எஸ். ஜயலக்ஷ்மி
எத்தனை தடவை பார்த்தாலும் யானை, கடல், மயில் முதலியவை அலுப்புத் தருவ தில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவற் றைப் பர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் மயில் ஆடுவதைப் பார்க்கும் போது ஆனந்தம் ஏற் படுகிறது. அருணகிரிநாதர் ஆடும் மயிலை ஆடும் பரி என்று போற்றுகிறார். அநேகமாக கலைமகளின் படங் களில் கலைமகளுக்கு அருகில் மயில் இருப்பதைப் பார்க்கிறோம். மயிலுக்கு மஞ்ஞை, கபாலம், தோகை, மயூரம், சிகண்டி, கூழை, பீலி, தொங்கல், குக்குடம், சரணம், கேகயம் என்று பல பொருள் இருக்கிறது.
கலாப மயில்
மேகத்தைக் கண்டால் மயிலுக்குக் கொண்டாட்டம். மழை பெய்தால் மயில் தோகை விரித்தாடும். குமரகுருபரர் கலைமகளை கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே என்று அழைத்து மகிழ்கிறார். கலாபம் என்றால் தோகை என்றும் பொருள் உண்டு.
தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகலகலா வல்லியே!
என்று போற்றுகிறார்.
[பனுவல்—செய்யுள் பாக்கள்]
முருகனின் வாகனமான மயிலுக்கு வடமொழியில் கலாபம் என்று பெயர். அருண கிரிநாதர் மயில் விருத்தம் என்று பல பாடல்கள் பாடி யிருக்கிறார்.அவற்றில் சித்ரகலாப மயில், என்றும் ரத்னகலாபமயில் என்றும் பாடுகிறார். அண்ணாமலை ரெட்டியார் தனது காவடிச் சிந்தில் புள்ளிக் கலாப மயில் வாகன் என்று முருகனைப் பாடிப் பரவுகிறார். மயில் மிகவும் மங்களகரமானதாகவும், லக்ஷ்மிகர மானதாகவும் பார்க்கப் படுகிறது. மயில் தோகை செல் வத்தையும் செழிப்பையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
கம்பனின் மயில்கள்.
கம்பனும் தன் இராமகாதையில் பல இடங்களில் மயில்களைப் பற்றிப் பேசுகிறான். ராமன் பவனி வரும் போது மிதிலைப் பெண்கள் உலா வைப் பார்க்க வருகிறார்கள். ”மானினம் வருவ போன் றும் மயிலினம் திரிவ போன்றும்” என்று அவர்கள் வருகையை வருணிக்கிறான். பஞ்சவடியில் ராமனின் அழகைக் கண்டு மோகம் கொண்ட சூர்ப்பணகை, அரக்க வடிவில் சென்றால் அவன் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று அழகான ஒரு பெண் வடிவம் கொள்கிறாள் அவள் வரும் அழகைக் காட்டும் கம்பன்
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர்
பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம் நிகர்
சீறடியளாகி
அம்சொல் இள மஞ்ஞை என, அன்னம்
என மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச
மகள் வந்தாள்
என்று, அழகான சொல்லுடைய மயில் போல வந்தாள் என்கிறான் கவிஞன். இந்த மயிலின் சொல்லும் இனி மையானது! ஆனால் வஞ்சகமானது! இலக்குவனால் இந்திரஜித் வீழ்ந்ததும் மண்டோதரி தலைவிரி கோல மாக வந்து அவன்மேல் விழுந்து கதறுகிறாள் அவளை
கொலையின்மேல் குறித்த வேடன்
கூர்ங்கணை உயிரைக் கொள்ள
மலையின் மேல் மயில் வீழ்ந்தென்ன
மைந்தன் மேல் மறுகி வீழ்ந்தாள்
என்று அம்பு தைத்த மயிலைக் காட்டுகிறான்.
நாடகமயில்,மலைக்குல மயில் இவை தவிர இன்னும் இரண்டு மயில்களையும் காட்டுகிறான். இது வரை நாம் பார்த்த மயில்களைப் போன்றவை அல்ல இவை. ஒன்றை நாடகமயில் என்றும் இன்னொன்றை மலைக் குல மயில் என்றும் அடையாளம் காட்டுகிறான் கவி ஞன். கேகயம் என்றால் மயில் என்றொரு பொருளும் உண்டு. கேகயன் மகளான கைகேயியைத் தான் நாடக மயில் என்கிறான்
அறிமுகம்.
கைகேயியை நாம் முதன் முதலில் பார்ப்பது சீதா ராமர் திருமணத்தில் தான். திருமணம் முடிந்து தயரதனை வணங்கிய பின் தாய்மார்களில் .
கேகயன் மா மகள் கேழ்கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா,
ஆய தன் அன்னை அடித்துணை சூடி
தூய சுமித்திரை தாள் தொழலோடும்
என்று கைகேயியை முதலில் வணங்கியதைப் பார்க்கிறோம். சீதை தான் ஆசையாய் வளர்த்த கிளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இராமனிடம் கேட்ட போது கைகேயியின் பெயரையே வைக்கலாம் என்று சொல்கிறான் இராமன். அப்படி ராமனை வளர்த்தவள் கைகேயி. அயோத்தி மக்கள்
தாய் கையில் வளர்ந்திலன்
வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை
என்று அவள் அருமையாக வளர்த்ததைக் குறிப்பிடுகிறார்கள்.
பாற்கடலில் பவளவல்லி
ஒருவருடைய உண்மைத் தன்மையை அறிய வேண்டுமென்றால் அவர் உறங்கும் போது அது நன்கு புலப்படும் என்று சொல்வார் கள். இலங்கை சென்ற அனுமன் அந்த இரவில் ராவ ணன், கும்பகர்ணன், வீடணன், மண்டோதரி இந்திரஜித் அனைவரையும் உறங்கும் போது தான் பார்க்கிறான். அவர்கள் குண நலன்களையும் கண்டு பிடித்து விடு கிறான்.
ராமனுக்கு மகுடாபிஷேகம் செய்ய நிச்சயிக்கப்பட்டு அயோத்தி மாநகரமே அமர்க் களப்பட்டுக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்தச் செய்தி அறியாத கைகேயி ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந் திருக்கிறாள். பாற்கடல் மேல் வெண்மையான தூய அமளியின் [மெத்தையின்] மேல் தாமரைகள் பூத்த பவளக்கொடிபோல் சயனித்திருக்கிறாள். அவளுடைய தூய உள்ளத்தைப் பறை சாற்றுவதைப்போல அவளு
டைய படுக்கையும் தூய்மையும் வெண்மையுமாக இருக்கிறது. கடைக் கண்களில் அருள் பொங்கி வழிகிறது.
நாற்கடல் படுமணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல்படுதிரைப் பவள வல்லியே
போல், கடைக்கண் அளி பொழிய பொங்கு
அணை மேற் கிடந்தாள்!
என்று அவளுடைய உள்ளத்தூய்மை, அன்பு, பேரிரக் கம், நாகரிகம் இவற்றைப் பார்க்கிறோம். இந்த நிலை யில் கூனி அங்கு வருகிறாள். கேகய நாட்டிலிருந்து கைகேயி, அயோத்தி வந்த போதே உடன் வந்த பணிப் பெண் இவள்.. அதனால் கைகேயியிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமை பாராட்டுகிறாள். ஆனால் உள்ளம் கோடிய கொடியாள் என்றல்லவா கவிஞன் இவளை அறிமுகம் செய்கிறான்! இருவருக்கும் என்ன பொருத்தம்!
விடிந்தால் இராமனுக்கு மகுடாபி ஷேகம் என்றதுமே கூனிக்கு ஆத்திரம் வருகிறது.
என்றோ இராமன் சிறுவனாக இருந்த பொழுது தன் வில்லுண்டையால் அவள் முதுகில் அடித்ததை இப் பொழுது நினைத்துப் பார்த்து மனம் புழுங்குகிறாள். மூன்று உலகினுக்கும் இடுக்கண் மூட்டும் தன்மை உள்ள துன்னரும் கொடுமனக் கூனி நேராகச் சென்று தாமரை போன்ற கைகேயியின் பாதங்களைத் தீண்டு கிறாள்.
காலைச் சுற்றிய பாம்பு
கைகேயி குளிர்ச்சி பொருந்திய சந்திரன் போல் உறங்குகிறாள். கிரகண காலத்தில் சந்திரனைப் பீடிக்கும் ராகு என்ற பாம்பைப் போல கைகேயியின் காலைத் தீண்டுகிறாள் கூனி. காலைச் சுற்றிய பாம்பு கடித்தாலொழிய விடாது என்ற பழமொழிக்கிணங்க கூனி என்ன செய்யப் போகிறாள்? புகை மண்டுவதைப் போல வந்த கூனி பாம்பு போல் கைகேயியின் காலைத் தீண்டியதும் தெய்வக் கற்பின ளான கைகேயி தூக்க மயக்கத்தி லிருந்து முற்றிலும் விடுபடாத நிலையில் கூனி பேசத் தொடங்குகிறாள்
”பெரிய துன்பம் வரப் போவது கூடத் தெரியாதபடி இப்படி உறங்குகிறாயே?” என்று கடிந்து கொள்கிறாள். இன்னும் சற்று நேரத்தில் இந் தக் கூனியே தன்னை விழுங்கி விடப் போகிறாள் என்பதை உணராத கைகேயி கொஞ்சமும் பதறாமல், ”எனக்கென்ன துன்பம் வரப் போகிறது? என் புதல்வர் கள் நால்வர் இருக்க என்ன குறை? மேலும் வேத நாயகனான இராமனைப் பெற்ற எனக்குத் துன்பம் என்பதும் உண்டோ?” என்று எதிர்க் கேள்வி போடு கிறாள். நாலு புதல்வர்களைப் பெற்றவள் என்று பெரு மையோடு கூறியவள் “வேதமே அனைய இராமனைப் பயந்த என்று குறிப்பாகவும் சொல்கிறாள்.
பராவ அரும்புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவ அருந்துயரை விட்டு, உறுதி காண்பரால்
விராவ அரும்புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?
என்று வினவும் கைகேயி இராமன் மேல் தனிப்பாசம் கொண்டவள் என்பதும் தெரிகிறது.
இதைக் கேட்ட கூனி கைகேயியின் மனதில் பொறா மையைத் தூண்டும் விதமாக “வீழ்ந்தது நின் நலம், வாழ்ந்தனள் கோசலை” என்று ஆரம்பிக்கிறாள். இப் பொழுதும் கைகேயி, ”மகன் பரதன், மன்னர்களுக் கெல்லாம் மன்னனான தயரதன் அன்புக் கணவன். இதை விடக் கோசலைக்கு இன்னும் என்ன பெரிய சிறப்பும் வாழ்வும் வந்து விடப் போகிறது? என்கிறாள்.
கூனியின் உளவியல்
இனிமேல் நேரடியாகப் பேசி விட வேண்டியதுதான் என்று தீர்மானித்த கூனி “இராமன் கோமுடி சூடுகிறான் நாளை என்கிறாள். இதைக்கேட்ட கைகேயி தூக்க மயக்கம் தெளிந்து அன்பும் உவகையும் பொங்க எழுகிறள். அவள் முகம்
பிரகாசமாக விளங்குகிறது. அந்த உவகையில் பூரித்து
மிகச்சிறந்த ஒரு ரத்ன மாலையைக் கூனிக்குப் பரி சாக வழங்குகிறாள். ஆனால் மாலையை வாங்கிய கூனி அழுது ஆர்ப்பாட்டம் செய்து மாலையை வீசி எறிகிறாள். “நீயும் உன் மகனும் துன்பப் படப் போகி றீர்கள். நானும் அக்கோசலையின் தாதியர்க்கு ஊழி
யம் செய்ய மாட்டேன். அந்தச் சீதையும் இராமனும் அரியணையில் வீற்றிருக்க உன் மகனோ வெறுந் தரையில் இருப்பானே! இது உனக்கு மகிழ்ச்சியா?”
என்று, பரதன் கஷ்டப்படப் போகிறானே என்று அவள் மனதைக் கவரப் பார்க்கிறாள், உளவியலை நன் கறிந்த கூனி.
எந்தத் தாயும் தனக்கு ஒரு கஷ்டமோ நஷ்டமோ, அவமானமோ வந்தாலும் தாங் கிக் கொள்வாள் ஆனால் தன் மகனுக்கோ மக ளுக்கோ ஒன்று வரும் என்றால் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதை அறிந்த கூனி இப்படிப் பேசுகி றாள். கோசலையோடு நேற்று வந்த சீதையும் அல் லவா சிறப்புப் பெறப் போகிறாள்1 என்று பொறாமை உணர்வைத் தூண்டி விடுகிறாள்.
சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இருப்ப, நின் மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல்
ஆனபோது
உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது?
[அவந்தனாய்—ஒன்றும் அற்றவனாய்]
நிவந்த ஆசனம்–
என்று கேள்வி போடுகிறாள். இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழ்வதற்கா பரதன் பிறந்திருக்கிறான்? உன் வயிற்றில் பிறந்ததால் பரதன் பிறந்தும் பிறவாதவனே” என்று கூடச் சொல்லி விடுகிறாள். இப்படி ராமன் தான் அரசு செய்யப் போகிறான் என்றால் பரதன் அயோத்தியை விட்டு வனவாசம் செய்வதே மேல் என்றும் கூறி கைகேயியின் மனதில், அரசு இல்லா விட்டால் வனவாசம் என்ற கருத்தையும் ஊன்றி விடுகிறாள்.
மேலும் மேலும் தூண்டல்
தன் வார்த்தைக்குக் கைகேயி மறுப்பு ஏதும் சொல்லாததால் கூனி மேலும் தைரியமடைகிறாள். பரதன் கேகய நாடு சென்றது கூட திட்ட மிடப்பட்ட செயலே என்று பேசுகிறாள்.
பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னை பண்டு
ஆக்கிய பொலங்கழல் அரசன் ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.
[ தேக்கு உயர் கல் அதர்—தேக்கு மாரங்கள் நிரம்பிய
மலை வழியில். சேணிடை-—வெகு தூரத்தில்
கடிது—விரைவாக. போந்தது—புரிந்தது]
பரதனை அவன் தாய் மாமனும் தாத்தாவும் அழைத்ததன் பேரில் அவன் இயல்பாகக் கேகய நாடு சென்றதை வேணுமென்றே பரதனை தொலை தூரத்திலுள்ள கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டதாகக் கூறுகிறாள். பரதன் இருந்தால் இராமன் முடி சூட இடைஞ்சலாக இருப்பானோ என்று அவனை அப்புறப் படுத்தி விட்டதாகக் குற்றம் சாட்டுகிறாள். ”பாவம் பரதன்! அவனுக்குத் தாயும் தந்தையுமே கொடி யவர்களாகி விட்டார்களே! ஐயோ! பரதா! இவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட நீ எப்படிப் பிழைக்கப் போகிறாயோ?” என்று பரதனிடம் கரிசனம் கொண்டவள் போல் புலம்புகிறாள்.
மயில் குல முறை
ஆனால் கூனியின் சாகசம் கைகேயியிடம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்த வில்லை. மாறாகக் கடிந்து கொள்கிறாள் .”இந்தக் குலம் சூரிய குலம். மரபுப் படி மூத்தமகனுக்கே அர சுரிமை உண்டு. சூரிய குலத்தவர்கள் தங்கள் உயிர் போவதனாலும் சத்தியத்திலிருந்து மாற மாட்டார்கள். அப்படியிருக்க உன் தீய எண்ணத்தால் என்ன பேசு கிறாய்?
வெயில் முறைக் குலக் கதிரவன்
முதலிய மேலோன்
உயிர் முதல் பொருள் திறம்பினும்
உரை திறம்பாதோர்
மயில் முறைக் குலத்து உரிமையை
மனு முதல் மரபை
செயிர் உற, புலைச் சிந்தையால்
என் சொன்னாய் தீயோய்?
என்று கூனியைக் கடுமையாகச் சாடுகிறாள்
மயில் குலத்து உரிமையில்
முதல் குஞ்சுக்கே தோகையின் பீலி பொன்னிறம்
பெறும். மற்றக் குஞ்சுகள் அவ்வாறு பெறாது.
இதையே மயில் குலத்து உரிமை என்கிறாள். கேகயம்
என்றால் மயில் என்றொரு பொருள் உண்டு. கேகய குலத்து உரிமை என்று தன் பிறந்த குலத்துப் பெரு மையையும் சுட்டிக் காட்டிப் பேசுகிறாள். மனுகுலத்துப் பெருமையோடு கேகய குலத்துப் பெருமையையும் சேர்த்து இரு குலத்து முறைப்படியும் இராமனுக்கே அரசுரிமை உண்டு
எனக்கு நல்லையும் அல்லை நீ
என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை அத்
தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை
வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை
மதியிலா மனத்தோய்!
”புத்தி கெட்டவளே! நீ எனக்கும் நல்லவள் இல்லை
என் மகன் பரதனுக்கும் நல்லவள் இல்லை இப்படிச் சொல்வதால் உனக்காவது நன்மை உண்டா என்றால் அதுவும் இல்லை. இது உனக்கே தீமையாய் முடியும் உன் தலைவிதி தான் உன்னை இப்படியெல்லாம் பேச
வைக்கிறது” என்று அதட்டுகிறாள்.
கூனியின் மாற்று உபாயம்
இதற்கெல்லாம் அஞ்சுப வளா கூனி? அவள் இதற்குள் ஒரு மாற்று யோசனையைத் தயார் செய்து விட்டாள். வயதில் முதிர்ந்தவ னுக்குத்தான் அரசு என்றால் தயரதனை விட வயதில் மிகவும் இளையவனான இராமன் முடி சூடலாமா? அப்படியானால் பரதனை மட்டும் ஏன் விலக்க வேண் டும்? என்று தர்க்கம் செய்கிறாள்.
இந்தப் பூமி எல்லாம் கோசலை யின் மகன் இராமன் அரசுரிமை என்றால், நீயும் உன் மகன் பரதனும் என்ன செய்யப் போகிறீர்களோ?அவள் தந்து தானே நீ எதையும் பெறமுடியும்? உன்னைத் தஞ்சம் என்று வந்தவர்களுக்கு உன் இஷ்டம் போல் உன்னால் ஏதாவது கொடுக்க முடியுமா? பார்த்துக் கொண்டே இரு இன்னும் கொஞ்ச நாளில் உன் உறவி னர்கள் வந்து கோசலையின் வாழ்வைப் பார்க்கப் போகிறார்கள். இரந்து வருபவர்களுக்குக் கொடுப்பது இருக்கட்டும் உன் உறவினர்களுக்கே உன் இஷ்டம் போல் கொடுக்க முடியாது. கைகேயிக்குத், தான் ஒன்றுமே இல்லாதவள் போலவும் எதற்கும் கோசலை யைக் கேட்டே செய்யவேண்டியிருக்கும் என்பது போல வும் தோன்ற ஆரம்பிக்கிறது.
தன்னை அண்டி வருபவர் களுக்குக் கூட தன்னால் ஒன்றுமே செய்ய முடியாது
என்ற உண்மையை அவளால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. இதை உணர்ந்த கூனி வேறு விதமாக உபாயம் தேடுகிறாள் கைகேயியின் பிறந்த வீட்டுப் பாசத்தை அறிந்த கூனி, உன் கணவன் மேலுள்ள
அச்சத்தாலேயே சீதையின் தந்தை ஜனகன் அடங்கி யிருக்கிறான். நாளை இராமன் முடி சூடி விட்டால் உன் தந்தையின் கதி என்னவாகும்? யார் துணை வருவார்கள்? மேலும் இராமன் முடி சூடிக் கொண் டால் ஒருக்காலும் பரதன் அரசாள முடியாது. இராம னுக்குப்பின் அவன் மகன், பின் அவன் புதல்வன் என்று அரசுரிமை எட்டாக்கனியாகி விடும்.
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும்
புதல்வனை, கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன்
ஒருமகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு, அவன் குலக்
கோமைந்தன் தமக்கும்
அடுத்த தம்பிக்கும் ஆம்
பிறர்க்கு ஆமோ?
இராமனுடைய வாரிசுகளுக்கு இல்லாவிட்டால் இராம னோடு இணைபிரியாமல் இருக்கிறானே இலக்குவன் அவனுக்குத்தான் கிடைக்கும் என்று கைகேயி மனதில் பொறாமையைத் தூண்டி விடுகிறாள். எப்பொழுதுமே நாம் அடிமை போல் தான் வாழ வேண்டியிருக்குமோ
என்ற பயம் கைகேயி மனதில் மெள்ள எட்டிப்பார்க்
கிறது. முதலில் தூக்க மயக்கத்தில் இருந்தாலும் கைகேயி மனது தெளிவாக இருந்தது. இப்பொழுது தூக்க மயக்கம் தெளிந்து விட்ட போதிலும் சந்தேக மும் பயமும் முளைவிட ஆரம்பிக்கிறது.
(தொடரும்)
- தொடுவானம் 182. தலையில் விழுந்த இடி.
- கவிதைகள்
- கம்பனின்[ல்] மயில்கள் -1
- சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது
- நபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி
- நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து
- ஏனென்று கேள் !
- வெறி
- திருடன்