தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்

This entry is part 5 of 10 in the series 3 செப்டம்பர் 2017
          அனைத்து வழிகளும் மூடப்படட நிலை. நான் பெரும் கனவுடன் படித்து முடித்த மருத்துவப் படிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படவில்லை. சிங்கப்பூரில் இந்தியப்  பட்டங்கள் அனைத்துமே செல்லாது என்று சட்டம் இயற்றி ஆறு மாதங்கள் ஆகிறது. தேசியச் சேவையில் சேர்ந்தாலும் அங்கு இராணுவ மருத்துவராகப் ( கேப்டன் ) பணியாற்ற முடியாது. மலேசியாவில் என்னுடைய மருத்துவப் பட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும், நான் சிங்கப்பூரின் குடிமகன் என்ற ஒரே காரணத்தினால் எனக்கு அங்கும் வேலை கிடையாதாம்.
          அன்றுஇரவு நண்பர்கள் மூவரும் வழக்கமான சீனர் உணவகத்தில் கூடினோம். நான் இங்கு வந்ததிலிருந்து பன்னீர் பல்கலைக்கழகத்திற்கு இங்கிருந்துதான் சென்று வந்தான். இரவில் எங்களுடன் படுத்துத் றூங்கினான். இதனால் காதலி பிரபாவையும் அவன் ஆர்வமாகக் காணவில்லை. அதனால் பிரபாவுக்குக்கூட என் மீது கடுங்கோபமாம்! காதலியைவிட நண்பன் பெரிதாகிவிட்டாரோ என்று கேட்கிறாளாம்!
          அன்று இரவு வெகு நேரம் என்னுடைய எதிர்காலம் பற்றி பேசினோம்.சிங்கப்பூரிலேயே இருந்துவிடுமாறுதான் இருவரும் கூறினார்கள்.. ஆனால் மருத்துவராகப்  பணிபுரியாமல் எப்படி இருப்பது என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. நான் தமிழகத்தில் சில இரண்டு வருடங்கள் திருச்சபையில் பணியாற்றிவிட்டு சிங்கப்பூர் திரும்பிவிடலாம் என்றுதான் முன்பு திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த திட்டம் இப்போது நிறைவேறாது போய்விட்டது. சிங்கப்பூருக்கும்  மலேசியாவுக்கும் நிரந்தர விடை தரவேண்டிய சிக்கலில் தள்ளப்பட்டுள்ளேன். இதை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் ஓரளவு புரிந்துகொண்டனர். இனி நான் லாபீஸ் சென்று தமிழக பிராயண ஏற்பாடுகளை செய்யவேண்டியதுதான்.
          மறுநாள் காலையில் லாபீஸ் புறப்பட்டேன். இனி கப்பல் பிரயாணத்தின்போது பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நண்பர்கைடம் விடைபெற்றேன்.
          பிரயாண நேரமுழுதும் சிங்கப்பூர் வாழ்க்கையை இழக்கப்போகும் துயரமே மனதில் குடிகொண்டது. நான் தமிழகத்திலிருந்து வரும்போது இத்தகைய எண்ணம் இல்லாமல்தான் வந்தேன். இங்கு வந்து பெண்ணைப் பார்த்து பிடித்துள்ளதா என்று அறியவே வந்தேன். அவளைப் பார்த்துவிட்டு ஒரு மாதத்தில் ஊர் திரும்புவதே  திட்டம். இங்கு வந்தபின்பு எல்லாமே மாறிவிட்டது. பதிவுத் திருமணமும் நடந்துவிட்டது. மருத்துவக் கழகத்தையும் பார்த்தாகிவிட்டது. தேசியச்  சேவையிலிருந்தும் விடுப்பு கிடைத்துவிட்டது. சிங்கப்பூரில்தான் வேலை கிடைக்காமல்போனது.
           நான் மருத்துவம் படித்தபோது எதிர்காலத்தில் சிங்கப்பூர் திரும்பி மருத்துவராகப் பணியாற்றலாம் என்றுதான் திடமாக நம்பியிருந்தேன். இதுபோன்று ஒரு சட்டம் வரும் என்று நான் கொஞ்சமும் எண்ணியதில்லை. அது பற்றி டெல்லியிலுள்ள சிங்கப்பூர் தூதரகமும் ஏனக்கு தகவல் சொல்லவில்லை. இது என்னுடைய எதிர்காலக் கனவுகளுக்கு உண்டான பேரிடிதான். சிங்கப்பூரில் வேலையிலிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். சிங்கப்பூரின் டாலரின் மதிப்பு அதிகம். அங்கு சம்பாதித்து ஊருக்கு அனுப்பினால் நிறைய ரூபாய்கள் கிடைக்கும்.ஏராளமான நிலங்கள் வாங்கலாம். மாடி வீடும் கட்டலாம்.. இப்போது அந்த எண்ணமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. இனி கோயம்புத்தூரில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்தவேண்டும். மலேசியாவிலேயே பிறந்தது வளர்த்த அவள் ( என் மனைவி ) எப்படி நிரந்தரமாக தமிழ் நாட்டிலேயே வாழ்வாளோ என்பதும்  தெரியவில்லை. என் எதிர்காலம் ஏன் இப்படி ஆனதோ என்பதற்கு விளக்கம் கூற இயலவில்லை.
          மருத்துவம் பயில வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தபோது அதை கடவுளின் அழைப்பாகவே கருதினேன்.அதுவரை கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த நான் அவரின் மகிமையை உணர்ந்தேன். யாருக்குமே  அவ்வளவு எளிதில் கிடைக்காத அந்த மருத்துவம் பயிலும் வாய்ப்பு  என்னை வியக்கவைத்தது. என்னை பரிந்துரை செய்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் நான் இரண்டு வருடங்கள் சேவை புரிவதாதாக உறுதிமொழி  தந்திருந்தேன்.. அதோடு அவர்களிடம் படிப்புச் செலவிற்கு இரண்டாயிரம் ருபாய் கல்வி நிதியும் பெற்றுள்ளேன். அதன்படிதான் நான் பட்டம் பெற்றதும்  கோயம்புத்தூரில் கண் மருத்துவமனையில் சேர்ந்தேன். தற்போது அங்கிருந்துதான் விடுப்பில் வந்துள்ளேன். நான் திருச்சபையின் மிஷன் மருத்துவமனையில்தான் பணியாற்றவேண்டும் என்பதுதான் கடவுளின் அழைப்பா? இங்கே எல்லா கதவுகளும் மூடப்படுவது அதனால்தானா?  கடவுளின் செயலை யார் அறிவார்?
           பல்வேறு எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக்கொண்டுதான் அந்த நீண்ட பிரயாணத்தைத் தொடர்ந்தேன்.பேருந்து லாபீஸ் வந்தடைந்தபோது  மனதை ஒருவழியாக திடப்படுத்திக்கொண்டேன்.ஊர் சென்றுவிடுவதில் உறுதி கொண்டேன்.
          அன்று மாலையே என்னுடைய முடிவை வெளியிட்டேன். அவளின் பெற்றோர் ஏமாற்றமும் சோகமும் கொண்டது தெரிந்தது. செல்லமாக வளர்த்த ஒரே பெண்ணை இப்படி தமிழ் நாட்டுக்கு அனுப்புவதா என்று அவர்கள் கலங்குவதும் புரிந்தது.மருத்துவப் படிப்பு  முடித்து சிங்கப்பூரில் வேலை செய்வேன் என்று அவர்கள் கண்டிருந்த கனவு வீணானது. அவர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்தான். ஊரில் அவர்களின் மகள் அனாதைபோல் இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய உறவினர் அனைவருமே அவளுக்கும் உறவினர்கள்தான். அவளுடைய அப்பாவின் அக்காள்தான் என்னுடைய பாட்டி. அப்பா அவளுக்கு தாய் மாமன். அவளின் அப்பாவின்  இரண்டு அண்ணன்மார்கள் ஊரில் வாழ்கிறார்கள். அவளுடைய இரண்டு சின்னம்மாக்களும் அங்குதான் வாழ்கிறார்கள். அவளை அனைவருமே செல்லமாகப் பார்த்துக்கொள்வார்கள். அந்த ஒரு நிம்மதிதான் அவர்களுக்கு.
          அவர்கள் பெண்ணை  அழைத்துக்கொண்டு ஊர் செல்ல சம்மதித்தனர். அவள் முகத்தில் எந்தவிதமான சலனமும் தெரியவில்லை. உடன் கப்பலில் பிரயானச் சீட்டு வாங்கலாம் என்றனர். அதற்கு நான்தான் மீண்டும் சிங்கப்பூர் சென்றாகவேண்டும். மறுநாளே புறப்படலாமென்று முடிவு செய்தென்.
          நன்றாக ஜெபம் செய்துவிட்டு கண்ணயர்ந்தேன். பிரயாணக் களைப்பு. உடன் உறக்கம் வந்தது. அன்று இரவுதான் அந்த கனவும் தோன்றியது! அது கனவு மாதிரியே இல்லை. உண்மையில் நடப்பது போன்றே தோன்றியது. அந்தக் கனவு இதுதான்.
           ஒரு பாலைவனத்தில் நான் தனியே நடந்து செல்கிறேன்.கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வெறும் மணல்வெளிதான். என்னுடைய கையில் ஒரு மண்வெட்டி ( spade )  எடுத்துச் செல்கிறேன். அப்போது ஒரு வழிப்போக்கர் என்னைச் சந்திக்கிறார். அவர் உயரமாகவும், வாட்டசாட்டமாகவும் , மீசைதாடியுடன், தலையில் முண்டாசு அணிந்துள்ளார். நீண்ட அங்கி தரித்திருந்தார். திடீரென்று  காட்சிதந்த அவரை நான் வியந்து பார்த்தேன்.
          ” நீ என்ன தேடுகிறாய்? ” கணீர்ரென்று ஒலித்தது அவரின் குரல்.
          ” புதையல் ” நான் பதில் தந்தேன்.
          ” நான் காட்டுகிறேன். என்னோடு வா. ” என்றவாறு அவர் நடக்கலானார்.
          நான் பின்தொடர்ந்தேன்.  சற்று நேரத்தில் ஓர் இடத்தில நின்றார்.
          ” இங்கே தோண்டு ” அவர் உத்தரவிட்டார். நான் தோண்டினேன். தோண்டிய மணலை சுற்றிலும் வீசினேன். கொஞ்ச நேரத்தில்  ” டங் ” என்ற ஓசை எழுந்தது . நான் அவரைப் பார்த்தேன்.
          ” உம் . புதையலை வெளியே எடு ” அவர் உத்தரவு இட்டார். நான் சிரமப்பட்டு அந்த இரும்புப் பெட்டியை வெளியில் இழுத்தேன். அது கனமாகவே இருந்தது.அதில் ஒரு பழைய பூட்டு தொங்கியது.
          ” அதை உடை” என்றார்.
          நான் மண்வெட்டியால் அதை  உடைத்தேன்.
          ” பெட்டியைத் திற. “என்றார்.
          புதையல் கிடைத்துவிட்டது என்ற ஆர்வத்தில் அந்த இரும்புப் பெட்டியைத் திறந்தேன்.
          அதிலிருந்து ஏராளமான பாம்புகள் சீறிக்கொண்டு வெளியேறின!
          நான் அலறிக்கொண்டு அவரைப் பாத்தேன்.
          ” புதையல் போதுமா ? ” என்று சிரித்தவர் தலையில் இருந்த முண்டாசை அவிழ்த்தார்.
          அங்கு நின்றவர் இயேசு!  அந்த கணமே அவர் மறைந்துவிட்டார். நானும் விழித்துக்கொண்டேன்!
          காலையில் விழித்ததும் அந்த கனவு நன்றாக நினைவில் இருந்தது. சில கனவுகள் சரிவர நினைவில் இருக்காது. பட்டும் படாமலும் சில சில பகுதிகள் மட்டும் நினைவுக்கு வரும். அந்த அபூர்வக் கனவு கண்டதை நான் .யாரிடமும் சொல்லவில்லை.
        நிச்சயமாக கனவில் வந்த அந்த வழிப்போக்கர் இயேசுதான்.அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இப்படி கனவில் கடவுள் வருவது அபூர்வமாகும். இதன்மூலம் கடவுள் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார். சிங்கப்பூரா தமிழகமா என்று குழம்பிப்போயிருந்த எனக்கு கடவுள் ஓர் இறுதியான கட்டளையைத் தந்துள்ளதாக நான் நம்பினேன்.இதை இங்கு .யாரிடமும் சொல்லத் தேவையில்லை.இன்று மாலை சிங்கப்பூரில் நண்பர்களை மீண்டும்  சந்திப்பேன். அப்போது அவர்களிடம் இதைச் சொல்லலாம். பன்னீர் கனவுகளை மிகவும் நம்புபவன். அவற்றுக்கு அருமையான விளக்கங்கள் தருவான். கனவின் பொருள் எனக்கு நன்கு விளங்கினாலும் எதற்கும் பன்னீரிடமும் சொல்லிப் பார்க்கலாம்.
          ஊர் செல்லும் உற்சாகத்துடன் சிங்கப்பூர் புறப்பட்டேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவிமின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *