ரோஹிங்யா முஸ்லிம்களும் தேசப்பாதுகாப்பும்

author
0 minutes, 36 seconds Read
This entry is part 10 of 10 in the series 1 அக்டோபர் 2017

தமிழ்ச்செல்வன்

அண்டைய நாடான மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம் மக்களைத் திரும்பவும் மியான்மருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமை அமைப்புகளும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பில் உள்ள நாடுகளும் (OIC Countries) மற்றும் பல பட்டாலும் திருந்தாத நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலேயே கூட, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் போன்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் மற்றும் மனித உரிமை, மதச்சார்பின்மை என்கிற பெயர்களில் தேச விரோதப் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஊடகங்களும் அறிவு ஜீவிகளும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக விமர்சனம் செய்தும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அறிக்கைகள் விடுத்து, பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

Rohingya Muslims - 7
மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரதினிதியாக 24 வயதுடைய முகம்மது ஷகில் என்கிற இளைஞர் உச்ச நீதிமன்றத்தில், “எங்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. எந்த நாட்டில் நாங்கள் கொடுமைகளுக்கு உள்ளானோமோ அதே நாட்டிற்குத் திரும்புவதை விட இங்கேயே இறந்துபோவது மேல் என்று நினைக்கிறோம். ஆகவே இந்திய அரசின் முடிவை ரத்து செய்து எங்களை இந்தியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்களுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடி வருகிறார். அவர், இந்திய அரசின் முடிவு, அரசியல் சாஸனத்தின் 14-ஆம் க்ஷரத்து (சம உரிமை – Equality) மற்றும் 21-ஆம் க்ஷரத்து (வாழ்வுரிமை – Right to Live) ஆகியவற்றை மத்திய அரசின் முடிவு மீறுகிறது என்றும், பல்வேறு நாடுகளின் அகதிகள் மாநாட்டுத் தீர்மானங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
Rohingya Muslims - 4

இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது அரசியல் அமைப்புச் சட்டத்தின் க்ஷரத்துகளை அவர் மேற்கோள் காட்டியிருப்பது. இந்திய அரசியல் சாஸனத்தில் பல க்ஷரத்துகளில் “குடிமக்கள்” (Citizens) என்றும் சில க்ஷரத்துகளில் “நபர்கள்” (Persosns) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பிரஷாந்த் பூஷன் குறிப்பிடும் இரண்டு க்ஷரத்துகளிலும் (Article 14 and Article 21) நபர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை ரோஹிங்யாக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகிறார் பிரஷாந்த் பூஷன். ஆனால், பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் போன்ற பலவிதமான உரிமைகளைப் பற்றிக் கூறும் க்ஷரத்துகள் எல்லாம் குடிமக்களைக் குறிப்பிட்டே கூறப்பட்டுள்ளதால், க்ஷரத்துகள் 14 மற்றும் 21-ஐயும் அவ்வாறே கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஒரு நாட்டின் அரசியல் சாஸனம் என்பது அந்த நாட்டின் குடிமக்களுக்காக இயற்றப்பட்டது என்பதைக் கவனத்தில் கொண்டு, அண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்நாட்டின் குடிமக்களுக்கான அரசியல் சாஸன உரிமைகளை அளிக்க முடியாது.

இரண்டாவதாக பிரஷாந்த் பூஷன் கூறும் பல்வேறு அகதிகள் மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது. ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகள் என்கிற அந்தஸ்தை உடையவர்கள் அல்ல. அவர்கள் அண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்தவர்கள். மேலும், அகதிகள் விஷயத்தில் உலகளவில் முக்கியமானதாகச் சொல்லப்படும் ஐ.நா.சபையின் 1951-ஆம் ஆண்டு அகதிகள் மாநாட்டுத் தீர்மானம் (1951 UN Convention on Refugees) மற்றும் ஐ.நா சபையின் 1967-ஆம் ஆண்டு அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (UNHCR Convention Protocol relating to Status of Refugees) ஆகிய இரண்டிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த இரண்டு உடன்படிக்கை அடிப்படையிலும் ரோஹிங்யாக்கள் இந்தியாவில் தங்க உரிமை கோர முடியாது.

உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய நிலையைத் தெளிவாகக் குறிப்பிட்ட மத்திய அரசு, “தற்போது இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்ட விரோதமாக கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் சாஸன உரிமைகள் எதுவும் கிடையாது; அவர்கள் அவற்றைக் கோரவும் முடியாது. மேலும் ஐ.நாவின் உடன்படிக்கைகளில் இந்தியா கையெழுத்திடாததால், அவர்கள் அகதிகள் என்கிற ஹோதாவிலும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது. மேலும் அவர்களில் பலர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்களாகவும் இருப்பதால், தேசப்பாதுகாப்புக்கும் பங்கம் விளையக் கூடும் என்பதால், தேசப் பாதுகாப்பை மனதில் கொண்டும், அகதிகள் பற்றிய அரசின் கொள்கையைப் பின்பற்றியும், கள்ளத்தனமாக, சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்துள்ள அவர்களைத் திரும்பவும் அவர்கள் நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று சமர்ப்பித்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் யார்?

அன்றைய பர்மா நாடு தான் இன்று மியான்மர் என்று வழங்கப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து பௌத்த நாடாக அடையாளம் காணப்பட்டு வரும் நாடு மியான்மர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, 1948-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. வங்காள தேசத்தையும், இந்தியாவில் மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களையும் எல்லைப்புறத்தில் கொண்டுள்ளது. ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஐம்பது வருடங்கள் முன்பிருந்தே வங்க தேசத்திலிருந்த முஸ்லிம்கள் எல்லை தாண்டி மியான்மரில் அரக்கான் எனும் பகுதியில் குடியேறினார்கள். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் சமயத்திலும், பின்னர் 1971-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நடந்த சமயத்திலும் வங்கதேசத்திலிருந்து (அப்போதைய கிழக்குப் பாகிஸ்தான்) பலர் மியான்மருக்குக் குடிபெயர்ந்தார்கள்.
Rohingya Muslims - 3

இந்த அரக்கன் என்னும் பகுதி ரோஹங் (Rohang) என்று வழங்கப்பட்டது. ரோஹங் என்பது இஸ்லாமியப் பெயர். ரஹம் (Raham) என்ற அராபிய வார்த்தைக்குக் “கடவுளின் ஆசிர்வாதம்” என்று அர்த்தம். ஆகவே ரோஹன், ரஹம் போன்ற சொற்களிலிருந்து “ரோஹிங்யா” என்று வந்திருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. தற்போது இந்த அரக்கான் எனும் பகுதி ராக்கைன் என்று வழங்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் வங்க தேசத்திலிருந்து பர்மாவுக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்களே ரோஹிங்யா முஸ்லிம்கள் என்று வழங்கப்படுகிறார்கள். இவர்கள் 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே பர்மாவில் இருப்பவர்கள் என்கிற கூற்றும் உள்ளது. ஆயினும், மியான்மர் அரசு உறுதியான ஆதாரங்கள் இல்லாத அந்தக் கூற்றுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக எல்லைதாண்டி வந்த “வங்காளிகள்” என்றே குறிப்பிடுகிறது.

1982-ல் மியான்மர் அரசு குடியுரிமைச் சட்டம் பிரகடனப்படுத்தியபோதும் ரோஹிங்யாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. மியான்மர் அரசு அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவில்லை. “ரோஹிங்யா என்கிற பெயரே எங்கள் நாட்டின் பூர்வகுடிகளாகச் சொல்லப்படும் பட்டியலில் இல்லை. எங்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 100பூர்வ குடிகளின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ரோஹிங்யா என்கிற பெயர் இல்லை. இவர்கள் நாங்கள் சுதந்திரம் பெற்ற பிறகும், 1971-ல் வங்கதேசம் உருவான சமயத்திலும் வங்கதேசத்திலிருந்து கள்ளத்தனமாக எங்கள் நாட்டிற்குள் வந்தவர்கள்” என்று தான் மியான்மர் அரசு உறுதியாகச் சொல்கிறது.

வன்முறைக்குள்ளான ராக்கைன் பிராந்தியம்

பர்மா சுதந்திரம் பெற்ற பிறகு ரோஹிங்யா முஸ்லிம்கள் அரசியலிலும் பங்கு பெற்றிருந்தனர். பர்மாவின் அரசியல் சாஸன சபைக்கு இருவர் (எம்.ஏ.காஃபர், சுல்தான் அஹமது) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். எம்.ஏ.காஃபர் “ரோஹிங்யா” என்கிற பதத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதன் பிறகு நடந்த பர்மா பாராளுமன்றத் தேர்தல்களிலும் (1951, 1956) ரோஹிங்யாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், 1962-ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ரோஹிங்யாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. பிறகு 1990-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் “மனித உரிமைக்கான தேசிய ஜனநாயகக் கட்சி” (National Democratic Part for Human Rights) சார்பில் நான்கு ரோஹிங்யாக்கள் வெற்றி பெற்றனர். அந்தத் தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான “தேசிய ஜனநாயக லீக்” (National League for Democracy) கட்சி வெற்றி பெற்றது. ஆயினும் அவரைப் பிரதமராக ஆகவிடாமல் ராணுவம் சிறை வைத்தது.

Rohingya Muslims - 2
அரசு அங்கீகாரம் வழங்காத நிலையில் ரோஹிங்யாக்களுக்கும் பெரும்பான்மையினராக இருந்த பௌத்த மக்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்த வண்ணம் இருந்தன. வன்முறைச் சம்பவங்களும் நடப்பதுண்டு. இச்சண்டைகளின் போது மியான்மரில் உள்ள ஹிந்துக்களின் மீதும் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துவது உண்டு. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு முக்கியமான காரணம் மியான்மர் சுதந்திரம் அடைந்த சமயத்தில் வங்க தேசத்திலிருந்து நுழைந்த முஸ்லிம்களால் முஜாகிதீன் புரட்சி கட்டவிழ்க்கப்பட்டது ஆகும். சம உரிமை கேட்டும், தாங்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் சுயாட்சி உரிமை கொண்ட இஸ்லாமியப் பிராந்திய அமைப்பைக் கேட்டும் புரட்சியில் இறங்கினார்கள் முஜாகிதீன்கள். இதனால், ராக்கைன் பிராந்தியத்தில் இருந்த பூர்வகுடி மக்கள் இவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து பௌத்தர்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. மியான்மர் அரசு, முஜாகிதீன் புரட்சியை ஓரளவிற்கு அடக்கினாலும், நாளடைவில் ரோஹிங்யா முஸ்லிம்கள் “அரக்கான் ரோஹிங்யா மீட்புப் படை” (Arkan Rohingya Salvation Army) என்கிற பயங்கரவாத அமைப்பை உருவாக்கினார்கள். அரக்கான் ரோஹிங்யா மீட்புப் படையின் அதிரடித் தாக்குதல்களுக்கு பூர்வ குடிமக்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் ராக்கைன் பிராந்தியத்திலிருந்து புலம்பெயர்ந்து மியான்மரின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். ரோஹிங்யாக்கள் மியான்மரில் உள்ள பௌத்தர்கள் மட்டுமல்லாது, சிறுபான்மையின ஹிந்துக்களையும் அவ்வப்போது தாக்கி வந்தார்கள். அதுமட்டுமல்லாமல் மியான்மர் அரசின் பாதுகாப்புப் படைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கினார்கள்.

இவர்களின் வன்முறைகளை அடக்க நினைத்த மியான்மர் ராணுவ அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு கடுமையான ராணுவ நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபட்ட அரக்கான் ரோஹிங்யா மீட்புப் படையினரையும் அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் அடித்து விரட்டியது. இதில், பலர் இறந்தனர். ரோஹிங்யா முஸ்லிம்கள் கும்பல் கும்பலாக மியான்மரை விட்டு வெளியேறத் தொடங்கினர். இன்றுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசம், இந்தியா, மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான், சௌதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

தற்போது, மியான்மரில் ராணுவ ஆட்சி இல்லை. பல வருடங்களாக ஜனநாயகம் வேண்டும் என ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி, சிறைவாசம் அனுபவித்து, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஆங்சான் சூகி என்கிற பெண்மணியின் தலைமையிலான தேசிய ஜனநாயக அணி தான் அங்கே ஆட்சியில் இருக்கிறது. ரோஹிங்யா பிரச்சனையின் தீவிரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ள ஆங்சான் சூகி, தன்னுடைய மியான்மர் தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நாவின் அழுத்தங்களுக்குக் வளைந்து கொடுக்காமல் நடந்துகொண்டு வருகிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி, அரக்கான் ரோஹிங்யா மீட்புப் படையைச் சார்ந்த 150 பயங்கரவாதிகள் 24 காவல்துறை முகாம்கள் மீது திடீர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 71 நபர்கள் இறந்தனர். கடுமையான சேதம் விளைந்தது. அதனைத் தொடர்ந்து மியான்மர் பாதுகாப்புப் படைகள் மீண்டும் ரோஹிங்யாக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அவர்களை விரட்டி அடித்தன. மீண்டும் ரோஹிங்யாக்கள் மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள்ளும், வங்கதேசத்துக்குள்ளும் நுழைய முயல்கின்றனர்.

இதே 25-ஆம் தேதியன்று, 300 ரோஹிங்யாக்கள் 100 ஹிந்துக்களைக் கடத்திச் சென்று 92 பேரைக் கொன்றதாகவும் மிச்சமிருந்த 8 பெண்களை முஸ்லிம்களாக மதம் மாற்றி அவர்களை வங்கதேசத்திற்குக் கொண்டு சென்றதாகவும் மியான்மர் அரசுத் தகவல் அலுவலகம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. மேலும், சென்ற வாரம் ராக்கைன் பிராந்தியத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களால் கொல்லப்பட்ட 28 ஹிந்துக்களின் (20 பெண்கள், 8 சிறுவர்கள்) உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை மியான்மர் ராணுவம் கண்டு, அவ்வுடல்களை வெளியே எடுத்தது.

ரோஹிங்யா முஸ்லிம்களும் பயங்கரவாதமும்.
Rohingya Muslims - 6
உலகம் முழுவதும் இஸ்லாமைப் பரப்ப வேண்டும்; உலகில் உள்ள நாடுகளை எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாற்றி, “உம்மா” என்கிற உலகளாவிய இஸ்லாமியக் கோட்பாட்டை நிறுவ வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. சில நாடுகள் தீவிரமாகவும், சில நாடுகள் மிதமாகவும் இந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. தீவிரமாகச் செயல்படுத்த முனையும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுக்குப் பெரும் ஆதரவு அளித்து வருகின்றன. எண்ணை வளத்தினால் செல்வச் செழிப்பில் கொழிக்கும் வளைகுடா நாடுகள் மறைமுகமாகப் பெரும் நிதியுதவி அளித்து வருகின்றன.

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட மர்கஸ் தாவா-உல்-இர்ஷத் (MDI – Markaz Dawa-Ul-Irhsad) என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் பயங்கரவாத முகம் (அணி) தான் லஷ்கர்-இ-தைபா (LeT Lashkar-e-Taiba). மர்கஸ் தாவா-உல்-இர்ஷத் அமைப்பின் மற்றொரு பயங்கரவாத முகம் ஜமாத்-உத்-தாவா (JuD Jamath-ud-Dawa) ஆகும். இவ்வமைப்புகளின் தலைவனான ஹஃபீஸ் ஸையீத் (Hafiz Sayeed) என்பவன் “ரோஹிங்யா முஸ்லிம்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்குப் பழிவாங்கியே தீருவோம்” என்று 2011-ஆம் ஆண்டிலேயே அறைகூவல் விடுத்தான். தனக்கு அறிமுகமான மௌலானா அப்துஸ் குத்துஸ் பர்மி (Maulana Abdus Quddus Burmi) “அரக்கனின் ஹர்கத்-உல்-ஜிஹாத்” (HuJA- Harkat-ul-Jihad of Arakans) என்கிற அமைப்புக்கு உதவியாகச் செயல்படுவான் என்று 2012-ல் கராச்சியில் ஒரு மாநாடு நடத்திப் பிரகடனப்படுத்தினான். மௌலானா அப்துஸ் குத்துஸ் பர்மி ரோஹிங்யா முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மேலும், மியான்மரில் உள்ள மயே ஸாட் (Mae Sot) என்கிற இடத்தில் ஒரு பயங்கரவாதத் தலைமையிடம் நிறுவி, அங்கிருந்து மியான்மர் அரசைப் பழிவாங்குவதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வங்கதேசம் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளான்.

மேற்கண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ISI (Inter Services Intelligence) அமைப்பும் பாகிஸ்தான் ராணுவமும் மறைமுகமாக உதவி வருகின்றன. “லஷ்கர்-இ-தைபா 1985 முதல் 2015 வரை” (Lashkar-e-Taiba 1985-2015) என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பத்திரிகையாளர் அரிஃப் ஜமால் என்பவர் தன் புத்தகத்தில், “பாகிஸ்தானில் உள்ள மதரசாக்களிலும் ராணுவ முகாம்களிலும் 3,50,000 ரோஹிங்யா முஸ்லிம்களுக்குப் பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் தங்களிடம் ஏராளமான ரோஹிங்யா முஸ்லிம்கள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறுகின்றன. ரோஹிங்யா முஸ்லிம்கள் ஜமாத்-உத்-தாவா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி ஆகிய அமைப்புகளில் அதிகமாக உள்ளனர். மியான்மரில் பாகிஸ்தான் ஜிஹாதிகள் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் ராணுவம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நேரடியாக உதவ ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தானின் இந்த ஈடுபாட்டுக்கு முக்கியமான காரணங்களாக, இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் அருகாமையில் மியான்மர் உள்ளதையும், ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசம் உருவாவதற்கு முன்பிருந்தே பாகிஸ்தானுடன் இணைய விரும்பியதையும் சொல்லலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வங்க தேசத்திலும், இந்தியாவிலும் தற்போதுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுடன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு கொண்டுள்ளன. அவர்களுக்கு மறைமுகமாகப் பயங்கரவாதப் பயிற்சியும் அளித்து வருகின்றன. அவ்வமைப்புகளால் ரோஹிங்யா முஸ்லிம்கள் தற்கொலைப் படையினராகப் பயன்படுத்தப்படுகின்றனர். சொல்லப்போனால் உலகத்தில் உள்ள அனைத்து விதமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடனும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்குத் தொடர்பு உள்ளது எனலாம். உதரணமாக, மறைந்த பயங்கரவாதியும் அல்-கைதா அமைப்பின் முன்னாள் தலைவனுமான ஒஸாமா பின் லாடன் கூட ஒரு முறை கராச்சியிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பர்மாவில் வலிமையான ஜிகாதிப் படை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளான். அல் கைதா அமைப்பின் கிளை அமைப்பான அன்ஸர் கஸ்வாத்-உல்-ஹிந்த் (Anar Ghazwat-ul-Hind) என்கிற அமைப்பின் தலைவனான ஜாகிர் மூஸா (Zakir Musa) என்பவன், “ஜம்முவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றக் கூடாது; மீறி வெளியேற்றினால், பசுவை வழிபடும் நரேந்திர மோடி மற்றும் ஹிந்துக்களிடமிருந்து இந்தியாவை மீட்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளான்.

2012-ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஜூலை 7, 2013 அன்று, இந்தியாவின் புத்த கயாவில் லஷ்கர்-இ-தைபா அமைப்பு தொடர் குண்டு தாக்குதல் நடத்தியது. புத்த கயாவில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. புத்த தேசமான மியான்மருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே அந்தத் தாக்குதல் கருதப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீரின் தென்பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ஆப்துர் ரெஹ்மான் அல் அர்கானி சோட்டா பர்மி என்பவன் ரோஹிங்யா முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ரோஹிங்யா முஸ்லிம்கள் காஷ்மீர் பிரிவினைவாதப் போராட்டங்களிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி (Bangladesh Jamath-e-Islami) என்கிற வங்கதேசத்துப் பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுவது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் மக்கள் தொகைப் பெருக்கத்திலும் ஈடுபடுகின்றனர் ரோஹிங்யாக்கள். 1901-ஆம் ஆண்டு கணக்கின்படி 1,62,754 (21%) ஆக இருந்த ரோஹிங்யாக்கள் 1983-ஆம் ஆண்டு கணக்கின்படி 5,84,518 (29%) ஆக உயர்ந்தது. 2015 ஆம் ஆண்டு சமயத்தில் 10 லட்சத்திலிருந்து 13 லட்சம் ரோஹிங்யாக்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக ராக்கைன் பிராந்தியம் கிட்டத்தட்ட 95% இவர்களால் ஆக்கிரமிகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய பிரச்சனையில் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்களில் 16,000 பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று வங்கதேச அரசு கூறியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கம் என்பது இஸ்லாமிய சமுதாயத்துக்கே உரிய ஒரு வழக்கமாகக் கருதப்படுகின்றது.

வினை விதைத்துப் பின் வினை அறுக்கும் வங்க தேசம்

இரண்டாவது உலகப் போர் சமயத்திலும், பர்மா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து 1948-ல் சுதந்திரம் வாங்கிய போதும், 1971-ல் இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியாவின் உதவியால் வங்கதேசம் உருவான போதும், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகப் பர்மா சென்றவர்களே ரோஹிங்யா முஸ்லிம்கள் என்று பார்த்தோம். இரண்டாம் உலகப்போர் சமயத்திலும், பர்மா சுதந்திரம் பெற்ற சமயத்திலும் பர்மாவுக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள் பர்மாவில் தங்களுக்கென்று தனியாக சுயாட்சியுடன் கூடிய முஸ்லிம் பிரதேசம் உருவாக்கிக்கொண்டு பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர். பர்மாவின் மேற்குப் பகுதி வங்கதேசத்தின் எல்லையில் இருந்ததால், அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ள விரும்பி, தங்களுக்கென்று ஒரு இஸ்லாமியப் பிரதேசமாக மேற்கு பர்மாவை உருவாக்கித்தருமாறு முகம்மது அலி ஜின்னாவிடம் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் அப்போது ஆங்கிலேய அரசை அநாவசியமாக விரோதித்துக்கொள்ள விரும்பாத ஜின்னா, இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் இவர்கள் முஜாகிதீன் புரட்சியைத் தொடங்கினர்.

இவ்வாறு பர்மாவுக்கு லட்சக்கணக்கான முஸ்லிம்களை அனுப்பிய வங்கதேசம் தற்போது அவர்கள் தன்னிடமே திரும்பி வரும்போது, அவர்களை விரட்டவும் முடியாமல், வைத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கின்றது. 1990களில், பர்மாவில் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியில், சுமார் 2,50,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். மறுத்தவர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; சிலர் சிறையில் தள்ளப்பட்டனர்.

அதன் பிறகு பர்மாவில் நடந்த 2012 ராணுவ நடவடிக்கையின் போது வங்கதேசத்திற்குக் குடிபெயர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளடைவில் அவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஆகிவிட்டது. இது போதாதென்று, கடந்த ஆகஸ்டு மாத நடவடிக்கைக்குப் பிறகு மேலும் 1,25,000 ரோஹிங்யாக்கள் அங்கே சென்றுள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம்களை வைத்துக்கொள்ள வங்கதேச அரசுக்கும், மக்களுக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை. உள்நாட்டில் வைத்துக்கொண்டிருந்தால் தேசப் பாதுகாப்புக்குப் பங்கம் விளையும் என்கிற கருத்தில், பக்கத்தில் உள்ள தெங்கர் சார் என்கிற தீவில் அவர்களைத் தனியாக வைக்கலாமா என்கிற யோசனையில் உள்ளது வங்கதேச அரசு. ஆனால், அவ்வாறு செய்தால் அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுகின்ற ஆபத்தும் இருப்பதால், அவர்களை பர்மாவுக்குத் திரும்ப அனுப்புவதே சரியாக இருக்கும் என்கிற யோசனையிலும் உள்ளது.

வங்கதேசம் கற்றுக்கொடுத்த பாடம்

இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளில், வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் போன்ற மாநிலங்களில் நுழைந்து பரவினார்கள். பிறகு அம்மாநிலங்களிலிருந்து நாடு முழுவதற்கும் பரவினார்கள். பெருகும் முஸ்லிம் வாக்கு வங்கியை மனதில் கொண்டு, அதைத் தனக்குச் சாதமாகப் ஆக்கிக்கொள்ள, இந்தியாவை ஐம்பது ஆண்டுகளுக்கு ஆண்ட காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்கத்தை ஆண்டுவந்த கம்யூனிஸ்டு கட்சியும் வங்க தேசத்து முஸ்லிம்களின் சட்ட விரோத நுழைவைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் கட்சிக்காரர்களின் உதவியுடனும், இஸ்லாமிய அமைப்புகளின் உதவியுடனும் அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றுக்கொள்வதையும் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் தம்மிடமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதைப் பற்றி வங்கதேச அரசும் கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களால் அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகை விகிதச்சாரம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் முஸ்லிம் பெரும்பான்மையானதாக பல மாவட்டங்கள் மாறியுள்ளன. 1951 மக்கள் தொகைக் கணக்கின்படி மேற்கு வங்கத்தில் 19.85% ஆக இருந்த முஸ்லிம்கள் தொகை, 2011 கணக்கின்படி 28% ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 1947-ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள் 2011 கணக்கின்படி வங்கதேசத்து எல்லையில் உள்ள 3 மாவட்டங்கள் (முர்ஷிதாபாத், மால்டா, உத்தர் தினாஜ்பூர்) முஸ்லிம் பெரும்பான்மையாக ஆகிவிட்டன. மேலும் இரண்டு மாவட்டங்கள் (24 பர்காணாஸ், பீர்பம்) 35% முஸ்லிம்கள் உள்ள மாவட்டங்கள். அதே போல அஸ்ஸாமில் 1951 கணக்கின்படி 17.62% ஆக இருந்த முஸ்லிம்கள் தொகை 2011 கணக்கின்படி 29.59 ஆக உயர்ந்துள்ளது. அஸ்ஸாமில் 1951 ஆம் ஆண்டில் முஸ்லிம் பெரும்பான்மையான மாவட்டமே கிடையாது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் 9 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆகியுள்ளனர். தேசிய அளவில் 1951-ல் 8.9% ஆக இருந்த முஸ்லிம்களின் தொகை காங்கிரஸ் அரசின் வாக்குவங்கி அரசியலால் 2011-ல் 14% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த முஸ்லிம்களுக்கு கள்ளத்தனமாகக் குடியுரிமை வழங்கப்பட்டது தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இவ்வாறாக சட்ட விரோதமாக நாடெங்கும் பரவியுள்ள வங்கதேச முஸ்லிம்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. அதற்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவும் உடந்தையாக உள்ளது. இவர்களுக்குப் பயங்கரவாதப் பயிற்சியும் கொடுக்கப்பட்டு இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தவும் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு வேலை வாங்கித்தருவது, வாடகைக்கு வீடுகள் பார்த்துத்தருவது, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்கள் பெற்றுத்தருவது போன்ற உதவிகளை உள்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் செய்கின்றன. சமீப காலங்களில் காஷ்மீர் முதல் கேரளா வரை, தமிழகம் முதற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து வருகின்றனர். இதை தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளும் கைதுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

Rohingya Muslims - 5
ஜிஹாத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் லவ் ஜிஹாத்திலும் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான ஹிந்து பெண்களையும் காதல் ஆசை காட்டி மதம் மாற்றுகின்றனர். பின்னர் அந்தப் பெண்களையும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். கேரள மாநிலத்தில் இது மிகவும் அதிகமாகியுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் வெளியாகி, உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கும் உள்ளது.

அதாவது, வங்கதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக நுழைந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதப் பயிற்சி அளிக்கின்றது; நம் நாட்டிலேயே உள்ள முஸ்லிம் அமைப்புகள் அவர்களுக்கு இந்தியாவில் குடியேற அனைத்து விதமான உதவிகளையும் செய்கின்றன. பிறகு நம் நாட்டிலேயே ஜிஹாத்திலும் லவ் ஜிஹாத்திலும் மதமாற்றத்திலும் ஈடுபட உதவுகின்றன. வங்கதேச முஸ்லிம்கள், பாகிஸ்தான் முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால், அவர்களின் ஒரே நோக்கம் “உம்மா” என்கிற உலகளாவிய இஸ்லாம் அமைப்பதுதான் என்பது உறுதியாகிறது.

வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்கள் மூலமாக இப்படி ஒரு மிகப்பெரிய பாடம் கற்றுக்கொண்ட பிறகும், மியான்மரிலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, தெரிந்தே பேராபத்தை வரவேற்பதாகும்.

இஸ்லாமிய நாடுகளின் நடத்தை

இஸ்லாமிய தேசமான வங்கதேசம் ரோஹிங்யா முஸ்லிம்களை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதைப் பார்த்தோம்.

அதே போல 1995-96 சமயத்தில் தன்னிடம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வங்கதேச முஸ்லிம்கள் தங்கியுள்ளனர் என்று தெரிந்து அதிர்ச்சிக்குள்ளான மலேஷியா நாடு, உடனடியாக அவர்களை வங்கதேசத்திற்கே திருப்பி அனுப்பியது. வங்கதேசத்துடன் செய்துகொண்ட தொழிலாளர் உடன்படிக்கையையும் தன்னிச்சையாக முறித்துக்கொண்டது மலேஷியா.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் கத்தார் நாடும் சௌதி அரேபியாவும் 50,000 வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்றின.

தற்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் விஷயத்திலும் முஸ்லிம் பெரும்பான்மையான நாடுகள் எதுவும் அவர்களை வரவேற்கவில்லை; வைத்துக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இருக்கும் சிலரையும் மீண்டும் மியான்மருக்கே அனுப்ப முயற்சிக்கின்றன. ஆனால் இந்தியாவைக் கண்டிக்க மட்டும் அவைகளுக்கு நாக்கு நீள்கிறது.

இவ்விஷயத்தில் நாம் மீண்டும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்லாம் அல்லாத நாடுகளில் அகதிகள் என்கிற போர்வையில் முஸ்லிம்களை அனுப்புவதே இஸ்லாமிய நாடுகளின் நோக்கம் ஆகும். அவ்வாறு அவர்களை அனுப்பிய பிறகு, அவர்களுக்கு பல விதங்களில் உதவி செய்து, அவர்களைக் கொண்டே அந்நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகையைப் பெருக்குவதும், முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளை உருவாக்குவதும், பின்னர் அப்பகுதிகளை அந்நாடுகளிலிருந்து பிரிப்பதும் ஆகும். முடிந்தால் அந்நாடுகளையே இஸ்லாமிய நாடுகளாக ஆக்குவதும் அவர்களின் திட்டம். குடியேறிய நாடுகளின் அரசியலில் பங்கேற்று, ஆட்சி அதிகாரமும் பெற்று, அதன் மூலமும் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்வதும் அவர்கள் திட்டங்களில் ஒன்று.

சிறுபான்மையினராக இருக்கும் வரை பயங்கரவாத தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதும், பெரும்பான்மையான பிறகு அப்பகுதிகளில் சிறுபான்மையாகிவிட்டப் பூர்வ குடிமக்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்களை மிரட்டியும் பயமுறுத்தியும் மதமாற்றம் செய்வதும், இந்தியா உட்பட உலகெங்கும் நடந்து கொண்டிருப்பவைதான்.

அரசியல் கட்சிகளும் அறிவு ஜீவிகளும்

இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் நடத்தையும் நோக்கமும் தெளிவாகத் தெரிகின்ற போது, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அறிவு ஜீவிகளும் கிஞ்சித்தும் தேசப் பற்று இன்றி, தேசப் பாதுகாப்புக்கும், தேச நன்மைக்கும் விரோதமாகப் பேசி வருகின்றனர். ரோஹிங்யா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் இதயத்தில் ரத்தம் கசியக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். மதச்சார்பின்மை, மனித உரிமை என்கிற பெயர்களில் இவர்கள் இவ்வாறு கருத்துரைக்கின்றார்கள். நாட்டில் உள்ள முன்னனி ஊடகங்கள் மட்டும் சோடை போகுமா என்ன! அவைகளும் இதயத்தில் ரத்தம் கசியத் தலையங்கங்கள் எழுதுகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் கருணை பொங்க விவாதிக்கின்றன. அனைவரும் ரோஹிங்யா முஸ்லிம்கள் பரிதாபமான அப்பாவிகள் என்றும், மியான்மர் அரசினால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் அரற்றுகிறார்கள்.

இதே கட்சிகளும், அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் தான், இந்தியாவில் முஸ்லிம்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்; இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது; பசுப்பாதுகாப்பு என்கிற பெயரில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்றெல்லாமும் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்கிற இவர்களே ரோஹிங்யா முஸ்லிம்களை இங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முரணான கருத்தையும் வெளியிடு கின்றார்கள். அனைத்து உண்மைகளும் தெரிந்தே, இவர்கள் தேச நலனுக்கு விரோதமாகவும், சுயநலத்துடனும் நடந்துகொள்கிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இங்கேயும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த முஸ்லிம்களுக்கு எப்படி மறைமுகமாக, வாக்குவங்கியை மனதில் கொண்டு, சுயலத்துடன் அனுமதி அளித்ததோ, அதே போலவே ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் 2014 வரை அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் அவர்களுக்கு முகாம்கள் அமைக்காமல், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்முவில் முகாம்கள் அமைத்துள்ளது.

தற்போது ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லாவும் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது, ரோஹிங்யா முஸ்லிம்களை ஹிந்துக்கள் பகுதியான ஜம்முவில் குடியமர்த்தியதன் பின்னே பெரும் சதி இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது.

இப்பொழுதே ரோஹிங்யா முஸ்லிம்கள் தென்னகத்திலும் பரவியுள்ளார்கள். கேரளாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும் கூடக் குடியேறியுள்ளார்கள். சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கம் என்கிற இடத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு ஆதார் அட்டைகளும் வழங்கியுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் பலர், இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டிருப்பதை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பேச்சு. இலங்கைத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்துதான் புலம் பெயர்ந்து சென்றவர்கள். இது இந்தியா, இலங்கை ஆகிய சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் ஏறுக்கொண்டுள்ள உண்மை. இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை.

மேலும், தனி ஈழம் என்கிற பிரிவினைவாதத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்துள்ளது இந்தியா. ஈழப் பிரிவினைவாதத்தை ஊக்குவித்துத் தமிழர்களைத் தவறான வழியில் செலுத்தியவை மேற்கத்திய சக்திகள் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். அதனால் தான், நட்பு நாடான இலங்கையின் நலன், இலங்கைத் தமிழ் மக்களின் நலன் இரண்டையும் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகின்றது இந்தியா.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே போர் நடந்த காலங்களில், சிக்கித்தவித்து சின்னாபின்னமான அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் தரவேண்டிய கடமையைப் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி வருகிறது இந்தியா. தற்போது, போர் முடிந்த நிலையில், இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களில் பங்குகொண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துவருகின்றது இந்தியா. அகதிகள் முகாம்களில் இருப்பவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

உண்மை இவ்வாறு இருக்க, இலங்கைத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததைப் போல, நமக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும் எனக்கூறுவது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, தேச விரோதப் பேச்சும் ஆகும்.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயமும் உண்டு. அகதிகளாக இருந்த இலங்கைத் தமிழர்களிடையே ஊடுருவிய விடுதலைப்புலிகளாலும் பாதுகாப்புப் பிரச்சனைகள் உட்பட நாம் சந்தித்தப் பிரச்சனைகள் ஏராளம். ஒரு முன்னாள் பிரதமர் உட்பட பல குடிமக்களை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே, இங்கே காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை இஸ்லாமியப் பயங்கரவாதம் பரவிக்கொண்டிருக்கையில், மேலும் ரோஹிங்யாக்கள் போல பயங்கரவாதத்திலும் மக்கள்தொகைப் பெருக்கத்திலும் ஈடுபடும் முஸ்லிம்களை கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு அடைக்கலம் தரக்கூடாது.

மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

உலக நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும், ஐ.நா.சபையும், உலகெங்கும் உள்ள அறிவு ஜீவிகளும் மியான்மர் அரசைக் கடுமையாகக் கண்டித்தாலும், ஆங்சான் சூகி அவற்றைக் கண்டுகொள்ளாமல் தன் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். ஐ.நாவின் பொதுச் செயலாளர் தன்னைச் சமீபத்தில் சந்தித்தபோது கூட ரோஹிங்யா முஸ்லிம்கள் விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்காமல் அவர் சாதுர்யமாக நடந்துகொண்டார். அதே போல இந்தியப் பிரதமர் சமீபத்தில் மியான்மர் நாட்டிற்கு விஜயம் செய்தபோதும், இரு தலைவர்களும் ரோஹிங்யா முஸ்லிம்கள் விஷயத்தில் சுமுகமான புரிதலுடன் நடந்துகொண்டனர். பத்திரிகை அறிக்கையில் கூட இவ்விஷயத்தைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆகவே, தற்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தானது நாட்டுநலன் விரும்பும் குடிமக்கள் அனைவராலும் வரவேற்கத்தக்கது. எனவே, ரோஹிங்யா முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பும் தன்னுடைய முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். வெகு விரைவில் அவர்களை வெளியேற்ற வேண்டும்.

Series Navigationமஹால்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *