சிறுவெண் காக்கைப் பத்து

This entry is part 10 of 12 in the series 7 ஜனவரி 2018

சிறுவெண்காக்கை
ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை எனப்படுகிறது. இது நம் நாட்டிலும், மலாயா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் ஐப்பசி முதல் நான்கு மாதங்களுக்கு நீர்நிலைகளில் காணப்படும். பிற காலங்களில் வேறு நாடுகளுக்குச் சென்று விடும்.
நீர்நிலைகளில் உள்ள மரங்களில் நீண்ட நேரம் இது உட்கார்ந்திருக்கும். எழுப்பினாலும் காக்கைகள் போல இது நெடுந்தொலைவு பறப்பதில்லை. தாமாகப் பறக்கத் தொடங்கினால் வேற்று நாடுகளுக்குக் கூடப் பறந்து செல்லும் ஆற்றல் கொண்டதாகும்.
இப்பறவை இனத்தில் ஆணும் பெண்ணும் ஒரே வடிவத்தில் இருக்குமாதலால் ஒரு வேற்றுமையும் தெரியாது. பருவ வேட்கை எழும்காலத்தில் இவற்றின் ஆரவாரம் மிகுந்து காணப்படும். இவை தண்ணீரில் மூழ்கி இருக்கையில் தலையும் ,வாலின் சிறு பகுதியும் வெளியில் தோன்ற மூழ்கி இருக்கும். நீரில் நீண்ட நேரம் மூழ்கியிருந்து அங்குள்ள மீன்களைப் பிடிப்பதில் திறமையானவையாகும். பிடித்தமீனை நிலத்தில் வாழும் காக்கை போலத் தலையை மேலே நிமிர்த்தி அசைத்து அசைத்து விழுங்கும்.
ஆசியாவிவின் கீழ்க்கடற்கடைப் பகுதியில் வாழும் பரதவர் இதைப் பிடித்துப் பழக்கி மீன் பிடித்து வருமாறு செய்கின்றனர். இவை உயரமில்லாத மரங்களில் கூடு கட்டும். ஒரே மரத்தில் நாற்பது முதல் ஐம்பது கூடுகள் கூடக் காணப்படும். ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து முட்டைகள் இடும். முட்டைகள் வெண்மை கலந்த நீலமும் பசுமையும் கொண்ட நிறம் உடையவை. அவற்றின் மேலே வெண்மையான பொடி படர்ந்திருக்கும்.
”பெருங்கடற் பரப்பில் இரும்புறம் தோயச் சிறுவெண்காக்கை பலவுடனாடும்” என்று நற்றிணையிலும்[231], எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்ப” என்று குறுந்தொகையிலும்[334] கூட இது காணப்படுகிறது. இப்பகுதியின் பத்துப்பாடல்களிலும் சிறுவெண்காக்கை பயின்று வருவதால் இப்பகுதி சிறுவெண்காக்கைப் பத்து எனப்பெயர் பெற்றது.
சிறுவெண்காக்கைப் பத்து—1
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதலழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா லஃதே
[பயந்து=பசந்து; கருங்கோட்டுப் புன்னை=கூரிய கொபுகளுடைய புன்னை; அழிய=ஒளி குன்ற; சாஅய்=மெலிவுற்று; நயந்த=விரும்பிய]

வந்தான்; சந்திச்சான்; போனான்; அவன் திரும்பி வரல; அதால அவ ஒடம்பும் மனசும் கலங்கிப்போய் இருக்கா. அப்ப தோழி அவளுக்கு ஆறுதல் சொல்றா. தோழிக்கு அவ பதிலா சொல்ற பாட்டு இது.
”பெரிய கடற்கரையில் சிறுவெண் காக்கை அங்க இருக்கற புன்னை மரத்தில போய்த்தங்கற எடத்துல இருக்கறவன் அவன். அவன் போனதால என் ஒடம்புல பசலை வந்து சேந்திடுச்சு. நெத்தியும் அழகு மாறிடுச்சு; அவனை விரும்பிய மனசுக்கும் நோய் வந்திடுச்சு”
அது வேற ஒண்ணும் செய்யாம் மரத்துல தங்கிக் கெடக்குது. அதுபோல அவனும் கல்யாணம் செஞ்சுக்க வராம அங்கியே தங்கி இருக்கான்றது மறைபொருளாம்.
சிறுவெண் காக்கைப் பத்து—2
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லா பிறவா யினவே
[நீத்துநீர்=நீந்தும் அளவிற்குப் பெருகிய நீர்; பொதும்பர்=சோலை; சொல்பிறவாயினது=சொன்னபடி நிகழாமல் பிழைபட்டுப் போனது]

இதுவும் போன பாட்டு மாதிரிதான். அவ தோழிக்குச் சொல்ற பாட்டுதான்.

“’பெரிய கடற்கரையில சிறுவெண் காக்கை நீந்தற அளவுக்கு ஆழமான தண்ணியில இரையைத் தேடித்தின்னுட்டு, பூவெல்லாம் இருக்கற சோலயில போய்த் தங்கற எடத்தைச் சேந்தவன் சொன்ன சொல்லெல்லாம் வேறாயிடுச்சே”ன்னு அவ தோழிகிட்ட சொல்றா.
அதுமீனெல்லாம் தின்னுட்டு நிம்மதியா தங்கியிருக்கு. அவனும் முன்னாடி வந்து நல்லாக் கலந்துட்டுப் போனதால என்னை மறந்துட்டு மகிழ்ச்சியோட இருக்கான்றது மறைபொருளாம்
சிறுவெண் காக்கைப் பத்து—3
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்தென்
இறையேர் முன்கை நீங்கிய வளையே
[துவலை=சிறு துளிகள்; இரை=சந்து]

இதுவும் அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”பெரிய கடற்கரையில இருக்கற சிறுவெண்காக்கை தூங்குது. அப்ப அங்க வீசற அலையெல்லாம் கரையில வந்து மோதுது. சின்ன துளிக எல்லாம் மோதுற அந்தச் சத்தத்தைக் கேட்டுகிட்டே அது தூங்குதாம். அப்படிப்பட்ட துறையை உடையவன் அவன்; அவன் என்ன விட்டுப் போனதால என முன்னங்கையில இருந்த வளையெல்லாம் என்ன விட்டு நீங்கிப் போச்ச”
சிறு வெண் காக்கை தூங்கறாபல அவனும் என்ன நினைக்காம அங்கியே போய்த் தங்கிட்டான்னு மறைமுகமா சொல்றா
=============================================================================
சிறுவெண் காக்கைப் பத்து—4
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை யாரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோ[டு] அமையா[து] அலர்பயந் தன்றே
[அயிரை=ஒரு சிரு மீன் வகை; ஆரும்=மிகுதியாகப் பற்றி உண்ணும்; தகுதி=தகுதிப்பாடு]

அவன் அவளை உட்டுட்டுப் பிரிஞ்சு வேற ஊடு போயிட்டான். அதால அவ ஒடம்பு நலிஞ்சு அழகே போயிட்டுது. அப்ப அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”சிறுவெண் காக்கையானது பெரிய கடற்கரையில கருங்கழியில இருக்கற அயிரை மீனை எல்லாம் பிடிச்சுத் தின்ற எடத்தைச் சேந்தவன் அவன். அவனோட தகுதி எப்படி ஆயிடுச்சு பாத்தியா? நாம ஒடம்பு மெலிஞ்சு அழகு போனதோட இல்லாம ஊர்ல எல்லாரும் பேசறமாதிரி ஆயிடுத்தே”
அவளோட அழகு போனதை விட ஊரார் அவனைப் பத்திப் பேசறதாலதான் அவ மிகவும் வருத்தப்படறா
சிறுவெண் காக்கைப் பத்து—5
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்லென்
இறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே
[அறுகழி=நீர் அற்றுப் போன கழி; ஆர=நிரம்ப; மாந்தும்=உண்ணும்; இறை=சந்து]

இதுவும் போன பாட்டு மாதிரியேதான். அவ தன் தோழிகிட்ட சொல்றா.
”பெரிய கடற்கரையில இருக்கற சிறுவெண் காக்கை தண்ணி வத்திப்போன கழியில இருக்கற சின்ன மீனை எல்லாம் நெறையத் தின்னும். அப்படிப்பட்ட துறையில இருக்கறவன் அவன். ‘நான் ஒன்னை எப்பவும் பிரிய மாட்டேன்’னு சொன்ன சொல் சிறிய சந்து இருக்கற என் வளையைக் கவர்ந்து எடுத்துக்கிட்டுப் போயிடுச்சே”
அந்தக் காக்கை பெரிய கடல்ல இருக்கற மீனைத் தின்னுக்கிட்டு வாழாம தண்ணி வத்திப் போன எடத்துல இருக்கற சின்ன மீனைத் தின்ற மாதிரி அவன் அன்புகொண்ட அவள உட்டுட்டு வேற ஒருத்தியோட வாழறான்றது மறைபொருளாம்.
சிறுவெண் காக்கைப் பத்து–6
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பற் றேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே!
[வரி=கோடுகள்; தாலி=நீரினுள் அமிழ்ந்து மீனை வளைத்துப் பிடிக்க உதவுவது]

அவன் வந்து மறைவா நிக்கறான். தோழி அவனைப் பாக்கறா; அவனால தன் தலைவிக்கு வந்த பசலையை நெனச்சு வருந்திப் பேசறா
”சிறு வெண் காக்கை கடற்கரையில கெடக்கற பல கறைகளை எல்லாம் வலையில் கோத்த கறைன்னு நெனச்சுப் பயப்படும். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன். அவன் சொன்ன சொல்லை உண்மைன்னு நெனச்சு நம்பி இருந்ததால இவளோட அழகெல்லாம் போயிப் பசலை வந்திடுச்சே”
அந்த காக்கை பயப்படற மாதிரி அவனும் முன்ன்னாடி சொன்ன சொல்லால தனக்கு வருத்தம் வந்துட்டுதேன்னு பயப்படறானாம்
சிறுவெண் காக்கைப் பத்து-7
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கேள் அன்னே!
[கெடுறு=ஒருவகை மீன், தற்போது கெளுத்தி என்பர்; ஆரும்=விரும்பும்]

வேற ஒருத்திகிட்டப் போனவன் அவகிட்டயும் இருக்க முடியாம மறுபடிக் கட்டினவகிட்டயே போயிடலாம்னு நான் வரேன்னு பல பேரைத் தூது விடறான். ஆனா தோழி அவங்களை எல்லாம் மறுத்துப் பேசறா. அப்ப தலைவி சொல்ற பாட்டு இது.
”பெரிய கடற்கரையில இருக்கற சிறுவெண் காக்கை சிறிய கழியில இருக்கற கெடிறுன்ற மீனை விரும்பித் தின்னும். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன். அவன் என்னைக் கல்யாணம் செய்யறேன்னு சொல்லிட்டு ஆனா செய்யாமப் போயிட்டான். ஆனா அவன் எனக்கு அந்த்க்க் காலத்துலேந்து பழக்கமான ஒறவுக்காரன்தானே”
காக்கை கடல் மீனை விரும்பாம கெடிறு மீனை விரும்பற மாதிரி அவனும் கட்டனவள நெனைக்காம வேறா ஒருத்தியை நெனக்கறான்றது மறைபொருளாம்.
சிறுவெண் காக்கைப் பத்து—8
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி யகமணை ஈனும்
தண்ணந் துறைவன் நல்கின்
ஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே
[அகமணை= உட்கட்டை; நல்கும்=வந்து மணப்பின்; ஆரும்=உண்ணும்; நொதுமலர்=அயலார்;] அவ அவனோடப் பழகி மனத்தைக் குடுத்துட்டா. இது தெரியாம அவளைப் பொண்ணு கேட்டு ஊராருங்க வராங்க. அப்ப அவ எதுவுமே சாப்பிட மாட்டேன்றா. ஏன்னு செவிலித்தாய் கேக்கறா. அப்ப தோழி அவளோட நெலமையச் சொல்ற பாட்டு இது.
”பெரிய கடற்கரையில இருக்கற சிறு வெண்காக்கை அங்க துறையில இருக்கறத் தோணியில கூடு கட்டும். அங்கியே முட்டையிட்டு வாழும்.அப்படிப்பட்ட குளிர்ச்சியான எடத்தைச் சேந்தவன் அவன். அவன் வந்து இவளைக் கட்டிக்கிட்டாதான் இவளும் பால் குடிச்சுப் பசியாறுவா”
படகுல கூடு கட்டி முட்டையிட்டு எந்தத் தீமையும் வராம காக்கை இருக்கு; அதேபோல அவனும் இவள கட்டிக்க வருவான். கல்யாணம் ஆகிக் குழந்தைகளும் பெறுவாங்கன்றது மறைபொருளாம்.
================================================================================
சிறுவெண் காக்கைப் பத்து—-9
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணர் ஞாழல் முனையின் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத் துண்மை அறிந்தும்
என்செய் பசக்கும் தோழியென் கண்ணே!
[ஞாழல்=கொன்றை; முனையின்=வெறுப்பின்; சினை=கிளை; உண்மை=உளனாகும் வாய்மை]

அவன் இப்ப கட்டினவகிட்டயே வரான். அவன் வர்றதை எல்லாரும் வந்து சொல்றாங்க; ஆனா அவளுக்கோ கோபம் வருது; அப்ப தோழி, “நீ நல்லா இருக்கணும்னா அவனை ஏத்துக்கோ”ன்னு சொல்றா. அந்த்த் தோழிகிட்ட அவ சொல்ற பாட்டு இது.
”கடற்கரையில இருக்கற சிறுவெண் காக்கை பொன் போல இருக்கற கொன்றையை வெறுத்ததால புன்னைப் பூவெல்லாம் இருக்கற கிளையில போய் இப்ப தங்கும் அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன். அவனை எப்பவும் என் மனசில நான் வச்சிருக்கேன். இது தெரிந்தும் என் கண்ணெல்லாம் இப்படி பசலை பூக்கலாமா?”
காக்கை எப்படி ஞாழலை வெறுத்துட்டுப் போயி புன்னைகிட்ட தங்குதோ அதே போல அவன் ஒருத்தியை உட்டுட்டு வேற ஒருத்திகிட்டப் போயிடுவான். ஆனா என்னால அவனை மறக்க முடியலியேன்னு அவ மறைபொருளாச் சொல்றா.
சிறுவெண் காக்கைப் பத்து—10
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
‘நல்லன்’ என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ?
[இருங்கழி=பெரிய கழி; நெய்தல்=நெய்தல் மலர்]

அவன் வேற ஒருத்திகிட்டப் போயிட்டான். அப்ப்புறம் திரும்பி வரான். ஆனா அவ அவனைச் சேத்துக்க மாட்டேன்றா. ஆனா தோழியோ, அவன் நல்லவன் அவனைச் சேத்துக்கோன்னு சொல்றா. அப்ப அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
பெரிய கடற்கரையில இருக்கற சிறுவெண் காக்கை பெரிய கழியில இருக்கற நெய்தலை எல்லாம் அழிக்கும். அப்படிப்பட்ட எடத்தைச் சேந்தவன் அவன்; அவனைப் போயி நீ நல்லவன்னு சொல்றயே? சரி, அது உண்மைன்னு வச்சுக்குவோம். அப்படின்னா பல இதழ் வச்சிருக்கற பூப்போல இருக்கற என் கண்ணிரண்டும் அவன் கொடுமையால பசலை பூத்திருக்கே ஏன்டி? என்னா காரணம்?
காக்கை நெயதலை அழிக்கற மாதிரி இவனும் வேற பொண்ணுங்களோட அழகெல்லாம் சிதைப்பான். ஆனா நீ அவனைப் போய் நல்லவன்னு சொல்ற; அவன் நல்லவன்னா ஏன் என் கண்னு பசந்து போவுதுன்னு மறைபொருளா கேக்கறா.

நிறைவு

Series Navigationகுறிப்புகள் அற்ற குறியீடுகள்!மகிழ்ச்சியின் விலை !
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *