ச.அரிசங்கர்
ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தது. எல்லா பசங்களும் வெளிய சட்டைல இங்க் அடிச்சி விளையாடிட்டு இருந்தாங்க. நான் வெளிய போகாம உள்ளேயே தான் இருந்தேன். காலைல கிளம்பும் போதே அம்மா செல்லிதான் அனுப்பிச்சி, “சட்டைல இங்க்லாம் அடிச்சுட்டு வராத உங்கப்பா அடுத்த வருஷத்துக்குச் சட்டை எடுத்து தருவாரானு தெரியல”. கொஞ்சம் நேரம் கழிச்சி போனா எல்லாரும் போயிருப்பாங்க. பசங்க சத்தம் குறையறவரைக்கும் காத்திருந்தேன். கொஞ்சக் கொஞ்சமா பசங்க சத்தம் கொறஞ்சிடுச்சு, மெதுவா வெளியே போனேன். மைதானத்தில் கொஞ்சம் பேரு கிரிகெட் விளையாடிட்டு இருந்தாங்க. எங்க பள்ளி மைதானத்துல, பள்ளி நேரம் தவிர எப்பவுமே நிறைய பேர் விளையாடுவாங்க. வெளி பசங்கதான் அதிகம். மைதானம் அவ்வளவு பெரிசு. பசங்களாம் போய்டாங்க. நான் மெதுவா என் வீட்டுக்குக் கிளம்பினேன். வேகமா போய் என்ன ஆகப்போகுது.
எங்க வீட்டில் ஒரு டிவி இருந்தது. அது எப்பவுமே ஓடாது. எப்பாவது ஏங்கப்பா அத சரி பண்ணுவாரு. கொஞ்ச நாள் ஓடும், சாயங்காலத்துல மட்டும் தான் தமிழ்ல வரும், 5 மணிலருந்து 6 மணி வரைக்கும் புதுவை தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சிகள் வரும். அப்பறம் பொதிகை நிகழ்ச்சிகள், 8 மணி செய்தியோடு தமிழ் நிகழ்ச்சிகள் முடிஞ்சுடும், அப்பறம் வெறும் இந்திதான். வெள்ளி, சனி ராத்திரில மட்டும் தமிழ்ப்படம் போடுவாங்க. அதுவும் 11 மணி ஆயிடும். அதனால அதுவும் பாக்க முடியாது. எல்லாரும் ஒரே அறையில் தான் தூங்குவோம். இருக்கறதும் ஒரே அறை தான். அப்பா காலையிலேயே வேலைக்கு போகனும்னு டீவி பாக்கவிடமாட்டாறு. பகல்ல எங்கனா போய் விளையாடுனா மட்டும்தான் நேரம் போகும். பள்ளி நாட்கள்ல பசங்க எப்பவும் எங்காவது இருப்பாங்க, எதாவது ஒரு தெருவுல தெரிஞ்ச பசங்க கூட விளையாடலாம் இல்லனா எதிர்வீட்டுல டிவி பக்கலாம். ஆனா இப்போ யாரும் இல்ல. எல்லோரும் ஊருக்கு போய்டாங்க. அவங்க இல்லாத நேரத்துல போய் பாக்க முடியாது.
நான் எப்பவுமே எங்க பள்ளில தான் இருப்பேன். என் வீடு முதிலியார்பேட்டை மார்கெட் தெருவில் இருந்தது. ஜீவானந்தம் பள்ளி அங்கிருந்து 10 நிமிடத்தில் நடந்தால் போயிடலாம். காலையில அங்க போயிருவேன். எதாவது மரத்துக்கடியில் உட்காந்து வேடிக்கை பார்ப்பேன். எனக்கு சுமாரா கிரிக்கெட் விளையாடத் தெரியும். ஆனா, தெரியாத பசங்கள சேத்துக்க மாட்டாங்க. அப்படி சேத்துக்கனும்னா, அவங்க கிட்ட பேட் இல்லைனா பந்து இருக்கனும் ஸ்டெம்ப் எப்பாவுமே தேவைப்படாது அங்க பெரும்பாலான பசங்க பீடெம் தான் விளையாடுவாங்க. (பீடெம்னா- ஒன்னற டேட் அளவு அகலத்துக்கு இடைவெளி விட்டு ரெண்டு கல்லு இல்லனா குச்சி நட்டு வெச்சி அதுக்கு முன்னாடி பேட்ஸ்மென் நின்னு ஆடனும். பந்த உள்ள விட்டாலே அவுட்தான். பந்த தொட்டாலும் சரி, தூக்கி அடிச்சாலும் சரி ஒரு ரன் தான். எத்தனைப் பந்த தொடருமோ அத்தன ரன். ஒவர் கணக்குலாம் கிடையாது, வரிசையாகப் பந்து போடுவாங்க, நின்னு ஆடனும். பந்துபோட தெரிஞ்சவங்க எல்லாரும் வரிசையா போட்டுகிட்டே இருப்பாங்க மத்தபடி கேட்ச், உடம்புல பட்டாலும் அவுட் தான். இதுல இத்தன பேறுலாம் கிடையாது 50 பேரு 25-25ஆ விளையாடியும் நான் பார்த்திருக்கேன்.) எங்காவது ஒண்ணு ரெண்டு பேரு ஸ்டெம்ப் வச்சி விளையாடுவாங்க, சில பேர் டீம்ல ஒரு ஆள் குறைஞ்சா மட்டும் சேத்துப்பாங்க. ஆனா, நம்பலதான் ஓடவிடுவாங்க. எப்பவுமே பேட்டிங் கிடைக்காது, கிடைத்தாலும் முதல் பந்துலயே போக வேண்டியதுதான். நான் இருந்த மார்க்கெட் தெருவில் பசங்க ரொம்ப கம்மி, பக்கத்துத் தெரு ஊத்துகாட்டம்மன் கோவில் தெரு. அந்தத் தெருவில் உள்ள ஒரு காம்பெளன்டில் 23 குடும்பங்கள் இருந்தது. அந்த காம்பெளன்ட் பசங்களுடன்தான் கிரிகெட் விளையாடுவேன். அவர்களுடன் எல்லோரையும் விட நான் தான் சிறுவன். நாங்க எப்பவுமே எங்களுக்குள் தனி செட்டு பிரித்து விளையாடுவோம். பெரும்பாலும் என்னைக் கடைசியாகத்தான் யார் செட்டிலாவது சேர்ப்பார்கள். ஒற்றைப்படை ஆட்களன்று இருந்தால் நான்தான் காமன். காமன் என்றால் இரண்டு பக்கமும் பேட் செய்யலாம். சில நேரம் கிடைக்கவே கிடைக்காது. இரண்டு டீம் பீல்டீங் செய்யும் போதும் நான் விக்கெட் கீப்பராக இருப்பேன். அவர்களுடன் விளையாட எனக்குப் பேட்டோ, பந்தோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதாவது பந்து வாங்க ஒரு ரூபாய் தந்தால் போதும்.
சில நேரம் எந்த டீம்முடனாவது பெட் மெட்ச் நடக்கும். அப்போது கண்டிப்பாக நான் வேடிக்கைதான் பார்க்க வேண்டும். சில சமயம் அம்ப்பெயராக நிப்பேன். அம்ப்பெயராக நிற்பது மிகவும் ஆபத்தான வேலை, தெரியாமல் அவுட் எனக் கையை தூக்கிவிட்டால் (அது அவுட்டாகவே இருந்தாலும்) அவ்வளவுதான். கொஞ்ச நாள் வேடிக்கை மட்டும் தான் பார்க்கவேண்டும். அல்லது இரண்டு டீமிற்க்கும் பீல்டிங் செய்ய வேண்டும். பேட்டிங் தரமாட்டார்கள். எதுவாக இருந்தாலும் எனக்குச் சனி, ஞாயிறு இரண்டு நாளும் பொழுது வேகமாகப் போவது உறுதி. ஆனால் இப்போது அப்படியில்லை, நிறையப் பேர் ஊருக்குப் போய்விட்டார்கள். நன்றாக விளையாடத் தெரிந்த பெரிய பையன்கள் வேறு டீமில் சேர்ந்து விளையாடப் போய்விடுகிறார்கள். எனது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மாலை வேலைகளில் என் வீட்டு வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதிலேயே கழித்தேன். துன்பத்திலும் இன்பம் போல் நான் இருந்தது மார்க்கெட் தெரு, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். வித விதமான மனிதர்களைப் பார்க்கலாம் . சில சமயம் நடக்கும் தெரு சண்டைகள் என் பொழுதுபோக்கிற்கு நல்ல தீனி. ஆனால் மாலை வரை வீட்டு வசலில் உட்காரவே முடியாது, வெய்யில் அப்படி இருக்கும்.
எப்படியோ ஏப்ரல் மாசத்தை தள்ளிட்டேன். மே மாசம் வந்துச்சு , மே 4 எனக்குப் பிறந்தநாள் எப்படியும் அப்பாவும் , ஆயாவும் ஏதனா காசு குடுப்பாங்க, அதுல ஒரு ஸ்டெம்பர் (ரப்பர்) பந்து வாங்கிடலாம்ன்னு முடிவு பண்ணினேன். இன்னும் மூணு நாள் இருக்கு என்ன பண்ணலாம்ன்னு யோச்சிக்கிட்டிருந்தன். அன்று இரவு என் அப்பா அவருடன் வேலை செய்பவரின் மகள் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாவது போகிறாள் என்று அவளின் ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தையேல்லாம் வாங்கி வந்தார். இந்த வருடமும் பழைய புத்தகமா என்று நினைச்சிக்கிட்டேன். இரண்டு வருடமாக நான் அந்த பெண்ணின் புத்தகத்தைத் தான் வைச்சிருக்கிறன். இரண்டு நாள் அந்தப் புத்தகத்தையே புரட்டிக்கிட்டிருந்தேன். எனக்கு எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில மனப்பாட செய்யுள்களை விடுமுறை நாட்களிலே படித்து மனப்பாடம் பண்ணிடுவேன். கணக்கு மட்டும் சொல்லி தந்தாலும் வராது. நாளைப் பிறந்தநாள் எப்படியும் பந்து வாங்கிவிடாலாம் என்று ஆங்கில பாட புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். ஒருபக்கத்தில் சில எழுத்துக்களின் அடியில் மட்டும் கோடுகள் இருந்தது. முதல் எழுத்து R, அடுத்து A, அடுத்தடுத்து M,E,S,H என்று இருந்தது. சேர்த்துப் படித்தால் RAMESH என்று வந்தது. பிறகு புத்தகத்தை முதலில் இருந்து பார்த்தேன் எல்லா பக்கத்திலும் இப்படியே இருந்தது. அன்னிக்கு முழுச அது தான் என் மண்டைல ஓடிட்டு இருந்துச்சி. ஆனா யாரு கிட்டயும் நான் சொல்லவில்லை.
மே 4, என் அப்பா எப்பவுமே காலையில் 6 மணிக்கெல்லாம் வேலைக்கு போயிருவாரு. நான் பெரும்பாலும் ராத்திரிலதான் பார்ப்பேன். ஆன அன்னிக்கு காலையிலேயே எழுந்தன். அப்பா குளிக்கிற சத்தம் கேட்டுது. ஆயா எப்பவும் போல கால் நீட்டிப் போட்டு வெத்தல போட்டுனு இருந்துச்சு. எங்கப்பா போவும் போது என்ன பாத்து “வெளிய எங்கயும் சுத்தாத ஆயா கேசரி செஞ்சி தருவாங்க சாப்பிடு. சாமிகிட்ட காசு இருக்கு எடுத்துக்கன்னாரு.” கடைசியா சொன்னது மட்டும்தான் காதுல விழுந்துச்சி. போய் பார்த்தேன் 5 ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது. இதுதான் வழக்கமாகப் பிறந்தநாளுக்கு தருவாருனு எனக்குத் தெரியும். துணியெல்லாம் தீபாவளிக்கு தான், இருந்தாலும் போன பிறந்தநாளுக்கு 5 ரூபாய் தந்தார். இந்தப் பிறந்தநாளுக்கு அதிகம் தருவார் என எதிர்பார்த்தேன். சோகமாக 5 ரூபாயை வைத்துக்கொண்டு ஆயாவைப் பார்த்தேன்.
“ஆயா ,எனக்கு 5 ரூபா வேணும்…”
“அதான் உங்கப்பன் தந்தானே…”
“எனக்கு இன்னும் 5 ரூபா வெணும்”
“உங்கப்பன் குடுக்கற துட்டு ஊட்டு செலவுக்கே பத்தல இதுல எங்கிட்ய ஏது 5 ரூபாய்” எனச் சொல்ல ,உள்ளிருந்த அம்மா வேகமாக வந்து
“அந்தாளு குடுக்குற காசல்லாம் என்னதான் பண்ற எடுத்துனு போய் உன் பொண்ணுகிட்டயே குடுக்கறியா” எனக் கத்த அங்கே வழக்கம் போல் ஆரம்பித்தது. நான் மெதுவாகப் போய் குளித்துவிட்டு வந்தேன். அமைதியாக இருந்தது. இந்த அமைதி குறைவதற்குள் போய் விட வேண்டும் என்று வேகமாகக் கிளம்பினேன். வாசல்வரை வந்த என்னை அழைத்த அம்மா, என்னிடம் 5 ரூபாய் தந்தாள். நேராகப் போய் ஒரு ஸ்டெம்பர் பந்து வாங்கிக்கொண்டு வேகமாக ஜீவானந்தம் பள்ளியை நோக்கி ஓடினேன்.
பள்ளிக்குள் நுழைந்ததுமே ஆர்வத்தில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். உள்ளே சென்று வேறு எதாவது ஒரு டீமில் சேர்ந்திருக்கலாம். ஆனால் முதலில் ஆடிக்கொண்டிருந்த டீமில் பந்தை காமிச்சி சேர்ந்துக்கிட்டேன். எவனாவது ஒருவன் என் பந்தை ஓங்கி அடிக்கும் போதெல்லாம் ஒரு பய அலை எழுந்து எழுந்து அடங்கியது. ஸ்டெம்பர் பந்து விரைவில் கிழியக்கூடியது. கிழிந்து விட்டால் அவ்வளவு தான்.
ஆட்டம் போய் கொண்டேயிருந்தது. இரண்டு முறை நான் பேட் செய்தேன். அப்போதுதான் நான் செய்த வினைக்கான பயன் வந்தது. சுபாஷ் அண்ணன் வந்தார்.
சுபாஷ் அண்ணன் பெரியார் நகரில் மிகப் பெரிய பேட்ஸ்மென். அவர் ரஞ்சி டிராப்பிக்கு முயற்சித்தார், விளையாடினார், அவரும் டெண்டுல்கரும் நண்பர்கள் எனப் பல கதைகள் உண்டு. அவர் மேட்ச் விளையாடி நான் பார்த்ததில்லை. எப்பவாவது உள்ளே வருவார். ஏதாவது ஒரு டீமில் (பெரும்பாலும் முதல்ல விளையாடர பசங்க தான் மாட்டுவானுங்க) போய் பந்து போடச் சொல்லி பேட் செய்வார். பந்தை மைதானத்தின் எதிர் கோடியில் தூக்கி அடிக்கும் வரை ஆடுவார் பிறகு சென்றுவிடுவார். இதுவரை யாரும் பந்துபோட மறுத்ததில்லை. சிலமுறை முதல் இரண்டு பந்துகளிலே முடிந்துவிடும். அன்று வந்து அவர் முதல் இரண்டு பந்துகளை தவறவிட்டார். மூன்றாவது பந்து சரியாக படாமல் பக்கவாட்டில் உள்ள பள்ளி கட்டிட மாடியில் சென்று வீழ்ந்துவிட்டது. சென்ற பந்தை பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால் நான் அப்படி இருக்க முடியாது. அது என் பந்து. நான் வேகமாகப் பள்ளி கட்டிடத்தின் பின்புறம் சென்றேன். விடுமுறை காலம் என்பதால் முன்புறம் பூட்டியிருந்தது. பின்புறம் சென்று இரும்பு பைப்பை பிடித்து ஏறினேன். பள்ளி நாட்களில் பலமுறை ஏறி உள்ளதால் சுலபமாக ஏறினேன். மொட்டை மாடிக்குச் சென்று பந்து வந்த திசையை நோக்கி ஓடினேன். காய்ந்த இலைகள் குப்பையாக இருந்தது. எங்குத் தேடியும் பந்து கிடைக்கவில்லை. திறக்கப்படாத ஒரு குவாட்டர் பாட்டிலும், சிகெரட்களும் கூடக் கிடைத்தது . ஆனால் பந்து வந்த சுவடே இல்லை.
எனக்கு அழுகையாக வந்தது. இருந்தாலும் பந்து வந்த திசை பார்த்து அளவெல்லாம் எடுத்துத் தேடினேன் எந்தப் பயனுமில்லை. மெதுவாக விளிம்பிற்கு வந்து விளையாடிக் கொண்டிந்தவர்களை பார்த்தேன். சுபாஷ் அண்ணன் சென்றிருந்தார். மீண்டும் வழக்கம் போல் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். முழு மைதானத்தையும் ஒரு முறை பார்த்தேன். ஒரே நேரத்தில் பல பந்துகள் பல திசையை நோக்கி பறந்திக்கொண்டிருந்தது.
- ஸ்டாலினிஸம் – ரத்த வகையல்ல, தக்காளி சட்னி வகை
- செவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்
- ஒரு பச்சை மிளகாய்க்குப் பாடிய புலவன்!
- பந்து
- திவசம் எனும் தீர்வு
- கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா, முத்துவிழா அழைப்பு
- மாற்றம் !
- இளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை
- தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்
- தைராய்டு ஹார்மோன் குறைபாடு
- சிருஷ்டி
- நெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- முன்னும் பின்னும்