விதை நெல்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 12 in the series 10 செப்டம்பர் 2017

சோம.அழகு            

1176 ; 196.75 – தனது அத்தனை வருட உழைப்பின் இந்த அருமையான பலனை மதிப்பெண்களாய்க் கண்ட பின், வெள்ளைக் கோட்டும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் அணிந்து, பல முதியோர்களின் நாடித்துடிப்பையும் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்தையும் மிக அக்கறையாகக் கவனித்துக் கொள்ளப் போகும் பெண்ணாகத் தன்னை உறுதிப்படுத்தியிருப்பார் அனிதா. தனது கனவை நனவாக்க இன்னும் ஓர் எட்டு மட்டுமே என்றிருந்த நிலையில் ஒரு பெரிய பாறாங்கல்லை அவள் முன் கிடத்தி அவளது கனவுகளைச் சிதைத்து, வேல் வடித்துக் கொடுக்கும்  கொல்லர்களே கொல்பவர்களாக மாறியதோடு அனிதாவே தனக்கென வடிக்க முனைந்த வேலும் பிடுங்கப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்ல? கல்வி ஒன்று மட்டுமே இச்சமூகம் உய்வதற்கான வழி என்று கல்வியை நம்பிக்கைக் கயிறாய்ப் பற்றிக் கொண்டிருந்த அச்சகோதரிக்கு அதையே தூக்குக் கயிறாக மாற்றிய அரசியலமைப்புக்கு இனி ஊழியிலிருந்து உய்வில்லை.

 

ஒவ்வொரு ஆண்டு +2 தேர்வு முடிவுகள் வெளிவரும் போதும், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டிக்கே சவால் விடும் வகையில், ‘டாக்டராகி சேவை செய்ய விருப்பம்’ என மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்பச் சூளுரைப்பதும் பின்னர் பெரும்பாலான அவ்வாய்ச்சொல் வீரர்கள் காணாமல் போவதும் வாடிக்கை. அனிதாவின் பேட்டியில் இருந்த எதார்த்தம் அவர் வாய்ச்சொல் வீரர் அல்ல என்னும் உணர்வை உண்டாக்கியது. சேவையைச் செயலாக மாற்றக் காத்திருந்த அனிதாவை நாம்தான் கொன்று  விட்டோமோ?

 

பன்னிரண்டு வருடக் கடும் உழைப்புக்கென ஒரு திசையைக் காண்பித்த கல்வியமைப்பு, திடீரென்று வேறொரு திசையில் இருந்து, ‘இத்திசையிலுள்ள வழியைக் கடக்கவில்லையெனில் நீ காணும் கனவுகளுக்கான தகுதி உன்னிடம் இல்லை’ என அவரை ஒரே நொடியில்  முட்டாளாக நிரூபிக்க முயல்வது யாரை முட்டாளாக்க? எவ்வளவு சிறந்த அறிவாளியையும் முட்டாளாக்க வேண்டும் என முற்பட்டால் ஆகக் கடினமான கேள்விகளை வீசி முட்டாளாகக் காட்டலாம். ஒவ்வொரு தனிமனிதனின் ஆற்றலையும் சமூகம் திறம்பட பயன்படுத்திக்கொள்வது அவனுக்கு எவ்வளவு தெரியும் என அறிவதில்தான் இருக்கிறதே ஒழிய எவ்வளவு தெரியாது எனச் சுட்டிக்காட்டி அவனைக் கூனிக்குறுக வைப்பதில் இல்லை என எண்ணுகிறேன். ஆற்று நீர் கடலில் தானே கலக்கிறது. எனவே ஆற்று மீன்கள் அனைத்தும் கடலிலும் பிழைத்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் மடமைக்கும் ‘பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேறினால் நீட் தேர்வும் எளிதுதான்’ என்னும் தத்துபித்துக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.

 

நீட் தேர்வு என்பதே ஒத்திசைவுப் போக்கை (uniformity) நோக்கிய நகர்வு என்பதால் அதன்கண் மேலும் வர வாய்ப்புள்ள ஆபத்துகளைச் சிந்திப்பதும் அவசியமாகப் படுகிறது. கல்வி, மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. ‘ஒரே பாடத்திட்டம் இல்லாத போது ஒரே தேர்வு எப்படி? ’ என்று கேட்பது கூட அவர்கள் விரிக்கும் வலையில் நாம் விழுவதாகத்தான் முடியும். கணிதம் மற்றும் அறிவியலில் ஒரே பாடத்திட்டம் எனத் தொடங்கி இறுதியில் மொழியும் வரலாறும் கூட இவர்கள் ஒத்திசைவு வேட்கைக்குப் பலியாகும் சூழ்நிலை உருவாகும். ஒரே பாடத்திட்டம் என்பதே இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். உதாரணமாக, நாடு முழுக்க முகலாய சாம்ராஜ்ஜியத்தையும் ராஜபுத்திர வம்சத்தையும் (இப்போதுள்ள நிலையில் முகலாய சாம்ராஜ்ஜியமும் பாடத்தில் இருந்து தூக்கப்படும் என்றுதான் நினைக்கிறேன்) மட்டுமே படிப்பித்தால் போதுமா? பாரியின் திறமைகளையும் பாண்டியர்கள் வளர்த்த தமிழ்ச்சங்கத்தையும் பற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் அல்லாது வேறு யார் படிப்பார்கள்?  நெல்லையில் இருப்பவனுக்கு பனாரஸ் பட்டு பற்றியும் நைனி பாலம் பற்றியும் தெரிய வேண்டியதில்லை எனக் கூறவில்லை. ஆனால் பத்தமடைப் பாயின் சிறப்பும் சுலோச்சன முதலியார் பாலத்தின் வரலாறும் கண்டிப்பாய்த் தெரிய வேண்டும். நம் நாட்டில் வழங்கும் ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வப்பகுதி மக்களின் செழுமையான பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் அதன் சிறப்புகளையும் பேணும் வகையில் அவரவர் மொழியிலேயே பாடத்திட்டம் இருத்தல் நலம். எனில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடங்கள் இருப்பதே சிறப்பு. மொழியும் இவ்வாறே. தாய்மொழி போக வரலாற்று விபத்தாக வந்து சேர்ந்த ஆங்கிலமே நமக்குப் போதுமானது. அதை விடுத்து மூன்றாவதாக ஒரு மொழி திணிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதுவும் ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவிலே மட்டும் கற்றுக் கொள்லலாமே தவிர, அதையே தேர்வு மொழியாக்கி அறிவின் அளவுகோலாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. எனவே இந்தியா முழுமைக்கும் எந்தப் பொதுத் தேர்வும் வரவேற்கத்தக்கது அல்ல.

 

இந்தியா என்பது பல இனக் குழுக்கள் சேர்ந்து வாழும் நாடு, பாரியின் பறம்பைப் போல. ஒற்றுமை வலியது; ஒத்திசைவுப்போக்கு பாசிசமே. (Unity is strength; Uniformity is fascism). தேசியத்தில் நீந்துதல்  என்பது தத்தமது அடையாளங்களை இறுகப் பற்றிய நிலையிலேயே நிகழ வேண்டும். ‘அடையாளங்களைத் தொலைத்தல்’ என்னும் பெரும் விலையைக் கொடுத்துப் பெறும் அளவிற்கு தேசியம் ஒன்றும் அவ்வளவு புனிதமானது அல்ல. எனது மொழியை, கலாச்சாரத்தை, வேர்களைத் தொலைத்தால் என்னில் எதுவுமே மிஞ்சியிராது. அப்போது நான் என் மாநிலத்துக்குரியவளாகவே இருக்க மாட்டேன். அப்புறம் எங்கே இந்தியன் என்று சொல்ல?

 

நீட் பொதுத் தேர்வை ஆதரிக்கும் ஒரு கூட்டம் (பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற) தமது பிள்ளைகளை லட்சம் லட்சமாகக் கொட்டி பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப வசதி இருப்பவர்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள கல்விமுறை மனப்பாடத்திறனை அதிகரிக்கிறதென்றால், பயிற்சி வகுப்புகளிலும் அதற்கு இணையான இன்னொரு உத்தி கையாளப்படுகிறது. உயர்நிலைப் பள்ளிகளில் சிறந்த கோழிப்பண்ணையை நோக்கிய ஓட்டம் இனி பயிற்சி வகுப்புகளில் சிறந்த கோழிப்பண்ணையை நோக்கிய படையெடுப்பாக மாறும்.

 

நீட் தேர்வினால் பயன் பெறும் இன்னொரு கூட்டம், கோச்சிங் கலாச்சாரத்தையே கல்வி முறையாகக் கொண்ட (ராஜஸ்தான், பீகார் போன்ற) சில வட மாநிலத்தவரும் (தற்போதைய கேரளா, ஆந்திரம் போன்ற) தென் மாநிலத்தவருமே. தமிழ்ச்சமூகத்தில் பெருமளவு கலந்திருக்கும் இவர்களது உறவினர்களின் ரேஷன் கார்டுகளில் மிகுந்த முன் யோசனையுடன் இவர்கள் நுழைவது வழக்கமானதாகத் தெரிகிறது. (ஆதார் அட்டை இணைப்புக்குப் பின் இந்த முன் யோசனைக்காரர்கள் என்ன செய்வார்களோ? அதற்கும் ஏதாவது வழி கண்டுபிடிப்பார்கள். மத்திய அரசும் அதற்குத் துணை போகும்).  இந்த முன்யோசனைக்கு முக்கிய காரணம், அதிக அளவில் மருத்துவ கல்லூரிகள்  இருப்பது தமிழகத்தில் என்பதே (நீட் இணையதளத்தில் உள்ள விவரமே இதற்கு சான்று: உதாரணமாக, தமிழ்நாடு – 47; ஆந்திரா – 39; உத்திர பிரதேசம் – 26; ராஜஸ்தான் – 13; பீகார் – 11 ). எனவே அனுமதிக்கப்பட்ட வெளி மாநில ஒதுக்கீட்டையும் தாண்டி உள்ளூர்வாசிகளாய் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இவர்கள் கண்களை உறுத்தும் அளவிற்கு நுழைவதைக் காணலாம். அசாம், பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற இடங்களில் மண்ணுக்குரியவர்களை அயலாராக்குவது எந்த வகையில் சரி? அது போலத்தான் ‘நீட்’டினால் வரும் கேடும்.

 

சென்ற வாரம் ஒரு வாரப் பத்திரிக்கையில் ‘புதிய போராளிகள்’ என்னும் கட்டுரையில் அனிதாவின் புகைப்படத்தோடு அவரது பக்குவமான பேச்சும் முதிர்ந்த எண்ணங்களும் எழுத்தாய்ச் சிதறிக்கிடந்தன. அது வாசிக்கக் கிடைத்த அதே நாள் மாலை அவரது துயரமான முடிவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.  நீதிமன்ற வாசலில் கண்கள் கதைத்த ஏமாற்றத்தையும் தாண்டி நம்பிக்கையும் நிதானமும் அவரது பேச்சில் வெளிப்பட்டன. இந்த அமைப்புமுறையை எதிர்த்துப் போராடுவது என்பது கல்லில் மீண்டும் மீண்டும் தலையை மோதிக்கொள்வதற்குச் சமம் என உணர்ந்த நிமிடம்…..  ஒரு கட்டத்திற்கு மேல் முயல்வதில் பலன் இல்லை என்று தெளிந்த நிமிடம்….. எதிர்காலம் சூன்யமாகிவிட்டதோ என்ற கேள்வி உதித்த நிமிடம்….. மருத்துவ ஆசையைக் காற்றில் கரைக்கத் தெரியாமல் தவித்த நிமிடம்….. தனது கனவுகளைப் புதைக்க ஒரே வழி தன்னைப் புதைப்பதில் மட்டும்தான் இருக்கிறது என்று நம்பிய அந்த நிமிடம்…..அக்கொடிய முடிவை ஆரத்தழுவிக் கொண்டார் அனிதா.

 

தனது அயராத முயற்சியின் பலனை அடைய விடாமல் தடுக்கும் இக்கட்டமைப்பின் மீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்பின் முடிவே அனிதாவினுடையது. தோழர் முத்துக்குமார், தோழி செங்கொடியும் கூட இதே மனநிலையில்தான் இம்முடிவை எடுத்திருக்க வேண்டும். இலங்கைப் பிரச்சனை, ராஜீவ் கொலை வழக்கில் அநியாயமாக தண்டனை அனுபவிப்போர், நீட் பிரச்சனை…….. இன்னும் பல பிரச்சனைகளுக்கும் நாம் பெரிய மனதுடன் ஒதுக்கும் நேரம் – காபி டம்ளர் காலியாகும் வரை. ‘அதற்கு என்ன செய்ய முடியும்? அதுவும் நான் தனியாளாக….’ என்ற நொண்டிச் சாக்கு, நம்முள்ளே குடைந்தெடுக்கும் மனசாட்சியில் இருந்து தப்பிக்க நல்லதொரு காரணத்தைத் தந்துவிடுகிறது. இந்த நொண்டிச் சாக்கையெல்லாம் தூர கடாசி, ‘நான் வாழும் காலத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதே! என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே !” என்று மனதினுள் எழும் குற்றவுணர்ச்சியின் அரிப்பு தாங்காமல் தமது முடிவைத் தேடும் விதை நெற்களின் இடத்தில் ஒரு நொடி நம்மை வைத்துப் பார்க்கும் தைரியமோ அதனால் ஏற்படப்போகும் வலியையும் ரணத்தையும் உணரும் சக்தியோ நமக்குக் கிடையாது. கடைசி நொடி வரை பெற்றோரின் முகம் கண்முன் நிழலாட, தாம் போராடும் பிரச்சனைக்குத் தீர்வு வரும் என்ற நம்பிக்கையில் கனத்த இதயத்தோடே தன் இன்னுயிரை விட்டிருப்பார்கள். எனக்கென்னவோ அவர்களுக்காகப் போராடாத நாம்தான் கோழைகள் எனத் தோன்றுகிறது.

 

மாணவர்களின் அரசியல் ஈடுபாடு குறித்து “உழவன் விதை நெல்லை உணவுக்குப் பயன்படுத்துவதில்லை” என்பது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் பையை நிறைக்கவும் துடிப்பவர்கள் அல்லாது பொறுப்பான மற்றும் துடிப்பான தலைவர்கள் பலர் வாழ்ந்திருந்த காலத்திற்கு சரி. அக்காலத்தில் மக்களின் சமூகப்பார்வை பரந்துபட்டதாக இருந்தது. போராட்ட குணம் மழுங்கி, சுயநலம் பெருகிப் போன இக்காலத்தில் போராட்டத்தை நடத்திச் செல்ல உயிரோடு இருக்க வேண்டுமெனில் விதை நெல்லைச் சமைப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இச்சமூகம் விதை நெற்களைத் தீக்கிரையாக்கிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறதோ?

 

இம்மூன்று விதை நெற்களும் தம்மைச் சமூகத்தில் விதைத்து  விட்டுச் சென்றிருக்கின்றன. விதைகள் விருட்சமாகும் காலம் மிக அருகிலேயே இருப்பதாக நம்ப விழைகிறேன்.

 

  • சோம. அழகு
Series Navigationபண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *