நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )

This entry is part 3 of 9 in the series 7 அக்டோபர் 2018

சத்குரு ஜக்கி வாசுதேவ்

சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை.

இன்னமும் கல்லூரியில் படிக்கும் இந்திய இளையதலைமுறை மார்க்ஸிய மூளைச் சலவையிலிருந்து விடுபட இயலவில்லை என்பது பரிதாபம்தான். சத்குருவிடம் விவாதிக்கும் ஒவ்வொருத்தனிடமும் தெறிக்கும் வெறுப்பு மிகவும் கவலைக்குரியது. ஜக்கியின் ஆணித்தரமான பதில்களால் அவர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டாலும் அதனைப் பொருட்படுத்தாதது போல நடிக்கிற மார்க்ஸிய மாணவனைப் பார்த்து சிரிக்காமலிருக்க முடியவில்லை. இவர்களின் ஜக்கி வெறுப்பு புரிந்து கொள்ளக் கூடியதே.

இதில் என்னுடைய பார்வை என்னவென்றால், மார்க்ஸியம் முளைத்த இடத்திலேயே சமாதியாகி அங்கு புல் கூட முளைத்துவிட்டது. இன்றைக்கு மேற்குலகில் மார்க்ஸியம் பேசுகிறவனை நாய் கூட மதிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள் இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது பேராச்சரியம்தான்.

உலகம் இயந்திரமயமாகிய காலகட்டத்தில் பிறந்த கார்ல் மார்க்ஸ், இயந்திர மயமே இனி உலகினைத் தீர்மானிக்கும் என நினைத்தவர். அதன் மூலமாகவே உலகத்தின் செல்வங்கள் எல்லோருக்கும் பொதுவாகிவிடும் எனக் கனவு கண்டவர். அது ஒரு தியரி. அதனைப் பரீட்சித்துப்பார்த்த அத்தனை நாடுகளும், சோவியத் யூனியன், சீனா உடபட, வறுமையிலும், பட்டினியிலும், சர்வாதிகாரத்திலும் உழன்று பாடம் கற்று அதனைத் தூக்கியெறிந்தன. இன்றைக்கு மார்க்ஸியம் செத்துப்போன சித்தாந்தம். அதனைப் பிடித்துத் தொங்குபவனை இந்த உலகம் உதாசீனப்படுத்தி ஓரத்தில் தள்ளிவிடும். ஏற்கனவே தள்ளியும் விட்டுவிட்டது என்பதனை உணர்க இந்திய இளைஞனே.

இயந்திர யுகம் முடிந்து உலகம் கூகிள் யுகத்தில் இன்றைக்கு வாழ்கிறது. அதனையும் தாண்டி க்ளவுட் கம்யூட்டிங் உலகத்தில் சுழல்கிறது. இன்னும் சிறிது காலத்திற்குள் கூகுளும், க்ளவுட் கம்யூட்டிங்கும் போய் ப்ளாக் செயின் (Block Chain), க்ரிப்டோ (Crypto) யுகம் வந்து கொண்டிருக்கிறது. நீ இன்னமும் மண் மூடிப்போன மார்க்ஸியத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்? அப்படித்தான் தொங்குவேன் என்றால் தொங்கிக் கொள். நானென்ன செயய் முடியும்?

மாறிவரும் உலகின் வேகம் தெரியாமல் வாழ்கிற இந்திய இளைஞர்கள் குறிப்பாக தமிழர்கள் என்னை வருத்தமுற வைக்கிறார்கள். புதுமைச் சிந்தனையும், உலக அறிவும், படைப்பூக்கமும் அற்றவன் காலத்திற்கும் பிறருக்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருப்பான். புத்தக வாசிப்பு அறவே அழிந்துவிட்டதனைக் காண வருத்தமாயிருக்கிறது. அப்பனின் நிலத்தை விற்று பெயர் தெரியாத ஓட்டைக் கல்லூரியில் இஞ்சினியரிங் படித்தவன் தன்னைப் பேரறிஞனாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அது ஒரு வெற்றுப் படிப்பு என்கிற அறிதலே இல்லாமல்.

அவனிடமிருந்து புதியதொரு தொழில்நுட்பமோ அல்லது உலகைப் புரட்டிப் போடும் புதுமைச் சிந்தனையோ பிறப்பது அரிதினும் அரிது. ஏனென்றால் அதற்கான அடிப்படைகளை அவன் அறிந்தானுமில்லை, படித்தானுமில்லை. அதிகபட்சம் அர்த்தமற்ற மீம்ஸ்களை எழுதுவதனைத் தவிர்த்து அவன் சாதித்ததுதான் என்ன? இனிமேலும் சாதிக்கப் போவதுதான் என்ன?

காலேஸ்வரம் நீர்பாசண திட்டம்


உலகத்திலேயே மிகப் பெரிய lift irrigation (தூக்கு நீர்ப்பாசனம்?) அணை தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அணை கட்டி முடிக்கப்படுகையில் தெலுங்கானா மாநிலத்திற்குத் தேவையான அத்தனை தண்ணீர்த் தேவையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான, முழுவதுமாக பூர்த்தியாகிவிடும்.

தெலுங்கானாவில் வற்றாத ஜீவநதியான கோதாவரி ஓடினாலும், பொதுவில் தெலுங்கானா ஒரு வறண்ட மாநிலம். விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகள் எதுவுமில்லாத, மிகப் பின்தங்கிய மாநிலமாகத்தான் தெலுங்கானா இதுவரை இருந்துவந்திருக்கிறது.

எண்பதுகளின் இறுதியில் நான் தெலுங்கானா பகுதியில் சுற்றித் திரிந்திருக்கிறேன். ராமகுண்டத்தில் இருந்த என்.டி.பி.சிக்கு (National Thermal Power Corporation) Payroll Processing செய்கிற வேலை சம்பந்தமாக மாதாமாதம் அங்கு போய்வருவது வழக்கம்.

ராமகுண்டத்திலிருந்து பத்து இருபது மைல்கள் தொலைவில் கோதாவரி நிறைந்து ஓடினாலும் ராமகுண்டத்தில் குடிக்கத் தண்ணீர் சரிவரக் கிடைக்காது. தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக விவசாயமோ அல்லது வேறு தொழில்களோ நடக்காததால் அங்கிங்கெனாதபடி தெலுங்கானாவெங்கும் நக்ஸலைட்டுகள் சுற்றித் திரிந்தார்கள். ஏறக்குறைய என்.டி.பி.சியே நக்ஸலைட்டுகளின் பிடியில்தான் இருந்தது. நக்ஸலைட்டுகளுக்குப் பயந்து அரசாங்க சாராயம் போலிஸ் ஸ்டேஷன்களில்தான் விற்பார்கள் என்றால் நிலைமையை உணர்ந்து கொள்ளலாம்.

ஆந்திர மாநில அரசாங்கத்தில், அரசுப்பணிகளில் ஆக்கிரமித்து வலிமையுடன் இருந்த கரையோர ஆந்திரர்கள் தெலுங்கானா பகுதியைக் கண்டுகொள்ளவில்லை. எனவே தெலுங்கானா ஒரு சவலைக் குழந்தையாய் எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாமல் இருந்தது. தெலுங்கானாவாசிகள் ஆந்திராவிலிருந்து பிரிவதற்குப் போராடியதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆந்திரா இரண்டாகப் பிரிந்தது ஒருவகையில் மிக நல்லதென்றே எண்ணுகிறேன். இன்றைக்குத் தெலுங்கானாவில் இதுபோன்ற மாபெரும் திட்டங்கள் இரண்டு மாநிலங்களாக ஆந்திரா பிரிக்கப்படாதிருந்தால் நடப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு கரையோர ஆந்திரர்களின் டாமினேஷன் தெலுங்கானாவாசிகளின் மீது இருந்தது.

தமிழ்நாட்டில் இதுபோன்றதொரு ப்ராஜெக்ட் நடப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஒன்று, எந்த திராவிடப் புண்ணாக்கனுக்கும் இதுபோலப் பெரிதினும் பெரிது சிந்திக்கிற அளவிற்கு மூளையில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம்மை அடி மூடர்களும், திருட்டுக் கபோதிக்களும், வாய்ச்சவடால் அடிக்கும் Prima Donnaக்களும், புளுகிணிப்பயல்களும் மட்டுமே நம்மை ஆண்டு வந்திருக்கிறார்கள்.

ஒருத்தொனுக்கொருத்தன் சொறிந்துவிட்டுக் கொள்ளவே நேரமில்லை எனும்போது இந்தமாதிரியான உருப்படியான திட்டமெல்லாம் எங்கிருந்து அவன்/அவள்களின் மூளையில் உதிக்கும்? அப்படி நடக்க வாய்ப்பேயில்லை. திட்டம் போட்டு எல்லாப் பணத்தையும் விழுங்கி ஏப்பமல்லவா விட்டிருப்பார்கள்?

இரண்டாவது காரணம், சுற்றுத் சூழல் ஆர்வலர்கள் என்கிற பெயரில் தமிழகத்திற்கு நல்லது எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிற இவாஞ்சலிச மிஷனரிகள், டமிளர்கள், இன்னபிற வெட்டிப்பயல்கள் நாளுக்கொரு போராட்டம் நடத்தி நாறடித்துவிடமாட்டார்களா என்ன?

அப்பாவித் தமிழனுக்கு நல்லதும் தெரியாது. கெட்டதும் புரியாது.

Series Navigationமுட்டைக்கோஸ் வதக்கல்மருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  a.maharajan says:

  அருமையான நடுநிலையான தெளிவான பார்வை.. இன்று இப்படியான கருத்துக்களை மீடியாக்களில் பார்ப்பதே அரிதாகி விட்டது.

 2. Avatar
  கணேஷ் says:

  முதலில் கட்டுரையாளருக்கு மார்க்சியம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. மார்க்ஸ் சொன்ன materialism என்பதை இயந்திரமயம் என்று புரிந்து வைத்திருக்கிறார். அது பொருள் முதல் வாதம். மார்க்சியத்தைத் துறந்த முதலாளித்துவ நாடுகளில் வறுமை ஒழிந்து விட்டதா? முதலாளித்துவத்துக்கு ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் அவசியம், மக்களைத் தொடர்ந்து முட்டாள்களாக்க.

 3. Avatar
  முனைவா் ம. இராமச்சந்திரன் says:

  ஆன்மிகம் தத்துவம் சாா்ந்த புாிதலில் அரசியல் பெறும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் தேவைகள்தான் இன்றை அனைத்து வளா்ச்சிகளும் மூலதனம் எப்போது அராஜகமான பண்பைப் பெற்றதோ அன்று முதல் மனிதா்கள் பணம் என்ற எஜமானனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனா். மனிதன் சமத்துவமாக வாழ முற்படுவதே நோக்கம்.
  இதனை எது எடுத்துக்கூறினாலும் வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *