வெறி

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017
கவிமுகை மகிழினி
“நிஷு அறைக்குள்ள போம்மா சீக்கிரம்”
“ஏம்மா?”
“அங்க போய் வெளையாடு இதோ வந்துடுறேன்”
“சரிம்மா”
 என்று நிஷா
படுக்கை அறைக்குள்
போனதும்
அம்மா அகிலா கதவைச் சாத்திக்கொண்டது பற்றியெல்லாம் நிஷா
அலட்டிக்கொள்ளவில்லை.
வீட்டினுள் திமு திமு என்று
சிலர் நுழைந்த காலடிச்சத்தமும்
கலவரப் பேச்சுக்குரலும்
கலவரப்படுத்தவில்லை அவளை.
கட்டிலில் ஏறி அமர்ந்து
எதிரே இருந்த கண்ணாடியுடன்
கதை பேசத் தொடங்கியிருந்தாள்.
“டூமீல் டுமீல்”
இரண்டுமுறை கேட்ட அதிர்வு ஒலி
நிச்சயமாக துப்பாக்கி வேட்டுத்தான்.
கொஞ்சமாய்த் துணுக்குற்றாலும்
துணிவுடன் சாத்தியிருந்த கதவைத்
துள்ளி ஓடித் திறந்தாள் நிஷாக்குட்டி.
வீட்டின் பின் புறமிருந்து
சிலர் ஆரவாரத்துடன்
வெற்றிக்களிப்பை
சிரிப்பில் சுமந்தவாறே
கடந்து வீட்டின் முன்பக்க வாசல் நோக்கிச்சென்றனர்.
நிஷாக்குட்டிக்கு இப்போது
அழுகை வந்து
“அம்மா “என்று அரற்றினாள்.
‘யார் இவங்கெல்லாம்’ மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்
கடைசியா ஒருத்தன் வந்தான்.
அவன் கையில் …
கையில் ஒரு ஆளுயரத் துப்பாக்கி .
வேட்டைக்காரர் வைத்திருப்பார்களே அதே போல..
நிஷாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
“ஐயோ அம்மா அம்மா”
என்று கத்தியவாறே
வீட்டின் பின்புறம் ஓடினாள்.
கதவு திறந்தே கிடந்தது.
கதவருகே வெளியில் தண்ணீர்க்குழாய் இருக்கும்.
அங்கேதான் குளியல் தோய்த்தல்
எல்லாமே நடக்கும்.
அங்கே அங்கே …
நிலத்தில் சிவப்புத் திட்டுத் திட்டாய்
ரத்தம் ….
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை
உணர்ந்த நிஷாக்குட்டிக்கு
துக்கம் தாளவில்லை.
கதறியழத் தொடங்கவும்
அவளைப் பின்னாலிருந்து ஒரு கை பிடித்திழுக்கவும் சரியாயிருந்தது.
அதிர்ந்து திரும்பினாள் நிஷாக்குட்டி.
அடுத்த கணம் மலர்ந்தாள்.
இழுத்தது அம்மாதான்.
“இங்கென்ன நடந்துச்சி
யார் அவங்கெல்லாம்
இதென்ன சிவப்பாய்”
என்று தன் மழலை மொழியில்
கேட்ட நிஷாவுக்கு
அம்மா விளக்கத்தை
அவளுக்குப் புரியும் படி சொல்லிவைத்தார்.
“ஒரு நாய்க்கு வெறி பிடிச்சிருச்சு
அப்போ அது ஆளுங்கள கடிச்சு வைக்கும்
அந்த நாய் நம்ம வீட்டுக்குள்
ஓடியாந்திருச்சு
அதைத்தான் டுமீல் நு சுட்டு
தூக்கிட்டுப் போயிட்டாங்க
அந்த ரத்தம்தான் இது”
அம்மா சொல்லவும்’ உம்’ கொட்டிக் கேட்ட நிஷாக்குட்டி
“அப்போ நம்ம அப்பாவுக்கும்
வெறி புடிச்சிருந்ததாலதான்
டுமீல் நு சுட்டுட்டாங்களா”
என்று கேட்டாள்
சில மாதங்களின் முன்
மீன்பிடிக்கப்போய்க் கடற்பரப்பில்
கொல்லப்பட்ட அவளது அப்பாவின் படத்தைக் காட்டியபடியே….
கவிமுகை மகிழினி
Series Navigationஏனென்று கேள் !திருடன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *