இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 22 in the series 22 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி

அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு  அங்கு வந்தான் சீதையிடம்

அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து

இராவணனுக்கு அறம் உரைத்தான்.

`பேதாய் பிழை செய்தனை,பேருலகின்

மாதா அனையாளை மனக்கொடு நீ

யாதாக நினைத்தனை எண்ணம் இலாய்

ஆதாரம் நினக்கு இனி யாருளரோ` ஆதலால் கொண்ட பத்தினியை விட்டுவிட்டுச் செல் என்றான். `முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா`

என்பது உண்மையன்றோ,இராவணனும் எளிய பறவைதானே என்று அலட்சியமாக நகைத்தான்.

சடாயு இடிபோல் முழங்கித் தாக்கி அவனது தேரின் வீணைக் கொடியை ஒடித்தான்.இராவணனின் இருபது தோள்களில் தாவி வலிய மூக்கால் கொத்தி,நகத்தால் குடைந்து,சிறகால் அடித்தான். பதினான்கு அம்புகளை சடாயுவின் மேல் எறிந்தான் இராவணன்.

அதனால் தளராத சடாயு  அவன் மார்பின் கவசமும் அறுத்து முத்து மாலையையும் அறுத்தான். மணிமுடிகளை வீழ்த்தினான்,செவியின் குண்டலங்களைப்பறித்தான். அவ்வளவில் இராவணன் ஐம்பதொடு ஐம்பது அம்புகளை சடாயுவின் தடமார்பில் செறித்தான். தேவர்கள் இனி ஏதாகுமோ என்று கலங்கினர்.உடலெல்லாம் குருதியில் நனைந்த போதும் சடாயு அவன் வில்லினைப் பல்லால் பறித்தான். தேர்ப்பாகனின் தலையை அறுத்து இராவணனின் முகத்தில் வீசினான்

இராவணன் வரத்தால் பெற்ற சந்திரகாசம் எனும் தெய்வ வாளால் சடாயுவின் வலிய சிறகுகளை வெட்டி வீழ்த்தினான்.சடாயு குன்றென வீழ்ந்தான். முன்னிலும் அதி வேகமெடுத்து விண்ணில் பறந்தான் அரக்கன். வலிமையெலாம் திரட்டி எழுந்த சடாயு தேரில் பூட்டிய குதிரைகளைக் கொன்று,தேரைச் சிதைத்தான். இராவணன் இனியும் இவனை விடலாகாது என வச்சிரப் படையை எடுத்து வீசினான்.அதன் தாக்குதலில் நிலைகுலைந்து வீழ்ந்தான் சடாயு. ஆதாரமாய் வந்த பறவை வேந்தனும் வீழ்ந்து பட்டான். இனி யாருளர் என இணை பிரிந்த அன்றிற் பேடையாய் அரற்றினாள் சீதை. இராவணன் தேர் இல்லாததால் சீதையை இருந்த நிலத்தோடு

தூக்கி தோளில் வைத்து கொண்டு வான் வழி பறந்தான்.

கீழே வீழ்ந்த சடாயுவும் வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு வந்திலரே மைந்தர்,மருகிக்கு நேர்ந்த துயர் துடைக்கும் விதியிலேன் ஆனேனே இனி என்னாகுமோ என நைந்தான்.

`வஞ்சியை அரக்கனும் வல்லைக் கொண்டுபோய்`

அவளைத் தீண்டவே அஞ்சி நஞ்சினை ஒத்த இயக்கியர்

நடுவில் அசோக வனமதில் வைத்திட்டான் சிறை.

 

இதனிடையில் அண்ணனைத் தேடிச் சென்ற இலக்குவனை எதிரில் கண்ட இராமன் அரக்கனின் மாயமதை சீதை உணரவில்லை  வன்சொல் கூறி அவனை அனுப்பியுள்ளாள் என அறிகிறான்.இலக்குவன் அவன் பாதம் பணிந்து,` `யான் வர மறுத்தால் நெருப்பினில் வீழ்வாள்`என நடந்தன

சொல்லி நைவான்.  இராமனும், ‘சீதை துயரத்தில் கூறிய சொற்களை மனதில் கொள்ளாதே’ எனச் சொல்லி விரைந்து அவளைக் காண்போம் வா

என்கிறான்.

மீண்டு வந்த இராமனும் இளவலும்  தையலைக் காணாது பர்ணசாலை இருந்த இடத்தில் பெரும் பள்ளம் கண்டனர்.  இராமன்,

`கூடு தன்னுடையது பிரிந்து ஆருயிர் குறியா

தேடிவந்து அதுகண் டிலதா  மெனநின்றான்.` உடலை விடுத்துத் தற்காலிகமாகப் பிரிந்து சென்ற உயிர் ஒன்று மீண்டு வந்து உடலை வைத்த இடமதில் காணாது திகைத்தது போல் துன்புற்றான். இராமனும் இளவலும்  அவளைத்  தீண்டவே அஞ்சி நிலத்தொடும் பெயர்த்து . அபகரித்தவர் எவரோ எனத் துயருற்றனர். கடவளரும் ,தேவர்களும் இராமன் தையலைக் காணாது சினமுற்று என்ன செய்வானோ என அஞ்சினர்.

‘மண் சுழன்றது மால் வரை சுழன்றது; மதியோர்

எண் சுழன்றது; சுழன்ற அவ்வெறிகடல் ஏழும்;

விண் சுழன்றது;வேதமும் சுழன்றது; விரிஞ்சன்

கண் சுழன்றது;சுழன்றது கதிரொடு மதியும்.’ அண்ட சராசரங்கள் அனைத்தும் தம் நிலையினின்று மாறித் தடுமாறின.

தேரின் சக்கரத்தின் அடையாளம் கண்டு வெகு தூரம் போகும் முன் பிடிப்போம் என்றிளவல் சொல்லத் தொடர்ந்தோடி இரண்டு யோசனை தூரம் கடந்தனர்.அங்கு வீணையின் கொடி இற்று வீழ்ந்திருப்பது கண்டு கண்டகரோடு காரிகையின் பொருட்டு மலைந்தவர் எவரெனத் திகைத்திட

மேலும் படைக் கலன்கள் ஒடிந்தும்,அம்புகள் சிதைந்தும்,வில்லொன்று இற்றும் இருப்பது கண்டு நம் தாதையே அவன் என்றான் இலக்குவன். தோளில் அணியும்

அணிகலன்களும்,காதுகளில் அணியும் குண்டலங்களும்

குவிந்திருக்க,சிதறிய மணிமுடிகளும் பலவாயிருக்கக் கண்டு தாதை ஒருவனோடு பலர் பொருதனர் போலும் என்றான் இராமன். இல்லையில்லை தோள் பல’ தலை பல எனில் அவன் ஒருவனே இராவணன் என்றான் இளவல்.

அங்கு ஒருபுறம்

கடலுள் கிடந்த மலையென குருதிப் பெருக்கில் தந்தையைக் கண்டனர்.இராமன் துள்ளி தாமரை நயனங்கள் நீர் சொரிய சடாயுவின் திருமேனியில் வீழ்ந்தான்.

என்தாரம் பற்றுண்ண ஏன்றாயை,சான்றோயை

கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்

வன்தாள் சிலையேந்தி, வாளிக் கடல் சுமந்து

நின்றேனும் நின்றேன், நெடுமரம் போல் நின்றேனே.’

இராமனின் மனநிலையைத் துல்லியமாகக் காட்டுகிறார் கம்பர்.மனைவியைக் காக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் நானிருக்க,வயது அதிகம் கண்டு மூப்படைந்து உடல் தளர்வுற்று இருந்தும் வரமும் வலிமையும் பெற்றவனோடு என் மனைவியைக் காத்திடப் பொருது வீழந்து பட்டாய் நீ! நானோ வலிமையான வில்லினை ஏந்தி

கடல் போல் அம்புகளைச் சுமந்து வீணே நிற்கிறேன்.எத்தனை அவமானம். என்கிறான்.

இளவலும் அங்ஙனமே துயருற்றான்.மயக்கம் தீர்ந்து விழித்த பறவைக்கரசன் போன உயிர் மீண்டது போல் மகிழ்ந்தான்.இனி என் பழி தீரும் எனச் சொல்லி,

அவர்களுக்குத் தேறும் வகையில் சொல்ல நினைந்து விதியை

மதியால் வெல்லுதல் கூடுமோ என்ற அளவில் தனித்திருந்த பெண்ணை அறிவற்ற அரக்கன் பற்றவும்,  நீவிர் வீழ்ந்து படவும் கண்டும் நடுங்காத உலகங்களையும்,தடுக்காத தேவர்களையும் இக்கணமே அழிப்பேன் எனச் சினந்தான் இராமன்.  சினந்தது கண்டு ஏழுலகும் திரிந்தது.சடாயு,முனியல் வாழி எனச் சொல்லி பிரமன் தந்த வரத்தினால் இராவணனுக்கு

கடவுளரே பணிகின்றனர்,எவர்தான் அறம் செய்கின்றார்,

……………வஞ்சி வனத்திடைத் தமியள் வைக

கொம்புஇழை மானின் பின்போய் குலப்பழி கூட்டிக்

கொண்டீர்.

…………………………………..ஆயுங்காலை

உம்பிழை என்பதல்லால் உலகம் செய்பிழையும் உண்டோ

என்றான் சடாயு, மேலும்,’ நின்னால் அன்றோ அவர் துயர் தீரும்’ எனச் சொல்லிட  இராமன் அவ்வரக்கன் எவ்வழி சென்றான் என வினவ

தளர்ந்த புள்ளின் வேந்தன் உணர்விலான் உயிரும் நீத்தான். அவன் வீடு அடையும் வேளை தேவர்களும் கற்களும் ,மரங்களும்,மாவும் சோர்ந்தனர்

இராமனோ வஞ்சனை அரக்கனைத் தடுத்திலேன்,உயிரை விடுகேனோ,தவம்தான் செய்வேனோ,பிறந்த பயன்தான் என்ன  பெற்ற தந்தையை இழந்தேன் ,ஆதரவு தந்த தாதையையும் இழந்தேன் என்ன செய்வேன் என மயங்கினான்.

இளவலும்  உன் செய்கை என்னே! சீதையை முற்றும் துறக்க நினைந்தாலும் தந்தையைக் கொன்றவனை கொல்ல வேண்டாவா எனச் சொல்லித் தேற்ற   இராமனும் சற்றுத் தேறி தந்தையின் இறுதிக் கடன் முடிப்போம் என்றான்.

இருவரும் மணல் மேடை அமைத்து அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் சேர்த்து,தருப்பை புல்,தண்ணீரும் கொண்டு வந்து சடாயுவின்  உடலுக்கு நீரும், சந்தனமும்,மலரும்  இட்டு அலங்கரித்து    மேடையில் அடுக்கிய விறகுகள் மேல் கிடத்தினான் இராமன்.பின் தலைப் பக்கத்தில் நெருப்பைப் பற்ற வைத்தான்.கண்களில் புனல் சோர ஆற்றில் குளித்து,

`மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல்மேல்கீழ்

காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்

பூட்டிய கைகளால் அப்புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று

ஊட்டிய நன்னீர் ஐயன் உண்டநீர் ஒத்தது அன்றே.`

இராமன் கரங்களைக் கோர்த்து நல்ல நீரை எடுத்து பறவைகளின் அரசனான சடாயுவை எந்தையே ஏற்றுக் கொள் என்று கொடுத்த நீரினை பிரமன் முதலாக உள்ள அனைத்து உயிரினங்களும் கீழ் மேல் எனும் பாகுபாடின்றி

அருந்தின.இச்செயல் அனைத்துயிர்க்கும் இறைவனான மாலவன் தானே நீரருந்தியது போலானது.

இவ்வாறு நல்ல நீரை நீர்க் கடனாகக் கொடுத்தான்.இராமன் அவனுக்கான கடன்களை முறையாகச் செய்த வேளையில் கதிரவன் தானும் புனலாடி  கடன் செய்பவன் போல் கடலில் மறைந்தான்.

தசரதன் தவமாய்த் தவமிருந்து பெற்ற இராமன் மீது உயிரையே வைத்திருந்தான்.அதனால்தான் விசுவாமித்திரர்

வேள்வி காக்க,` நின் புதல்வர் நால்வருள் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி`யென இராமனைக் கேட்டபோது அவன் சிறுவன் நான் வருகிறேன்  என்கிறான். கண்ணிலான் கண் பெற்று இழந்தான் என வருந்துகிறான்.பின்னர் குலகுரு வசிட்டர் அறிவுரையால் இராமலக்குவரை அனுப்புகிறான்.

இறுதியில் கைகேயி வரத்திலும் அவள் கால்களில் வீழ்ந்து

இறைஞ்சுகிறான்,மணிமுடி பரதனுக்கே ஆகட்டும்,இராமன் வனம் போவதை மட்டும் வேண்டாதே என்று.உயிர் ஊசலாடத் துயர் உறுகிறான்.சுமந்திரன் மட்டும் திரும்பி வந்ததுமே கானகம் சென்ற இராமனைத் தொடர்ந்து வானகம் போகிறான் தசரதன்.

இராமனுக்காக வாழ்ந்த தசரதனுக்கு இராமன் இறுதிக்கடன்

செய்யும் பேறு கிட்டவில்லை.ஆனால் வெகு சில காலமே பழகிய சடாயுவிற்கு மண்ணில் வந்த மாலவன் தானே அவனுடலை அலங்கரித்து,தூக்கி ,மேடையில் கிடத்தி எரியும் ஊட்டுகிறான்.

`மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே` என்பது வழக்கு.இன்னும் புதல்வர் ஈம எரியூட்டுதல் பெறும் பேறாம். இவ்வகையில் தசரதன்

புதல்வரைப் பெற்றிருந்தும் அமைதி இழந்தே இறக்கிறான்.

இராமனால் கடன் செய்யும் பேற்றினை இழக்கிறான்.

அவரவர் செய்யும் செயலே அவர்களை உயர்த்தும் என்பதற்கிணங்க தேவர்களும் எதிர்க்கத் துணியாத இராவணனை எதிர்த்து இன்னுயிர் தந்து புகழுடம்பு பெறுகிறான் சடாயு.

இறப்பு எல்லோருக்கும் ஒன்றுதான்.ஆனால் காரணம் கருதி அது வேறுபடுகிறது.அடாது செய்து உயிர் பிரிவதை, `வதை`(இராவணன் வதைப் படலம்,தாடகை வதைப் படலம் போன்றன.)என்றும் அறவழி நின்று உயிர் பிரிவதை(சடாயு உயிர் நீத்த படலம்,சவரி பிறப்பு நீங்கு

படலம் போன்றன) `நீத்த`,நீங்கு`எனும் சொற்களாலும் வேறுபடுத்திக் காட்டுகிறார் கம்பர்.

——–

Series Navigationசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து
author

Similar Posts

Comments

  1. Avatar
    வளவ. துரையன் says:

    கட்டுரையின் தொடக்கத்திஉல் முன்கதையைச் சுருக்கமாகக் கூறுதல் அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *