உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்

author
0 minutes, 19 seconds Read
This entry is part 3 of 13 in the series 20 மே 2018

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அழகர்சாமி சக்திவேல்

காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த

அமெரிக்கப்படம், ஒரு நீண்ட ஹாலிவுட் சினிமா வரலாற்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படம், முதல் உலகப்போரையும், வடகொரிய, தென் கொரியப் போரையும் அடிப்படையாய்க் கொண்ட படம். பிரபல நடிகரான, இயான் மெக்கல்லன் என்ற ஹாலிவுட் சிவாஜிகணேசன், தனது நடிப்பு முத்திரையால், உலகச் சினிமா அரங்குகளை பிரமிப்படையச் செய்த படம் இது என்பது, ஒரு தெள்ளத் தெளிவான உண்மை ஆகும். நான் விசும்பி விசும்பி அழுத படங்களுள், இதுவும் ஒன்று. ‘வயதானவர்களுக்கு என்று ஒரு உலகம் இருக்கிறது. அதுவும் மதிக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது என்பதால், எனது கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு சில கேள்விகள். வாலிப வயதில், ஒரு மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய சிற்றின்ப சுகம், எல்லா மனிதர்களுக்கும் சரியானபடி கிடைத்து விடுகிறது என்று உங்களால் உறுதியாய்ச் சொல்லிவிட முடியுமா? அப்படி கிடைக்காத பட்சத்தில், தனது ஆசைகளை மனதில் தேக்கி தேக்கி வைத்து, வயதான காலங்களில் தனது ஏக்கங்களுக்கு ஒரு வடிகால் தேடும் கிழவர்களை, உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளுமா? வயதான காலத்து காம ஆசைகள் அவ்வளவு பாவமானதா? முதல்மரியாதை படத்தில், வயதான சிவாஜிகணேசன், இளம் நாயகி ராதாவின் மீது வைக்கும் ஆசைக்கு மரியாதை கொடுத்த நீங்கள், அபூர்வ இராகங்கள் படத்தில் வயதான ஸ்ரீவித்யா, வாலிப கமல்ஹாசன் மீது வைக்கும் ஆசைக்கு மரியாதை கொடுப்பீர்களா? வாழ்க்கைத்துணை இல்லாத வயதானவனின் ஆசைகளும் ஏக்கங்களும், கோவில், பக்தி என்ற பெயரில் முடக்கப்படத்தான் வேண்டுமா?  நடிகர் ஜெமினி கணேசன், தனது வயதான காலத்தில் ஒரு பெண்ணை சேர்த்துக்கொண்டது,  நடிகர் ராமாராவ் தனது வயதான காலத்தில் ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டது,  இவையெல்லாம் ஒழுக்கக்கேடான விசயங்களா? இதைபோலவே, ஒரு வயதான நடிகை, ஒரு இளவயது வாலிபனைச் சேர்த்துக்கொண்டால் அது தவறா?  நான் உங்கள் முன் வைக்கும், இத்தனை கேள்விகளைப் போலவே, இந்தப்படமும் சில கேள்விகளை நம் முன்னர் வைக்கிறது. ஆணின் மீது ஆசைப்படும் ஒரு வாலிபன், அது கிடைக்காத ஏக்கங்களை, தனது வயதான காலம் முழுக்க எடுத்துக்கொண்டு போய், அந்த வயதான காலத்தில், இன்னொரு வாலிபன் மீது கொள்ளும் ஆசை தவறானதா? என்று இந்தப்படம் நம்மைக் கேட்காமல் கேட்கிறது.

இந்தப்படம், ஜேம்ஸ் வேல் என்ற ஒரு பிரபல ஹாலிவுட் இயக்குனரின் வாழ்க்கையை அலசி ஆராயும் உண்மைக்கதை சார்ந்த படம் என்பதால், ஜேம்ஸ் வேல் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். ஜேம்ஸ் வேல், இங்கிலாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடியவர். தனது இளம்வயதில், ஒன்றாம் உலகப்போர் மூண்டதால், பிரிட்டிஷ் ராணுவத்தில் வலுக்கட்டாயமாய்ச் சேர்க்கப்பட்டவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் அதிகாரியாய்ச் சேர்ந்த அவர், முதல் உலகப்போரின் போது, ஜெர்மனியால் சிறைபிடிக்கப்பட்டு சிறைக் கைதியாய் காலம் கழித்தவர். சில வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், சினிமாத் தொழிலுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். 1928-இல், இங்கிலாந்தில் ஜேம்ஸ் எடுத்த ‘பயணத்தின் முடிவு’ (Journey’s End) என்ற படம் பலத்த வெற்றி பெற்றதால், அமெரிக்க ஹாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜேம்ஸ். ஹாலிவுட்டில் அவர் பல படங்களை எடுத்த போதும், ஜேம்ஸுக்கு இமாலயப்புகழைக் கொடுத்த படம், 1931-இல் எடுக்கப்பட்ட ‘ப்ரான்கன்ச்டன்’ (Frankenstein) என்ற த்ரில்லர் திரைப்படம் ஆகும். சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத இடம்பெற்ற இந்தப் படத்திற்கு பிறகு, ஜேம்ஸ் பல வெற்றிப்படங்கள் கொடுத்தார். எனினும், 1935-இல் ‘ப்ரான்கன்ச்டன்’ (Frankenstein) படக்கதையின் இரண்டாம் பாகமாக ‘தி ப்ரைட் ஆப் ப்ரான்கன்ச்டன்’ (The Bride of Frankenstein) என்று ஜேம்ஸ் ஒரு படம் எடுக்க,  அந்தப்படம் உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தால் ஜேம்ஸின் புகழ் இன்னும் உயரப் பறந்தது. அதன் பிறகு ஜேம்ஸ் பல படங்கள் எடுத்தபோதும் அவரால் மேற்சொன்ன இரு படங்களில் பெற்ற புகழ் போல, புகழ் பெற முடியவில்லை. எனவே 1941-இல், சினிமா உலகில் இருந்து ஒய்வு பெற்றார் ஜேம்ஸ். இத்தனை புகழோடு வாழ்ந்த ஒரு மனிதர், தனது வயதான காலத்தில், நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது ஒரு வேதனைக்குரிய விஷயம் ஆகும். ஒரு ஓரினச் சேர்க்கையாளராய், வெளிப்படையாய் அறிவித்துக்கொண்டு வாழுதல், இப்போது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் 1930-இல் அப்படி வாழுதல் என்பது ஒரு கடினமான விஷயம் ஆகும். தைரியம் நிறைந்த ஜேம்ஸ், தனது உலகப்போரின் போது, தனது படையில் இருந்த இன்னொரு வீரனைக் காதலித்தவர். போரில் அந்த வீரன் இறந்துபோக, அவனை நினைத்த ஏக்கங்களோடு வாழ்ந்தவர் ஜேம்ஸ். அதன் பிறகு, ஹாலிவுட்டில், டேவிட் லூயிஸ் என்ற படத் தயாரிப்பாளரை, தனது ஓரினச்சேர்க்கை இணையாய் வைத்துக்கொண்டு பல காலம் வாழ்ந்தார். தனது இறுதிக் காலங்களில், பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் மதுக்கூடத்தில் சந்தித்த ஒரு மதுக்கூட வாலிபனைத் தனது கையோடு அமெரிக்காவிற்கு கூட்டிக்கொண்டுவந்து, அவனோடு வாழ்ந்தார் என்றாலும் அவரது ஓரினச்சேர்க்கை வாழ்க்கை அவருக்கு நிம்மதி தராமல் போக, கடைசியில் தற்கொலை செய்து கொண்டார். காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்தப்படம், ஜேம்ஸின் உண்மை வாழ்க்கையை, கொஞ்சம் கற்பனை கலந்து திரித்துச் சொல்லி இருந்தாலும், மேலே சொன்ன அத்தனை உண்மைச் சம்பவங்களையும் அங்கங்கே கோடிட்டுக் காட்டி இருக்கிறது என்பது திண்ணம்.

காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்தத் தலைப்பு, ஜேம்ஸின் பிரபல படமான ‘தி ப்ரைட் ஆப் ப்ரான்கன்ச்டன்’ (The Bride of Frankenstein) என்ற படத்தில் வரும் ஒரு பிரபல வசனம் ஆகும். மான்ஸ்டர் (Monster) என்ற இந்தப் படத்தின் தலைப்பு, அவரது படங்களில் வந்த ராட்சதக் கதாபாத்திரங்கள் என்பதால், அந்த இரு புகழ் பெற்ற இரு படங்களின், ராட்சதர்கள் கதைகள் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் ஆகிறது. 1931-இல் எடுக்கப்பட்ட ‘ப்ரான்கன்ச்டன்’ (Frankenstein) என்ற த்ரில்லர் திரைப்படக்கதையில், ஒரு இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர், செத்துப்போன பிணத்திற்கு புது மூளை பொருத்தி, உயிர் கொடுக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, அப்படி அவர் அந்தப் பிணத்திற்குப் பொருத்தும் மூளையோ ஒரு கேடு கெட்டவனின் மூளையாய் இருந்து விடுவதால், உயிர் பெற்று வரும் அந்த மனிதன் ராட்சதன் ஆகி மனிதர்களை அழிக்கிறான். கடைசியில் மக்கள் ஒன்று சேர்ந்து அந்த ராட்சதனை அழிக்கிறார்கள் என்பதோடு முதல் படம் முடிகிறது. இரண்டாம் படமான ‘தி ப்ரைட் ஆப் ப்ரான்கன்ச்டன்’ (The Bride of Frankenstein) என்ற படத்தில், முதல் கதை மறுபடியும் தொடர்கிறது. செத்துப்போனதாய் நினைக்கும் ராட்சதன், உயிரோடு இருப்பதை மக்கள் தெரிந்து கொள்கிறார்கள். மறுபடியும் ராட்சதனின் அட்டகாசம் தொடர்கிறது. சகிக்க முடியாத, அந்த ராட்சதனைப் படைத்த அந்த இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர், இன்னொரு ஆராய்ச்சியாளரோடு சேர்ந்து புது முயற்சி மேற்கொள்கிறார். ஆண் ராட்சதனை அமைதிப்படுத்த ஒரு பெண் ராட்சசியை உருவாக்குகிறார்கள். “கடவுள்களான நாம் ராட்சதர்களைப் படைப்போம்” என்று வசனம் பேசுகிறார் ஆராய்ச்சியாளர். இப்படி, அந்த இரண்டாம் படத்தின் கதை போகிறது.

ஜேம்ஸின் மேற்சொன்ன பழைய படங்கள் குறித்த காட்சிகளையும், தனது படத்தில் இணைத்து இருக்கும் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் படத்தின் இயக்குனர், படத்தில் சொல்லும் கதையை இனிப் பார்ப்போம்..

“ஓரினச்சேர்க்கை செய்பவர்கள் பாவம் செய்தவர்கள். கடவுள் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை தருவார்” என உறுதியாய் நம்பும் வீட்டு வேலைக்காரி, “ஓரினச்சேர்க்கை சரியா தவறா” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பி நிற்கும் ஒரு தோட்டக்காரன், ஓரினச்சேர்க்கை ஏக்கங்களுடன் தவிக்கும் ஒரு வயதான திரைப்பட இயக்குனர், என இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சந்திக்கவிட்டு வேடிக்கை காட்டும் படமே காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற அமெரிக்கப்படம் ஆகும். 1998-இல் வெளியான இந்தப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது பெற்ற சிறப்பு கொண்டது. தவிர, இந்தப்படத்தில் நடித்த நடிகர் இயான் மெக்கல்லன், சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கும், படத்தில் வேலைக்காரியாய் நடித்த நடிகை ரெட் க்ரேவ், சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டதும், இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாய்ச் சொல்லலாம். படம் முழுக்க நிறைய உரையாடல்கள் இருந்த போதும், அந்த உரையாடல்களை, உணர்ச்சிகரமாகவும் அமைதியாகவும் பேசும் இயக்குனர் வேல், வேலைக்காரி ஹன்னா, தோட்டக்காரன் பூன், இந்த மூன்று பேரின் பிரமாதமான நடிப்பும், படத்தின் மீது நமக்கு சலிப்பு ஏற்படாமல், படத்தின் கதையை நகர்த்த நன்கு உதவுகிறது. இந்தப்படத்தின் முதல் காட்சியிலேயே, வயதான இயக்குனரும் அவரது சக தோழனுமான படத்தயாரிப்பாளர் டேவிட்டும் முத்தம் கொடுத்துப் பிரியும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. அதன் பிறகு, இயக்குனர் ஜேம்ஸ் வேலினை பேட்டி எடுக்க வருகிறார் ஒரு வாலிபர். வாலிபர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பரிசாய், வாலிபரின் உடைகளை ஒவ்வொன்றாய்க் கழட்டச்சொல்லும்  இயக்குனர் ஜேம்ஸ் வேலின் குறும்புத்தன நடிப்பு பிரமாதம். ஒரு புறம் தனது எஜமானிடம் காட்டும் அளவு கடந்த விசுவாசம், இன்னொரு புறம் தனது எஜமானின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கையைப் பார்த்து அடையும் அருவருப்பு என இரண்டு கோணங்களில் நடிப்பைப் காட்டி, நம் நெஞ்சில் இடம் பிடிக்கிறார் வேலைக்காரி ஹன்னாவாக வரும் நடிகை ரெட் க்ரேவ்.

படத்தின் கதைக்குள் போவோம். பல வெற்றி படங்களைக் கொடுத்து கடைசியில் ஒய்வு பெறுகிறார் இயக்குனர் ஜேம்ஸ் வேல். மாரடைப்பு வந்து அவதிப்படும் அவருக்கு பல நேரங்களில், தனது சுயநினைவு தப்புகிறது. கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்திற்குமாய், அவரது சிந்தனைகள் மாறி மாறிப் போய் அவதிப்படும் போதெல்லாம், வேலைக்காரி ஹன்னா கூடவே இருந்து பணிவிடைகள் செய்கிறாள். மாத்திரைகளே வாழ்க்கை என்று வாழும் ஜேம்ஸுக்கு, அடிக்கடி நினைவு தப்பும் போதேல்லாம், அவரது சிறுவயது வறுமை வாழ்க்கை, முதலாம் உலகப் போரில் அவர் போர்க்கைதியாய் வாழ்ந்த நாட்கள், ராணுவத்தில் அவர் வாழ்ந்த ஓரினக்காதல் வாழ்க்கை, வெற்றிப்படமான ‘ப்ரான்கன்ச்டன்’ (Frankenstein) மற்றும் ‘தி ப்ரைட் ஆப் ப்ரான்கன்ச்டன்’ (The Bride of Frankenstein) போன்ற படங்களை அவர் படமாக்கிய நினைவுகள் இப்படி பல காட்சிகளும், நிழல் படங்களாய் வந்து வந்து அவரை அலைக்கழிக்கிறது. இந்த நேரத்தில், தோட்டக்காரன் பூன், ஜேம்ஸின் தோட்டத்தை சீராக்குவதற்காய் பங்களாவுக்குள் வருகிறான். பங்களாவின் உரிமையாளர் ஜேம்ஸ், ஒரு பிரபல இயக்குனர் என்று புரிந்து கொள்கிறான் தோட்டக்காரன் பூன். தோட்டக்காரன் பூனின் கட்டுமஸ்தான உடல்,. ஜேம்ஸை வெகுவாக பாதிக்கிறது. சித்திரங்கள் வரைவதைப் பொழுதுபோக்காய்க் கொண்ட ஜேம்ஸ், தோட்டக்காரன் , பூனை வெற்றுடம்போடு படமாக வரைய அனுமதி கோருகிற போது,  பூன் வெறும் மார்பு வரை தனது படம் வரைய அனுமதி கொடுக்கிறான். நடந்த விஷயம் குறித்து தனது காதலியிடம் பேசும் தோட்டக்காரன் பூனை, அவனது காதலி பரிகாசம் செய்கிறாள். அவனை விட்டுப் பிரியவும் செய்கிறாள். பங்களாவுக்குள் மறுபடியும் நுழையும் பூன், வேலைக்காரி ஹன்னா மூலம், ஜேம்ஸ் ஒரு ஹோமோசெக்ஸ் என்பதைத் தெரிந்து கொள்கிறான். ஜேம்ஸ் உடன் சாப்பிட உட்காரும் பூனிடம், கொரியப்போரில், பூன் பங்கெடுத்துக் கொண்ட வீரன் என நினைத்துக் கொண்டு, தனது ஒன்றாம் உலகப்போர் கதையையும், ஓரினச்சேர்க்கை வாழ்க்கையையும் குறித்துப் பேசும் ஜேம்ஸிடம் கோபப்படுகிறான் பூன். “நான் அவனல்ல” என்று உணர்ச்சி வசமாய்ப் பேசி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பூன். சோர்வடையும் ஜேம்சினைப் பார்த்துப் பரிதாபப்படும் வேலைக்காரி ஹன்னா, தோட்டக்காரன் பூனைத் தேடிப்பிடித்து மறுபடியும் வீடு வந்து சேர்க்கிறாள். மாரடைப்பு நோயால் அவதிப்படும் ஜேம்ஸ், நகரில் நடக்கும் ஒரு திரைப்பட விழாவுக்கு, காரில் தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்க பூன் அதற்கு சம்மதிக்கிறான். அந்தத் திரைப்பட விழாவில், தனது படத்தில் ராட்சசனாகவும், ராட்சசியாகவும் நடித்த monster இருவரையும் சந்திக்கிறார் ஜேம்ஸ். இருப்பினும், ஒரு ஓரினச் சேர்க்கையாளராய், அத்திரைப்படவிழாவில் அவமானப்படுகிறார் ஜேம்ஸ். அவர் மீது இரக்கம் கொள்கிறான் பூன். மழையில் நனைந்துகொண்டே இருவரும் பங்களா வந்து சேர்கிறார்கள். உடைகளைக் களையும் தோட்டக்காரன் பூன், இந்த முறை தன்னை நிர்வாணமாய்ப் படம் வரைய சம்மதிக்கிறான். நிர்வாணமாய் நிற்கும் அவன் உடல் மீது ஆசை கொள்ளும் ஜேம்ஸ் பூனை கட்டி அணைக்க முயல, வெகுண்டு எழும் பூன், அவரை அடி அடி என்று அடிக்கிறான். அழுதுகொண்டே மன்னிப்பு கோருகிறார் ஜேம்ஸ். அடுத்தநாள் படுக்கையில் இருந்து எழும் பூன், நீச்சல் குளத்தில் பிணமாய் மிதக்கும் ஜேம்ஸைக் கண்டு பதறுகிறான். “ஜேம்ஸின் ஓரினச்சேர்க்கைக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது” என்று புலம்பி அழுகிறாள் வேலைக்காரி ஹன்னா. காலம் ஓடுகிறது. பூனுக்கு கல்யாணம் ஆகிறது. ஒரு நாள், தொலைகாட்சியில் ஜேம்ஸின் படம் ஒலிபரப்பாகிறது. பார்த்துக் கொண்டிருக்கும் பூனின் மகன், படத்தில் வரும் அரக்கனுக்காய் பரிதாபப்படுகிறான். தனக்கு இந்தப்படத்தின் இயக்குனரைத் தெரியும் என்று சொல்லும் அப்பா பூனை, மகன் நம்ப மறுக்கிறான். இயக்குனர் ஜேம்ஸ் தனக்கு வரைந்து கொடுத்த அரக்கன் படத்தை, தனது மகனுக்கு பூன் காட்டுகிறான். பூனின் நினைவுகள் பழைய காலத்திற்குப் போகிறது.  தான் ஜேம்ஸிடம் நடந்து கொண்ட விதமும், ஜேம்ஸ் தற்கொலை செய்துகொண்ட விதமும் பூன் மனத்தை வருத்துகிறது.  கொட்டும் மழையில், பூன் வருத்தத்துடன் நடந்து போவதோடு படம் முடிகிறது.

நல்ல படங்களைக் கொடுக்கும் இயக்குனரும் ஒரு கடவுள்தான். ஆனால் அவர் மனதிற்குள் காமம் என்ற அரக்கன் புகுந்து கொண்டால், அவர் என்ன பாடுபடுவார் என்பதை இந்தப் படம் அழகாகச் சொல்லுகிறது. உண்மைப்படத்தில் வரும் அரக்கன் போலவே, தோட்டக்காரன் பூன் இருப்பது படத்தின் ஒரு பிளஸ் பாயிண்ட். படம் என் மனதிற்குள் ஏற்படுத்திய பாதிப்பை, சில வரிகளில் சொல்லிவிட முடியாது.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்ஈரமனம் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *