கம்பனின்[ல்] மயில்கள் -4

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 10 in the series 3 செப்டம்பர் 2017

எஸ் ஜயலட்சுமி

இராமனின் தெய்வம்!

தூய சிந்தை திரியக் காரணமான இராவணவதம் முடிந்ததும் சிவபெருமான் சொற்படி த்யரதன் போர்க்களம் வருகிறான். இராவணவதம் செய்து தேவர்கள் துயர் தீர்த்த அருமை மகனை ஆரத் தழுவிக் கொள்கிறான். மகிழ்ச்சியில் இராமனிடம் இரு வரங்கள் கேட்கும்படி சொல்கிறான்.  இராமன் என்ன கேட்கிறான்?

தீயள் என்று நீ துறந்த என்

தெய்வமும் மகனும்

தாயும் தம்பியும் ஆம் வரம்

தரும் படி கேட்கிறான். பெற்ற மகனான பரதனோ கைகேயியைப் பாவி என்று பழிக்கிறான். ஆனால், 14 ஆண்டுகள் வனவாசம் போ என்று சொன்ன இரா மனோ கைகேயியைத் தன் தெய்வம் என்று உயர்த்திப் பாராட்டுகிறான்! முதலில் மறுத்தாலும் பின்னர் கைகேயி கேட்ட வரத்தால் தானே இராமன் வனம் சென்று  இராவணவதம் செய்து தேவர்கள் குறைதீ ர்க்க முடிந்தது? என்பதை உணருகிறான். இரு வரங்களியும் இராமனுக்கு அளிக்கிறான். 14 ஆண்டு களாக நிராகரிக்கப்பட்ட தாயும் தனயனும்  தங்கள் உறவுகளையும் உரிமைகளையும்  மீண்டும் பெறு கிறார்கள்.

முதல் வணக்கம்

அசோகவனத்திலிருந்து சீதையை மீட்டபின் அனைவரும் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிறார்கள். இராமன் சொன்னபடி 14 ஆண்டுகள் கழிந்த்து விட்டதால் பரதன் அக்கினிப்ர வேசம் செய்யத் தயாராகிறான். கோசலை வந்து பரத னைத் தடுக்கிறாள். “என்ணில் கோடி ராமர் நினக்கு ஈடாவாரோ? என்று பரதனைப் பாராட்டுகிறாள். இந்த சமயம் அனுமன் வந்து ராமனின் வருகையை அறிவிக் கிறான். எரியைக் கரியாக்குகிறான். இராமன் வரு கையை அறிந்த பரதன் ஆடுகிறான், பாடுகிறான். ஆனந்தக் கூத்தாடுகிறான். அனுமனை வணங்கு கிறான். இங்கும் கைகேயியைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. அவள் எதுவும் பேசவில்லை. ஆசைக் கணவன் இறக்க அருமை மகனும் துறந்ததோடு அமையாமல், நந்தியம் பதியில் தவக்கோலத்தோடு  இருந்தது அவளுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கலாம். பரதன்

வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்

துஞ்சுவர் இனி என்று தோள் கொட்டுகிறான்

14 ஆண்டுகள் ஆன பின்னும் கைகேயிபால் அவன்

கொண்டிருந்த வெறுப்பும் கசப்பும் கொஞ்சமும்

குறையவில்லை என்பதை பார்க்கிறோம்.

இந்த நேரம் இராமன் வந்து இறங்குகிறான். முதலில் குலகுருவான வசிஷ்டரை வணங்குகிய பின்

கைகயன் தனயை முந்தக் காலுறப்

பணிந்து மற்றை

மொய்குழல் இருவர் தாளும்

முறைமையில் வணங்குகிறான்.

எந்தராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகச் சொன் னாளோ அந்த ராமன் அவளை தெய்வமாக மதித்து தயரதனிடம் வரம் பெற்று அவளை தயரதனின் மனைவியாகவும் பரதனை மகனாகவும் ஏற்றுக் கொள்ளும் படி செய்கிறான். மேலும் அயோத்தி மக்களுக்கெதிரில் முதலில் வணங்கவும் செய்கிறான். இதனால் அவ ளுக்கு ஒரு அங்கீகாரமும் கிடைக்க வழி செய்கிறான்!

மலைக்குல மயில்

கம்பன் காட்டிய நாடக மயிலைப் பார்த்தோம். மற்றொரு மயிலான  மலைக் குல மயிலைப் பார்போமா? அந்த மயில் கேகய நாட்டி லிருந்து கோசல நாட்டிற்கு வந்தது. இந்த மயில் கிஷ் கிந்தை மலையில் வாழும் மயில். ஆம்,  கிஷ்கிந்தை யின் வானர அரசனான வாலியின் மனைவி தாரை தான் இந்த மயில். மலையில் வாழும் மயில் என்பதால் மலைக்குல மயில் என்று வாலி யால் அருமை யாக அழைக்கப் படுகிறாள்.

அமைதியாகத் தூங்கும் கைகேயியை நமக்கு அறிமுகம் செய்கிறான் கவிஞன். உள்ளும் புறமும் ஒன்றுபோல் தூய்மையாகவே காணப்படுகிறாள் கைகேயி. தாரையோ பிரச்சனை யோடு அறிமுகமாகிறாள். வலிய வந்து தன்னைப் போருக்கழைக்கும் தம்பி சுக்கிரீவனோடு போர் செய்யப் போகும் வாலியைத் தடுக்கும் தாரையை நமக்கு அறிமுகம் செய்கிறான். கைகேயியை, பாற் கடல் படுதிரைப் பவளவல்லி போல் இருந்தாள் என்று கூறும் கம்பன் தாரையை “அமிழ்தின் தோன்றிய [அந்தப் பாற்கடலில் தோன்றிய அமிழ்தம்] வேயிடைத் தோளினாள்” என்கிறான்.

சுக்கிரீவனோடு போர் செய்யப்புறப்படும் வாலியைத் தாரை தடுக்கிறாள். என்ன நடக்கிறது?

ஆயிடைத் தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்

வாயிடைப் புகை வர வாலி கண் வரும்

தீயிடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்

கைகேயி உறக்கத்திலிருந்த போது

வந்த கூனியை மண்டினாள் என்ற கவிஞன் இங்கே வாலி கண் வரும் தீயிடை தன் நெடுங்கூந்தல் தீய் கின்றாள் என்கிறான். புகை, தீ, இவையெல்லாம் நல்ல அறிகுறிகளல்ல. கைகேயியைக் கூனி தீண்டி னாள் என்கிறான் கவிஞன்,. நாகம் தான் தீண்டும், புகை மண்டும். கூந்தல் தீய்கிறது என்பதும் துர் நிமித்தமே. இந்த இரண்டு துர் நிமித்தங்களின் படி இருவருடைய வாழ்வும் அமங்கலமாகிறது .பின் வரப்போகும் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே கட்டியங் கூறி விடுகிறான் கம்பன்.

தாரை தடுத்தல்

கோபத்தின் சிகரத்திலே நிற்கும் வாலியைத் தாரை தடுத்து நிறுத்த முயற்சி செய்கி றாள். தன்னைத் தடுக்கும் தாரையை ஒரேயடியாகத் தள்ளி விட்டுப் போகாமல் அவள் அன்புக்குக் கட்டுப் பட்டு அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறான். அதே சமயம்

விலக்கலை விடு விடு

விளித்துளான் உரம்

கலக்கி, அக்கடல் கடைந்து

அமுது கண்டென

உலக்க இன்னுயிர் குடித்து

ஒல்லை மீள்குவன்

மலைக்குல மயில்.!

அன்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அவர்கள் தளர்ந்த போது வாலி தனிஒருவனாகவே நின்று கடலைக் கடைந்தான். ஆனால் அன்று அப்பாற்கடலிலிருந்து கிடைத்த அமுதை அவன் குடிக்கவில்லை. அமிர்தத்தைத் தேவர்களிடமே கொடுத்து விட்டான். இன்று வலிய அழைத்த சுக்கிரீவ னுடைய உடலைக் கடைந்து, அமுது கண்டாற் போல் அவன் இனிய உயிரைக் குடித்து வருவேன் என்கிறான் கடலையே கடைந்த வாலிக்கு சுக்கிரீவன் ஒரு பொருட்டேயில்லை. பாற்கடலைக் கடைந்ததில் அமுது கிடைத்தது. சுக்கிரீவன் உடலைக் கடைந்தால் அவன் உயிர் கிடைக்கும்.! இந்தக் கோபத்திலும் அவளை மலைக்குல மயில் என்று வாஞ்சையோடு விளிக்கிறான்!

சுக்கிரீவன் துணை

வாலியின் கோபத்தை பொருட்படுத்தாத தாரை, ”சுக்கிரீவன் வலிய வந்து போருக் கழைக்கிறான் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும்,  நேற்று வரை இல்லாத துணிச்சல் இன்று வந்திருக்கிறது என்றால் அவனுக்கு நிச்சயம் ஏதோ பெரிய துணை கிடைத்திருக்க வேண்டும்” என்கிறாள்

இதைக்கேட்ட வாலி, “யமனும் என் பெயரைக் கேட்டா லும் நடுங்குவானே! மேலும் என்னை எதிர்ப்பவர்களு டைய தேக பலத்தில் பாதி என்னை வந்து சேரும் என்பது உனக்குத் தெரியாதா? என்று ஆறுதல் சொல் கிறான். தாரை தயங்கிய படி

அரச! ஆயவற்கு

இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்

உன் உயிர் கோடலுக்கு வந்தான் எனத்

துன்னிய அன்பினர் சொல்லினார்” என்கிறாள்

தாரை வந்திருப்பவன் பெயரைக்கூட தெளிவாகச் சொல்லி விடுகிறாள்.. ஆனால் அவள் சற்றும் எதிர் பாராத விதமாக வாலி ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும்? வாலியைப் பொறுத்த வரையில் இராமன் தர்மாத்மா, அறத்தின் ஆறு எல்லாம் இழைத்தவன், அந்த தருமமே உருவாக வந்தவன் இருவர் போர் செய்யும் போது இடையில் ஒருக்காலும் புக மாட் டான்.

ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்

மாற்றவள் ஏவ, மற்று அவள் தன் மைந்தனுக்கு

ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

போற்றலை; இன்னன புகறல்பாலையோ?

வாலி அயோத்தியில் நடந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான். தம்பிக்காக நாட்டையே விட்டுக் கொடுத்த, தருமமே உருவான இராமன் அந்தத் தரு மத்தை தவிர்ப்பானோ? தம்பியர் அல்லது வேறு உயிர் இல்லை என்றிருப்பவன், நானும் என் தம்பியும் போர்

செய்யும் போது இடையில் வரவே மாட்டான். அவன் அருளின் ஆழியான்! மேலும் தனக்கு நிகர் தானே என்று விளங்கும் அவன் கேவலம் ஒரு குரங்கோடு நட்புக் கொள்வானோ? அறத்தின் நாயகனான இரா மனை, அவனுக்கு இயல்பு அல்லாததை எல்லாம் சொல்கிறாயே, பாவி பிழைத்தனை உன் பெண்மை யால் என்று அவளை மிகவும் கடிந்து கொள்கிறான். வாலி இராமனை முழுதுமாக அறிந்திருக்கிறானா?

தாரையின் முன் புத்தி

தாரையைக் கடிந்து பேசிய வாலி நிச்சயம் தான் வெல்வோம் என்ற அதீத நம்பிக்கை யுடன் போருக்கு வருகிறான். தாரை தனக்கு வேண்டி யவர்கள் மூலமாக இராமன் என்பவன் துணையாக வந்திருப்பதால் தான் சுக்கிரீவன் வலிய வந்து போருக்கழைக்கிறான் என்று சொல்லியும் வாலி தன் வர பலத்தின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தான். தருமம் ஒருக்காலும் அதர்மத்திற்குத் துணை போகாது என்று நம்பினான். ஆனால் தாரை நடை முறை உலகியலைத் தெரிந்து கொண்டவளாக இருக் கிறாள். பெண்புத்தி பின் புத்தி என்று சொல்வதற்கு மாறாக பெண்புத்தி முன் புத்தி என்று சொல்லும் விதமாக வரும் ஆபத்தை உணர்ந்தவளாகக் காணப் படுகிறாள். எவ்வளவோ வரபலமும் தேக பல மும் உள்ளவனாக வாலி விளங்கிய போதிலும் மாற்றா னும் அதே போல தேக பலமும் வரபலமும் உள்ள வனாக இருந்து விடக் கூடாதே என்ற கவலை அவளுக்கு! அதனால் தான் எச்சரிக்கை செய்கிறாள், தடுக் கிறாள்.

ஆனால் கைகேயியோ தயரதன் உயிரே இராமன் தான் என்பது தெரிந்திருந்தும் அந்த உயிரைக் கானகம் அனுப்பவும் தயங்கவில்லை. தயரதன் மரணத்திற்கு அந்த வகையில் அவளும் ஒரு காரணமாகிறாள்.

வாலிவதம்.

தாரையின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சென்ற வாலி சுக்கிரீவனோடு போர் செய்யும் போது ராம பாணத்தால் இறக்கிறான். உயிர் போகும் தறுவாயில் வாலி, சுக்கிரீவன், அங்க தன் இருவரையும் ராமனிடம் ஒப்படைத்து இருவருக் கும் அறிவுரைகள் சொன்னபின் அனுமனையும் அழைத்து, ராமனிடம்.”இவனை உன் கையிலுள்ள கோதண்டம் என்று நினைத்துக் கொள். மிகவும் நம் பிக்கைக்கு உரியவன் என்று நற்சான்றும் அளிக்கி றான். ஆனால் தாரையிடம் எதுவுமே பேசாமல் உயிர் பிரிந்து விடுகிறது. தாரை என்னென்ன செய்ய வேண் டும் என்பதை அவளே முடிவு செய்யக்கூடிய திறமை பொருந்தியவள் என்று தீர்மானித்து விட்டானோ? அவள் தான், தன்னை விட வரும் பொருள் தெரிந்த வளாக இருக்கிறாள் என்று நினைத்திருக்கலாம்.

தாரை புலம்பல், குற்றச்சாட்டு,

 செய்தி அறிந்த தாரை ஓடோடி வந்து வாலியின் மேல் விழுந்து அழுது கதறுகிறாள்.

”தாரை நீ சொன்னபடியே பயந்த படியே நடந்து விட்டதே”! என்று கூட அவளிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை வாலி. தாரை இதைச் சொல்லிப் புலம்புகிறாள்.

சொற்றேன் முந்துற, அன்ன சொல் கொள்ளாய்

அற்றான் அன்னது செய்கலான் எனா

உற்றாய், உம்பியை, ஊழி காணும் நீ

இற்றாய், நான் உனை என்று காண்கெனோ?

 

என்று தன் ஆற்றாமையையும் வாலி ஏமாற்றப்பட்டதையும் எண்ணிக் கதறுகிறாள். இராமன் நேரடியாக இன்னது வேண்டும் என்று சொல்லியிருந்தால் நீ உனக்குரிய அரசாட்சி மட்டுமா எல்லாவற்றையுமே கொடுத்திருப்பாயே! ஆனால் நீ வஞ்சகமாக அல்லவா வேட்டையாடப் பட்டாய்?

ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்

ஏயா, வந்த இராமன் என்று உளான்

வாயால் ஏயினன் என்னில் வாழ்வு எலாம்

ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்!

 

என்று வாலி மறைந்து நின்று தாக்கப் பட்டதை பதிவு செய்கிறாள். நேருக்கு நேர் நின்று போர் செய்தால் ஒருக்காலும் வாலியை வெல்ல முடியாது என்பது அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால்

 

அருமைந்து அற்றம் அகற்றும் வில்லியார்

ஒருமைந்தற்கும் அடாதது உன்னினாரே

 

என்று தாரை தன் அன்புக்கணவன் வஞ்சகமாக, அநி யாயமாகக் கொல்லப்பட்டதாக அழுது அரற்றுகிறாள். கைகேயியோ கபடமாக தயரதனிடம் இரு வரங் களைப் பெற்று அவனுடைய மரணத்திற்கே வழி கோலி விடுகிறாள். அதனால் தானோ என்னவோ அவள் புரண்டு அழுது புலம்பவேயில்லை.

 

வாலி, சுக்கிரீவனோடு போர் செய்யச் செல்லுமுன், ராமன், சுக்கிரீவனுக்கு உதவுவான் என்று சொன்ன தாரையைக் கடிந்து

பாவி! பிழைத்தனை உன் பெண்மையால் என்று

கடுமையாகப் பேசுகிறான். இராமனைக் குறைவாகப் பேசி விட்டாளே என்ற கோபம் வாலிக்கு, இராமன் மேல் அவ்வளவு ஈடுபாடு, மரியாதை! கைகேயி தான் கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் பின் வாங்கா மல் பிடிவாதமாக இருப்பதைக் கண்ட தயரதனும் “பழிக்கு நாணாய் மாணாப் பாவி! இனி என் பல? உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்” என்று சாபம் கொடுக்கிறான். தயரதன் , இராமன் மேல் கொண்ட அதீத பாசம் காரணமாக. வாலிக்கு இராமன் மேல் அதீதமான மதிப்பு, மரியாதை.! தயரதனுக்கு அதீதமான பாசம்!

 

சுக்கிரீவன் மறதி

வாலி மரணத்திற்குப் பிறகு சுக்கிரீவனுக்கு முடி சூட்டி அங்கதனுக்கு இளவரசு பட்டமும் சூட்டுகிறார்கள். கார்காலம் கழிந்த பின் சீதையைத் தேடும் பணியைத் துவக்குவோம். அது வரை நாட்டையும் வீட்டையும் ஆண்டு அனுபவித்து விட்டு வரும்படி ராமன் சொல்ல சுக்கிரீவன் கிஷ் கிந்தை செல்கிறான். தாரையை வணங்கி அன்னாள் தாய் எனவும் வாலியின் சொல்லே தந்தையின் சொல் எனவும் கொண்டு அரசு செய்கிறான். ராமனிடம் உத்தரவு பெற்ற சுக்கிரீவன் கிஷ்கிந்தை சென்றபின் சுகபோகங்களில் தன்னை மறந்து விடுகிறான். கார்காலம் கழிந்த பின் னும் சுக்கிரீவன் வராதது கண்ட இராமன் சீற்றம் கொள்கிறான். ”வாலியைக் கொன்ற பாணம் இன்னும் என்னிடம் இருக்கிறது, என்று சொல்லிவிட்டு வா’” என்று இலக்குவனை அனுப்பி வைக்கிறான்

 

இலக்குவன் சீற்றம்

கோபத்தோடு  வரும் இலக்குவனைக் கண்ட வானரங்கள் அங்கதனுக்குச் செய்தியை அறிவிக்கிறார்கள். அங்கதன் சுக்கிரீவனிடம் செல்கிறான். சுக்கிரீவனோ மகளிர் அடிவருட இனிய தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது கண்டு அவனைத் துயிலு ணர்த்தி இலக்குவன் சீற்றத்தோடு வந்திருப்பதைச் சொல்கிறான். ஆனால் கள் மயக்கத்திலிருந்த சுக் கிரீவன் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. எனவே இருவரும் சேர்ந்து தாரையிடம் செல்கிறார்கள். பின் இருவரும் சேர்ந்து தாரையிடம் சென்று என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய் கிறார்கள். தாரை என்ன சொல்கிறாள்?

 


தாரை அறிவுரை

செய்யத் தகாதவற்றைச் செய் தீர்கள். இப்பொழுது பிழைக்க வழி தேடுகிறீகள். செய்ந்நன்றி கொண்டவர்களுக்கு உய்வு உண்டா?

செய்திர் செய்தற்கு, அரு நெடுந் தீயன

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்

உய்திர் போலும், உதவி கொன்றீர்?

என்று கடிந்து பேசுகிறாள். நான் இதற்கு முன்பே பல முறை சொன்னேன் இராமன் குறித்த காலம் கழிந் தால், உங்கள் வாழ்நாளும் கழியும். என் அறிவுரை யைக் கேளாமல் இப்பொழுது அகப்பட்டுக் கொண்டீர் கள். இந்தத் தண்டனையும் உங்களுக்குத் தேவை தான்

திறம்பினீர், மெய் சிதைத்தீர், உதவியை

நிறம்பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால்

மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனிப்

புறஞ் செய்து ஆவது என்?

என்று உரிமையோடு கடிந்து கொள்கிறாள். அனுமனுக் கும் சேர்த்தே இந்த அறிவுரைகள்! இங்கு ஒரு அரச மாதாவைப்போல் மதிப்போடும் கண்ணியத்தோடும் தாரை விளங்குவதைப் பார்க்கிறோம். தாரை இப்படிக் கடிந்து கொண்டிருக்கும் போதே வானரங்கள் இலக்கு வனைத் தடுக்கும் பொருட்டு நகரத்தின் வாயிற்கதவை உள்ளே தாளிட்டுப் பெரிய பாறைகளைக் கொண்டு வந்து சேர்த்து அடுக்கலாயின. ஆனால் இலக்குவன் கோபத்தோடு வாயிற்கதவைத் தள்ளிக் கொண்டு வரு கிறான். வானரங்கள் பயந்து கூச்சலிட்டு நாலா பக்க மும் ஓடின. இலக்குவன் உள்ளே வந்து விட்டதை அறிந்த அங்கதனும் அனுமனும் என்ன செய்வது என்று திகைக்கிறார்கள்

 

தாரையின் சமயோசிதம்

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட தாரை ஒருவாறு சமாளித்துக் கொண்டு,”நீங்கள் எல்லோரும் செல்லுங்கள். நான் சென்று அவனுடைய மனக்கருத்தை அறிந்து வருகி றேன், என்று தானாக முன்வருகிறாள். தோழிமார்களோடு செல்கிறாள். மதங்கொண்டு சீறி வரும் மத யானை போன்ற இலக்குவன் முன் தோழிமார்க ளோடு வழிமறித்தாற்போல் நிற்கிறாள் தாரை. மகளிர் சேனை சூழ்ந்ததால் இலக்குவன் கொஞ்சம் சினம் தணிந்து முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு அப்பெண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

தாரை இதுவரை இலக்குவனைப் பார்த்ததேயில்லை. இலக்குவனும் அப்படியே. தூமன நெடுங்கண் தாரை அன்னியன் எதிரில் வந்து நிற்கக் கூச்சப்படுகிறாள். ஆனால் காரியம் நடக்க வேண் டுமே? உடலும் உள்ளமும் கூசிய போதிலும் தெளி வாக இனிமையாகப் பேசுகிறாள்.

மைந்த! நின் பாதம் கொண்டு எம்

மனை வரப் பெற்று வாழ்ந்தேம்

உய்ந்தனம், வினையும் தீர்ந்தேம் உறுதி

வேறு இதனின் உண்டோ?

இந்தத் தவம் எல்லோருக்கும் கிடைக்குமா? பலகாலம் தவம் செய்தவர்களுக்கல்லாமல் இந்திரன் முதலான வர்களுக்கும் கூட எளிதில் கிடைக்கப் பெறாதே! அப்படியிருக்க நீ எம்மனைக்கு வந்தது நாங்கள் செய்த தவப் பயனே ஆகும். ஐயனே! நீ உன் தமையனை விட்டு இணை பிரியாமல் இருப்பவனாயிற்றே! அப்படியிருக்க இவ்விடம் வந்த காரணம் என்னவோ? என்று மிகவும் இனிமையாகப் பேசுகிறாள். இலக்குவன் அண் ணனை விட்டுப் பிரியாதவன். அவனுக்குப் பணிவிடை செய்வதையே கடமையாகக் கொண்டவன் போன்ற விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள். சொல்லின் செல்வனான அனுமனும் கூட இலக்கு வனை எதிர் கொள்ள முடியாத சூழலில் சிறிதும் தயக்க மில்லாமல் இலக்குவனை எதிர் கொள்ள முன் வருகிறாள் தாரை.

இவ்வளவு இனிமையாகப் பேசுவது யார்? என்று சினம் தணிந்த இலக்குவன் சற்றே தலைநிமிர்ந்து பார்க்கிறான். அங்கு தெரிவது யார்? சுமித்திரையும் கோசலையும் அல்லவா தெரி கிறார்கள்! தாரை உருவிலே தாயரைக் காண்கிறான். மங்கல அணி துறந்து, மணி அணியும் துறந்து, மாலை துறந்து, மேலாடையால் கழுத்து மறைத்துப் போர்த்திய படி நின்ற தாரையில் தாயரைக் கண்டு கண்கள் நீர் பனிக்க நிற்கிறான்,. தன்னை வினவி நிற்கும் தாரைக்குப் பதில் சொல்ல வேண்டுமே? இப் பொழுது இலக்குவனுக்கு இக்கட்டான சூழ்நிலை.

ஒருவழியாகத் தன்னை சமாளித்துக் கொண்டு பேசுகிறான். கார்காலம் கழிந் ததும் வருவதாக விடை பெற்றுக் கொண்டு போன சுக்கிரீவன் வரவில்லை. அதைபற்றி அறிந்து வரும் படி அண்ணன் அனுப்ப நான் வந்திருக்கிறேன்” என்கிறான்.

ஐய! சிறியவர்கள் அறியாமல் தீமை, தவறு செய்தால் அதைப் பொறுக்க வேண்டாமா? உன்னை விட்டால் வேறு யார்தான் இருக்கிறார்கள்? சுக்கிரீவன் உங்கள் உதவியை மறக்க வில்லை. எல்லா இடங்களுக்கும் தூதர்களை அனுப்பி வானரர்கள் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறான்.

செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த

பேர் உதவி தீரா

வெம்மையும் சேர் பகையும்

மாற்றி அரசு வீற்றிருக்க விட்டீர்

உமக்கு வேறு துணையும் வேண்டுமோ? தேவியைத் தேடிக் காண மட்டும் உதவி தேடுகிறீர்கள், என்று மேலும் நம்பிக்கை வரும்படி பேசுகிறாள். சுக்கிரீவன் வானர வீரர்களுக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள்.தாரை உள்ளது உள்ளபடி பேசுகிறாள் நடிக்கவில்லை என்ப தைப் புரிந்து கொண்ட இலக்குவன் சீற்றம் தணிந்து விடுகிறது. இதைக்கண்ட அனுமன் வந்து இலக்கு வனை வணங்குகிறான்.

நட்பு கிடைத்ததால் உங்கள் உதவியோடு சீதையைத் தேடலாம் என்று நினைக்கிறான். அவன் நினைத்திருந்தால் தன் வில் ஒன்றினாலேயே பகைவரை அழித்து சீதையை மீட்டிருக்க முடியும். உங்கள் காலதாமதம் அரக்கர்களுக்கு நன்மையாகவும் அமரர்களுக்குத் துன்பமாகவும் ஆயிற்று. சினமே அறியாத இராமனைச் சீற்றம் கொள்ள வைத்தது. என்று வருந்துகிறான்.

அனுமன் பலவாறு சமாதானம் சொல்லி இலக்குவ னைத் தேற்றி சுக்கிரீவனிடம்அழைத்துச் செல்கிறான்.

தாரை தன் தோழிகளுடன் அரண்மனை செல்கிறாள். மதங்கொண்ட யானை போல் வந்த இலக்குவன் கிஷ்கிந்தையை அழித்து விடுவானோ என்றிருந்த இக்கட்டான சூழ்நிலையில் சமயோசிதமாகச் செயல்பட்டு அவனை எதிர்கொண்டு தன் நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுகிறாள் தாரை. பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் செயல் படுகிறாள் அதனால் தான் அவளை “தூமன நெடுங்கண் தாரை என்று கவிஞன் சிறப்பிக்கிறான்.

தூமொழி மடமானாக இருந்த கைகேயி மாறிப் போகிறாள். மாற்றிப் பேசு கிறாள் நாடகமாடுகிறாள். ஆனால் தாரை இறுதி வரை தூமன நெடுங்கண் தாரையாகவே விளங்கு கிறாள்

================================================

Series Navigationகருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *