மீனாள் தேவராஜன்
கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிப்பது எப்படி என்று நடிகர் வழங்கிய அறிவுரை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் ட்விட்டரில் தெரிவித்து என்னவென்றால் “ அன்புள்ள மாணவர்களே, குழந்தைகளே! கோடை வெயிலாக இருந்தாலும் உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக்கொண்டாடவும், விளையாடி முடித்தபிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். மாணவிகள் தங்கள் அம்மாக்களுக்குச் சமையலறையில் உதவுங்கள். கூடவே, சமையலையும் கற்றுக்கொள்ளுங்கள். மாணவர்கள், தங்களுடைய அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று, அவர் குடும்பத்திற்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். என்பதுதான்.
இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் என்றால் சமையல் அறைக்கும் ஆண்கள் என்றால் பணியிடங்களுக்குமா? ஏன் மாணவிகள் பணியிடங்களுக்குச் செல்லக்கூடாது. என்று விவேக்கிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இப்போது எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு பழக்கமாகி விட்டது போலும்.
அவர் சொன்னதை ஏன் நேர்மறைப் பொருளில் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? ஆண் பெண் இருபாலாரும் சமமானவர்களே. பெண்களுக்கு மனையறமே சாலச்சிறந்தது. அதற்காக அவர்களை வேலைக்குப்போக வேண்டாம் என்று கூறுவதற்கில்லை.
“ வினையே ஆடவர்க்குயிரே, வாள் நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர் “ எனப் பாலை பாடிய பெருங்கடுகோ குறுந்தொகையில் கூறியது நினைவுக்கு வருதற்குரியது.
வேலைக்குச் செல்லுவது ஆண்களுக்கு அழகு மட்டுமல்லாமல் பொறுப்பையும் குடும்பமே ஆடவர்க்கு உயிர் நாடி வேலை. வேலையிடத்தில் அவர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்றால் அவர் வீட்டில் அமைதியையும் இன்பத்தையும் அடையவேண்டும். அதற்கு உறுதுணை புரிபவர்கள் மனைவி. அவள் தன் கணவனை உயிர் போல் காத்தால் இல்லறம் நல்லறமாகத் திகழும். பெண்ணும் வேலைக்குச் சென்றால் வீட்டுக்கு வந்து அவளால் வீட்டில் வேலை செய்யமுடியாது. கணவன் இல்லாவிட்டால் குடும்பத்திற்கு மதிப்பு குறைவாகத்தான் சமுதாய நடப்பில் உள்ளது. கணவனும் மனைவியும் சேர்ந்து சென்றால் அதற்கு மதிப்பு தனிநானே நம் நதாயத்தில். ஆகவே, கணவனைக்காப்பது மனைவியின் உரிமைதானே. அனபலாம் அறிவாலும் காக்கவேண்டும் தானே! சிலர் அலுவலக வேலை செய்கிறார் என்றால் அவர்களது மனவலிமையும் சூழ்நிலையும் தான் காரணம். அவள் வீட்டில் இருந்தால் மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டுவதற்கு அவர்களுக்கு ஓய்வும் அவகாசமும் கிடைக்கும்..
மகளிர் என்றால் சமையலறையில் மட்டும் இருக்கிறார்கள் என்று கொள்ள வேண்டாம். அவர்களே குடும்ப உயிர் நாடி என்பதை அறிய வேண்டும். அவர்களே இல்லத்திற்கு அச்சாணி போன்றவர்கள் .அவர்கள் மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் , கண் துஞ்சார் எவ்வித தீமையும் தன் குடும்பத்தினருக்குச் செய்யார் என்பவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. அவர்கள்,
“ இன்பம் விழையான், வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்” (திருக்குறள் 615)
பெண் தன் குழந்தைகளின் நலத்திற்காக தன் இன்பத்தை பொருட்படுத்தமாட்டாள். தன் குடும்ப வினைகளை கடமையாகக்கொண்டு செயல்படுபவள், அவர்களின் துன்பம் துடைப்பவள். அவர்களுக்குத் தூண் போன்று துணையாக இருப்பவள், அம்மாதான் என்பது பலரின் ஆய்ந்து அனுபவித்த கருத்தாகும். அறிவில் கணவனுக்கு மந்திரியாகவும் அனபு ஊட்டும் அமுதமாகவும் மனைவி திகழ்கிறாள்.
இப்படிப்பட்ட அம்மா பொறுப்பை உதறித் தள்ளவிட்டு ஓடோடி அலுவலகத்திற்குச் சிலர் செல்கின்றனர், என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஒரு குடும்பத்தில் அலுவகத்திற்கு ஆண் பெண் இருவரும் அதாவது கணவன் மனைவி இருவரும் சென்றால்தான் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைக்க செலவு செய்யமுடியும், அவர்களுக்கு எதிர்காலத்தில் செளகரியமான வாழ்க்கையை வழங்கமுடியும் என்பது இக்காலத் தம்பதியினர் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மைதான் . அவர்களின் கருத்தும் நற்கருத்துதான்.
ஒரு குடும்பத்தில் தற்காலத்தில் எத்தனை குழந்தைகள் உள்ளனர்? ஒரு குழந்தையே பெரும்பாலும் உள்ளது. எதிர்காலத்தில் அத்தை மாமா சித்தப்பா என்ற உறவுகளெல்லாம் செத்துப்போகும் என்பது வேறு விஷயம். ஒரு குழந்தைக்கு அவன் விரும்பியதெல்லாம் கொடுத்து அவன் கேட்கும் அளவு செலவுக்குப் பணமும் கொடுத்து வளர்ப்பதால் என்ன பயன்? யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” அவர்கள், தான் தோன்றிகளாக, ஒட்டு உறவு இல்லாதவர்களாக வளர்வர்கள். எதிர்காலத்தில் பிரச்சினைகள் வாழ்வில் ஏற்பட்டால் சமாளிக்க முடியாதவர்களாக இருப்பார்கள், யோசனைகள் கேட்க ஆளில்லாதவர்களாக இருப்பார்கள், இக்கால கல்வி முறையில் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இலக்கியங்கள் நீதிகள் வாழ்வியல் முறைகளைக் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால் இக்காலத்தில் அவர்கள் பணம் பண்ணவே கல்வி கற்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அன்னை அருகில் இருப்பது அவசியமல்லவா?
மாணவிகள் சமையல் கற்றுக்கொள்வதன் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.. பொறுமை, பொறுப்பு, நிதானம் , ஆழ்ந்து கவனிப்பது, அக்கறை காட்டுவது, குடும்ப உறவுகளை அறிந்து கொள்வது இப்படி எத்தனையோ? அலுவகத்திற்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஏது நேரம் இவற்றைக் கற்றுக்கொடுப்பதற்கு? மாணவிகளுக்கும் பள்ளிகளில் ஏது நேரம்? விடுமுறையில் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சமையல் செய்யும் போது நன்னெறி வகுப்பாக அம்மா நற்குணங்களைப் போதிப்பதில்லை.
எடுத்துக்காட்டாக “ சமையலில் உப்புச் சேர்க்கும் போது “ மெதுவாய் கொஞ்சமாகப் போடு, கவனித்துப்போடு” என்று கூறுவதும் அடுப்பைப் பற்ற வைக்கும்போது ஜாக்கிறதையாக மெதுவாக என்று கூறுவதும் எத்தனை பாடங்களை மகளுக்கு உணர்த்துகின்றன? மேலும் அம்மாவிற்கும் மகளுக்கும் இடையே நெருக்கத்தையும் நேசத்தையும் உண்டு பண்ணும்.
பெண்கள் கோடை வெயிலில் வெளியில் போகமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களது அழகுக்குப் பங்கம் ஏற்படாது. மேலும் அவர்களால் இக்கால வெயிலைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை. வீட்டிலிருந்து சமையல் செய்வது நல்ல பொழுது போக்கே. அது ஒரு கலை.. சமைத்து பரிமாறும் போதும் மற்றவர்களின் பாராட்டுதலை எண்ணும் போதும் ஏற்படும் இன்பம் அலாதியானது. அனுபவித்துப் பார்த்தால் ஆனந்தம் தெரியும்.
பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது குடும்ப சூழ்நிலையைப் பொறுத்ததுதான் என்று சொல்லவேண்டும். இக்காலத்தில் பெண்கள் அதிகம் படித்துவிட்டு வீட்டில் இருக்கமுடியுமா? என்பது ஒரு கேள்வி. .கல்வி என்பது வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் பொழுதுபோக்கிற்கும் என்ற மனப்பானமை இக்கால சமூகத்தில் நிலவுகிறது. கல்வி என்பது அறிவுக் கண்ணைத் திறப்பதற்கு என்பது இப்போது இல்லை. படித்த பெண்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் நன்கு புரிந்து கொண்டு அவற்றை அறிவால் சமாளிக்க முடியும் என்பதைப் பலரும் அறியவில்லை. கல்வியால் குடும்பம் என்ற வண்டி சுமூகமாக ஓடும். ஆனால் இன்று நடப்பது என்ன?’ நான் படித்து விட்டேன். யாருக்கும் அடங்கி ஒடுங்க வேண்டாம் நிமிர்தநடையும் ஆண்களுக்கச் சமமாக அந்தஸ்தைப் பெற்றத் திகழவேண்டும்,’ என்பதுதான். வேலையிடத்தில் ஆண்களுக்கு நிகராக பதவி பெற்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதுவுமில்லை என்றாலும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பெண்களுக்குக் கல்வி என்பது ஓர் ஆபரணம் போன்றது, செல்வம் இருக்கும் போது அணிந்து பெருமை சேர்த்து அறிவால் குடும்ப முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியும். தாங்கள் கற்றதை தங்கள் பிள்ளைகளுக்கச் சொல்லித்தரமுடியும்.. வறுமை உற்ற காலத்தில் தாம் பெற்ற கல்வியால் வேலைக்குச் செல்லமுடியும். அப்போது குடும்ப பாரம் கூடுதல் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அப்படிப் பட்டகாலத்தில் நிதானத்தை இழத்து விடக்கூடாது. அப்போது கூட்டுக்குடும்பமாக மாமியார் மாமனாருடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் பிள்ளைக் கவனிக்க முடியும். ‘தான் சம்பாதிக்கிறோம்.’ என்ற அகந்தை ஒரு போதும் பெண்களுக்கு இருக்கக்கூடாது.
மொத்ததில் பெண் இயற்கையாக பொறுமையின் சிகரம். குடும்பத்தைக் கட்டிக்காக்க முடியும். கணவன் இறந்து விட்டால் மனைவி குடும்பத்தைக் கொண்டு செலுத்திடுவாள், மனைவி இறந்து விட்டால் ஓர் ஆணால் குடும்பத்தைக் கொண்டு செல்வது கடினம்தான். பெண் என்பவள் பேணுவதற்குரிய இயல்புகளைப் பெற்றவள். பேணுவதற்கு அடிப்படையானது சமையல். எனவே பெண்கள் சமையலைக் கற்றுக் கொள்வதுதான் சிறப்பு. சாதரண நாள்களை விட குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாகப் பிள்ளைகள் உடல் குறைவாக இருக்கும் போது அவளின் பேணுதல் மிக அவசியமான ஒன்றாகும்.
சமையலின் மூலம் அன்பை வெளிப்படுத்த முடியும், உண்பவர்களின் ருசியை அறிந்து அவர்களை ஈர்த்துக் கொண்டு உறவுகளை வளர்க்க முடியும். மொத்தத்தில் சமையலினால் .சாதித்துக் காட்டிச் சமுதாய வளர்ச்சிக்கு உதவமுடியும். எனவே, இக்கால மாணவியர்கள்- வருங்கால குடும்பத்தலைவிகள் வருங்கால குடிமக்கள் சமையல் கற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை.
- புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
- சிலம்பு சித்தரிக்கும் அரசியல்
- இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1
- உயிர்ப்பேரொலி
- செய்தி
- உடைந்த தேங்காய் ஒன்று சேராது
- மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
- அந்தி
- நம்பிக்கை !
- சமையலும் பெண்களும்
- தொடுவானம் 220. அதிர்ச்சி
- கண்ணகி தேசம்
- மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி
- மேடம் மெடானா !