீமண்ணா கெஞ்சுகிறான்.

“நான் என்ன குருடனா! கேலியாய்ச் சிரித்தது இந்த வாய்தானே?” என்று கேட்கும் சேகர் அவன் வாயைத் தடியால் மிகவும் அழுத்தி, “உன் பற்களில் இரண்டு-மூன்று உடைந்துபோக வேண்டுமா? இனி இன்னொரு முறை இது போன்ற சிரிப்பை உன் வாயில் பார்க்க நேர்ந்தால், இந்த உன் வாயில் பல்லே இருக்காது. தெரிந்ததா?” என்று வினவிய பின் அவனது வாயில் தடியால் மீண்டும் அழுத்தித் தள்ளவும் செய்கிறார்.

தடுமாறும் பீமண்ணா விழுந்து விடாமல் சமாளித்துக்கொள்ளுகிறான். அதன் பின் அவனது தோளில் தடியால் தட்டி அவனை உட்காரச் செய்த சேகர் அங்கிருந்து நீங்குகிறார்.  அவர் வெளியேறியதும் அங்கே முழு அமைதி நிலவுகிறது. தன் வலக்கையால் இடத் தோளைப் பிடித்துக்கொண்டு பீமண்ணா வலியில் துடிக்கிறான்.

அருகில் இருக்கும் ஒரு சிறுவன், “ரொம்பவும் வலிக்கிறதா, பீமண்ணா?” என்று அவனைக் கேட்கிறான்.

கண்களைத் துடைத்துக்கொள்ளும் பீமண்ணா, “ஆமாம், அருண்!” என்கிறான்.

“தோள் எலும்பு முறிந்து போயிருக்குமா?”

“தெரியாது, அருண். இடத்தோள் மிகவும் நோகிறது. எப்படி      மீதி வேலையைச் செய்து முடிப்பது?”

“என் அளவு வேலையை விரைந்து முடித்துவிட்டு நான் உனது மீதி வேலையை முடித்துத் தருகிறேன், பீமண்ணா! … ஆனால், அந்த இரண்டு ஆண்ட்டிகளும் எப்போது நமக்கு உதவி செய்வார்கள்? இந்த நரகத்திலிருந்து நம் பிரதமர் எப்போது நமக்கு விடுதலை அளிப்பார்?”

”தெரியவில்லையே, அருண். ஆனால் சுமதி ஆண்ட்டி எப்படியாவது நம்மை எல்லாம் இந்த நரகத்திலிருந்து மீட்க ஏதாவது கட்டாயம் செய்வார்!”

கூடத்துக்கு வெளியே ஜன்னலருகே மறைவாக நிற்கும் சேகர் அதன் கீழே உட்புறம் அமர்ந்திருக்கும் இருவரும் முணுமுணுப்பாய்ப் பேசிக்கொண்டதைக் கேட்டு விடுகிறார்.

ஜன்னல் திரையை ஒதுக்கிவிட்டு, “ஹேய்! என்ன பேசிக்கொண்டீர்கள் இருவரும்? பிரதமருக்கு என்ன புகார் அளித்திருக்கிறீர்கள்?…. ஓ. கடவுளே!….” என்று கூவி விட்டு அவர் கூடத்துள் மீண்டும் நுழைகிறார்.

“நான் உங்களை அடித்து நொறுக்கிச் சட்டினியாக்குவதற்கு முன்னால், நீங்கள் இருவரும் என்ன சொல்லிக் காதைக் கடித்துக்கொண்டீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள். பிரதமருக்கு என்ன புகார் செய்தீர்கள்? யார் புகார் செய்தது? உம்? வாயைத் திறந்து முழு உண்மையையும் சொல்லுங்கள். சொல்லாவிட்டால் உங்கள் உடம்புகளில் எலும்பே இருக்காது!  பீமண்ணா! இதற்குப் பின்னால் இருப்பவன் நீதான்! இப்போது எல்லாவற்றையும் கக்கிவிடு!”

நடுங்கும் பீமண்ணா, “ஒரு விஷயமும் இல்லை, சார்!” என்கிறான்.

”மறுபடியும் உன்னை நான் அடித்து நொறுக்க வேண்டுமா?… அருண்! நீங்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டீர்கள்? சொல்லாவிட்டால் உனக்கும் அடி விழும்!” என்னும் சேகர் அருணின் தலைக்கு உயரே தடியை உயர்த்துகிறார்.

அஞ்சி நடுங்கும் அருண், “எனக்கு ஒன்றும் தெரியாது, சார். அன்று இங்கு வந்திருந்த இரண்டு ஆண்ட்டிகளும் பிரதமருக்குப் புகார் செய்து இங்கிருந்து எங்களை யெல்லாம் விடுவித்து விடுவார் என்று பீமண்ணாதான் சொன்னான், சார்!” என்று தெரிவிக்கிறான்.

“அப்படியா விஷயம்? சரி. ஆனால் உங்கள் முன்னால் நான் இந்தப் போக்கிரியை அடிக்கப் போவதில்லை. நீங்கள் பயந்துபோய் விடுவீர்கள். இவனை என் அறைக்கு இழுத்துப் போய்த்தான் அடிக்க வேண்டும். நம் பிரதமர் அப்போது இங்கு வந்து இவனைக் காப்பாற்றுகிறாரா என்று பார்க்கிறேன்!”

உதறிக்கொண்டிருக்கும் பீமண்ணாவைப் பிடித்து இழுத்துக்கொண்டு சேகர் தம் அறைக்குப் போகிறார். சிறிது நேரம் சென்றதும், கேட்பவரின் இதயத்தைக் குலுக்கும் பீமண்ணாவின் அலறல்கள் கேட்கின்றன. அங்குள்ள பையன்கள் ஒருவரை ஒருவர் வேதனையுடனும் பீதியுடனும் பார்த்துக்கொள்ளுகிறார்கள். பீமண்ணா வலியால் அலறுவதைத் தாங்க முடியாமல் சிலர் தங்கள் காதுகளைப் பொத்திக்கொள்ளுகிறார்கள்.

சற்றுப் பொறுத்து, சேகர் தில்லியில் உள்ள கிஷன் தாசைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்: “சார்! நான் ஜெய்ப்பூர் மீரா பாய் க்ளாஸ் ஃபேக்டரி மேலாளர் சேகர் பேசுகிறேன். பேசுவது எம்.டி. மிஸ்டர் கிஷன் தாஸ் தானே?… உங்கள் மகன் அங்கே உங்கள் பக்கத்தில் இருக்கிறாரா? அவர் உங்களுக்கு அருகில் இருந்தால் என்னால் இப்போது விஷயத்தைச் சொல்ல முடியாது…. எப்படியும் அதை நான் தொலைபேசியில் தெரிவிக்க முடியாதுதான். ஒரு மோசமான விஷயம் இங்கே நடந்து விட்டது. நீங்கள் உடனே இங்கு வந்தாக வேண்டும், சார். தயவு செய்து விமானத்தில் கிளம்பி உடனே வாருங்கள்…. நன்றி, சார்! மிக, மிக அவசரம்… இங்கு வந்த பிறகு நான் தேவையற்று உங்களை வரச்சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுவீர்கள்…. உடனே கிளம்புகிறீர்களா? சரி, சார்…. நன்றி…”

வேர்வை துளித்திருக்கும் முகத்தையும் கழுத்தையும் நடுங்கும் கைகளால் கைக்குட்டைகொண்டு துடைத்தவாறு சேகர் ஒலிவாங்கியை வைக்கிறார்.                                                                                                                 jothigirija@live.com

Series Navigationகவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *