கிள்ளைப் பத்து

This entry is part 5 of 9 in the series 2 டிசம்பர் 2018

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது.

=====================================================================================

கிள்ளைப் பத்து—1

வெள்ள வரம்பின் ஊழி போகியும்

கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டி யவ்வே

[வெள்ளம்=நூறாயிரம்; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; அவ்=அவை]

அவ அவளோட கூட்டத்தோட தெனைப்புனம் காக்க வரா. அதால அவன் அங்க அவளைப் பாத்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தியது கிளிதான? அதால அவன் கிளியப் பத்திச் சொல்ற பாட்டு இது.

“கிளியே! நீ வாழ்க! வெள்ளம்ற பல லட்சம் வருஷங்களுக்கு மேல் வாழ்க.  நல்லா வெளிச்சம் தர்ற நகையெல்லாம் போட்டிருக்கற கருப்பான நீளமான கூந்தலும் இருக்கற பருத்த தோளையும் கொண்டிருக்கற என்னோட குறிஞ்சிப் பொண்ணைக் காவலுக்கு வரச் செய்தீங்களே! அதனால நீங்கள் வாழ்க”

==========================================================================

கிள்ளைப் பத்து—2

சாரல் புனத்த பெருங்குரல் சிறுதினைப்

பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்

சோலைச் சிறுகிளி உன்னும் நாட!

ஆரிருள் பெருகின; வாரல்

கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே!

[பெருங்குரல்=பெரிய கதிர்; சாரல்=மலைச் சரிவு; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; உன்னும்=நினைக்கும்;கோட்டுமா=யானை’வழங்கும்=திரியும்; நெறி=வழி]

ராத்திரியில அவனும் அவளும் சந்திச்சுப் பேச தோழி ஒதவி செய்யறா. அவன் போகும்போது அவன்கிட்டத் தோழி சொல்ற பாட்டு இது.

”மலைப் பக்கத்துல தெனையெல்லாம் பெரிசா வளர்ந்து இருக்கு. அதை எல்லாம் காத்து நிக்கற இருள் போல கருப்பான கண்ணுள்ள கொடிச்சி ஓட்டிக் கொண்டே இருந்தால் கூட கிளி எல்லாம் மறுபடி மறுபடி தெனையைத் தின்ன வர்றதையே நெனச்சுக்கிட்டு இருக்கற மலையைச் சேந்தவனே! ரொம்ப இருட்டாயிடுச்சு. அதால காட்டு யானையெல்லாம் திரிஞ்சிக்கிட்டிருக்கற காட்டு வழியில இனிமே வராதே”

ஓட்ட ஓட்ட தெனையையே நெனச்சுக்கிட்டிருக்கற கிளியைப் போல நீ எவ்வளவு சொன்னாலும் கேக்காம அவளையே நெனச்சுக்கிட்டிருக்கன்றது மறைபொருளாம்

=====================================================================================

கிள்ளைப் பத்து——3

வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

புன்புல மயக்கத்து உழுத ஏனல்

பைம்புறச் சிறுகிளி கடியும் நாட!

பெரிய கூறி நீப்பினும்

பொய்வலைப் படூஉம் பெண்தவப் பலவே!

[வன்கண்=அஞ்சாமை; மடமகள்=இளமையான கன்னி; புன்புலம்=புன்செய்; மயக்கம்=கலப்பு; ஏனல்=தினை; பெண்டு=பெண்; வலைப் படூஉம்=வலையில் சிக்கிக் கொள்ளும்; பெரியகூறி=குறையைப் பெரிதாய்க் கூறி]

அவளோட கோபத்தை மாத்தி என்னை அவக்கிட்டச் சேத்து உடுன்னு அவன் வந்து தோழிக்கிட்டக் கேக்கறான். மொதல்ல அவ மறுத்துடறா. அப்பறம் போனாப் போவுதுன்னு அவன் வருத்தம் பார்த்து அவளே சேத்துக்கறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”எதுக்குமே பயப்படாத அவனோட மென்மையான சொல்லையே இவ சொல்லிக்கொண்டிருக்கறா. புஞ்சை நெலத்துல காட்டுக்காரங்க உழுது வெதைச்ச  தெனையில வந்து ஒக்கார்ற கிளையை எல்லாம் அவ வெரட்டிக்கிட்டே இருக்கும் நாட்டைச் சேந்தவனே! ஒன் மேல பெரிய கொறையெல்லாம் சொல்லி ஒன்னை வெலக்கி வச்ச போதும் மனசிலேந்து வெலக்காம ஒன் பொய்ப் பேச்சாம் வலையில் வந்து வுழற பொண்ணுங்க நெறய பேரா இருப்பங்கள போல இருக்கு.”

அதுல இவளும் ஒருத்தியோன்னு தோழி மறைபொருளா கேக்கறா.

====================================================================================

கிள்ளைப் பத்து—4

அளிய தாமே, செவ்வாய்ப் பைங்கிளி

குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்

இருவி நீல்புனம் கண்டும்,

பிரிதல் தேற்றாப் பேரன் பினவே!

[பைம்=பசுமை; பைங்கால்=பசுமையான தாள்; அளிய=இரங்கத்தக்கன; இருவி=அறுத்த பின்பு உள்ள தாள்]

தெனயெல்லாம் அரிஞ்ச பின்னாடி அவன் வந்து அவளப் பாக்க மறைவா வந்து நிக்கறான். அப்ப அவன்கிட்ட அவளக் கொண்டு போய் ஒப்படைக்கப் போற தோழி சொல்ற பாட்டு இது.

”செவப்பா மூக்கும் பச்சையா இறகும் இருக்கற இந்தக் கிளிகளைப் பாத்தா பாவமாயிருக்கு; இங்க வாழற கொறவங்க வந்து தெனையை எல்லாம் அரிஞ்சிக்கிட்டு அடித் தட்டையை மட்டும் உட்டுட்டுப் போயிட்டாங்க. ஒண்ணுமே இல்லாத இந்த வயலைப் பிரிஞ்சு போக மனமில்லாம இந்தக் கிளியெல்லாம் இன்னும் இங்கேயே இருக்கு”

முன்னாடி தின்ன தெனைய மறக்காம நெனச்சுக்கிட்டு இன்னும் எப்படி கிளியெல்லாம் ஒக்காந்திருக்குதோ அதேபோல நீயும் இவள மறக்காமக் கடைசி வரை அன்போட இருக்கணும்னு மறைவா சொல்றா.

===============================================================================

கிள்ளைப் பத்து—5

பின்இரும் கூந்தல் நல்நுதல் குறமகள்

மென்தினை நுவணை உண்டு தட்டையின்

ஐவனச் சிறுகிளி கடியும் நாட!

வீங்குவளை நெகிழப் பிரிதல்

யாங்கு வல்லுநையோ, ஈங்குஇவள் துறந்தே!

[பின்னிருங் கூந்தல்=பின்னிய கருங்கூந்தல்; நன்னுதல்=நல்ல அழகிய நெற்றி; நுவனை=தினை மாவு; தட்டை=கிளியை விரட்டும் கருவி; ஐவனம்=மலைநெல்; வீங்குதல்=செறிதல்]

கொஞ்ச நாள் வராம இருந்தவன் ஒரு நாளு வரான். இத்தனை நாளு வராம இருந்தவன் காரணங்கள் என்னென்னவோ சொல்றான்.அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”நல்லா பின்னின கூந்தலும், அழகான நெத்தியையும் கொண்டவ அவ. தெனை மாவைத் தின்னுக்கிட்டே தட்டையால சத்தம் எழுப்பி மலைநெல்லைத் தின்ன வர்ற கிளியை அவ வெரட்டற நாட்டை உடையவனே! இறுக்கமா போட்டிருக்கற வளையல் எல்லாம் நெகிழ்ந்து போற மாதிரி இவளைப் பிரிஞ்சு போக ஒன்னால எப்படி முடியுது?

=====================================================================================கிள்ளைப் பத்து—6

சிறுதினை கொய்த இருவி வெண்கால்

காய்த்த அவரைப் படுகிளி கடியும்

யாணர் ஆகிய நன்மலை நாடன்

புகர்இன்று நயந்தனன் போலும்;

கவரும் தோழி! என் மாமைக் கவினே!

[வெண்கால்=வெண் நிறத்தாள்; இருவி=தானியம் நீக்கப் பட்ட  தட்டை; யாணர்=புது வருவாய்; புகர்=குற்றம்; நயந்தனன்=விரும்பினான்; கவரும்=தடுமாறும்; கடியும்=விரட்டும்; மாமைக் கவின்=மாமை போன்ற அழகு]

மொதல்ல அவளைத் தன்னோட சேத்துக்கிட்டுப் போறேன்னு சொன்னவன் இப்ப பேச்சை மாத்திக் கல்யாணம் செஞ்சுக்க ஏற்பாடு செய்ய போறேன்னு பிரிஞ்சு போகப் போறான். அப்ப அவ சொல்ற பாட்டு இது

”தெனையெல்லாம் அறுத்த பின்னாடி கீழ வெள்ளையா தட்டையெல்லாம் இருக்கு; அதுல அவரைப் படர்ந்து காய்ச்சிருக்கு; அதையெல்லாம் தின்ன கிளியெல்லாம் வருதுங்க; அதையெல்லாம் ஓட்னபடியே இருப்பாங்க; புது வருவாயும் உடைய மலைநாட்டைச் சேந்தவன் அவன் இப்ப ஒரு குத்தமும் செய்ய ஆசைப்பட்டன் போல இருக்கு; மாந்தளிர் போல இருக்கற என் அழகு வர்றதும் போறதுமா இருக்கு”

முன்ன தெனையைத் தின்னுட்டுப் போன கிளியெல்லாம் இப்ப அவரையையும் தின்ன வருதுங்க, அது போல முன்ன சந்துச்சுப் பேசிப் பழகியவன் இப்ப என்னைக் கூட்டுக்கிட்டுப் போறதுதான் சரின்னு மறைமுகமா சொல்றா.

=====================================================================================கிள்ளைப் பத்து—7

நெடுவரை மிசையது குறுங்கால் வருடை

தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட!

வல்லை மன்ற பொய்த்தல்;

வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.

[குறுங்கால்=குட்டையான கால்; வருடை=ஒருவகை மான்; வெரூஉம்=அஞ்சும்; நெடுவரை=நீண்ட மலை; மிசையது=மேல் உள்ளது; பொய்த்தல்=பொய் சொல்லுதல்; வல்லை=வல்லமையுடைய அவன்; வல்லாய்=வல்லமை இல்லாதவன்]

சொன்ன நாள்ல அவன் வரல; அப்பறம் ஒரு நாள் தோழிக்கிட்ட நான் இன்ன நாள்ல தவறாம வரேன்னு சொல்றான். அப்ப அவன் பேச்சைத் தோழி நம்பாம சொல்ற பாட்டு இது.

”நீளமான மலையில குட்டையான கால்கள் இருக்கற வருடை மானேல்லாம் இருக்கறதப் பாத்த கிளியெல்லாம் பயப்படும் மலைநாட்டைச் சேந்தவனே! நீ பொய் சொல்றதல தேந்தவன். எங்களுக்கு நல்லது இல்லாததைச் செய்யிறதிலும் தேந்தவன்தான்.”

கிளியெல்லாம் அதுங்களை ஒண்ணுமே செய்யாத மான்களைப் பாத்துப் பயப்படற மாதிரி நீயும் இவளைச் சேந்தவங்க என்னா சொல்லுவாங்களோன்னு பயப்படறேன்றது மறைபொருளாம்.

=====================================================================================

கிள்ளைப் பத்து—8

நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து

யாமெவன் செய்குவம்? நெஞ்சே! காமர்

மெலியல் கொடிச்சி காப்பப்

பல்குரல் ஏனல் பாத்தருங் கிளியே!

[நன்று=நன்மை; காமர்=-அழகு; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; குரல்=கதிர்; ஏனல்=தினை பாத்தரும்=பரவுதலைச்செய்யும்]

அவ தெனை வயலைக் காக்க வரான்னு தெரிஞ்ச அவன் மகிழ்ச்சியா அவனுக்கே சொல்ற பாட்டு இது.

”ஏ! மனசே! அழகா மென்மையா இருக்கற கொடிச்சியைக் காவல் காக்க வரும்படிச் செய்ய கிளியெல்லாம் வந்து தெனை வயல்ல படியுது. நமக்கு இப்படி நல்ல ஒதவியைச் செய்யற கிளிகளுக்கு நாம என்னா ஒதவி செய்வோம்?]

=====================================================================================கிள்ளைப் பத்து—9

கொடிச்சி இன்குரல் கிளிசெத்து, அடுக்கத்துப்

பங்குரல் ஏனல் படர்தரும் கிளி எனக்

காஅவலும் கடியநர் போல்வர்

மாஅல்வரைஉ நாட! வரைந்தனை கொண்மோ!

[செத்து=நினைத்து; அடுக்கம்=பக்கமலை; ஏனல்=முற்றாத தினை; படர்தரும்=பரவலாக வந்து படியும்; பங்குரல்=பசுமையான கதிர்; கடியுநர்=விலக்குவர்; மால்வரை=பெரிய மலை]

அவளுக்கு ஊட்டை உட்டுப் போக முடியாம காவல் போட்டாச்சு. தெனையைக் காக்கவும் அனுப்பமாட்டாங்க. சீக்கிரம் வந்து கட்டிக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.

”பெரிய மலைநாட்டைச் சேந்தவனே! இந்தக் கொடிச்சியோட குரல் கிளிபோல இருக்கறதால மத்த கிளியெல்லாம் வந்து இங்க படியுதுங்க. அதால இவளைச் சேந்தவங்க இவளைக் காவல் காக்கவும் அனுப்பமாட்டாங்க. அதால சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்க”

=====================================================================================

கிள்ளைப் பத்து—10

அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய

பூக்கமழ் கூந்தல் கொடிச்சி

நோக்கவும் படுமவள் ஒப்பவும் படுமே!

[பிறங்கிய=ஒளிர்கின்ற; நோக்குதல்=இரக்கத்துடன் பார்த்தல்; ஒப்புதல்=கிளியை விரட்டுதல்]

காவல் அதிகமாயிட்டதால அவள வந்து அவனால பாக்க முடியல. அப்பறம் ஒரு நாளு அவன் பகல்ல வரான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”கொடிச்சிக்கு நல்லா ஒளி வீசற பூக்களால வாசனை வீசற கூந்தல் இருக்கு. அவ ஒழுங்கா தருமத்தோட ராஜ்ஜியம் நடத்தற அரசனைப் போலக் கிளியை எல்லாம் மகிழ்ச்சியோட பாக்கறா. அப்பறம் கோவமா பேசவும் செய்யறா.”

அரசன் நல்லது செஞ்சா அவனை மக்கள் எல்லாரும் பாராட்டுவாங்க. அவனே கெடுதி செஞ்சா அவனை வெரட்டிடுவாங்க. அதேபோல அவனைச் சந்திக்க வழி செஞ்ச கிளியை மகிழ்ச்சியா பாக்கறா. ஆனா அதுங்க தெனையை எல்லாம் தின்றதால கோபமா பாக்கறா.

========================நிறைவு===================================

 

Series Navigationசிதைக்கப்பட்ட இந்திய வரலாறுகற்பனை மாத்திரை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *