ராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 18 in the series 2 ஜூலை 2017

மணிகண்டன் ராஜேந்திரன்

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.மதங்கள் ஒருபோதும் மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்வதில்லை..மதங்களை முன்னின்று தூக்கி பிடிப்பவர்களே மதங்களின் கொள்கைகளை திரித்து மனிதனை வன்முறைக்கு அழைத்து செல்கின்றனர்..
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தை அழித்துவிட்டு என்றான் பாரதி.. ஆனால் எந்த மதமும் எந்த கவிஞனும் எந்த ஞானியும் மற்றவர்கள் உண்ணும் உணவிற்காக அவனை படுகொலை செய்ய சொன்னதில்லை..
மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிசெய்யும் இவர்கள் வரம்புமீறி மற்ற மதத்தவர்களின் உணவு விஷயத்தில் தலையிடுகின்றனர்.. அடுத்தவனின் வீட்டில் என்ன உணவு சமைக்கப்படுகிறது.. அவன் எடுத்து செல்லும் உணவு என்ன வகையான உணவு என்று சோதனை போடும் அளவிற்கு அத்துமீறுகிறார்கள்.. அத்துமீறல் வன்முறையாக மாறுகிறது, வன்முறை வழக்கம் போல சிறுபாண்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரை குடித்துவிடுகிறது..
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு அவர்களை கண்டிப்பது போல ஊக்குவிக்கிறது.. ஊக்குவிப்பது மட்டுமா செய்கிறார்கள் சில அமைச்சர்களே கூட முன்னின்று நடத்துகிறார்கள்..
பாஜக அரசு பதவியேற்று ஓராண்டுக்கு பிறகு மாட்டிறைச்சி வன்முறை வேகமாக விஷ்வரூபம் எடுத்தது.. ராஜஸ்தான் மாநிலத்தில் அப்துல் குரோஷி என்பவர் மாட்டிறைச்சி விற்றதால் மே 2015-ல் குண்டர்களால் தாக்கப்பட்டார். இதுத்தான் பதிவுசெய்யப்பட்ட முதல் வன்முறை..
அதன்பிறகு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகிய அக்லக்கின் படுகொலை.. அக்லக் வீட்டிற்குள் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக பரவிய பொய்யான செய்தியால் ஊரே ஒன்றுதிரண்டு பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அக்லக்கின் வீட்டிற்குள் புகுந்து தாக்கியது.. இது நடந்தது செப்-28 2015. தாக்குதலில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்தார்..இதுதான் மாட்டிறைச்சிக்காக படுகொலை செய்யப்பட்ட முதல் உயிர்..
இதன்பிறகு பசு பாதுகாவலர்கள் என்ற கும்பல் வடஇந்தியா முழுவதும் தொடந்து தாக்குதலை வேகமாக நடத்தினர்.. ஒருகட்டத்தில் வன்முறைகள் அதிகமாகவே பிரதமர் மோடி அவர்களே கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.. ஆனாலும் வன்முறை குறையவில்லை.. மாட்டுக்கறி உண்ணுபவன் என்பதற்காகவே டெல்லியில் 16 வயது மாணவன் ரயிலில் படுகொலை செய்யப்பட்டான்..
இந்தியாவிலேயே பசு பாதுகாவலர்கள் என்ற கும்பலால் அதிக தாக்குதல்கள் நடந்தேறிய மாநிலங்களில் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன..இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சிநடக்கிறது என்பதுதைதான் நாம் கவனிக்க வேண்டும்..
இப்படி டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் என பயணித்து கடைசியாக நேற்று தமிழகத்தின் பழனியில் பசு பாதுகாப்பு கும்பல் வன்முறையை தூண்டிவிட முயற்சித்தனர்..ஆனால் பிறக்கட்சிகளும் போலீசும் அதனை முறியடித்துவிட்டனர்..
பிற மாநிலங்களில் எல்லாம் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இவர்கள்தான் பிறரின்மீது தாக்குதல் நடத்துவார்கள்,பொதுமக்கள் கூட இதனை கண்டிக்க மாட்டார்கள்..ஆனால் தமிழகத்தில் நிலைமையே வேறு பசு பாதுகாவல்கள் பொதுமக்களாலும் போலீசாலும் அடித்து துவசம் செய்யப்பட்டனர்..மண்டைக்காடு, கோயம்புத்தூர் கலவரத்தை போல மாட்டின் பெயரால் தமிழகத்தில் மீண்டும் கலவரத்தை தூண்ட காவிகள் முயற்சிக்கிறார்கள்.. அதன் முன்னோட்டம்தான் நேற்று பழனியில் நடந்தது..
தொடங்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு புள்ளியில் முடிந்துதான் ஆகவேண்டும்..தானாக முடியவில்லை என்றால் பிறரால் முடித்துவைக்கபடும் என்பதை காவிகள் மறந்துவிட வேண்டாம்.. முடிவிற்கான தொடக்கத்தை எப்போதும்போல் தமிழகம் நேற்று தொடங்கி வைத்துவிட்டது.

Series Navigationதந்தையர் தினம்நித்ய சைதன்யா கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *