நெய்தல்-ஞாழற் பத்து

This entry is part 19 of 20 in the series 17 டிசம்பர் 2017

ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் பாடல்களும் ஞாழல் தொடர்புள்ளவையாதலால் இப்பகுதி ஞாழற் பத்து எனப் பெயர் பெற்றது.
ஞாழற் பத்து—1
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே
[எக்கர்=நீர் கொண்டு இட்ட மணல் மேடு; பயலை=பசலை நோய்; பனிபடு துறை=குளிர்ச்சியடைந்த நீர்த்துறை]
அவன் அவளை விட்டுவிட்டுப் போயிட்டான்.அவன் பிரிவால அவ வாடறா; அவ வருந்தறா; அதைப் பார்த்த தோழி ஏன்னு கேக்கறா; அப்ப அவகிட்ட சொல்ற பாட்டு இது.
“தண்ணி கொண்டு வந்து போட்ட வெள்ளை மணலான மணல்மேடு இது. இங்க பாரு, ஞாழல் பூவும் செருந்திப் பூக்களும் நல்லா வாசனை யடிக்குது. இந்தக் குளிர்ச்சியான எடத்துல தண்ணீர்த் துளியெல்லாம் என் மேல வீசிப் பசலை நோயைக் கொண்டு வந்திடுச்சி பாருடி”
நான் அவன் பிரிவைக் கூடப் பொறுத்துக்கிட்டு இருப்பேன். ஆனா இந்தப் பூவெல்லாம் மணக்குதே; நான் அவரோடு சேந்து மணக்கலயேன்ன்னு மறைவா சொல்றா.
ஞாழற் பத்து—2
எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை
உள்ளேன்-தோழி, –படீஇயர் என் கண்ணே.

சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்காம அவன் தெனம் ராத்திரி வந்துபோறான். கிட்ட இருக்கற தோழியையும் போகச் சொல்லி சாடையா சத்தம் எழுப்பறான். அப்ப தோழி, ”தெனம் இதே மாதிரி வந்தா ஒன் தூக்கமும் கெட்டுப் போகுது; அதால ஒன் ஒடம்பும் வீணாகுது. அதுக்காகவாவது நீ அவனை மறந்துடுடி”ன்னு சொல்றா. அப்ப அவசொல்ற பாட்டு இது.
”தோழி! மணல் மேட்டுல ஞாழலோட தாழ்வான கிளையில இருக்கற பூங்கொத்துல எல்லாம் கடல்பறவையெல்லாம் வந்து தங்கற எடத்த உடையவன் அவன். நீ சொன்னபடிக்கு நான் இனிமே அவனை நெனக்கமாட்டேன். அதால என் கண்ணெல்லாம் இனிமே தூங்கும்டி”
அந்த ஞாழல் கிளைகளிலே பறவையெல்லாம் வந்து தங்கறதால கிளைகள் வருந்தும். அதே மாதிரி அவன் பிரிவு வந்து தங்கறதால நான் வருந்தறேன்னு மறைவா சொல்றா. அந்தப் பறவையெல்லாம் கூட நேரத்துல வந்து தங்குது. ஆனா இவன்தான் நேரத்துல கல்யாணம் கட்டிக்க மாட்டேன்றதும் மறைபொருளாம்.

ஞாழற் பத்து—3
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்றுறை
இனிய செய்து! நின்று, பின்
முனிவு செய்த இவள் தடமென் தோளே!
[புள்ளிமிழ்=பறவைகள் ஆரவாரிக்கும்; முனிவு=வெறுப்பு;

அவள விட்டுட்டு வேற ஒருத்தியைத் தேடிப் போய் கொஞ்ச நாள் அவகிட்டயே இருந்தவன் இப்ப மறுபடியும் அவகிட்டயே வந்திட்டான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”வெண்மணலான மேட்டுல ஞாழல் பூவெல்லாம் இருக்கற எடத்துல பறவையெல்லாம் ஆரவாரிச்சு சத்தம்போடும். அந்த எட்த்தைச் சேந்தவன் நீ. முன்ன யாருக்கும் தெரியாம வந்து இருந்த போது இவ தோளெல்லாம் ஒனக்கு இனிமையா இருந்துச்சு; ஆனா இப்ப அதுவே ஒனக்கு வெறுப்பா இருக்கா?’
ஞாழற் பத்து—4
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு குறங்குந் துறைவற்கு
இனிப்பசந் தன்று-என்மாமைக் கவினே!
பொதும்பர்=சோலை; தனிக்குருகு=தனித்திருக்கும் குருகு என்னும் பறவை; மாமைக்கவின்=மாந்தளிர் போன்ற அழகு

வந்து கட்டிக்கிறேன்னு சொல்லிப்போனவன் வரல. அப்ப அவ தோழிகிட்ட சொல்றா.
”வெண்மணலான மேட்டுல ஞாழல் பூ இருக்கற சோலையில தனியா ஒரு குருகு துங்குது. அப்படிப்பட்ட எடத்துல இருக்கற அவனை நெனச்சு மாந்தளிர் போல இருந்த என் அழகு இப்ப பசலையாயிடுச்சே”
குருகு தனியா தூங்கறாப்பல அவனும் என்னை மறந்து தனியா இருக்கறான். அது அவனுக்கு சுலபம்தான்; ஆனா என் அழகு போயிடுச்சேன்னு பொலம்பறா.
ஞாழற் பத்து—5
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
[ஓதம்=கடல் நீர் உள்வாங்குதல்; வாங்கும்=வளைத்துக்கொள்ளும்]
அவளப் பிரிஞ்சிருந்த அவன் ஊர்ப்பெரிய மனுசங்கள தூதா அனுப்பி இப்ப அவகிட்ட சேர்ந்து வாழ வரான். அதால அவளுக்குப் பசலை நீங்கிடும்னு தோழி சொல்றா.
” வெண்மணலான மணல் மேட்டுல இருக்கற ஞாழல் பூவோட சின்ன இலைகளுடைய பெரிய கிளைகளைக் கடல் நீர் வந்து வளைச்சிக்கும். அப்படிப்பட்ட எடத்தைச் சேர்ந்த அவன் இப்ப இவளோட பசலையை நீக்கிட்டானே!”
கடல் நீரானது வந்து வளைச்சுக்கறதால ஞாழல் கிளையும் தாழும். அதே மாதிரி ஊர்பெரியவங்க வந்து சொன்னதால அவளும் அவனச் சேத்துக்கச் சரின்னாளாம்.
ஞாழற் பத்து-6
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற–எம்மாவைக் கவினே

சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கன்னு பல முறை சொல்லியும் அவன் சும்மாவே வரான். அதுக்காக அவ ரொம்ப வருத்தமா இருக்கா. அப்ப ஒருநாளு அவன் கல்யாண ஏற்பாட்டோட வரான். அதைப் பாத்த அவ மகிழ்ச்சியா தோழிக்குச் சொல்ற பாட்டு இது.
”ஞாழலோட அரும்பு பூத்து இருக்கற பூங்கொத்தெல்லாம் வாசனை வீசுது. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவ அவனுக்கு என் பசலையுள்ள மாந்தளிர் அழகு இனிமையா இருக்கு பாருடி”
அரும்பு முதிர்ந்துபோய் பூத்திருக்கற மாதிரி அவன்ன்பு இப்பதான் முறையா மணமா உறுதிப்பட்டிருக்குன்னு மறைவா சொல்றா.
=================================================================================
ஞாழற் பத்து—7
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே
[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்னுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வர்;

அவன் அவனோட அப்பா அம்மாவையும் பெரியவங்களையும் அழைச்சிக்கிட்டு வந்து அவளைப் பொண்ணு கேக்கறான். அந்தக் கால வழக்கப்படி எங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னா இன்னின்ன பொருளெல்லாம் நீங்க குடுக்கணும்னு சொல்றாங்க. அதெல்லாம் தராங்க. எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க. இதைப்பாத்த தோழி வீட்டு உள்ள இருக்கற அவகிட்டப் போயி சொல்ற பாட்டு இது.
”மனல் மேட்டுல ஞாழல் பூ இல்லாததால பொண்ணுங்க எல்லாரும் ஞாழலோட தழைகளை எடுத்து ஆடையாத் தொடுத்துக் கட்டிக்கிட்டு வெளயாடறாங்க. அப்படிப்பட்ட எடத்தைச் சேந்த அவன் ஒனக்குத் தழைவிலையா அவனோட நாட்டையே குடுத்தாண்டி”
அவங்க கேட்டதெல்லாம் குடுத்தவன் நாட்டையும் குடுத்தான்னா அவன் எவ்வளவு பணக்காரன்னு சொல்றா. அத்தோட அவன் நாட்டையே குடுக்கறான்னா ஒன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான் பாத்தியான்னு மறைமுகமா சொல்றா.
============================================================================

ஞாழற் பத்து—8
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குதி காதலோயே!
[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயர்தல்; பெருஞ்சின=பெருங்கிளை; முயங்கல்=தழுவி இன்பமடைதல்]

கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுபோச்சு. இப்ப அவளைக் கொண்டு போயித் தோழி பள்ளியறையிலே விடறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”எங்கிட்ட அன்பா இருக்கவளே! அவனோட தொறையில வெள்ளையான மணல் குன்றில ரொம்ப ஒயரமா வளந்து இருக்கற ஞாழல் கிளையில பூவெல்லாம் பூத்து நாலா திசையிலயும் வாசனை தரும். அப்படிப்பட்டவனை இனிமே நீ சேந்துத் தழுவிக்கிட்டு இன்பமா இருடி”
பூ வாசனை நாலாத் திசையிலயும் அடிக்கற மாதிரி ஒன் வாழ்வும் எல்லாத் திசையிலயும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்ற மாதிரின்னு மறைவா சொல்றா. கிளையெல்லாம் நல்லா ஒயரமா இருக்குன்னு சொன்னது அவன் உயர்ந்த மனம் உடையவன்; ஒன் மேல ரொம்ப ஆசை வச்சிக்கிட்டு இருக்கறவன்; அதாலதான் நீங்க கேட்டதெல்லாம் குடுத்து ஒன்ன மொறையா கட்டிக்கிட்டான்னு சொல்றா.
ஞாழற் பத்து—9
எக்கர் ஞாழற் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ!
[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீமோ=வன்மை வராதிருப்பீராக;
கல்யாணம் முடிஞ்சு முதலிரவுக்கு அவளத் தோழி அழைச்சுக்கிட்டு கொண்டு போய் உடறா; அப்ப தோழி அவன வாழ்த்தற மாதிரி இந்தப் பாட்டைச் சொல்றா.
”வெண்மணல் குன்றில பூக்கற ஞாழல் பூக்கள் போல இள மஞ்சள் நெறத்துல அழகா தேமல் படர்ந்திருக்கற இளமையான முலைகள் இருக்கற இவளுக்கு வருத்தம் வளரச் செய்யாம எப்பவும் பிரிஞ்சுபோகாம இருப்பாயாக.
அவச் சின்னப்பொண்ணு, அவளுக்கு வருத்தம் வளரச்செய்யாம இருப்பாயாகன்னு நயத்தோடு வாழ்த்தறா
ஞாழற் பத்து—10
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே!
[புணரி=கடல்; திளைக்கும்=மகிழும்; புணர்வின்=புணர்வின் காலத்தில்; அரும்புணர்வினன்=எப்போதோ வந்து சேர்பவன்]

முன்னாடி அவன் அவளைப் பிரிஞ்சு போயிருந்தான். அப்பறமா திரும்பி வந்தான். அவனும் அவளும் சேர்ந்து நல்லாவே இருந்தாங்க; சரி இனிமே அவன் தன்ன உட்டுட்டு வேற யாருக்கிட்டயும் போக மாட்டன்னு அவ நெனச்சா; ஆனா மறுபடியும் அவளுக்குத் துன்பம் வர்ற மாதிரி அவன் வேற ஒருத்திகிட்டப்போய்ச் சேந்துட்டான். கொஞ்சநாள்ள மறுபடியும் திரும்பி அவகிட்ட சேர வரான். ஆனா வந்த அவன்கிட்ட அவ சேர விரும்பல. அதால ஒதுங்கி ஒதுங்கிப் போறா. ஏண்டி இப்படிச் செய்யறன்னு தோழி கேக்கறா. அப்ப அவனுக்கும் கேக்கற மாதிரி தோழிக்கு அவ சொல்ற பாட்டு இது.
”வெண்மணல் குன்றுல ஞாழல் பூ இருக்கற கிளையை கடல் அலைகளைப் போய்த் தழுவி இன்பாமா இருக்கற நாட்டை உடையவன் அவன். அவன் இங்க வந்து என்னைச் சேந்து , கலந்து இன்பம் குடுத்தாலும், அவன் பிரிஞ்சு போனதே நெனவுக்கு வந்து அவன் துன்பம் குடுக்கறாவனாவே இருப்பான். அப்பறம் அவன் எப்பவோ ஒருதடவை என் கூட இருந்து கலந்திட்டுப் போயிடறவன். அதால நான்
இன்னிக்கு அவனத் தழுவாட்டாலும் எனக்கு ஒண்ணும் வருத்தமில்ல”
வந்துட்டு வந்துட்டுப் போகற கடல் அலைகளைத் தழுவற ஞாழல்கிளை மாதிரி அவனும் நெலையா நிக்காம வந்துட்டு வந்துட்டு வந்த்துட்டுப் போறான்னு மறைவா சொல்றா.
[ஞாழற் பத்து நிறைவு]

Series Navigationதமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *