ஒலியும் ஒளியும்

This entry is part 1 of 5 in the series 22 அக்டோபர் 2017

 

ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)

காதில் பஞ்சடைத்து
இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல்
தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன்
பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி….

பட்டாசுச் சப்தம் பயமுறுத்த
தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம்
நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு
அதுவாகவே யிருக்கும்.

சிறுவயதில்
நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு
நகைப்புக்காளாகி
செவிபொத்தி,
புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம்
குளியறையில்.

கிண்டல் குட்டு கிள்ளு
எல்லாமே என் மேல் அக்கறை கொண்டோரின்
எதிர்வினைகளாக….

ஒருபோது பாவம் பார்ப்பார்கள்;
ஒருபோது பிடித்திழுத்துவந்து
வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் நிறுத்துவார்கள்.

பின்னேகிக்கொண்டே போனதில்
ஒருமுறை புது கவுன் விளக்கில் பற்றிக்கொண்டுவிட்டதாம்.

சில வெடிகள் தரையைப் பிளந்து என்னைக் குற்றுயிராக்கிவிடும்.
அவற்றிலிருந்து கிளம்பும் நெருப்பு என்னைத்
தீக்கிரையாக்கிக்கொண்டேயிருக்கும்.

ஒரு முறை பூக்குத்தி டமாரென வெடித்ததில்
உருமாறிவிட்டது அதுமுதல் நான் வெறுக்கும் பட்டாசாய்.

அப்போதெல்லாம் தீபாவளிக்கு முன்னும் பின்னும்
பதினைந்து இருபது நாட்கள்போல்
பாழும் நரகத்துள் வறுபட்டுக்கொண்டிருப்பேன்
கொதிக்கும் எண்ணெயில்.

(இப்போது அப்படியில்லை என்றாலும்
எல்லா விழாக்களிலுமே வெடிகள்
தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன –
வெடிகுண்டுகளும் கூட)

வலிதாங்கு சக்திபோல் ஒலிதாங்கு சக்தியும்
எல்லா மனிதர்களுக்கும் ஒருபோல் இருப்பதில்லை.

இப்போதும் அந்த ஒளி, ஒலி கதிகலங்கச் செய்கிறது.
எனில், இயல்பாய் காதில் பஞ்சடைத்துக்கொள்ள என்னால் முடிகிறது.
அதில் அவமானமடையத் தேவையில்லை என்ற உண்மை
ஆழப் படிந்துவிட்டது மனதில்.

அன்பிற்குரியோரே, ஆன்றோரே – சான்றோரே
உங்கள் இல்லங்களில் அருகிலுள்ள வீடுகளில்
வெடிச்சப்தம் கேட்டு விதிர்த்து அழும் சிறுமி/சிறுவன் இருந்தால்
பெற்றோரும் உற்றாரும் பக்கத்துவீட்டுக்காரர்களுமாகிய நீங்கள் கடிந்துகொள்ளவேண்டாம்; அடிக்கவேண்டாம்.

அடடா பயந்தாங்கொள்ளி என்று எள்ளிநகையாடி
அவமானத்தில் அவர்களைக் குன்றிப்போகச் செய்யாதீர்கள்;
குறைமனிதராய் அவர்களை உணரச் செய்யாதீர்கள்.

அவர்களுடைய குட்டிக்காதுகளில் சின்னப் பஞ்சுருண்டையை செருகிக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்;

அருகிருக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் கூட
மிக இதமாயிருக்கும்.

இதோ, இந்தக் கவிதைப்பையிலிருந்து வேண்டுமட்டும் பஞ்சைப் பிய்த்தெடுத்துக்கொள்ளுங்கள்.

உட்செவியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அந்தத் திரைப்பாடல் வரி _
குழந்தைகளின் சேர்ந்திசையாய்

“நான் சிரித்தால் தீபாவளி….”

 

Series Navigationஒப்பாரி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *